கலிமா இஸ்லாத்தின்
நுழைவாயில்,
ஈமானின் அத்திபாரம்,
ஈடேற்றும் இறைவாயில்.
இஸ்லாம் ஐந்து தூண்களில் நிறுவப்பட்டுள்ளதாகவும், அந்த ஐந்தையும் நிறைவேற்றுவது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை எனவும், இக்கடமை களை நிறைவேற்றுபவனே முஸ்லிமாகவும் இருப்பான் எனவும் அறிவிக்கப் பட்டு அதனை நாம் அறிந்தும் வைத்துள்ளோம். இது பற்றிய ஒரு சிறு ஆய்வே இவ்வாக்கம்.
முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ள ஐந்து காரியங்களில் முதன்மை யானதாகக் கலிமா கூறப்பட்டு உள்ளது. கடமையைச் செய்ய வேண்டியவன் ஏற்கனவே முஸ்லிம் ஆகியிருக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் ஆனதனால் தான் அவனுக்குச் சில கடமைகள் இருக்கின்றன. அப்படியாக அவன் செய்ய வேண்டியுள்ள கடமைகள்தான் கலிமா,தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் ஆகிய ஐந்து தூண்களும்.
இப்போது ஒரு கேள்வி, அது மிகவும் நியாயமானதே! அதாவது மேற்கண்ட கடமைகளைச் செய்ய ஒருவன் ஏற்கனவே முஸ்லிம் ஆகியிருப்பான் என்பதால் அவன் எப்படி முஸ்லிம் ஆனான்? கலிமா ஏன் பின்னர் கடமை என்ற வட்டத்துள் அடக்கப்பட்டுள்ளது?
என்பதே.
முதலாவது கேள்விக்கு நம்மிடம் ஒரு பதில் உண்டு. அது, அந்த ஒருவன் இஸ்லாம் கூறியுள்ள ஆறு விடயங்களில் ஈமான் கொண்ட ஒருவனாக இருக்க வேண்டுமென்பது. அந்த ஆறு விடயங்களில் முதன்மையானதும், நான்காவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதும், அல்லாஹ் மீதும், அவனது தூதர்கள் மீதும் ஈமான் கொள்வது. நான்காவதானதைத் தற்போதைக்கு ஒரு புறம் வைத்துவிட்டு, முதன்மையான அல்லாஹ் மீது ஈமான் கொள்வது என்ற விடயத்தை அணுகினால், அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
ஆக ஒருவன் இஸ்லாமியனாக ஆகும் அந்தஸ்தை வழங்குவது எது? முன்னைய இரண்டு கேள்விகளுக்கும் விடையாக அல்லாஹ்வை நம்புவது, அது லாஇலாக இல்லல்லாஹ் என்று,'இல்லை நாயன் அல்லாஹ்வைத் தவிர’ என அனைத்துத் தெய்வங்களையம் மறுத்து ஓரே இறைவன் மட்டுமே உண்டு என்பதை ஏற்று அதன் மேல் நம்பிக்கை கொள்வது. ஆயின், அக்கலிமா ஏன் கடமைக்குள் அடக்கப் பட்டுள்ளது? என்ற கேள்வி விடையின்றி நிற்கின்றது.
மேற்கண்ட பந்தியில் காணப்படும் உண்மை, ஒருவன் இஸ்லாமியனாக ஆவதற்கே, கலிமா என்ற தாரக மந்திரம் தேவை என்பதை மிகத் தெளிவாக்கி யுள்ளது. இந்நிலை கடமை என்ற வட்டத்துள் அடக்கப்பட்டு இருந்த கலிமாவை வெளியே எடுத்து, அக்கலிமா அனைத்துக்கும் முதன்மையானது முன்னோடி யானது என்கின்றது. அதனால் இந்தக் கலிமா, ஈமானுக்கு முந்திய நிலையைக் கொண்டு, அதன் அத்திபாரமாகக் காணப்படுகிறது.
ஆயினும், நாம் இதுவரை, கலிமா சொல்வதை ஓர் கடமையாகக் கொண்டே இயங்கி வருகின்றோம்,மற்றைய நான்கினையும் செய்வதுபோல். இன்னோர் வகையில் மற்றைய நான்கும் செயல் முறையைக் கொண்டுள்ளனவாகவும்,
முதலாவதான ‘லா இலாக இல்லல்லாஹ்’ என்ற கலிமா மட்டும் வாயால் கூறி மனதால் ஏற்பதாகவும் கருதப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் ஏதோ வகையில் முரண்பாடான தன்மையைக் கொண்ட அமைப்பில் கடமைகளுக்குள் கலிமா அடக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
ஆசிரியன் ஒருவனுக்கே கற்பித்தல் என்ற கடமை இருக்கும். அதுபோல் இஸ்லாமியன் ஒருவனுக்கே ஐந்து கடமைகள் இருக்கும் எனக் கொண்டால், மேற்கண்டவாறு கலிமாவைக் கூறி மனதால் ஏற்று இஸ்லாமியனான ஒருவனுக்கு, மீண்டும் அதனைக் கடமையாகக் கூறப்படுவதில் ஏதோ தவறிருப்பதைக் காணக்கூடியதாக இல்லையா?
ஆக கலிமா என்பது இஸ்லாமியனின் கடமை அன்று. அது இஸ்லாமியனாக ஆவதற்கான தாரக மந்திரம். இஸ்லாத்தின் நுழைவாயில், அதன் அத்திபாரம், இணை மறுப்பு. ஏக இறை ஏற்பு. ஈடேற்றும் இறைவாயில்.
அல்ஹம்து லில்லாஹ்.
- நிஹா -
Colombo
03
2011.05.06
Mobile: 0718156970
No comments:
Post a Comment