அகில உலகிலும் அரிவையர்க்கான அதியுயர் பாதுகாப்புப் பெட்டகம் அல் குர்ஆனே!
இன்று உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் மூலை முடுக்கில் இருந்தும் பெண்ணிலை வாதம், சமவுரிமை, பெண்ணியம், பெண்ணுரிமை போன்ற பதப் பிரயோகங்களுடன், காளான்களாக சில இயக்கங்கள் அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டிருக்கின்ற வரலாற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இப்படி தோன்றியவைகள் உருப்படியாக எதனையாவது செய்திருக்கின்றனவா? என நோக்குவோர், எதிர்மாறான தன்மைத்ததாக, பெண்களின் வாழ்க்கை நிலை படுபயங்கரமாக, அதள பாதாளத்தை நோக்கி அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருப்பதை அறிந்து கொள்வர்.
பெண்ணொருத்தி ஆடையின்றி பாதைகளிலும், பயணங்களிலும், பகிரங்க இடங்களிலும், பட்டப் பகலிலும், நட்டநடு நிசியிலும் தட்டத் தனியே திரியும் அவலத்தையே மேற்கண்ட மாதர் நலன் காப்பதற்காக உருவான காளான்கள் பெற்றுத் தந்துள்ளன என்ற பேருண்மை நடைமுறையில் அம்பலமாகி உள்ளது. அம்மணங்களாக பல்வேறு வழிகளில் சாதனைகள் போன்றும், பொழுது போக்காகவும், நாகரிகம் என்றவாறும், புரட்சி செய்வதாகவும் நினைந்து அவமானச் சின்னங்களாக மாறியுள்ளனர், தாய்க்குலமான பெண்டிர் என்பது மனித இனத்தையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
அகில உலகிலும் இன்று காணப்படும் பெண்களின் சீரழிவுகள் பற்றிய விபரத்தை யாரும் பூரணமாக வெளிப்படுத்திவிட முடியாத அளவு முடிவிலிகளாகி உள்ளன அந்த அசிங்கங்களின் பக்கங்கள். கற்பனை பண்ண முடியாத அளவு சீரழிவை நோக்கிய பயணமாகி உள்ளன அவர்கள் தம் இழிசெயல்கள். அவர்களது அனைத்துச் செயல்களுக்கும் அவர்கள்தம் அம்மண மேனியே முதலீடாக மாறியுள்ளது. பெண்கள் திறந்த மேனியாகவும், பிறந்த மேனியாகவும் திரிவது என்பது மிகச் சாதாரண நிகழ்சியாக மாறிக் கொண்டுள்ளது. பெண்களின் கேவல நிலையைப் படம் பிடித்துக் காட்டி அதனால் பேருவகை அடைவதற்காக இதனை நான் எழுதவில்லை. மாறாகஇ தோன்றி அழிந்து கொண்டிருக்கும் சமவுரிமை, பெண்ணிய, பெண்ணுரிமைச் சங்கங்களின் சாதனையால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளை வெளிப்படுத்துவதும், அதற்கு தீர்வொன்றைத் தரக்கூடிய குர்ஆனிய பாதுகாப்புக் கவசங்களை வெளிப்படுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கம்.
உயரிய நோக்கத்தைக் கொண்டிராத நடவடிக்கைகள், கீழ்த்தரமான பயன்களை, விளைவுகளை ஏற்படுத்துமே தவிர நற்பயன்தரு விளைச்சலைத் தந்திடா. அற்ப இலாபங்களுக்காகவும், குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், சுயநல நோக்கிலும், மமதை காரணமாகவும், முதன்மை ஊக்கத்தினாலும், ஆணவத்தினாலும், மேலாண்மை கொண்டதனாலும், தாழ்வுச் சிக்கல்களினாலும், அறியாமையினாலும், பொருளாதார மேம்பாடு கருதியும், மேல்மட்ட மக்கள் என்ற மாயையிலும், ஆடம்பர மோகத்தினாலும் போன்ற சிற்சிறு மறைமுகக் காரணங்களால் உருவாக்கப்பட்டவையே ஏறத்தாழ அனைத்து மாதர் நலன் காக்கத் தொடங்கிய கழகங்களும் என்பதைச் சீரழிவுகள் பேரலையாக வெளிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. பெண்ணுரிமை பற்றிப் பேசுவோரால் ஏதோ புரட்சிகரமான செயலென்ற கற்பனையிலும், தாராள மனத்தை வெளிப்படுத்துவதென்ற மாயையிலும், ஏதோ புதிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியது போன்ற பிரமையிலும், புதிய சாதனையைச் செய்கிறோம் என்ற பெருமையிலும் போன்ற சிந்தனையுடன் காரியங்கள் ஆற்றப்படுகின்றன. மேற்கண்ட கருத்தியல் மாயையில் மயங்கி எதனைச் செய்வதென்றறியாது, எதெதெதனையோ எல்லாம் செய்து வந்ததால் உருவானதே இன்று ஏற்பட்டுள்ள பெண்களின் இழிநிலையும், அழிவுகளும், சமூகச் சீரழிவுகளும்.
பெண்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரான கற்காலத்தில் நிலவிய அந்தகாரத்தில் அல்லலுறுவதை கண்டுங் காணாமல் விடாமலேயே கருணை நாயனான எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ் தன் மாமறைகள் மூலம் அவ்வப்போது பெண்ணுரிமையை, அவர்தம் பாதுகாப்பை, அதற்காக பெண்டிரும், பிறரும் கைக்கொள்ள வேண்டிய உயர் பண்புகளை வெளிப்படுத்தி உள்ளான். பெண்கள் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டவற்றைச் கட்டாய சட்டங்களாகவே ஆக்கி அளித்துள்ளான். அப்படி உருவானவற்றின் இறுதி வடிவமே இன்று முஸ்லிம்கள் - அடி பணிந்தவர்கள் - பின்பற்றும் அல் குர்ஆன்.
எனது கட்டுரைத் தலைப்பு பெண்களின் பாதுகாப்புக்காக குர்ஆன் எதனைப் பரிந்துரை செய்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதல்ல. மாறாகக் குர்ஆன் கூறும் வாழ்க்கை முறையே பெண்களுக்கான பாதுகாப்பு. தவிர உலகின் வேறெந்த கொள்கைகள், கோட்பாடுகள், சட்டங்கள், சீர்திருத்தக் கருத்துக்கள் போன்ற எதுவும் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்கிட வல்லனவல்ல என்பதை வலியுறுத்துவதே. மேலும் அவை எதிர்மறையான பண்புகளை விளைத்து, அபாயத்தை, அபகீர்த்தியை, அவதூறை, அவமானத்தை பலனாக அறுவடை செய்விப்பன என்பதுவுமே. இந்த நடைமுறை உண்மையே நாம் தினந்தினம் கண்டும், கேட்டும், வெந்தும், வேதனைப்பட்டும் வரும் தற்போதைய பெண்ணினச் சீர்கேடுகள்.
இக்கட்டுரை வழமையான பல்லவியாக தலைப்புக்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டாது, குர்ஆனிய கருத்துக்கள் எவ்வகையில் அரிவையர்க்கான பாதுகாப்புப் பெட்டகமாக அமைந்துள்ளது என்ற பாணியில் செல்வதாகவிருக்கும். அதற்காக குர்ஆனிய வசனங்கள் ஆராயப்பட வுள்ளன. இவை எனது கருத்து அல்ல. இறைவனின் சட்டங்களுக்குள் மறைந்து கிடக்கும் பேருண்மைகள், கருணைகள். உய்த்து உணர்ந்து அறியப்பட வேண்டியவை. இக்குர்ஆனிலுள்ள மிகச் சிறந்ததை தேடுங்கள் என்ற வல்ல நாயனின் அழைப்புக்கு அடிபணிந்ததால் உருவானவை.
1.பெண்ணுக்கெதிரான குற்றச் சாட்டு. பத்தினிப் பெண்களை அவதூறு கூறி, நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வராது போயின், அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். ஒரு போதும் அவர்கள் கூறிடும் சாட்சியத்தை ஏற்காதீர்கள். 24:4. கடனுக்கு சாட்சி இருவர் எனப் பரிந்துரை பகன்றுள்ள அருள்மறை, பெண் அவதூறுக்கு சாட்சி நால்வர், என்பதைக் கட்டாயமாக்கி உள்ளது. மனித வாழ்வில் பெரும் பகுதியை கொடுக்கல் வாங்கல் கவர்ந்து விடுகிறது. இது பற்றி விளக்க முற்படின் நான் வந்த நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து விடுவேன். சிறிது சிந்தனையை முடுக்கி விடுவோர் நான் சொல்லிட நினைப்பதை விடவும் கூடவே தெரிந்து கொள்வர். கொடுக்கல் வாங்கலில் மிக முக்கியமானதாகக் கடனை வல்ல அல்லாஹ்வே பரிந்துரை செய்கிறான். தனக்காக அழகிய கடனாகக் கொடுங்கள் எனவும்; திருப்பித்தர முடியாத கடன்களைத் தாமமாக விட்டும்படி கூறியவன், அது பற்றிய நிறைய நிபந்தனை களையும் விதிக்கின்றான். அவற்றில் மிக முக்கியமனது ஆண்கள் இருவரின் சாட்சியம். அப்படி இரு ஆண்கள் கிடைக்காத போது, ஒரு ஆணும் இரு பெண்களும் எனவும் அதற்குக் காரணத்தையும் கூறியுள்ளான்.
2.ஆனால், பெண்கள் பற்றிய விடயத்தில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு ஒன்றிற்கு நான்கு ஆடவரின் சாட்சியத்தைக் கட்டாயமாக்கி உள்ளான். அத்தோடு விட்டு விடாது அப்படி அவதூறு கூறியவன் நான்கு சாட்சிகளுடன் நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், அவனுக்கு எண்பது கசையடிகள் கொடுக்கும்படி கூறியிருப்பதுடன், அவனது சாட்சியத்தைக்கூட ஒருபோதும் ஏற்காது விடும்படி பணித்திருப்பதும், பெண்கள் விடயத்தில் யாரும் குற்றச்சாட்டுக் களை எழுந்தமானமாகச் சுமத்தி தப்பித்துச் சென்றுவிடும் சந்தர்ப்பத்தைத் தடைசெய்து அதன் மூலம், அத்தகு பயங்கரத்தில் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளது.
குர்ஆனிய ஆட்சி நிலவும் இடங்கள் தவிர, இச்சட்டம், இன்றைய உலகில் எந்த மதங்களிலும், எந்த நாட்டிலும் காணப்படாத, எவராலும் சிந்திக்கவும்படாத ஒரு பாதுகாப்புக் கவசம். வேண்டுமானால் பழிசுமத்தப்பட்ட ஓர் பெண் தனக்குள்ள அந்தஸ்து, பணம், பரிவாரம், பந்தோபஸ்து போன்றவைகளை முதலீடாக வைத்து தன் மேல் அவதூறை ஏற்படுத்தியோர் மீது மானநஷ்டத்துக்கான வழக்கை மன்றில் பதிவு செய்திட முடியும். நீதி கிடைக்குமா? கிடைப்பதானாலும் எவ்வளவு காலத்தின் பின்? அப்படியானாலும் அவளது இழப்பை ஈடுசெய்திடுமா? மாறாகஇ நான்கு பேருக்குள் இருந்தது நாடுபூராவும் பரப்பப்பட்டு அவமானத்தை அதிகரிக்க வைத்துவிடாதா? இவை அனைத்தும் சட்டமாக வாசிப்பதற்கு வேண்டுமானால் அழகாக நீதியாக இருக்குமேயல்லாது நடைமுறையில் நன்மை பயப்பனவல்ல. சமவுரிமை கோருவோர் இதன் பின்னரும் தமது முட்டாள் தனத்தையும், நோக்கத்தையும் திருத்திக் கொள்ளாவிடில் அதன் நஷ்டத்தையே அவர்கள் சுமக்க வேண்டியிருக்கும்.
3.தன்மேல் சுமத்தப்பட்ட அவதூறைப் பெண் சத்தியம் செய்து நீக்கிக் கொள்ளல். எப்படியாவது ஒரு பெண் மேல் அவதூறைச் சுமத்தி அவள் வாழ்வைக் கேள்விக் குறியாக்கிட முனையும் ஒருவர் தனக்கு ஆதரவாக நான்கு சாட்சிகளை கொண்டு வராது தான் உண்மையாளர்களில் உள்ளவன் என்று அல்லாஹ் மேல் சத்தியம் செய்து நான்கு தடவையும், ஐந்தாவது தடவையாக நான் பொய்யர்களில் உள்ளவனாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் தன்மேல் உண்டாகட்டும் எனச் சாட்சியம் சொல்லும் உரிமையைக் கணவனுக்கு புனித குர்ஆனின் 24:6,7வது வசனங்கள் வழங்கி உள்ளதால், முற்பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆனியச் சட்டமும் அவளைக் காப்பாற்ற முடியாத நிலையை ஏற்படுத்திவிடலாம். இதனை அறிந்த பேரறிவாளனான வல்ல நாயன், அதற்கும் மேலதிகமாக, யாருடைய தயவுமின்றித் தானே சுயமாக, அல்லாஹ் மேல் சத்தியம் செய்து நீக்கிக் கொள்ளலாம் என்ற பாதுகாப்பை, ‘நிச்சயமாக அவன் பொய்யர்களில் உள்ளவன்’ என்று அவள் நான்கு முறை அல்லாஹ்வைக் கொண்டு சாட்சி கூறுவது அவளை விட்டும் தண்டனையைத் தடுத்துவிடும்” என்பதை 24:8 ஆம் வசனம் வழங்கி, அவளது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது.
இதனைவிடுத்து அவள் தனக்குச் சாதகமாக, தற்போது உலகில் நடைமுறையிலுள்ளது போல் சாட்சிகளைக் கொண்டு வரவேண்டி இருந்தால் அவள் எவ்வகைத் துன்பங்களை, குழப்பங்களை, இழப்புக்களை, அவமானங்களைச் சந்திக்க வேண்டி இருந்திருக்கும். சாட்சியம் கூற வருபவர்களின் இச்சைகள், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை அடைய வைத்திருக்கும். அப்படி இல்லாவிடினும் அவமானத்தையாவது வருவிக்கும். அது சட்டியில் இருந்து நெருப்பில் விழும் நிலை அல்லது குளிக்கப் போய் சேறு பூசிக் கொள்ளும் அவலத்தை ஏற்படுத்தி விடும். சற்று சிந்திப்போர் இவ்விறை சட்டத்திலுள்ள பெண்களின் அதியுயர் பாதுகாப்பை அறிந்து கொள்வதோடு, இது போன்ற ஓh; சட்டம் என்றாவது மனித சிந்தனையுள் வந்துவிடுமா? என்பதை அறிந்து அதிசயிப்பர். பெண்கள் மேல் கொண்டுள்ள கருணை மேலீட்டால் இறைவன் தந்த அதியுயர் சிறப்பு ஏற்பாடு. காரணம் மனித இனத்திற்கு பெண் என்பவள் தாயாக இருப்பதால் அவளுக்கு ஏற்படும் அபகீர்த்தி அத்தனை மனிதரையும் சூழ்ந்து அவப்பெயரைத் தந்துவிடும் என்ற நுண்ணறிவின், தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாடு.
4.பெண் அவதூறு பற்றிக் கேள்விப்படுவோர் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளல். “இதனை நீங்கள் கேள்விப்பட்ட போது, ஈமான் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்கள் உள்ளங்களில் நல்லதையே எண்ணி, ‘இது தெளிவான அவதூறே’ எனக் கூறியிருக்க வேண்டாமா?” -24:12. முன்னையதற்கு மேலும் இன்னோர் படிகடந்த பாதுகாப்பைத் தருகிறது இந்த வசனம். அதாவதுஇ ஒர் பெண் மேல் அவதூறு பற்றிக் கேள்விப்படும் சந்தர்ப்பம் ஏற்படுவது சமூக வாழ்வில் தவிர்க்க முடியாததொன்று. இச்சந்தர்ப்பத்தில் இதற்குச் சிலர் கருவிகளாகி, ஒர் அபலையின் மீது தாம் கேள்விப்பட்டவற்றை தாமறியா வண்ணம் பரப்பி விடுகின்றனர். பெண்ணின் பாதுகாப்புக்காக முன்னைய சட்டங்கள் தடுத்தும் கூட மறை முகமான பாதிப்பு இதுபோன்ற வதந்திகளை வாந்தி எடுப்போரால் பரப்பப்பட்டு அபலைப் பெண் பலத்த அவமானத்தை அடைகிறாள். அவளது குடும்ப வாழ்வு, குடும்பம் அனைத்தும் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு மாறாத்துயரில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. அதனாலேயே அவதூறு பற்றிக் கேள்விப்பட்டதும் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறான்.
5.அவதூறு கூறுவோர் சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டும். “அவர்கள் இதன்மீது நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவ்வாறு அவர்கள் சாட்சியத்தைக் கொண்டுவராத காரணத்தால், அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்கள்” -24:13. மேற்கண்ட அனைத்தையும் தாண்டி பெண்ணுக்கு அநியாயம் நடந்துவிடும் சந்தர்ப்பமும் உண்டாகி விடுவதை முற்றும் உணர்ந்த அல்லாஹ் அறிந்து வைத்திருந்ததனால், மேற்கண்ட சட்டத்தை யாத்துள்ளான். ஓர் பெண்ணுக் கெதிராக சாட்சி கொணர முடியாதோர் ஏற்கனவே எண்பது கசையடியைப் பெற்றிருந்தாலும், அவன் அது போன்ற இழிசெய்களில் ஈடுபடுவதை யாரும் தடுத்திட முடியாது. அதனால் பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் அவமானங்கள் தொடரும் சந்தர்ப்பங்கள் அற்றுப் போவதில்லை. ஆனால் மேற்கண்ட சட்டத்தின் பிரகாரம் பெண்ணுக்கெதிராகச் சாட்சி கொணர முடியாதவன் பொய்யன் என்ற பட்டத்தைப் பெற்று விடுகிறான். சட்டத்தின் தீர்ப்பு ஒருவனைப் பொய்யன் என பிரகடணப்படுத்திவிட்டால் அவனால் இதன் பின்னர் எந்த வழக்கையும் யாருக்கெதிராகவும் பதிவு செய்ய முடியாது. அவன் சமூகத்தில் மூன்றாந்தரப் பிரஜையாகக் கணிக்கப் பட்டு விடுகின்றான். இந்த நிலை ஏற்படுவதை உலகில் யாரும் விரும்புவதில்லை. இது பெண்ணுக்கெதிராக அவதூறு கூறும் சந்தர்ப்பத்தை முற்றாக மழுங்கடித்து விடுகிறது. இது போன்ற சட்டம் உலகில் குர்ஆனைத் தவிர வேறெதிலும் உண்டா. அன்றி இது போலொத்த சட்டம் கொண்டு வர ஏதாவது எண்ணங்கள், ஆலோசனைகள், எத்தனங்கள் உண்டா?
6.அறிவில்லாத நிலையில் அவதூறுகள் அல்லாஹ்விடம் பாரிய குற்றங்களாகும். இதனை நீங்கள் உங்கள் நாவுகளில் எடுத்துக் கொண்டும, உங்களுக்கு எது பற்றி அறிவு இல்லையோ அதை உங்கள் வாயால் கூறிக்கொண்டிருந்த பொழுது இதனை நீங்கள் இலேசாகவும் எண்ணி விட்டீர்கள். இதுவோ அல்லாஹ்விடத்தில் மகத்தானதாகும் 24:15. உலகு, மனிதர் சம்பந்தப்பட்ட பல்வேறு தண்டனைகள் போன்றவற்றைக் கூறியதுடன் அல்லாஹ் நின்று விடவில்லை. அந்தளவு பாதுகாப்பு போதாது, பெண்கள் மேல் அவதூறு சுமத்துவது அப்படியென்ன சாமான்யமா? மனித சிருஷ்டிக்கு மாபெரும் பங்கை ஆற்றுபவள் அல்லவா பெண்! அதுவும் இறைவனின் படைப்புத் தொழில்! அப்படைப்புத் தொழிலை தான் சிரமேல் ஏற்று, பல்வேறு உடலுள கஸ்டங்களுக்கெல்லாம் முகங்கொடுத்து மனித சமுதாயத்தை உருவாக்கி யவள் மேல் இலகுவாக அவதூறு சுமத்திவிட்டு போய்விட விடுவேனா? அல்லது மனிதனிடம் மட்டுமே அதற்குரிய தண்டனை வழங்கும் பொறுப்பை விட்டுவிடுவேனா? அப்படியே விட்டால் தமது செல்வாக்கைப் பாவித்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற சிந்தனை வளர்வதைக் கூட அல்லாஹ் அனுமதிக்க வில்லை. எங்கிருந்து தப்பித்துக் கொண்டாலும் தன்னிடமிருந்து தப்பித்துக் கொள்ள விடமாட்டேன் என்ற தோரணையில் பெண்கள் மேல் அவதூறு கூறுவது தன்னிடத்தில் மகத்தான குற்றம் என எச்சரிpக்கின்றான். அவ்வெச்சரிக்கையின் பின்னணியில் அவனது சீற்றம், தண்டனை அனைத்தும் மறைந்து கிடக்கின்றது. என்னே இறவனின் பங்களிப்பு கற்புள்ள பெண்ணைப் பாதுகாப்பதில்.
7.பெண்மேல் அவதூறு தமக்குத் தகாதது எனக் கூறல். “இன்னும் இதனை நீங்கள் கேள்விப்பட்ட போது ‘இதனை நாம் பேசுவது நமக்கு இல்லை. நீயோ மிகத் தூய்மையானவன். இது கடுமையான அவதூறு’ என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?” -24:16. மேற்கண்டவற்றுக்கெல்லாம் மட்டுப்படாத மனிதனும் உலகில் வாழ்கிறான் என்பது அல்லாஹ் வுக்குத் தெரியாதா என்ன? இதோ புதிதாக, புதிய கோணத்தில் தன் எச்சரிக்கையை விடுக்கிறான். தன் கௌரவத்திற்கு, தகுதிக்கு இழுக்கு ஏற்படுவதை எந்த மனிதனும் விரும்பமாட்டான் என்பதை அறிந்து அவர்களுக்கேற்ப சட்டத்தை உருவாக்கி அவர்களின் அபாண்டங் களில் இருந்தும் பெண்ணுக்குப் பாதுகாப்பளிக்கின்றான். அதுவே பெண்கள் மேல் அவதூறு பேசல் தம் தகுதிக்கு ஆகாது என்பதால் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வைக்கின்றது. இவையெல்லாம் சாதாரண மனித கண்ணோட்டத்தில் இதுவரை பட்டதுண்டா? அல்லது எங்காவது இதுபோன்ற சட்டங்கள் அமுலில் உள்ளனவா?அல்லது இனிமேலாவது இப்படியான சட்டம் உருவாக்கப்படும் சாத்தியங்களுண்டா?
8.பெண்கள் மேல் அவதூறு கூறாதோரே முஸ்லிம்கள். முஃமின்களாக (இறை நம்பிக்கையாளராக) நீங்கள் இருந்தால், இதுபோன்றதின்பால் எப்போதும் நீங்கள் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகின்றான்.- 24:17. அனைத்தையும் விஞ்சிய அற்புதச் சட்டம். அது புகுத்தப்படும் நுட்பத்தைப் பாருங்கள். தண்டனை போன்றா தெரிகின்றது. அல்லது எச்சரிக்கை போன்றாவது தெரிகின்றதா? இல்லையே! தடையாக விதிக்கிறான். அதுவும் அறிவுரையாக. அத்தடையின் உள்ளார்ந்த அறிவிப்பைப் பாருங்கள். முஃமின்களாயின் அவதூறுகளில் சம்பந்தப்படக் கூடாது என்று கூறி, தவறின் நீங்கள் முஃமின்கள் அல்லர் என்ற திறந்த பிரகடணத்தை விடுக்கிறான். ஒர் பெண்ணின் மேல் அவதூறுகளில் சம்பந்தப்படுவதே கூட முஃமின்கள் என்ற நமது தரத்தை இல்லாதொழித்துவிடுகின்றது. எத்துனை பயங்கரமான சட்டங்களை இயற்றிப் பெண்குலத்தின் மேல் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தி உள்ளான். உலக அழிவுவரை வேறு எவராலும் இவற்றைவிடச் சிறந்த, பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைப் புகுத்திட முடியாது. நடுநிலையில் நின்று மேற்கண்ட சட்டங்களை உய்த்து உணருவோர் அறிந்து கொள்வர்.
பாவம் பெண்கள், இப்படியான சட்டங்கள் வல்ல நாயன் அல்லாஹ்வால் தமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறியாது அவமே காலத்தைக் கழிக்கின்றனா;. பெண்கள் விழித்தெழுந்து அகில உலகமும் இந்தச் சட்டத்தை தம் நாட்டுச் சட்டங்களில் உள்வாங்க வேண்டும் என்று ஓரே குரலில் ஒலிக்கச் செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை அடுத்துவரும் தனது பொதுக் கூட்டத் தொடரில் சட்டமாக்க வேண்டும் என்ற திறந்த பிரகடணம் ஒன்றை பெண் ணுலகம் உரத்த குரலில் ஒலிக்க வேண்டும்.
9.மானக்கேடான விடயம் பரவுவதை விரும்புவது இம்மை மறுமையில் வேதனை தரும். எவர்கள் இறைநம்பிக்கை யாளரிடையே மானக்கேடான காரியம் பரவுவதை விரும்புகிறார்களோ, அவா;களுக்கு, நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினையளித்திடும் வேதனை உண்டு. 24:19. உண்மையில் இறைவன் வேறெந்த விடயங்களுக்கும் இந்தளவு முக்கியத்துவம் தந்து இத்துனை சட்டங்களை பல்வேறு கோணங்களில் இருந்து வெளிப்படுத்தவில்லை என்பதை நினைந்து நான் வியப்புறுகிறேன். அதன் மூலம் பெண்மேல் அவதூறு கூறல் என்ற விடயம் எவ்வளவு பயங்கரமானது என்பதை உணர்கிறேன். அல்லாஹ் நம்மை மேற்கண்ட பெண் அவதூறில் இருந்து காப்பானாக. மானக் கேடான விடயங்கள் பரப்ப வேண்டும் என்பதல்ல, மாறாக ,பரவுவதை விரும்புவதே இம்மையிலும் மறுமையிலும் வேதனையைக் கொணரும் என்ற பெரிய குண்டையே நம்மீது போட்டுவிடுகிறான்.
அவதூறு கூறுபவர்களுக்கு யாரும் எதுவுமே செய்யவேண்டும் என்பதல்ல அவ்வவதூறு தானாகவே இம்மை மறுமையில் வேதனையைக் கொணரும் என்ற முன்னறிவித்தலை செய்கிறான் அல்லாஹ். எத்துனை பாதுகாப்பு! சற்று செவி சாய்த்தால் உலகில் ஓரிறையை நிராகரிக்கும் பெண்களே இரார். அது மட்டுமா, அவர்களது கணவர், பிள்ளைகள், சகோதரர்,பெற்றார், உறவினர் என அனைவருமே இறைவனின் காலடியில் சிரம் சாய்ப்பர்.
10.பரிசுத்தமாக இருப்பதற்கு இறையருளே காரணம். அல்லாஹ்வின் அருளும், கருணையும் உங்கள்மீது இல்லாது போயிருப்பின், மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுள்ளவன். கிருபையுடையவன், என்பதும் இல்லையானால். 24-20. (உதாரணம்- யூசுப் அலை பார்க்க ) மனிதன் குறைபாடானவன். அவசரம், பதட்டம், பாலியல் ஈர்ப்பு போன்றவற்றை இயற்கையிலேயே கொண்டவனாகவே படைக்கப்பட்டுள்ளான். உலகில் சிருஷ்டித் தொழில் நடைபெற வேண்டி இருந்ததால், உயிரினங்களுக்குள் பாலியல் கவர்ச்சி இன்றியமை யாததே. சீர்திருத்தம் கருதி, மனிதரல்லாத படைப் பினங்களில் இருந்து மனிதரை வேறு படுத்துவான் வேண்டிப் பாலியலைப் பெறும் வழிகளில் சில ஒழுங்கு முறைகளைச் சட்டமாக்கினான்.
அந்த வகையில் சட்டத்தை ஆக்கியதோடு கடமை முடிந்தது என நினைப்பவனல்லவே இறைவன். பரிசுத்தமான வாழ்க்கையை மேற்கொள்ள தனது இறையருளையும் அதற்குப் பாத்தியதை ஆக்கியுள்ளான். யாராவது பரிசுத்தமான வாழ்க்கையை மேற்கொள்ள நாடுவாராயின் அதற்கான இறையருளும் உண்டு என்பதை இறைவன் தனது கருணைக் கடாட்சமாக வெளிப்படுத்துகிறான். ஆக பெண்கள் விடயத்தில் யாரும் அவதூறுகளில் இருந்து ஒதுங்க நினைப்பா ராயின் அம்மனிதர் இறையருளைப் பெற்றுள்ளவராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறான். சற்று சிந்திப்போர் குர்ஆனியச் சட்டங்கள் நான் கூறுவது போல் அரிவையர்க்கான அதியுயர் பாதுகாப்புப் பெட்டகம் மட்டுமல்ல, மேற் கண்ட சட்டங்கள் மனித சிந்தனைக்குள் அடங்குவனவல்ல என்பதையும் அறிவர்.
சில சட்டங்கள் என்றாவது விதிவிலக்காக மனித சிந்தனையுள் வந்தாலும், இது போன்ற ஒன்றை இறைவனைத்தவிர யாரும் கொடுத்துவிட முடியாது. சுருக்கமாகக் கூறின் அவதூறில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டோர் பரிசுத்தவான் என்பதோடு அது அவனது இறையருள் என்பதும், அவ்விறையருள் அம்மனிதரிடம் இருக்கின்றது என்பதும் இறைவாக்காக நமக்குத் தரப்படுகின்றது.
11.கற்புள்ள பெண்ணின் மீது அவதூறு கூறுவோர் சபிக்கப்பட்டுள்ளனர். நிச்சயமாக எவர்கள் கற்புடைய அப்பாவி களான, முஃமினான பெண்களை அவதூறு கூறுவார்களோ அவர்கள், இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டு உள்ளார்கள். மேலும் அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு- 24:23. மேலும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் பிழையான நடத்தையள்ளவர்காக இருக்க மாட்டார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லி சான்று தருகிறது. அத்தோடு அவர்கள் மீது அவதூறு கூறுவோர் ஏற்கனவே சபிக்கப்பட்டே உள்ளனர் எனவும் கூறுகிறது. அதுவும் இவ்வுலகிலும், மறுவுலகிலும், மொத்தமாக எங்கும் பெண்கள் மேல் அவதூறு கூறுவோருக்கு உயர்வில்லை எனக் கூறும் இவ்வசனம் பெண்களுக்குக் கொடுத்துள்ள நட்சாட்சிப் பத்திரத்துடன், அவதூறு கூறுவோரின் நிலையை யும் கூறி, அப்படியானோருக்கு மகத்தான வேதனையும் உண்டு எனக் கூறி நிற்பது பெண்கள் மேல் இறைவன் கொண்டுள்ள உயர் மதிப்பு..அதனால் கிடைக்கப் பெற்றுள்ள அதியுயர் பாதுகாப்பு. உலகின்கண் உத்தமிகளான அனைத்து இறைநம்பிக்கை கொண்ட பெண்களையும் உள்ளடக்கி சரிசமமான பாதுகாப்பை வழங்கியுள்ள பாரிய ஏற்பாடு.
12.அனுமதியற்று பிற வீடுகளில் நுழையத் தடை. முஃமின்களே! உங்களது வீடுகளல்லாத வீடுகளில் நீங்கள் அநுமதி பெற்று, அதிலுள்ளவர்களுக்கு நீங்கள் ஸலாம் கூறும் வரை நீங்கள் நுழையாதீர்கள். இது உங்களுக்கு நல்லதாகும். நீங்கள் நல்லுணர்வு பெற்றிட 24-27. சிந்தித்துப் பார்ப்போருக்கு இதிலுள்ள நன்மைகள், அது எந்தளவு பெண்கள் விடயத்தில் நன்மை பயக்கக்கூடியது என்பது புரியும். வீடுகளே பெண்களின் பிரத்தியேக இடம். அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பு. அவர்கள் சுதந்திரமாக, அச்சமற்று, அநாயாசமாக, உள்ளாடையுடன் வேண்டுமானாலும் தாம் விரும்பியவாறு இருக்குமிடம். அவ்வீட்டில் எப்பொழுது, யார்? எப்படி? நுழைவார்களோ என்ற அச்சம் இருக்குமாயின் அவர்களது பிரைவசி Privacy), இரகசிய சுதந்திரத்துக்கு ஊறுவிளைக்கும். நிம்மதி இருக்காது. ஓர்வகைப் பீதியுடன் வாழும் நிலை ஏற்படும். மேற்கண்ட சட்டம் தமது வீட்டுள் தம் அநுமதியின்றி பிறர் நுழையமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைத் தருவது. அதனால் மேற்கூறிய நிம்மதியற்ற நிலை ஏற்டாது. அது அவர்களுக்கு இறைவன் கொடுத்துள்ள பாதுகாப்புக் கவசம்.
13.நுழைவதற்கான அனுமதிக்கு பதில் இன்றேல் திரும்பிவிடவும். எனவே, அதில் எவரையும் நீங்கள் காணாவிட்டால், உங்களுக்கு அநுமதி வழங்கப்படும் வரை அதில் நீங்கள் நுழையாதீர்கள். நீங்கள் திரும்பி விடுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் திரும்பி விடுங்கள். இதுவே உங்களுக்கு மிகப் பிரசுத்தமானதாகும். மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்துள்ளான். 24-28 (துப்பறிதல் தடை பார்க்க ). இந்தச் சட்டம் ,பெண்ணுக்கு மேலும் பாதுகாப்பைத் தருகின்றது. தாம் விரும்பினால் மட்டுமே தம் வீட்டினுள் யாரும் நுழையலாம் என்ற பாதுகாப்பு. இது ஒரு பெண், தனித்து, ஆடவரினதோ, உறவினரதோ உதவியின்றிக்கூட பயமின்றி வாழும் உத்தரவாதத்தைத் தருகின்றது. ஒன்று நுழைபவர் வீட்டாரின் அனுமதியைப் பெறல் வேண்டும். அடுத்தது திரும்பிவிடுங்கள் என வீட்டிலிருந்து பதில் வருமாயின் மறுப்புக் கூறாது திரும்பிவிடல் வேண்டும் என்ற சட்டம். எத்துனை பாதுகாப்பைப் பெண்களுக்குத் தருகின்றது என்பதை நினைக்கும் போது வல்ல அல்லாஹ் பெண்கள் விடயத்;தில் கொண்டுள்ள கரிசனையும், அவனது குர்ஆனியச் சட்டத்தின் மகிமையும் புலப்படுகின்றது. சாந்தி மார்க்கம் என்பது எவ்வளவு அழகாக வெளியாகின்றது.
14.பார்வைகளைத் தாழ்த்தி மறைவிடங்களைப் பாதுகாத்துக் கொள்ளல். “ முஃமின்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மறைவிடங்களையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.” 24:30, இது போன்ற வசனம் பெண்களின் ஆடைகளோடு சேர்த்துக் கூறப்பட்டுள்ளது“… இன்னும் தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து வெளியில் தெரிவதைத் தவிர, அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தம் முன்தானைகளைத் தம் மேற்சட்டைகளின் மீது போட்டுக் கொள்ள வேண்டும். …” 24:31. பார்வைகளே பாலியல் வன்முறைகளுக்குக் காரண மாவன. அதனால். இறைவன் ஆண்களையம் பெண்களையும் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படி பணித்து. பிரச்சினைகள் தொடங்கு முன்னரே தடுத்து விடுகிறான். மேலும். மறைவிடங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என இருபாலாரையும் கட்டுப்படுத்துவது பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பே. பிரச்சினை வரும் சந்தர்ப்பமே அற்றுவிடுகிறது. அத்தோடு பெண்கள் எப்படியான ஆடையை அணிய வேண்டும் எனக் கூறப்பட்டதிலிருந்து. வன்முறைகளுக்குக் காரணமாகும் அடுத்த முக்கிய காரணி தடைசெய்யப்பட்டு முழுமையாகப் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது.
15.திருமணம் செய்து வைத்தல். “இன்னும் உங்களில் திருமணம் ஆகாதவருக்கு உங்களுடைய ஆண் அடிமைகள், இன்னும் அடிமைப் பெண்களிலிருந்து நல்லொழுக்கம் உள்ளவரு்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையங்கள். ….” 24:32. சிருஷ்டித்தலை மையமாகக் கொண்டு, பாலியல் உணர்வும், ஆண், பெண் கவர்ச்சியும் வல்ல நாயனால் இயற்கையாகவே மனிதரிலும், மற்றைய உயிரினங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலையில் அதனை வன்முறைக்குத் திரும்பவிடாது பாதுகாக்கக் கூடிய முக்கிய அமைப்பு முறையே திருமண பந்தம். ஆதலால் முற்றும் உணர்ந்த முதல்வன் திருமணம் முடிப்பதைக் கடமையாக்கி உள்ளான் என்பதைவிட, திருமணம் முடித்து வைப்பதை மானுடர் மீது கடமையாக்கி வைத்துள்ளான் என்பது உய்த்துணரப்பட வேண்டியது. இது அனைத்துப் பாதுகாப்பு களுக்கும் மாறான தன்மை கொண்ட ஆண் பெண் பாதுகாப்பு. இயற்கையான பாலியல் உந்தலை சாதகமாக அணுகி வழிப்படுத்தியுள்ள முறைமை. அதனால் பெண்களுக்குக் கிடைத்துள்ள பாதுகாப்பு. ஆணின் அரவணைப்பு. அவளுக்கு தேவையான அனைத்தையும் வழங்கிட மிக நுட்பமாக வரையப்பட்ட சட்டம். இதில் பல்வேறு வகைப் பாதுகாப்புக்கள் உண்டென்பதை சிந்திப்போh; அறிந்து கொள்வர்.
16.அடிமை ஒழிப்பும் பத்தினி வாழ்வுக்கு வழிவகுத்தலும்.“…உங்களது அடிமைப் பெண்கள பத்தினித் தனத்தை விரும்பு வார்களாயின், இவ்வுலக வாழ்வின் பொருளை நீங்கள் அடைவதற்காக விபச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள். மேலும், எவரேனும் அவர்களை நிர்ப்பந்தித்தால். நிச்சயமாக அல்லாஹ். அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் மிக்க மன்னிப் போனும். கிருபையுடையோனுமாவான்.”24-33. அன்றைய உலகில் அடிமைத் தனம் எந்தளவ ஆதிக்கம் பெற்றிருந்தது என்பதும், அதனை வைத்தே அந்தஸ்து மதிப்பிடப்பட்டிருந்தது என்பதும், அடிமைப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது தொழிலாகவே நடத்தப்பட்டிருந்தது என்பதும் வரலாற்று உண்மைகள். பெண்டிருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள். அவற்றையே குர்ஆன் தடைசெய்கிறது. எப்போது அடிமைப் பெண் தான் பத்தினித் தனத்தை விரும்பி விட்டாலோ அப்போதே அவளை விடுதலை கொடுத்து அவளது பத்தினி வாழ்வுக்கு வழி சமைக்கும்படி நம்மைப் பணிக்கின்றது குர்ஆன். மாறாக, எஜமானால் அவள் பழைய வாழ்க்கைக்கே நிர்ப்பந்திக்கப்பட்டால் அவ்வடிமையின் விபச்சாரத்தை மன்னித்து விடுகிறான். இது அடிமைப் பெண்கள் தாம் விரும்பாத நிலையில் நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யும் விபச்சாரத்தை மன்னித்த இறைகிருபை.
இன்னும் நிறைய வசனங்களைக் குh;ஆனிலிருந்து பெண்களின் பாதுகாப்புக்கு ஆதாரமாக எழுத முடியும். விரிவு அஞ்சி இத்தோடு நிறைவு செய்கிறேன். அத்தோடு பெண்கள் மேல் கிருபை கொண்டு, இறைவன் தன் திருமறை மூலம் வெளிப் படுத்தியுள்ள சட்டங்கள் பற்றி முழுமையாக விளக்க முனைவது இலகுவான காரியமன்று. அதற்கு நம் அறிவும், காலமும் இடங்கொடா? அறிய முனைவோருக்கு இவையே போதுமானதாகும்.
ஆதலின் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்டிர் சமவுரிமை அல்லது பெண்ணுரிமை போன்ற புரட்சிகர கருத்துக்களை புதிதாகக் கண்டது போல் வெளியிடுவோர், போராடுவோர், மேற்கண்ட குர்ஆனியச் சட்டங்களை மக்கள் மத்தியில் பரப்பி, அவைகளைச் செயற்படுத்தும் பண்பை மக்கள் மத்தியில் வளர்த்தாலே, பெண்களுக்கான அத்தனை பாதுகாப்புக்களும், உரிமைகளும், சுதந்திரமும், அந்தஸ்துக் களும், மதிப்பும், மரியாதையும், கௌரவமும் கிடைத்துவிடும். மேலாக, இறைவனே அவர்களுக்கு வழங்கியுள்ள அதியுயர் பாதுகாப்பும் அனைவருக்கும் தெரிய வருவதோடு, இறையச்சமும் மக்கள் மத்தியில் ஏற்படும். அதன் மூலம் மிகச் சிறந்த பயனைப் பெண்களும் அதன் மூலம் பிறரும் அடைவர் என்பது திண்ணம். அல்லாஹ் போதுமானவன்.
- நிஹா –
கொழும்பு - 03. 01.11.2011.
No comments:
Post a Comment