Tuesday, June 18, 2013

குர்ஆன் வழியில் ...


நல்லொழுக்கமுள்ள பெண்கள் பணிந்தே நடப்பார்கள்

இவ்வசனத்தின் மூலம் பணிவு என்பது நல்லொழுக்கத்தின் பாற்பட்டது என்பது மிகத் தெளிவு. ஆயினும், பல விளக்கங்களையும் பல்வேறு பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பால், வயது, அந்தஸ்து, தரம், பதவி, இடம் போன்ற பல்வேறு தன்மைகளை வைத்து பணிவின் பண்பு அனுமானிக்கப்படலாம் அல்லது  வேறுபடுத்தப்படலாம். 

மிருகங்களில் இருந்து மனிதரை வேறுபடுத்திக் காட்டுவதில் முக்கிய இடத்தை ஒழுக்கமே வகிக்கிறது. மனிதர் புனிதராவதற்கும் ஒழுக்கமே வேண்டப்படுகின்றது. ஏன் மனிதர் மனிதரென மதிக்கப்படுவதற்கும்கூட ஒழுக்கமே அவசியமாகின்றது. நாயகத் திருமேனி நபிகள் நாதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு இறைவன் தன் அருள்மறையில் கொடுத்த நற்சாட்சிப் பத்திரம் ஒழுக்கம் பற்றியதே. 68:4 வசனம், 'நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கிறீர்'.  

இன்றுங்கூட உத்தியோகங்களுக்கு செல்வோரிடம் இருந்து அவர்கள் கல்வித் தாரதரத்துக்கு மேலாக ஒழுக்கத்தைக் குறிப்பிடும் நற்சான்றுப் பத்திரம் கேட்கப்படுகின்றது. கல்விகற்ற பாடசால அதிபரின் நற்சாட்சிப் பத்திரம் வேண்டப்படுகின்றது. அவர்களது ஒழுக்கம் பற்றி அறிவதற்காக உறவினரல்லாத இரு மத்தியஸ்கள் கேட்கப்படுகின்றனர். இவையெல்லாம் நடைமுறை வாழ்வில் ஒழுக்கத்தின் இன்றியமையாமையை உணர்த்தவல்லன.  

ஓழுக்கமில்லாதோர் உயர்குடியில் பிறந்திருந்தாலும் மனித அந்தஸ்துக்கு உரியவர்கள் அல்லர். அதுபோன்றே ஒழுக்கமற்ற மனிதன் எவ்வளவு கல்வி கேள்விகளில் உயர் நிலையை அடைந்திருந்தாலும் மனிதனாக மதிக்கப்படுவதில்லை. மிகச் சிறந்த வீரம் கொண்டவனும் மனிதனுக்குரிய ஏற்கப்பட்ட ஒழுக்கம் குன்றியவனாக இருந்தால் மனிதருள் வைத்துப் பார்க்கப்பட மாட்டான். உலகின் அதிக செல்வத்தைக் கொண்டவனும் ஒழுக்கம் கெட்டவனாக இருப்பானேயாகில் அவனும் மனிதருள் ஒருவனாக கணிக்கப்படுவதில்லை. 

ஆனால், உயர் குடியில் பிறக்காமலும், இழிபிறவியாக இருந்தாலும், கல்வி, செல்வம், வீரம் போன்ற எதுவும் அற்றவனாக இருந்தாலும் கூட அவனிடம் நல்லொழுக்கம் மட்:டுமே காணப்படுமாயின், அவன் மனிதருள் மட்டுமல்ல தேவருள்ளும் வைத்து எண்ணப்படுகிறான்.

மேற்கண்ட, 'நல்லொழுக்கமுள்ள பெண்கள் பணிந்தே நடப்பார்கள்' என்ற தலையங்கம் அல்குர்ஆனின் பெண்கள் என்ற நான்காம் அத்தியாயத்தின் 34ஆம் வசனத்தின் ஒரு பகுதியாகும். நல்லொழுக்கமுள்ள பெண்கள் எதற்கு? யாருக்கு? எங்கு? எப்போது? ஏன்? பணிந்தே நடப்பார்கள் என்பதும் இங்கு அறியப்பட வேண்டியதே! 

இந்தக் கேள்விக்கு அனைத்துக்கும் பணிந்து நடப்பார்கள் என ஓரே பதிலாகக் கூறினும் அது பெண்ணின் உயர் பண்பையே காட்டி நிற்கும். பெண் என்பது மென்மை என்ற தன்மை சார்ந்தது என்பதை விளங்கிக் கொள்ளும் எவருக்கும் இதனை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனை அவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்வர். அதனை ஏற்காதவர்களுக்கும் விளக்க வேண்டியதில்லை. 

அப்படியான விளக்கம் கொண்டோருக்காகவே இக்கட்டுரையும் எழுதப்படுகிறது. ஏற்காதோரைப் பலவந்தப்படுத்தல் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று. ஆக ஏற்பவருக்கேதான் குர்ஆனிய உபதேசங்களைக் கூறும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். 

சிலர், தமது கருத்தாக, அப்பெண் ஒழுங்காகத் தன் கடமைகள் அனைத்தையும் தன் கணவனுக்கு, பிள்ளைகளுக்கு, பெற்றாருக்கு, மற்றோருக்கு செய்கின்றாள்தானே அதற்கு மேல் வேறு என்ன பணிவு வேண்டிக்கிடக்கிறது என சிந்திப்பதையும் அறியவே செய்கிறேன். இங்கு பணிவு என்பதற்கு அவர்கள் கொண்டுள்ள கருத்தே, அவர்களை அப்படி எண்ண வைத்துள்ளது என்பதே எனது ஓரே பதில். 

தலையங்கத்தை ஊன்றிக் கவனிப்போர், உய்த்துணர்வோர், பணிந்து நடத்தல் என்ற பதம் ஓர் பண்புசார் தன்மை என்பதைக் குறிப்பதையும், அப்பண்பு குடி கொண்டோர் உயர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வரே தவிர, குறைமாதராகக் கொள்ளப்படுவதில்லை என்பதையும் அறிவர்.  அப்போது அவர்களது மேற்கண்ட கேள்வி இல்லாதொழிந்துவிடும். விளக்க மின்மையால் ஏற்படுபவை விளக்கம் கிடைத்ததும் மறைந்து விடுவது இயற்கையே! நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும் என்ற சினிமாப்பாடல்கூட இதனை ஒட்டியதே! 

இறைவனையே நாம் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வேமாயின், பணிவு என்ற சொல்லின் கருத்துச் செறிவு வெளிப்படும். இறைவனது, நான் உங்கள் அழைப்புக்கு பதில் கூறுவேன். நான் உங்கள் பார்வைக்குள் வந்துவிடுவேன். நான் உங்கள் நடையாகிவிடுவேன். நான் உங்களுடனேயே இருந்து உங்களுக்கு பாதுகாப்பைத் தந்து கொண்டிருப்பேன். உங்களைப் பாதுகாப்பது நமது கடன், உங்களுக்கு வழிகாட்டுவேன் போன்ற பல வசனங்கள் இறைவனின் பணிவு என்ற பண்பை விளக்குகின்றன. 

இவை அவனைக் கீழ்நிலைக்குத் தள்ளியுள்ளனவா என்றால் அது மாறாக அவனின் உயர் தன்மையை, மக்களில் அவன் கொண்டுள்ள அக்கறையை, கருணையை, காருண்யத்தை, அன்பை, அரவணைப்பை, மனித நேயத்தை, நேசத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. உயர்ந்த நிலையில் இருக்கும் போது பணிவு கொண்டவனாக இருப்பதனால்தான் இறைவன் அனைவராலும் வணங்கப்படுகிறவனாக இருக்கிறான். அவனிடம் இக்குணங்கள் மட்டும் இல்லாதிருக்குமாயின் அவன் அனைவராலும் வணங்கப்படுபவனாக இரான். 

இந்த உண்மையை அவன் நுண்ணறிவாளனாக இருப்பதனால் அறிந்து வைத்து நம்மை யெல்லாம் அவனை வணங்கும்படி செய்துள்ளான். இதனையே அனைத்துப் பெண்களுக்கும் கடைப்பிடிக்குமாறு கூறி அவர்களின் அந்தஸ்தை உயரும்படி செய்துள்ளான். அதற்கும் காரணம்  இல்லாமாலில்லை. 

உலகில் பிறந்த ஆதம், ஏவாள் தவிர்ந்த அனைவரும் பெண்களான தாயால் வெளியானவர்கள் என்பதால் அவர்களை உயர்வான இடத்தில் வைக்க இறைவன் கையாண்ட இலகு வழி எனக் கூறின் அது பொருத்தமாவே இருக்கும். தாய்க்கு எப்போது அவமானம், தரக்குறைவு ஏற்படுகின்றதோ அப்போது அது முழு உலகத்தையும் பாதித்து விடும். அவ்வவமானம் அனைவருக்கும் உரியதே! தாய் என்ற அந்தஸ்தைப் பெறக்கூடிய பெண் அவமானம் வராமல், அதனால் அகில உலக மக்களும் அவமானம் அடையாமல் பாதுகாக்க நல்லொழுக்கமுள்ள பெண் மதிநுட்பமாகப் பணிந்தே நடப்பாள்.  ஆக தாய்மார் அனைவரும் பெண்களே என்பதனால் அவர்களுக்கு மேற்கண்ட ஆலோசனையை மிக நுட்பமாக அறிவித்துள்ளான். 

தர்க்க ரீதியாக நல்லொழுக்கமுள்ளோர் பணிந்தே நடப்பர் என்ற இறை கூற்று, பணிந்து நடப்போர் நல்லொழுக்கம் உடையோர் என்ற கருத்தைத் தருவதோடு பணிந்து நடவாதோர் நல்லொழுக்கம் அற்றவர்கள் என்ற கருத்தியலுக்குள் அடக்கப்பட்டு விடுகின்றனர். எல்லா இடத்திலும், எல்லோ ரிடத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் பெண்கள் பணிந்து நடப்பது அவர்களது உயர் பண்பை வெளிப்படுத்துவதோடு, அவர்களுக்கு அதியுயர் கௌரவத்தையும் அளித்துவிடும். அல்ஹம்துலில்லாஹ்.

கொழும்பு 03

2012.07.05                           - நிஹா -  



No comments: