Monday, May 20, 2013

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – மாகாண சபை – விருப்பு வாக்கு முறைமைகள் நீக்கப் படவேண்டும் :Commented by nizamhm1944 on:

Voice Of Mannar

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – மாகாண சபை – விருப்பு வாக்கு முறைமைகள் நீக்கப் படவேண்டும் :

நியாயமான, நிதானமான ஏற்கக் கூடிய கருத்து.

மாகாண சபைகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன என்ற ஓர் ஆய்வை மேற்கொண்டால், வீண் விரயம் தவிர்த்து பதிலே வரப் போவதில்லை. மக்களுக்கு இந்நாட்டில் எவ்வகை ஆட்சி நடைபெறுகின்றது என்று தெரியாத அதே வேளை, நிர்வாகிகளுக்குக் கூட தமது நிர்வாக எல்லைகளோ, பரப்புகளோ கூடத் தெரியாது உள்ள நிலைமையே காணப்படுகின்றது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கும், மாகாணசபைகளுக்கும் இழுபறிகள் தான் நடைபெறுகின்றன. ஒருவரை ஒருவர் சாட்டித் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளால் மக்கள் அவஸ்தைதான் கண்ட மிச்சம்.  அவை  தனித்துவமாக இயங்குவதாகவும் தெரியவில்லை. ஓர் வகையில் பார்த்தால் ஆட்சியில் இருக்கும் மத்திக்கு ஆலவட்டம் பிடிப்பதாகவே தெரிகிறது.

உண்மையிலேயே பல்லின மக்களைக் கொண்டஇந்நாட்டுக்கு, நாட்டின் நலத்தையும், அனைத்து மக்களினதும் கௌரவமான சமாதான சகவாழ்வையும் முன்னிலைப்படுத்தக் கூடிய அரசியல் யாப்பு ஒன்றே தற்போது தேவைப்படுகின்றது.

அதனை விட்டு இது எமது நாடு, என இனரீதியிலும், மத ரீதியிலும், பாஷை ரீதியிலும் தனித்தனியே கோஷங்கள் எழுப்ப முற்பட்டால், இங்கு வாழும் மக்கள் எப்படி அமைதி வாழ்வை முன்னெடுப்பது? எப்படி தேசப்பற்றுடன் இநநாட்டை வளப்படுத்தும் விதத்தில் காரியமாற்றுவது? ஏனோ தானோ மனப்பான்மையிலும், அழிவை நோக்கிய வழியிலுமே அனைத்தும் நடைபெறும். பாதிக்கப்படும் இனஙகள் தமது கௌரவமான வாழ்வுக்கு வேறு வழிவகைகளைக் காண விழைவர். இதன் விளைவுகளை இந்நாடும் மக்களும் போதியளவு அனுபவித்துள்ளனர்.

ஆதலால், இந்த சிறிய நாட்டில் அப்படியான பிரிவினைகளுக்கு வழி கோலும் மத, இன விரோதக் குருத்துக்களைக் கைவிட்டு நாமனைவரும் இலங்கையர் என்ற பரந்த நோக்கை ஏற்படுத்தும் விதத்திலான யாப்பு உருவாக்கப்படல் வேண்டும். அந்த யாப்பு, சங்கைக்குரிய தேரர் அவர்கள் கூறியது போல தேர்தலை மையமாக வைத்து யாக்கப்படுவதாக அமையக் கூடாது.  நாட்டையும் மக்களின் நல்வாழ்வையும் மையப்படுத்த வேண்டும். யாப்பை உருவாக்குவதில் ஜேயாரின் சிந்தனை போலன்றி ஒரு தாயாரின் சிந்தனையை ஒத்தாக அமைதல் அவசியம்.

இன, மத, மொழி, வர்க்க பேதங்களை உருவாக்குவோர் கடுமையாகத் தண்டிக்கப்படக் கூடிய அம்சங்களைக் கொண்டதாக அந்த யாப்பு அமைய வேண்டும். யாவரினதும் வாழ்வு சமத்துவமாக, அனைவரும் சமவுரிமை பெற்றவர்களாக, அனைத்து சுதந்திரத்துடனும், செளபாக்கியத்துடனும் வாழ்வதற்கான வழிகள் உட்படுத்தப்பட வேண்டும்.

மாண்பு மிகு ஜனாதிபதி அவர்கள் தம் ஆட்சிக் காலத்துள் இவ்வாறான ஒரு நற்காரியத்தை ஆற்றி, வரலாற்றில் நாட்டை, மக்களை நிரந்தரமாக அழிவில் இருந்து காப்பாற்றிய உத்த புருஷராக நினைவு கூரப்படும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்விடயத்தில் அனைத்து மக்களும் எவ்வித பேதங்களும் இன்றி இதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை நல்க வேணடும். அரசியல் காய் நகர்த்தல்களை சிறிது காலத்துக்காவது ஒத்திவைத்து இந்நாட்டின் நலனில் கவனம் செலுத்துங்கள் என அரசியல்வாதிகளை வேண்டுகின்றோம்.

No comments: