Monday, April 1, 2013

ஹலால் முத்திரை பொறித்தலில் ஜம்மியாவின் முடிவும் முஸ்லிம் உம்மாவின் கொதிப்பும், உண்மை நிலையும்



ஹலால் முத்திரை பொறித்தலில் ஜம்மியாவின் முடிவும் 
முஸ்லிம் உம்மாவின் கொதிப்பும், உண்மை நிலையும்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின், ஹலால் சான்றிதழ் வழங்கல். ஹலால் முத்திரை பொறித்தல் பற்றிய இறுதி முடிவால், அதாவது பிழையான நேரத்திலாவது எடுத்த சரியான முடிவால்,  இன்று அகில இலங்கையிலுமுள்ள முஸ்லிம்கள் கொதிப்படைந்து உள்ளார்கள்.  திட்டித் தீர்க்கிறார்கள். வசை பாடுகின்றார்கள். மொத்தத்தில் அவர்களது முடிவையும், ஏன் அவர்களையும்  கூட நிராகரித்துள்ளார்கள்.  இதற்கான முழுப் பொறுப்பையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே ஏற்க வேண்டும்.

காரணம், யாரால் இந்தப் பிரச்சினை உருவாக்கப்பட்டதோ, அவர்களே அதனை ஏற்க வேண்டும் என்ற ஏற்கப்பட்ட நியதியே.  அடுத்தது, உலமாக்கள் என்போர் இஸ்லாத்தில் என்ன கூறப்பட்டிருக்கின்றதோ அதையே தாங்கள் செய்ய வேண்டும். முஸ்லிம்களையும் அப்படியே செய்யும்படி  ஏவ வேண்டும். மேலும், முஸ்லிம்கள் ஏதாவது விடயங்களில் குர்ஆனிய உபதேசங்களுக்கு மாறாக நடக்கிறார்கள் என்பது தெரியும் போது அவர்களை தடுத்து உண்மையை விளக்க வேண்டும்.

அப்படியில்லாத நிலை நிலவும் போது, இப்படியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதை நடைமுறையில் நாம் நிதர்சனமாகக் கண்டு கொள்கின்றோம். இதுவே நமக்குப் ப‌டிப்பினையாகவுள்ளது. 

ஆனால், நடந்ததோ அதற்கு எதிர்மாறானது. அதாவது, தாங்கள் வழங்கி வந்த ஹலால் சான்றிதழும், அனுமதித்த முத்திரை பொறித்தலும் இன்றேல் முஸ்லிம்கள் ஹலால் உணவைக் கண்டறிய முடியாத நிலை, தற்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியாலும்,தொழில் நுட்ப முன்னேற்றத் தாலும் ஏற்பட்டுள்ளது என்ற பயங்கரத்தை மக்கள் மனத்தில் ஏலவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  உருவாக்கி இருந்தமையே. 

‌மேலும், மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் உணவுப் பண்டங்களில் மிருகக் கொழுப்போடு சம்பந்தப்பட்டவை கலக்கப்பட்டிருக் கின்றதா என்பதைக் கண்டறிவதற்கு மக்களால் முடியாது எனவும், அதனை நிறுவன ரீதியில் இயங்கி, தாங்களே அவற்றை சிறந்த பரிசோதனைச் சாலைகளில் ஆய்வு செய்து, அவற்றுக்கு சான்றிதழ் வழங்கினாலே சாப்பிட  முடியும். அல்லாதவை அசுத்தமானவை எனவும், அவை சாப்பிட முடியாதவை எனவும் கூறப்பட்டது. மக்கள் மனங்களில்  விதைக்கப்பட்டன. அதன் பிரதிபலனே, தற்போது அந்நடவடிக்கையில் இருந்து, பொது பல சேனாவின் பலவந்தம் காரணமாக அஇஜஉ விலகிக் கொண்டமையால் முஸ்லிம்களில் ஏற்பட்டுள்ள எதிர்விளைவு. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது அஇஉச. 

உண்மையில் முஸ்லிம்களுக்கு ஹலால் பற்றிய அறிவு ஊட்டப்பட்டிருக்கு மானால், அல்லாஹ் கூறியுள்ள ஹறாமைத் தவிர்த்து வாழல் என்ற நெறிமுறை  வெளிப்படுத்தப்பட்டிருக்குமானால், ஹலால் சான்றிதழும், ஹலால் முத்திரையும் இன்றேல் முஸ்லிம்கள் உண்ண முடியாது என்ற மனோநிலை ஏற்படுத்தப்படாது இருந்திருக்குமானால்; இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு இருக்காது. மாறாக ஹலால் முத்திரை பொறித்தலை தவிர்த்தமை வரவேற்பைப் பெற்றிருக்கும்.   

ஹலால் முத்திரை தேவையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதன் பின்னரான ஊடகவியலாளர் ஒருவரின்> ஹலால் முத்திரை பொறிக்கப் படாத நிலையில்> முஸ்லிம்கள் எவ்வாறு தமது ஹலால் உணவைத் தேர்வு செய்வார்கள் என்ற கேள்விக்கு> அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள்> பொதிகளில் மேலுறையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கலக்கப்பட்ட பொருட்களின் அட்டவணையைப் பார்த்து தமது உணவை தேர்ந்து கொள்வார்கள் எனக் கூறியுள்ளார். தமது ஹலால் முத்திரை காணப்படவில்லை என்பது>  முஸ்லிம்கள் ஹலால் உணவைத் தேர்வதில் பிரச்சினையை ஏற்படுத்தாது எனவும் கூறியிருந்தார்.

உண்மையில் இத்தனை காலமும் இப்படித்தான் முஸ்லிம்கள் ஹறாமைத் தவிர்ப்பதற்காக> அதனுள் அடக்கப்பட்ட பொருட்களின் அட்டவணையைப் பார்த்து தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தனர். சந்தேகம் கொள்வோர் அதனைத் தவிர்த்துக் கொண்டனர். இதுவே நபிகளாரும் காட்டித் தந்த மறைவழி. 

அந்நிலையில்தான்>இவை போதாதென்று> ஹலால் முத்திரை அறிமுகப் படுத்தப்பட்டதாகவும் எதிர்ப்பலைகளின் போது  ஓர் நியாயப்படுத்தல் கூறப்பட்டது. ஒரு தனி மனிதன் தனது உணவை ஹலால் தானா எனக் கண்டறிய, தனக்குப் பின்னாலேயே ஒரு தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இழுத்துச் செல்ல வேண்டும். அது நடைமுறைச் சாத்தியமற்றது என்பத னால்தான் தாம் இப்படியோர் அணுகுமுறையை மேற்‌கொண்டதாகவும் கூறப்பட்டது.  இறுதிக்கட்டத்தில் இந்நடைமுறை தம்மால் உருவாக்கப் பட்டதல்ல என்றும்> அதிகமான வியபாரிகளின் வேண்டுகோளை நிறைவேற்று முகமாகவே தாம் ஹலால் சான்றிதழ் வழங்கி> ஹலால் முத்திரை பொறி்த்தலை ஆரம்பித்தோம் எனவும் கூறப்பட்டது. 

இவையனைத்தும் முன்பின் முரண்பாடுகளைக் கொண்ட கருத்துக் களாக இருப்பினும்> இந்நடவடிக்கை குர்ஆனிய அடிப்படையில் செய்யப் படவில்லை. முஸ்லிம்கள் தமது உணவைத் தேர்வதில் உள்ள கஷ்டத்தை நீக்குவதற்காகச் செய்யப்படவில்லை. ஆயினும் ஒரு சாதாரண இஸ்லாமியனால் வளர்ந்து வரும் தொழில்நுட்ப விஞ்ஞான காலத்தில் எவருடையவாவது உதவி இன்றேல் தனது உணவைக்கூட தேர்வு செய்து கொள்ள முடியாது என்று ஏற்படுத்தப்பட்டிருந்த அவலநிலையில் இருந்து விடுவித்துள்ளது, அஇஜஉ வால் விரும்பியோ விரும்பாமலோ வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள். அல்ஹம்து லில்லாஹ். இன்னும் எத்தகு மாற்றத்தை இவ்வுலகு ஏற்றாலும்> அத்தனையையும் முகம் கொடுத்து வாழ வழிவகுக்கும் அல்லாஹ்வின் சட்டங்கள். 

தாம் யாருடையவோ தேவைகளை நிறைவு செய்வதற்காக தம்மால் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட, ‘ஹலால் சான்றிதழ் வழங்கலும், முத்திரை பொறித்தலும்’ இன்றேல் முஸ்லிம்கள் இஸ்லாம் கூறிய வழியில், தமது ஹலாலான உணவைத் ‌தேர்வு செய்து கொள்ள முடியாது என்ற கருத்தைப் பல்வேறு உத்திகளைப் பாவித்து மக்கள் மனங்களில் ஏற்படுத்தி இருந்தமையே, இன்று, அவர்கள் பலவந்தத்தின் பேரில் அந்நடவடிக்கையைக் கைவிட எடுத்த முடிவுகளுக்கு எதிராக மக்களைக் குமுற வைத்துள்ளது. விதைத்தது அறுவடையாகின்றது. தற்போது முத்திரை இன்றி முஸ்லிம்கள் கஷ்டப்படப் போவதில்லை. அவர்கள் பைக்கற்றுக்களில் காணப்படும் விவரங்களைக் கொண்டே தமது உணவைத் தெரிவு செய்து கொள்வர் என்ற முரண்பாடான> ஆனால் உண்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹலால் உண்ண வேண்டியது ஒவ்வொரு இஸ்லாமியனதும்கடமை  அதற்கு ஹறாமை அறிந்து தவிர்க்கும் முறையே அல்லாஹ்வின் சுன்னா.  சந்தேகமானதைத் தவிர்த்துக் கொண்டு மானத்தையும்> மார்க்த்தையும் காத்துக் கொள்ளுங்கள் நபி மொழி்.  அந்நியருக்கும், பணம் பெற்றோ பெறமலோ ஹலால் சான்றிதழ் வழங்க முனைந்ததனால்> மேற்கண்ட இருவழிகளும் மீறப்பட்டுள்ளன. அதனால் மார்க்கத்‌தைப் பின்பற்று வதில் கூட தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. உண்மையில் குர்ஆன் வழியில் நாம் நடப்போமானால் நிச்சயமாக எம்மை எந்த எதிர்ப்பும் அணுகாது.

இத்துர்ப்பாக்கிய நிலையால்>இன்று அந்நிய சமூகத்தினர் உண்மை யாகவே முஸ்லிம்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் கூட தலையீட்டைச் செய்வதற்கு உந்து சக்தியைக் கொடுத்துள்ளது. ஆம்> எதிர்ப்பலைகளை ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களின் மதநடவடிக்கைகளைக்கூட அவர்கள் செய்வதிலிருந்து தடுத்து விடலாம் என்ற தப்பான எண்ண அலையையும்> குழறுபடியான பாரம்பரியத்தையும் தோற்றுவித்துள்ளது> தற்போதைய பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.

தலைமைத்துவம் என்பது ஆகக் குறைந்தளவாவது தீர்க்கதரிசனத் துடன் செயற்பட வேண்டியது. பின் விழைவுகள் கவனத்தில் எடுக்கப் படாது> சரியான நடவடிக்கைகளையே எடுப்பதை பல முறை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய சந்தர்ப்பத்தில்> அந்நியரையும் நமது மத நடவடிக்கைகளால் கட்டுப் படுத்துவது போன்ற நிலையை உருவாக்கிய செயல்>எழுந்தமானமாகச் செய்யப்பட்டதன் விழைவே இன்று முஸ்லிம் களுக்கு ஏற்பட்டுள்ள அவலம்.

தாம் செய்த இமாலயத் தவறுகளால் ஏற்பட்ட பாரிய பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக> தற்போது புதிய பாடலைப் பாடத் தொடங்கி உள்ளது அஇஜஉ. அதுதான்> இது முஸ்லிம் நாடு அல்ல > முஸ்லிம்கள் மற்றைய இனத்தாரோடு ஒத்து வாழ்ந்து இந்த தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் போன்ற இன்னோரன்னவைகளைக் கூறும் தந்திரம். இது இஸ்லாம் தடைசெய்துள்ள தாம் செய்ததை இன்னொருவர் மீது சுமத்தும் நடவடிக்கை. முஸ்லிம்கள் இதுவரை அந்நியர் மத்தியில் ‌முரண்பாடான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளது போன்ற மறைமுகக் குற்றச்சாட்டும் அறிவுரையும்.

இந்நிலையில் இன்று சர்ச்சைக்குரியதாகி,  முஸ்லிம்களுக்கு அளவிலா துன்பத்தை விளைவித்து, அதனடிப்படையில் வாபஸ் பெறப்பட்டுள்ள ஹலால் சான்றிதழ் பற்றிய உண்மை நிலையை அறிவது, நம்மை சரியான வழியில் சிந்திப்பதற்கும், குர்ஆனை நடைமுறைப்படுத்துவதற்கும் உதவியாக விருக்கும்.  

உண்மையில் ஹலால் என்ற அரபு வார்த்தையை அது ‘ஆகுமானது’, ‘அனுமதிக்கப்பட்டது’, ‘சட்டரீதியானது’என்ற கருத்துக்களை வெளிப் படுத்துவதற்காகப் பாவிக்கப்பட்ட வார்த்தை என்ற அளவில் நிறுத்திக் கொள்ளாமல். அந்த வார்த்தையைப் புனிதமானது போலவும், அது இஸ்லாமிய வார்த்தை  போன்றதுமான ஓர் மாயையை உருவாக்கிக் கொண்டதால் ஏற்பட்ட குழப்பமே தற்போது இந்நாட்டில் நிலவுவது என்பதை உணர்வோர், இப்பிரச்சினையை இலகுவாகக் கையாளும் வழிகளைக் காண்பர்.

இதனை இலகுவாக விளங்கிக் கொள்ள, alcohol free, cholesterol free, sugar free, fat free, போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படும், மதுசாரமற்றது, கொலஸ்ட்ரோல் அற்றது, சீனி சேர்க்காதது, கொழுப்பு கலவாதது என்ற கருத்துக்களை, அவற்றை ‘ஹலால்’ எனவும் அரபியில் கூறலாம் என, எடுத்துக் கொண்டு சிறிது சிந்தித்தால் உண்மை வெளியாகும்.

உண்மையில் இத்தயாரிப்பு உண்பதற்கு ஆகுமானது என்ப‌தனை ‘ஹலால்‘ என்ற சொல் வெளிப்படுத்துகிறதே தவிர, முஸ்லிம்கள் உண்பதற்கு தகுதி யானது என்ற கருத்தை வெளிப்படுத்தவில்லை.ஆனால், இஸ்லாமிய  நிறுவனம் ஒன்றின் இலாஞ்சனை கொண்டதாக இருப்பதால், அந்தத் தயாரிப்பு முஸ்லிம்கள் உண்ணத் தகுந்தது என்ற எண்ணத்தை ஏற்படுத்து கின்றது.

ஆயினும், இன்னொரு சாரார் முஸ்லிம்களுக்கு உண்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள பன்றி இறைச்சியை, அல்லது வேறு எதனையும் ‘ஹலால்’ என்ற முத்திரை‌யைப் பொறித்து விற்கலாம். காரணம், அந்த மொழியை முஸ்லிம்கள் மட்டும்தான் பாவிக்க முடியும் என்ற நியதியோ, சட்டமோ கிடையாது.  அந்த அரபிச் சொல்லைப் பாவிப்பதை உலகில் எவராலும் தடை செய்ய முடியாது. கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த அரபு மொழி பேசுவோரும் உள்ளனர் என்பதையும் நாம் மறந்து விடலாகாது.

மேலும், பன்றி இறைச்சி விற்பனை செய்வதோ, உண்பதோ எந்த நாட்டின் சட்டத்திலும் தடை செய்யப்படவில்லை. அதனை உண்பதோ, விற்பதோ குற்றச் செயலும் அல்ல. ஆதலால், பன்றி இறைச்சி பொதிசெய்யப்பட்டு, ஹலால் முத்திரை பொறிக்கப்பட்டு விற்கப்பட்டால், அது ‘ஆகுமானது’, ‘அனுமதிக்கப்பட்டது’, சட்டரீதியானதே! இதுவே  ஹலால் முத்திரை முஸ்லிம்களை வழிதவற, தடம்புரள, சறுக்க வைக்கும் இடம். ஆரம்பத்தில் ஹலால் முத்திரை பொறிக்கும் சூட்சுமத்தை அறிமுகப் படுத்தியோர் எதிர்பார்த்த இலக்கு.

முஸ்லிம்களுக்குத் தடையான பன்றி இறைச்சியைத் தவிர்த்து, அவர்களுக்கு ஆகுமான மற்றைய கால்நடைகளின், பறவைகளின் இறைச்சியை ஹலால் முத்திரையுடன் காணும் ஒருவர் எவ்வித சந்தேகமுமின்றி, அதனை வாங்கி உண்ணவே செய்வர்.  இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. காரணம், அந்தப் பொதியில் காணப்படும் இறைச்சி, குர்ஆனின் தடைக்குள்ளாகாத தன்மையை, அதாவது, தடைக்குள்ளான அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறி அறுக்கப் பட்டதா,  அல்லது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதா என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 

அப்படியே யாரோ ஒருவரின் ஹலால் முத்திரை காணப்பட்டாலும், அது நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்கப்படுவதே தவிர, நிச்சயப்படுத்திக் கொள்ள மு‌டியாதவை.  இந்நிலையில், ஹறாம் தவிர்த்தல் என்பது தனிமனித பிரச்சினை என்பதால், பக்குவம் கருதும் ஒரு முஸ்லிம் அதனைச் சாப்பிடாமல் தவிர்க்கவே செய்வார்.  இதுவேதான் இத்தனை காலமும் உலகில் நடைபெற்றுவந்த முறை. அதனால் முஸ்லிம்கள் எதுவித பாதிப்பையும் அடைந்ததாகவோ, உண்ண உணவின்றிக் கஷ்டப்பட்டதாகவோ பதிவுகள் இல்லை.

பன்றி இறைச்சி அல்லது அதனோடு தொடர்புடையவை எனக் கருதப் படுபவை உணவுப் பொதிகளில் உள்ளவற்றில் காணப்படுகின்றனவா என்பதை வேண்டுமாயின், ஓர் தரமான பரிசோதனை ஒன்றின் மூலம் கண்டு கொள்ளலாம். ஆனால், இந்த இறைச்சிகளை, அவை இஸ்லாமிய முறையில் அறுக்கப்பட்டவை தான் என்பதை எந்த பரிசோதனையின் மூலம் கண்டு கொள்வது? இது ஒன்றே போதும், ஹலால் சான்றுப் பத்திரம், ஆய்வுகளின் பின்னணியில் கொடுக்கப்படுவது, யாரோ ஒருவரால் ஆம் இது உரிய முறையி்ல் அறுக்கப்பட்டது எனக் கூறும் உத்தரவாதம் போன்றவை எந்த வகையிலும் அல்லாஹ்வின் சட்டத்தை நிறைவு செய்வனவல்ல என்பதை அறிய.  

இதுவே  ஹலால் முத்திரை முஸ்லிம்களை வழிதவற, தடம்புரள, சறுக்க வைக்கும் இடம். ஆரம்பத்தில் ஹலால் முத்திரை பொறிக்கும் சூட்சுமத்தை அறிமுகப்படுத்தியோர் எதிர்பார்த்த இலக்கு.

மற்றும் எந்தப் பொருளிலும் காணப்படும் ஹலால்  முத்திரை தன்னளவில் தானே பெறுமதியற்றதாகியும் விடும்.  தற்போதே சிறு குழந்தைகள் பச்சைக் கலர் ஹலால் முத்திரை உண்ணக் கூடியது என்ற மனநிலையை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.  ஒரு ‌முத்திரையை இனங் காணும் அறிவு எல்லோருக்கும் முடிந்ததல்ல. அதனால் சிலர் அதனை உருவத்தாலும், கலராலும், அமைப்பாலும் அடையாளப்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்கின்றனர். நல்ல நாணயத்தாள் போன்று இருக்கும் கள்ள நோட்டை யாரும் கூர்ந்து கவனித்து அது கள்ள நோட்டா நல்லதா என அறிய முற்படுவதில்லை. அது முடியாத ஒன்றம் கூட.  அது சந்தர்ப்பவசமாகப் பிடிபடும்போதுதான் அதன் உண்மைத் தன்மை புரிகிறது. இது பண விஷயம் என்பதால் சரி. ஆனால் இதே நிலை உண்ணும் உணவில் ஏற்படும் போது காலங் கடந்திருக்கும்.  ஹறாம் உடலில் கலந்திருக்கும்.

எதிர்காலத்தில் ஆயிரக் கணக்கில் ஒன்றையொன்று அமைப்பில், நிறத்தில், சாயலில் ஒத்தது போன்று, இனங் காண்பதில் சிக்கலுடைய தாக முத்திரைகள் அச்சிடப்படும். அந்நேரத்தில் அவைகளுடன் போலி முத்திரைகளுடனும் உணவுப் பொதிகள் புழக்கத்தில் விடப்படும். அப்போது முஸ்லிம்கள், அந்நிலையிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வது இலகுவான காரியம் அல்ல என்பதை பக்கச் சார்பின்றி சிந்திப்போர் அறிந்து கொள்வர்.

ஆதலால், ஹலால் முத்திரை குறைபாடுகள் பலவற்றைக் கொண்ட ஒரு செயற்பாடே தவிர, முஸ்லிம்கள் தமது ஹறாமைத் தவிர்ப்பதை நிறைவு செய்வதற்கு உதவுவதல்ல. மாறாக, ஹறாமை,  ஹலால் என்ற மாயை யில் உண்ணும் அவல நிலையையே ஏற்படுத்தும்.

இஸ்லாத்தைப் பொறுத்து ஹஹாமைத் தவிர்த்து நடத்தல் என்பது ஒரு தனிமனிதப் பிரச்சினை. அதனை ஒரு சமூகப் பிரச்சினையாக யாரும் அணுக வேண்டியதி்ல்லை. அல்லாஹ்வுக்கும் தனது அடியானுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. ஹறாம் தவிர்த்தலில் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு அவன் கூறியபடி, அல்லது குறிப்பிட்ட மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்று, அவனறியாமல் மீறப் பட்டிருக்குமானால் அதனையும் அல்லாஹ் மிக அறிந்தவன்.  அவன் தடை செய்துள்ள நான்கு பொருட்களையும், அவை அசுத்தம் என்பதனால்தான் தடைசெய்துள்ளதாக அவன் கூறியுள்ளான்.  ஆதலின், வரம்பு மீறாமல், பாவம் செய்யும் நோக்கில்லாது, அளவு கடந்து விடாமல், மேற்கண்டவை களை நிர்ப்பந்தம் காரணமாக ஒருவன் அருந்தின் தான் அதனை மன்னிப்பதாகக் கூறி இருப்பது, நமக்கு, இப்பிரச்சினையில், அல்லாஹ்வின் கருணையின் கனத்தை அறிந்து கொள்ள உதவும்.  அல்லாஹ் மனிதருக்கு சிரமத்தை விரும்புவதில்லை, இலகுவையே விரும்புகின்றான்

ஆக நிர்ப்பந்தம் என்ற சொல்‌லை வகைப்படுத்தலில், அல்லாஹ்வின் கருணை முழுமையாகப் பயன்படுத்துவது தங்கியுள்ளது. அவனது கருணை மனித வர்க்கத்துக்கு சிரமத்தைக் கொடுப்பதல்ல,வாழ்க்கையை இலகுபடுத்துவதே என்பதை அறிந்து கொள்வது பிரச்சினைகளைக் கையாள்வதில் உதவுவதாகவிருக்கும்.

உண்மையில் முஸ்லிம்கள் தற்போது கொதிப்படைந்திருக்க வேண்டிய தில்லை. காரணம் தற்போது எடுக்கப்பட்ட முடிவு, பலவந்தம் காரணமாக வோ, நல்லெண்ணம் காரணமாகவோ, தவிர்க்க முடியாத நிலையிலோ, முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதியோ எடுக்கப்பட்டிருந்தாலும், அது பிழையான முடிவல்ல. இம்முடிவை அஇஜஉ வை எடுக்க வைத்ததன் மூலம், எதிர்காலத்தில் முஸ்லிம்கள் ஹலால் முத்திரையுடன்  விற்கப்படும் ஹறாமை, சந்தேகமின்றி வாங்கி உண்ணும் அவல நிலையில் இருந்து அல்லாஹ் காப்பாற்றியுள்ளான்.

நமது குர்ஆனிய சட்டங்கள், யாரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்பட்டு, முஸ்லிம்களுக்கு பிரச்சினைகளை உருவாக்குவதற் காக அறிமுகப்படுத்தப்படவில்லை. நீர் துயரப்படுவதற்காக இக்குர்ஆனை உம்மீது நாம் இறக்கியருளவில்லை என்பதும் அவன் கூற்றே! மாறாக அதன்படி நம்மை   நடக்க வைத்து அல்லாஹ்வின் திருப்பொரு த்தத்தை பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. மனித சமுதாயத்தின் மேம்பாடு கருதி, சிறந்த உணவை அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப சிரமமின்றி தெரிவு செய்யத்தக்கதாக, சாப்பிடக் கூடாதவை (ஹறாம்) என்ற பட்டியலை, சில விதிவிலக்குகளுடன்  வெளிப்படுத்தி உள்ளான். 

இந்த நடைமுறை, நாம் உண்ணப் போகும் உணவு, ஹறாமானதல்ல என்ற நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது. காரணம் அது அல்லாஹ்வின் தடைக்குள் அடக்கப்படாத தன்மையைக் கொண்டதாகவிருக்கும்.  அதனை விடுத்து, போலி, கலப்படம் என்ற அக்கிரமங்களுடன் இணைந்துள்ள இவ்வுலகில், ஹலால் முத்திரை என்பது எந்த அளவுக்கு நம்பகமானது என்பதை சிந்திப்போர் கண்டு கொள்வர்.  இவ்வுணவு ‘ஹறாமல்ல’ என நாம் இனங்காணுவதற்கும், இதனுள் அடக்கப்பட்டது ‘ஹலால் என்ற முத்திரை யால் அறியப்படுதலுக்கும்’ பாரிய ஏற்றத் தாழ்வுண்டு. 

மேலும், இன்றைய நிலையில் முஸ்லிம்கள் ஹறாமான உணவை இனங் காண்பதில், குர்ஆனைப் பின்பற்றுவதில், சிரமத்தை, இயலாத் தன்மையை சந்திக்கின்றார்கள் என்றால், அது குர்ஆனை நாம் விளங்கிக் கொண்டதில் ஏற்பட்ட குழறுபடியாகவே இருக்குமே தவிர, குர்ஆனிய குறைபாடாக இருக்க முடியாது.

குர்ஆன் முரண்பாடற்றது, சந்தேகமற்றது. தெளிவானது, விவரிக்கப் பட்டது,  முழுமையானது, அனைத்துக்கும் தீர்வைக் கொண்டுள்ளது., உலக அழிவு வரை செல்லுபடியாகக் கூடியது, அனைத்தையும் அறிந்த, இயலாமல் ஆக்கப்பட முடியாதவனால் கருணையின் அடிப்படையில் அவனது கிரு‌பையாக இறக்கியருளப்பட்டது.

ஆதலால், நமது விளக்கத்தை மேம்படுத்தி பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுக் கொள்ள குர்ஆனிய சட்டங்களை குர்ஆன் என்ற உரைகல் லிலேயே உரைத்துப் பார்க்க வேண்டும்.  அப்போது அல்லாஹ் நாடினால் நமக்குத் தெளிவைத் தருவான். ஒரு சமுதாயத்தை அவன் வழிகேட்டில் விட்டுவிட நாடுவானேயாகில் அதனைத் தடுத்து நிறுத்துவோரும் யாருமில்லை.

5:87 - ”இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில், தூய்மையானவற்றை நீங்கள் விலக்கப்பட்டவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.  நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக, அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்கமாட்டான். ”

5:3 - செத்ததும், இரத்தமும். பன்றி இறைச்சியும், அல்லாஹ் அல்லாத வற்றின் பெயர் கூறப்பட்டதும்.......உங்கள் மீது தடுக்கப்பட்டிருக்கின்றன. இவை பாவமாகும். இன்றைய தினம் நிராகரிப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றிய நம்பிக்கையை இழந்துவிட்டனர். எனவே, அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். என்னையே அஞ்சுங்கள். இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்கு நான் பரிபூரணமாக்கிவி்ட்டேன். மேலும், என்னுடைய அருட்கொடையையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டேன். மேலும், உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். ஆகவே, எவரேனும் பாவத்தின்பால் சாய்ந்திடாமல், கடும் பசியினால் நிர்ப்பந்திக் கப்பட்டு விட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கிருபயுடையவனாகவும் இருக்கிறான்.

2:173 - அவன் உங்களுக்குத் தடை விதித்திருப்பதெல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அறுக்கும் பொழுது அல்லாஹ் அல்லாத பெயர்கூறி அறுக்கப்பட்டதும்தான். ஆயினும், எவரேனும் விருப்ப மின்றியும்,  வரம்பு மீறாமலும், கட்டாயப்படுத்தப்பட்டால் அவர் மீது அப்பொழுது குற்றமாகாது. நிச்சயமாக, அல்லாஹ்மிக்க மன்னிப்பவனும், இரக்கமுடைய வனுமாவான்.  9:115,21:94,


எந்த ஒரு சமுதாயத்தவரும் தங்கள் நிலையைத் தாங்களே மாற்றிக் கொள்ளாதவரை நிச்சயமாக, அல்லாஹ் அவர்களை மற்றுவதில்லை என்ற கூற்றுக்கும், தீர்வுகள் அனைத்தும் அவனது குர்ஆனில் இருந்தே கொடுக்கப்பட வேண்டும் என்ற அவனது நிபந்தனைக்கு உட்பட்டும் நாம் இதனை அணுக வேண்டும். அந்த வகையில், ஹறாமை இனம் காண்பதில், நமது கவனத்தை ஈர்ப்பது அல்லாஹ்வின் 6:145, 146, 16:114,115,116, ஆம் வசனங்கள். இவ்வசனங்கள் ஹறாம் பற்றி நாம் கொண்டுள்ள நமது அனைத்து கருத்துகளுக்கும், சந்தேகங்களுக்கும், பேதங்களுக்கும்,  பிரச்சினைகளுக்கும் இன் ஷா அல்லாஹ் தீர்வைத் தருவன.

                                                                                                                           - நிஹா -

No comments: