One World One Ummah
இனவாத வியாதியும் மருந்தும்
மனித வாழ்வில் அறியாமையே அச்சத்துக்கான அடிப்படைக் காரணம். ஆயினும், எப்போது ஒன்றை, ஒருவரை, நட்பை, நடப்பை, சூழலை போன்றவற்றை அறிகிறோமோ அப்போது அறியாமையில் இருந்து விடுபட்டு அதனால் ஏற்பட்ட அச்சம் அகலும் அல்லது கூடிவிடவும் செய்யும்.
ஆக அறியாமையாலும் அச்சம் வரும். அறிவதனாலும் அச்சம் வரும். அறியாமையால் வரும் அச்சம் அறிவூட்டப்படுவதனால் அகற்றப்படக் கூடியது. அறிவதனால் வரும் அச்சம் தீர்வுகள் வேண்டி நிற்பது. முன்னையது தனியாளோ சமூகமோ தானாக அச்சத்திலிருந்து விடுபடுவது. பின்னையது, அச்சம் ஏற்படக் காரணராக இருந்தவரால் தீர்த்து வைக்கப்பட வேண்டியது.
ஒரு மனிதரை அவரின் குணாதிசயங்கள் நல்லவை என்ற கருத்தியலில், சாதகமான positive முறையில் அறிந்து கொள்வோமாயின் அப்போது அவரில் நம்பிக்கை ஏற்படுகிறது. அச்சம் அகன்று விடுகின்றது.
அதே வேளை அவரின் குணாதிசயங்கள் நம்பத்தகுந்ததாக இல்லாமலும், நடவடிக்கைகள் பிழையான வழியில் முன்னெடுக்கப்படுகின்றன என்ற பாதகமான negative கருத்தியல் ஏற்படுமாயின், அப்போது அச்சம் தானாக தோன்றிவிடுகின்றது. இது நம்மைவிட, பலத்தால், பொருளால், அதிகாரத்தால், பெரும்பான்மையால் என அறிய வரும்போது அவ்வச்சம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்குகின்றது.
இவ்வச்சம் பல்வேறு காரணிகளையோ, ஓரே காரணியையோ கொண்டிருக்கும். அவை பாதுகாப்போடு ஒட்டியதாக, வாழ்வியலோடு சம்பந்தப்பட்டதாக, பொருளாதார பின்னணியைக் கொண்டதாக, மதநடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் என்பதாக என பல முகங்களைக் கொண்டிருக்கலாம்.
இவ்வாறான ஓர் நிலை மக்கள் மனதில் ஏற்படுமாயின், அது குடும்பமாயின், சமூகமாயின், ஆட்சியாயின், அங்கே சுமுக நிலை காணப்படவில்லை என்பதையே உணர்த்தும். அப்போது அசம்பாவிதங்கள், அசாதாரணங்கள், சந்தேகங்கள், வெறுப்புக்கள், விரக்திகள் என்பன தோன்றி, ஒதுங்கும் மனப்பான்மை அல்லது பிரிந்து செல்லும் தேவைகள் தானாக உருவாகும். இவையே ஈற்றில், உரிமைக் கோஷமாக, உண்ணாவிரதமாக, பகிஷ்கரிப்பாக, போராட்டமாக மாறும்.
இவைகூட சரியான முறையில் முகங்கொடுக்கப்படாவிட்டால், காரணங்கள் அறிந்து தீர்க்கும் வழிகளில் செல்லாது புறக்கணிக் கப்பட்டால், நசுக்கும் நடைமுறை கைக்கொள்ளப்பட்டால், அது வன்செயல் என்ற பொறிக்குள் தானாக தள்ளப்படும். அவையே பின்னர் ஆயுதப் போராட்டமாகவும், பயங்கரவாதமாகவும் கூட மாறி சம்பந்தப்பட்ட இடங்களில் அழிவுகளை ஏற்படுத்தும்.
சட்டமும் ஒழுங்கும் நிலை நிறுத்தப்படாமலும், நீதி அனைவருக்கும் கிடைக்காமலும், ஒருவரை மற்றவர் நசுக்கும் பண்பு மேலோங்கு வதாகவும் இருக்கும் போது, எதிர் விளைவாக, இவ்வாறான அச்சத்தால் ஏற்படுத்தப்படும், ”என்ன நடக்கப் போகின்றதோ என்ற அறியாமை”, தோற்றுவிக்கப்பட்டு, பல் வேறு பிரச்சினைகள் முளைவிடத் தொடங்கிவிடுகின்றது.
தற்போது இந்நாட்டில் இனங்கள் மனதில் தோன்றியுள்ள அச்சங் களால் ஏற்படுத்தப்பட்ட அறியாமையே ஆலவிருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கினறது. இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டு மாயின், அச்சங்கள் ஏற்பட காரணமானவைகளைக் கண்டறிந்து, அவைகளைப் போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இன்றியமை யாதது. சம்பந்தப்பட்டவர்கள் அதனைச் செய்வார்களா?
தற்போது இந்நாட்டில் இனங்கள் மனதில் தோன்றியுள்ள அச்சங் களால் ஏற்படுத்தப்பட்ட அறியாமையே ஆலவிருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கினறது. இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டு மாயின், அச்சங்கள் ஏற்பட காரணமானவைகளைக் கண்டறிந்து, அவைகளைப் போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இன்றியமை யாதது. சம்பந்தப்பட்டவர்கள் அதனைச் செய்வார்களா?
No comments:
Post a Comment