பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டமைக்கு,அடிப்படையை விளங்காமையே காரணம்
இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒருவர் அது பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இஸ்லாம் என்ற வாழ்வியல் திட்டம் உலகில் மனிதப் படைப்பு தோன்றிய போதே வேதங்களாகவும் கட்டளைகளாகவும், நபிமார்கள், தூதுவர்கள் மூலமாக காலத்துக்குக் காலம் தேவைக்கு ஏற்ப இறைவனால் இறக்கி அருளப்பட்டவையே! இவையனைத்தையும் குர்ஆனின் தாய் எனப்படும் உம்முல் கிதாபில் அல்லாஹ் பதிந்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளான். இறுதியாக அனைத்து வேதங்களில் கூறப்பட்டவையும் தனது இறுதி நபி முஹம்மது ஸல் அவர்கள் மூலம் வெளிப்படுத்தினான். குர்ஆன் அப்படி வெளிப்படுத்தப்பட்ட ஒன்றே தவிர வேறல்ல என்றும் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளான். நபிமார்களும் தூதுவர்களும் தமக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றை வெளிப்படுத்த அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரண மனிதர்களே என்பதும் அவனது கூற்றே! நபிமார்களோ, தூதுவர்களோ அவர்கள் போதித்த வேதங்களின் உரிமையாளர்கள் அல்லர் என்பதை நன்கு மனத்தில் இருத்திக் கொள்ளல் மார்க்கத்தை அறிவதில் மிக அவசியம் தேவைப்படுவது. அவர்களும் தாம் போதித்த இறை செய்திகளான வேதங்களைப் பின்பற்றியவர்களே என்பதே யதார்த்தம்!
நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழி என்பதால், இறுதி மார்க்கமாக வெளிப்படுத்தப்பட்டு, இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய வேத நூலான புனித குர்ஆனே அந்தத் தகைமையைக் கொண்டது. அது அல்லாஹ்வின் வழிகளைக் கூறிக் கொண்டிருப்பது. அதனையே நாம் அல்லாஹ்வின் சுன்னா(வழி) என அரபியில் காண்கின்றோம். நான் ஏற்கனவே கூறியது போல் நபிமார்கள் பின்பற்றிய வழி எனப்படும் சுன்னாவும் அல்லாஹ்வின் சுன்னாவே! அல்லாஹ்வை நேசிப்போர் எனது சுன்னாவைப் பின்பற்றுவர் என நாயகம் ஸல் அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்றால் அந்த வழி அல்லாஹ்வின் வழியே தவிர வேறு வழியில்லை. நபிமார்களுக்கு என்று தமது சொந்த வழிகள் எதுவுமில்லை. 46:9 - “நான் தூதர்களில் புதுமையானவனல்ல. மேலும், என் தொடர்பாகவும், உங்கள் தொடர்பாகவும், என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன். என்பால் வஹீ அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை. மேலும், நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி இல்லை!“
நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழி என்பதால், இறுதி மார்க்கமாக வெளிப்படுத்தப்பட்டு, இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய வேத நூலான புனித குர்ஆனே அந்தத் தகைமையைக் கொண்டது. அது அல்லாஹ்வின் வழிகளைக் கூறிக் கொண்டிருப்பது. அதனையே நாம் அல்லாஹ்வின் சுன்னா(வழி) என அரபியில் காண்கின்றோம். நான் ஏற்கனவே கூறியது போல் நபிமார்கள் பின்பற்றிய வழி எனப்படும் சுன்னாவும் அல்லாஹ்வின் சுன்னாவே! அல்லாஹ்வை நேசிப்போர் எனது சுன்னாவைப் பின்பற்றுவர் என நாயகம் ஸல் அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்றால் அந்த வழி அல்லாஹ்வின் வழியே தவிர வேறு வழியில்லை. நபிமார்களுக்கு என்று தமது சொந்த வழிகள் எதுவுமில்லை. 46:9 - “நான் தூதர்களில் புதுமையானவனல்ல. மேலும், என் தொடர்பாகவும், உங்கள் தொடர்பாகவும், என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன். என்பால் வஹீ அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை. மேலும், நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி இல்லை!“
அனைத்து நபிமார்களும் அல்லாஹ்வின் சுன்னாவைப் பின்பற்றிய அதே வேளை, நாயகம் ஸல் அவர்கள் மட்டும் அல் குர்ஆனைப் போதித்ததோடு, அதன்படி எப்படியெல்லாம் சீரான வாழ்க்கை மேற்கொள்ள முடியுமென நடைமுறையில் வாழ்ந்து காட்டியும் சென்றுள்ளமை நாம் கருத்திற் கொள்ள வேண்டியதே. அல்லாஹ் நபிகளாருக்கு அவனது சுன்னாவைப் பின்பற்றுமாறே கூறியிருப்பதும் கவனத்தில் இருத்தப்பட வேண்டியது. மொத்தத்தில் நாயகமவர்களின் எந்த செயலும் சொல்லும் அங்கீகாரமும் குர்ஆனாகவே இருக்கும்.
ஆக, அடிப்படை, அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை. அவனது; இறுதி வேதம் புனித குர்ஆன்; அதனை அவன் தனது வானவர் தலைவன் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், தனது இறுதித் தூதர் நபிகள் நாயகம் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு, அனைத்துலக மனித மேம்பாடு கருதி, இறக்கி அருளினான். நாயகம் ஸல் அவர்கள் குர்ஆனில் குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின்
சுன்னத் என்ற வழி முறையைப் பின்பற்றினார்கள். அப்படியே பின்
பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டார்கள். நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். நம்மையும் அவ்வழியையே பின்பற்றுமாறு கூறிச் சென்றார்கள். அனைத்து வேதங்களும் சித்தாந்தங்களாகவே வெளிப்படுத்தப்பட்ட வேளை இறுதி வேதநூலான புனித குர்ஆன், அதனைக் கொணர்ந்த நபிகளாராலேயே இருபத்து மூன்று வருட காலமாக போதிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தியும் காட்டப்பட்டது. அதன் மூலம் அக்காலை ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு குர்ஆனில் உண்டு என்பதுடன், எந்தத் தீர்வும் குர்ஆனின் அடிப்படையிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் மிகவும் அழுத்தந் திருத்தமாக வலியுறுத்திக் கூறியுள்ளான் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹான
ஹுவதஆலா.
இது இப்படியிருக்க, இஸ்லாமியர் மத்தியில் குர்ஆன் என்பது ஒன்று, நாயகம் ஸல் அவர்களின் சுன்னா என்பது வேறொன்று. அவை ஹதீஸ்கள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன என்ற கருத்துடன் கூடிய மாயை நிலவுவதாகத் தெரிகிறது. நபி ஸல் அவர்கள் அல்லாஹ் வஹீ மூலம் அவர்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர வேறொன்றைப் பேசவோ செய்யவோ மாட்டார்கள் என்பதும் அல்லாஹ்வின் வாக்குமூலமே. உமது முகத்தை அல்லாஹ்வின்பால் முழுமையாக திருப்புவீராக. இஸ்லாத்தினுள் முழுமையாக நுழைந்து விடுவீராக. வஹீ அறிவித்ததைத் தவிர நிராகரிப்போரின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர் போன்ற பல வசனங்கள் குர்ஆன் எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. 30:30 எனவே, நீர் உம்முடைய முகத்தை தூய மார்க்கத்தின்பால் முற்றிலும் திரும்பியவராக நிலைநிறுத்துவீராக! அல்லாஹ் மனிதரை எதில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்கத்தை.... இவ்வசனம் நாயகம் ஸல் அவர்கள் குர்ஆனைத் தவிர தனது வழியாக எதனையும் கொண்டிருக்க, அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பதை மிகவும் துலாம்பரமாகக் கூறிக்கொண்டு இருக்கின்றது. நபியவர்களது இருபத்து மூன்று வருட நபித்துவ வாழ்க்கை குர்ஆனைத் தவிர வேறில்லை என்பதை அல்லாஹ் தன்மறையில் பல இடங்களில் கூறியுமுள்ளான். குர்ஆனைப் புறந்தள்ளும் எச்செய்கையும், மனோ இச்சையாகி, அதுவே வணங்கப்படும் தெய்வங்களில் எல்லாம் மிக மோசமானது என்ற ஷிர்க் எனும் இணைவைத்தல் உருவாகும் இடத்தை நோக்கி நம்மை நகர்த்துவதையும் விளக்கி நிற்கின்றது.
அல்லாஹ்வே, மேற்கண்டவாறு, முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுமாறு கூறுவானே
யானால்,
ஹதீஸ் என மக்கள் மத்தியில் அறியப்பட்டுள்ள, நாயகம் ஸல் அவர்களின் பேச்சு, செயல், அங்கீகாரம் போன்றவை குர்ஆனைத் தொட்டதாகவும், குர்ஆனுக்கு விளக்கமாகவும், அவற்றின் நடை
முறையாகவும் மட்டுமே இருக்க வேண்டும். எந்த ஹதீஸாவது குர்ஆனை தொடாததாகவோ, குர்ஆனுக்கு முரண்பாடான தன்மையைக் கொண்டதாகவோ இருக்குமாயின் அவை நாயகமவர்களின் கூற்றாக எண்ணப்பட முடியாது. அப்படிக் கூறுவதற்குக் காரணம், தான் வஹீயாக இறக்கி அருளப்
பட்டதைத் தவிர வேறெதனையும் அவர் பேசமாட்டார் என அல்லாஹ்வே குர்ஆனில் பல இடங்களில் சான்று பகர்ந்திருப்பதே. அத்தோடு நபிகளாரின் இளவயது மனைவியரான அன்னை ஆயிஷா நாயகி அவர்கள் நாயகத்தின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது எனக் கூறி யிருப்பதும் கவனிக்கற்பாலது. குர்ஆனில் சிறு மாற்றங்களைச் செய்வதற்குக்கூட அல்லாஹ் இடம்பாட்டை விட்டுவைக்கவில்லை என்பதை, அவன், மேலும் சொற்களில் சிலவற்றைக் கற்பனை செய்து நம்மீது அவர் இட்டுக்கட்டி இருந்தால் அவருடைய வலக்கரத்தை நாம் பிடித்து, பின்னர் அவரிலிருந்து உயிர் நரம்பை நாம் துண்டித்து நாம் விடுவோம் என 69:44,45,46 ஆம் வசனங்களில் கூறியிருப்பதில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
ஹதீஸ் திரட்டப்பட்ட காலம், ஹதீஸ் திரட்டப்பட்ட முறை, பண்புகள், திரட்டியவர்களின் யோக்கியதை போன்ற இன்னோரன்னவை ஹதீஸின் சிறப்பம்சத்தை, ஏற்புடைத் தன்மையைக் காட்ட போதுமானவை அல்ல. அவை குர்ஆனிற்கு மாறுபாடான தன்மையற்றிருக்க வேண்டியதே ஹதீஸை ஏற்பதற்குரிய பெறுமானத்தைத் தரவல்லது. எவர் கூறியிருந்தாலும் அது இறைவசனத்துக்கு முரண்பாடாக அமையும் பண்பு சிறிதளவு காணப்பட்டால்கூட அது குப்பைக் கூடையுள் சென்றடைய வேண்டியதே! நாயகமவர்கள் உங்களுக்கு குர்ஆனையும், சுன்னாவையும் விட்டுச் செல்கிறேன் எனக் கூறியிருப்பதன் கருத்து, தற்போது மதிப்புக்குரிய இமாம்களால் தொகுக்கப்பட்டு நாம் ஹதீஸ் கிரந்தங்களாகப் பாவிக்கும் புத்தகங்களையல்ல என்பதையும் (இவை அக்காலை இருக்கவில்லை நபிகளாரின் வபாத்திற்குப் பல வருடங்களுக்குப் பிறகே இமாம்களால் தொகுக்கப்பட்டன தொகுத்தவர்களுக்குள்ளும் ஹதீஸ்கள் பற்றிய கருத்து வேறுபாடுகளுண்டு), அது தான் வாழ்ந்து காட்டிய அல்லாஹ்வின் சுன்னாவே என்பதும் அறிதலுக்குரியது. இதனை Theoritical and Practictical approach எனலாம். இவை அடிப்படை அறிவு சார்ந்தவை.
அறிந்தவரையில் யதார்த்தத்தில் மக்கள் எதையாவது கூறும் சந்தர்ப்பத்தில் அதிகமாக, இவ்விடயம் குர்ஆனில் காணக் கிடக்கின்றது என்பதற்குப் பதிலாக ஷரிஆ சொல்கின்றது, ஹதீஸில் காணப்படுகின்றது, கலீபாக்கள், ஸஹாபாக்கள். சமயப் பெரியார்கள்,
அவுலியாக்கள் இப்படிக் கூறியிருக்கிறார்கள், செய்து காட்டியிருக்கிறார்கள் எனக் கூறுகின்றனர். இன்றைய நிலையில் முஸ்லிம்கள் ஷரிஆ, ஹதீஸ், ஸஹாபாக்கள், இமாம்கள் போன்றவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அவற்றுக்குக் கொடுக்க வேண்டிய அளவைவிட மிகவும் அதிகமாகக் கொடுக்கப்படுவதாகவே தெரிகிறது. அது குர்ஆனைக் கருத்திலிருத்தாது இவைகளைப் பின்பற்றுதல் என்ற அளவுக்கு விரிவடைந்து முக்கியத்துவம் பெற்றுள்ளமை மிகவும் கவலை தரும் விடயமாகும். அவலமெனக் குறிப்பிட்டாலும் அது பொருத்தமே! இதனை நான் கூறவில்லை இறைவனே தனது குர்ஆனின் 25ஆம் அத்தியாயத்தின் 30ஆவது வசனத்தில் ‘எனது ரப்பே! நிச்சயமாக, என்னுடைய சமூகத்தினர், இந்த குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர்’ என்று தூதர் கூறுவார் என்று கூறியிருப்பதே! தற்போது மக்கள் எடுத்ததற்கெல்லாம் ஹதீஸ் மூலம் தீர்வுகண்டு கொண்டிருப்பவை சரியாயின் தனது தூதரே தன்னிடம் இப்படியான பயங்கரமான பாரதூரமான அறிக்கையைச் சமர்ப்பிப்பார் என இறைவனே தன் திருவாயால் மொழிவானா? பிழையான விளக்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு குர்ஆனின் மூலம் தீர்வு காணும்படி 4:105இல் கூறியமை புறந்தள்ளப்பட்டு விடுகிறது. ஆக ஹதீஸ்கள் பின்பற்றப்படுவதில் தவறேயில்லை, பின்பற்றப்படவே வேண்டும், அவை குர்ஆனுடன் போர் தொடுக்காதிருக்கும் வரை. நாயக வார்த்தையாகவோ, செயலாகவோ, அங்கீகாரமாகவோ இருப்பின் அவை குர்ஆனைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். இருக்க வேண்டும். அதுவே அல்லாஹ்வின் வழி. நாயகம் ஸல் பின்பற்றிய வழி. இதனை நிரூபிக்க நிறையவே குர்ஆனிய வசனங்கள் உண்டு.
அன்றைய காலகட்டத்தில் அரபியில் மட்டும் குர்ஆன் காணப்பட்டதும், மொழிபெயர்ப்புக்கள் இல்லாதிருந்தமையும், குர்ஆனில் ஒவ்வொன்றுக்கும் என்ன தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு கொள்ளும் திறனற்றிருந்தமையும், தீர்வுகளை இலகுவில் அறிந்து கொள்வதற்காகவும், குர்ஆனிய சட்டங்களைப் பின்பற்றுவதில் பிழைகள் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணங்களும், இமாம்கள் எனக் கூறப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் அன்றைய பாமர மக்களின் தேவை கருதி குர்ஆனில் காணப்படும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டும் ஹதீஸ்களின் வழிகாட்ட
லுடனும், தற்றுணிபுடனும் சட்டங்களைத் தொகுத்து பிக்ஹ் என்ற சட்டங்களாக்க வேண்டிய நிலையில் அவை உருவாக்கப்பட்டன. அதற்காக இஜ்மா, கியாஸ் என்ற அணுகு முறைகளையும் பின்பற்றி உள்ளார்கள்.
ஷரிஆ என்பது குர்ஆனிலிருந்து மனிதன் தொகுத்த சட்டம். பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் ஷரிஆ கூறுகிறது என்று எழுந்தமானமாகக் கூறிச் செல்லாமல், ஷரிஆ கூறியுள்ளது சரியா எனக் குர்ஆனையே பார்த்துத் தீர்மானிக்க வேண்டும். மறுதலையாக ஷரிஆ, குர்ஆனிய அடிப்படையைக் கொண்ட சட்டமாகவே இருக்க வேண்டும்!
உண்மையில் குர்ஆன், 5:3 இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்கு நாள் பரிபூரணமாக்கிவிட்டேன்.மேலும் எனனுடைய அருட்கொடையையும் உங்கள்மீது முழுமையாக்கி வைத்து விட்டேன். மேலும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்…, அது, எனது பாதுகாப்பில் உள்ளது என அல்லாஹ் கூறியுள்ள நிலையில் அதற்கு இஜ்மாவோ கியாஸோ தேவையில்லை. இவ்வாறான சேர்க்கைகள் குர்ஆனில் முழுமையான விளக்கங்கள் கிடைக்கவில்லை என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன. இதனை ஆக்கியவர்கள் அக்காலங்களில் இருந்த சுற்றுச்
சூழலின் ஆதிக்கத்துக்கு உட்பட்டே ஷரீஆ சட்டங்களை உருவாக்கியுள்ளமையை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. குர்ஆனை அறிஞர்கள் அன்றி விளங்கிக் கொள்வதில்லை என்பதும் இறைவாக்கே. 6:125 எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட விரும்புகின்றானோ அவர்களின் நெஞ்சங்களை இஸ்லாத்தின்பால் விரிவாக்கி விடுகிறான். மேலும், 17:89இல் நிச்சயமாக இந்த குர்ஆனில், மனிதர்களுக்கு எல்லா உதாரணங்களையும் திட்டமாக நாம் விவரித்துள்ளோம். எனினும் மனிதரில் பெரும்பாலோர் இதனை நிராகரிப்பதைத்தவிர ஏற்பதில்லை. ஆக குர்ஆனில் இருப்பதை, அதன் நோக்கத்தைப் பூரணமாக விளங்கிக் கொள்வதின் மூலம் குர்ஆனிய கருத்துக்களை அறியக் கூடியதாக இருக்கும்.
குர்ஆனிய சட்டங்கள் காலதேய வர்த்தமானங்களை உள்ளடக்கி எக்காலத்துக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும், எல்லா இடங்களுக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தக் கூடிய தன்மையைக் கொண்டு இறைவனால் ஆக்கப்பட்டவை. ஆனால் மனிதத் தொகுப்பான பிக்ஹ் எனப்படும் ஷரிஆ சட்டங்கள் அவர்கள் வாழ்ந்த காலதேய வர்த்தமானத்தைக் கருத்திற் கொண்டு அக்காலை நிலவியவற்றுக்குத் தீர்வு காணும் முறையில், ஹதீஸ்களின் உதவியுடனும், இஜ்மா, கியாஸ் போன்ற அணுகு முறைகளோடும் யாக்கப்பட்டதால், அவற்றிலுள்ள சில சட்டங்கள் தற்போது முரண்பாடு கொண்டன
வாகவும், நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்கள் கொண்டதாகவும், இக்காலத்துக்குப் பொருத்தமற்றதாகவும், சமூக, பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் கண்டு பிடிப்புகளுக்கும் முகங் கொடுக்க முடியாத நிலையையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளன. இது இஸ்லாத்தையே பிழையாகப் பின்பற்றும் நிலையின் அளவுக்கு பிரச்சினையாகி உள்ளது. இது ஓர்வகைத் தடப் புரள்கையே எனக் கூறின் பிழையல்ல.
குர்ஆனியச் சட்டங்களின் நெகிழ்வுத்தன்மை, குர்ஆனிய வசனங்களுக்குக் கொடுக்கப்படும் விளக்கங்களாலும், விரிவுகளாலும், அதன் நெகிழ்வுத் தன்மையில் இருந்து விலகி இறுக்கமான பண்பை அடைந்துவிடும் போது, அது அனைத்துக் காலங்களுக்கும் பொருந்தும் பண்பை இழந்து நிற்கின்றன. அல்லாஹ் ஒருவனே யாவுமறிந்தவன். மனித சிந்தனையால் இறை நோக்கை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. இறை வசனங்கள் தேவையின்போது தானே தன்னளவில் பரந்து விரிந்து வெளியாகி அனைத்துக்கும் தீர்வாக மாறிக்கொள்ளும் பண்பைக் கொண்டவாறாக அருளப்பட்டவை. அதனாலயே அதற்கு யாரும் பங்களிப்புச் செய்ய முடியாது என்ற வகையில் சம்பூரண மாக்கப்பட்டுள்ளதாக இறைவன் சான்று பகர்வதும். மட்டுப்படுத்தப்பட்ட அறிவைக் கொண்ட மனிதர்களால் குர்ஆனிய வசனங்களுக்குக் கொடுக்கப்படும் கருத்துக்கள் அவர்களது அறிவையும், அனுபவத்தையும், அக்கால சூழ்நிலையையும் மட்டுமே பிரதிபலிக்கக்கூடும். அதனால் காலவோட்டத்தில் அவை செல்லாத் தன்மையை தானாகவே ஏற்றுக் கொள்ளும். எதிர்காலத்தில் வரவுள்ள பிரச்சினைகளுக்கு குர்ஆனில் காணப்படும் விளக்கம் அச்சந்தர்ப்பத்தில் மட்டுமே மனிதர்களால் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு குர்ஆனிய வசனத்துக்கு தான் ஓர் விளக்கத்தைக் கொடுக்க, அந்த விளக்கம் தற்போது முரண்பாடாக அன்றி பொருந்தாததாகக் காணப்படின் அதற்கு விளக்கமும் பத்வா என்ற தீர்ப்பாகவும் மாறி சட்டங்கள் உருக்குலைந்துள்ளதாக தெரிகிறது. தீர்ப்புக்கள் யாவும் உண்மையைக் கொண்டுள்ள குர்ஆனின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற 4:105 குர்ஆனிய வசனம் கூட புறந்தள்ளப்பட்டுள்ளமை கண்கூடு. ஏதாவதொன்றுக்கு தீர்வுகாண விழைபவர்கள்கூட குர்ஆனை விட ஷரிஆவை, ஹதீஸையே தமது தீர்ப்புக்கு ஆதாரமாகக் கொடுக்க முனைகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு சிறு உதாரணத்தைக் கூறுவதன் மூலம் தற்போதைய அறிஞர் பெருமக்கள் மனோநிலையை வெளிப்படுத்தலாம் என நினைக்கிறேன். முஸ்லிம்களின் இருபெருநாட்களும் பிறை பார்ப்பதால் குழப்பத்தை சீரழிவை உருவாக்குகின்றன. பிறை பார்ப்பதற்கென்றே ஓர் குழு ஜம்இய்யத்துல் உலமாவால் அமைக்கப்பட்டு வருடா வருடம் தலைப்பிறையை வெற்றுக் கண்களால் பார்க்க முனைகின்றனர். அல்லது தமக்கு திருப்திதரக் கூடியவர் பிறையை எங்காவது தான் கண்டதாகக் கூறினால் அதனை ஏற்பார்கள். தவறி பிறை காணும் சந்தர்ப்பம் பல்வேறு காரணிகளால் அமைய
வில்லை என்றால் பெருநாள் ஒருநாள் தள்ளிப் போடப்படுகின்றது. நேர வித்தியாசம் இல்லாத அண்டை நாடான தமிழ் நாட்டில் பெருநாள் கொண்டாடப்படும் போது, இலங்கையில் நோன்பு பிடிக்கின்றார்கள். இது ஒன்று, அந்நியர் மத்தியில், தமக்கு பிறை பார்த்து நோன்புப் பெருநாளைத் தீர்மானிக்க முடியாத மார்க்கத்தைக் கொண்டவர்களாக நாம் எண்ணப்படவும், பரிகசிக்கப்படவும் கூடிய இழிநிலையாகிறது.
அடுத்து பிறை என்றால் என்ன என்பது பற்றி இறைவன் தனது திருத்தூதருக்கு மிக அழகாக எடுத்துரைத்துள்ளான். 2:189 உம்மிடம் பிறைகளைப் பற்றி வினவுகிறார்கள். “அவை மனிதருக்கும், ஹஜ்ஜுக்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை.”. 6:96 இன்னும் சூரியனையும் சந்திரனையும் கணக்கிற்காகவும் அவன் ஆக்கினான். 10:5 வருடங்களின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக… 13:2 சூரியனையும் சந்திரனையும் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப்படி நடக்கின்றன. 16:12 இன்னும் இரவையும் பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான். நட்சத்திரங்களும் அவனது கட்டளையைக் கொண்டு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இதில் ஆய்ந்தறியும் கூட்டத்தினருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. 31:29 … சூரியனையும் சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதையும் நீர் காணவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பட்ட தவணையின் மீதே நடக்கின்றன…35:13 சூரியனையும் சந்திரனையும் தன் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் குறிபட்ட தவணையின்படி செல்கின்றது. இன்னும் நிறையவே உண்டு.
அண்மையில் நான் இது பற்றி இணையதளமொன்றில் பிறை கணிக்கப்பட வேண்டியது என்பதும்,
அது மாறா வேகத்தில் சுழன்று கொண்டும், பயணித்துக் கொண்டும், தனது பாதையை விட்டு விலகாமலும் சென்று கொண்டிருக்கின்றது என இறைவன் தன் அருள் மறையில் கூறியிருப்பதையும், அதனை விஞ்ஞானிகள்கூட ஐயமற ஏற்றிருப்பதையும் கூறி, உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து இற்றைவரை, ஏன் உலக அழிவு வரை அது அதற்கெனவுள்ள தங்குமிடங்களிலேயே இருக்கும் எனக் கூறியிருப்பதால் ஒரு முறை அது எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை நிர்ணயித்துவிட்டால் அதன் பின்னர் அது கணிப்பிடலின் மூலம் ஒவ்வொரு மாதமும் எந்தத் திகதியில் தலைப்பிறை, அமாவாசை, பௌர்ணமி வரும் என்பதை அச்சொட்டாகக் கணிக்க முடியும். அப்படியே கணிக்கப்பட்ட நாட்காட்டிகளும் நம்மிடமுள்ளன. இதன்படி இந்துக்களும், பௌத்தர்களும் பௌர்ணமியை ஒவ்வொரு மாதமும் கொண்டாடுகின்றனர். அவை பிழைத்ததாகத் தெரியவில்லை என்ற எனது கருத்துக்களை குர்ஆனுக்கு ஏற்ப முன்வைத்திருந்தேன்.
மேற்கண்ட கருத்தில் என்னால் எழுதப்பட்டு, வேண்டுமாயின் தூரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்றைப் பாவித்து பிறை தோன்றியுள்ளதா எனத் தீர்மானிக்கலாம் எனவும் எழுதியிருந்தேன். அல்லது அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்ற குர்ஆன் ஆணையைக் கூறியிருந்தேன். அதற்கு ஒருவர், ‘’அக்காலத்தில் மிருகங்களின் உலர்ந்து போன மலத்தை வைத்தே அம்மிருகம் எது, அதன் நாடு எது போன்ற இன்னோரன்னவைகளை மிகத் துல்லியமாக கணிப்பிடும் ஸஹாபாக்கள் கூட பிறையைக் கணிப்பிட்டு அதன்படி பெருநாளைத் தீர்மானிக்கவில்லை. அவர்கள் பிறையைப் பார்த்தே தீர்மானித்தார்கள். ஆதலால் நாம் மட்டும் எப்படிக் கணிப்பிடுவது’’ என்றவாறாக எழுதியிருந்தார். அத்தோடு நானும் எனது சந்ததிகளும் சந்தேகத்தில் உழல்வதாகவும் ஜம்இய்யத்துல் உலமாவிடம் விளக்கம் கோருங்கள் எனவும் எழுதியிருந்தார்.
அதன்படி குர்ஆனில் என்ன எழுதியிருக்கிறது என்பதுகூட அவருக்குக் கவலையில்லை. ஸஹாபாக்கள் கணிக்கவில்லை என்பதும், அதனை ஏற்காவிடில் ஜம்இய்யத்துல் உலமாவிடம் கேட்கும்படியும் கூறுவது குர்ஆன் புறக்கணிக்கப்படும் முறையை தெரிவிக்கிறது. மேலும், இது குர்ஆனியக் கருத்தை முற்றாக மறுதலிப்பதுடன் எமது முன்னோர் அப்படி செய்தார்கள், நாம் மட்டும் மாற முடியுமா என்ற ஜாஹிலியாக்கால மனோநிலையாகவே உள்ளது. இன்னொருவர் நான் ஹதீஸைக் கிண்டல் செய்வதாகவும், புறக்கணிப்பதாகவும் கூறியதுடன் ‘நொன்சென்ஸ்’ எனவும் கூறினார். இவை குர்ஆனிய அடிப்படையில் இப்பிறைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முற்பட்டால் எவ்வித குழப்பமும் ஏற்படாது என நான் எழுதியிருந்தமைக்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்கள். இதிலிருந்து முஸ்லிம்கள் குர்ஆனுக்குக் கொடுக்கும் மரியாதையின் அளவு நிரூபனமாகின்றது.
உண்மையில் பிறை பார்த்துத்தான் நோன்பு பிடிக்க வேண்டும், பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற ஹதீஸ், குர்ஆனைப் பிரதிபலிப்பதாக இருந்தால்கூட (ஆனால் அப்படி இல்லை), மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்ற அடிப்படையில் ஹறாமான உணவை உண்பதில்கூட விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற நிலையில், இறைகட்டளையை சரிவரச் செய்யும் நோக்கில், பிறை பார்க்க முடியாத நிலையிலாவது தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் பிறையைக் காண்பது, இறை கருத்தான கணிப்பீட்டைச் செய்வது, அல்லது ஆய்வாளரிடம் பிறை தென்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து கூறுமாறு கேட்பது, கணிப்பீட்டின் மூலம் தயாராயுள்ள நாட்காட்டியைப் பாவிப்பது போன்ற முறைகளின் மூலம் பிழை நடந்துவிடாமல், அதனால் பல இலட்சம் மக்கள் பாதிப்படையாமல் இருக்க வழி
கோலலாமல்லவா! இதனால் என்ன பிழை மார்க்கத்துக்கோ நபிகளாருக்கோ நடந்துவிடப் போகிறது! அல்லாஹ் அனுமதித்தது தானே! மேலும், நமது இச்செய்கை, அல்லாஹ் பிறை பற்றிக் கூறிய கருத்துக்களை ஏற்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டுள்ள நிலையை மறைமுகமாக காட்டி நிற்கின்றது. இது சந்தேகமற்றது என அல்லாஹ் கூறியிருப்பதை இங்கு நினைவுபடுத்த விரும்பு
கின்றேன். 16:44 தெளிவான ஆதாரங்களைக் கொண்டும், வேதங்களைக் கொண்டும், மனிதர்களுக்கு – அவர்களுக்காக இறக்கப்பட்டதை, நீர் விளக்குவதற்காக திக்ரை (குர்ஆனை) உம்பால் நாம் இறக்கி
வைத்தோம். அவர்கள் சிந்திப்பவர்களாக ஆகிவிடலாம். 68:44இன் எச்சரிக்கையை ஞாபகப்படுத்து
கின்றேன்.
இந்த நாட்டில் பிறை பார்ப்பதற்கென்று ஒரு குழு முன்னரெப்போதும் இருந்ததில்லை. ஆனால், அக்கால உலமாக்கள் இங்கு தலைப்பிறை தென்படாத சந்தர்ப்பங்களில், அண்டை நாட்டில் பிறைதென்பட்டதை அறிந்து அதன் பின்னர் நோன்பைத் தீர்மானித்துள்ளனர் என்பது நம்பகமான உண்மை. இவைகூட குர்ஆன் கூறியுள்ள, நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள், என்ற அனுமதி கொண்டதுதானே!
இஸ்லாம் இயற்கை மார்க்கம் என இறைவனே கூறியிருக்க, மக்களுக்கு அவன் சிரமத்தை விரும்புவதில்லை இலகுவையே விரும்புகின்றான் என்ற அவனின் நல்லெண்ணத்தையும் புறக்கணித்து பிறை காணும் இம்முறையால் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருவதும், பிற மதத்தவர்கள் நம்மை எள்ளி நகையாடுவதும், நாம் பிறையை வழிபடுபவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி இருப்பதையும் தவிர, எதுவும் பிறை பார்த்தலால் நடந்து விடவில்லை. அப்படி பிறை தீர்மானிக்கப்பட்ட அதிகமான சந்தர்ப்பங்கள் பிழையான நாட்களில் நோன்பைத் தொடங்கியும்,
பெருநாள் கொண்டாடியும் வந்துள்ள வரலாறே உள்ளது.
எனக்குத் தெரிய, 2008ஆம் ஆண்டாக இருக்க வேண்டும், ஒரு வீட்டில் தகப்பனும் மனைவியும் மணமாகாத ஆண்பிள்ளைகள் இருவரும், முதல் நாள் நோன்பு பிடித்து, பெருநாள் கொண்டாட, அவரது மணமான பெண் மக்களிருவரும் அவர்களது கணவன்மாரும் பிள்ளைகளும் அடுத்த நாளில் நோன்பைத் தொடங்கி பெருநாளும் கொண்டாடினர். நான் அது பற்றி விசாரித்த பொழுது அந்த தகப்பனார், தான் ‘தக்கியா பார்ட்டி’ என்று பெருமையாகக் கூறிக் கொண்டார். இஸ்லாம் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டதும், குர்ஆன் புறக்கணிக்கப்பட்டதும், அவ்விடத்தை வேறு ஏதோ ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதும் அதுவே சரியான வழியென்ற மனோஇச்சையும் அப்பாவி முஸ்லிம்களை வழிகேட்டில் கொண்டு செல்கின்றது. இதற்குக் காரணகர்த்தாக்கள் யாராகவிருப்பினும் அவர்கள் மறுமையில் வழிகெடுக்கப்பட்டவர்களின் பாவச் சுமையையும் சேர்த்தே சுமப்பர் என்று அல்லாஹ் தன்மாமறையில் கூறியுள்ளான். மேலும், 6:119இல் பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும் தங்களது மனோஇச்சைகளின் காரணத்தாலும் திட்டமாக வழிகெடுக்கின்றனர். நிச்சயமாக உம்முடைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன்.
1. பிறை பார்த்துத்தான் நோன்பு, ஹஜ்ஜு தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதற்கு குர்ஆனிய ஆதாரமில்லை.
2. றம்ழான் மாதம் வந்து விட்டால் நோன்பை எண்ணிப் பிடியுங்கள் என்றே குர்ஆன் கூறியுள்ளது.
3. பிறை பற்றி உம்மிடம் கேட்கிறார்கள், அது காலத்தையும், ஹஜ்ஜையும் அறிவிப்பது என்று கூறும்.
4. தொழுகை நேரங்கள் கணிக்கப்பட்டு மணி, நிமிடங்களில் பின்பற்றப்படும்போது ஏன் நோன்பு, ஹஜ்ஜு கணிப்பீட்டின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படக் கூடாது.
5. இறைவன் தொழுகை நேரங்களை சூரியனின் இருப்பையும், இரவையும், விடியலையும் வைத்தே கூறியிருக்கிறான். மேற்கண்ட குர்ஆன் ஆணையையே ஏற்று அவற்றை கணிப்பீட்டின் அடிப்படையில் தொழுகை நேரங்களாகப் பின்பற்ற முடியுமென்றால், ஹதீஸ் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று கூறியிருப்பதையும் ஏற்று அதன் இருப்புக்களையும் கணித்துத் தீர்மானிக்க முடியாது?
6.நாயக காலத்தில் காணப்படாத விஞ்ஞான, தொழில்நுட்ப, இலத்திரணியல் சார்ந்தவை அனைத்தையும் திசையறிகருவி
(compass) உட்பட தற்போது பாவிக்க முடியுமென்றால், பிறை
பார்ப்பதில் விஞ்ஞான அணுகு முறைகளை, உயர் தொழில்நுட்பங்களை தூரதிருஷ்டிக் கண்ணாடி போன்ற சாதாரண சாதனங்களைப் பயன்படுத்தி பிறையைப் பார்க்க, கணிக்கக் கூடாது.
7.தகவல் தொழில் நுட்பம் video call போன்றவை உள்ள நிலையில் அண்டை நாடுகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பிறை தெரிந்திருப்பதை அச்சந்தர்ப்பத்திலேயே நாமும் பார்த்து அதன்படி ஒழுகலாமே!
8.அறிவுப் புரட்சியாக இறக்கியருளப்பட்ட அழகு மிகு இயற்கை மார்க்கத்தில் பிறை தென்படவில்லை என்ற ஓரே காரணத்தால். பிறை இன்று வரவில்லை என்பது போல், அம்மாதத்தை அடுத்த நாளில் தொடங்குவதாக அறிவிப்பது கோமாளித்தனமாக இல்லையா? ஹதீஸின்படி பிறை பார்த்து பிழையான நாளில் பெருநாள் கொண்டாடுவோம் என்பதை நினைத்துப் பார்க்கவும் சங்கடமாகவுள்ளது!
9.பின்னர் அடுத்த மாதப் பிறை தென்பட்டதும் முடிந்த மாதம் குறைமாதப் பிரசவம் போன்று ஒருநாள் குறைந்து விடுகின்ற இழிநிலை எத்தனை முறை இந்நாட்டில் நடந்திருக்கின்றது?
10. இதற்கு தீர்வு குர்ஆனில் இல்லையா? இது இறை நிராகரிப்பாக தெரியவில்லையா? உலக அழிவு
வரை சந்திரனின் பயணத்தில் எந்த மாற்றமும் ஏற்படமாட்டாது என்ற இறைவாக்கை ஏற்க மனம் இடந்தர மறுக்கிறதா? இல்லையென்றால் ஏன் கணிப்பீட்டின் அடிப்படையில் பிறை தோன்றுவதை ஏற்கக் கூடாது? இதனை ஏற்கமாட்டோம் எனக்கூறி அடம் பிடிப்போர் யார்? அப்படியானோர் மனோஇச்சையில் உழல்பவர்கள்!
5:48
உமக்கு வந்துள்ள உண்மையைவிட்டும் அவர்களுடைய மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்
28:50
அல்லாஹ்விடமிருந்துள்ள நேர்வழியை அன்றி தன்னுடைய மனோஇச்சையை பின்பற்று
பவனைவிட மிக வழிதவறியவன் யார்?
2:197 ஹஜ்ஜு குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்…. 2:203
எண்ணிவிடப்பட்ட மூன்று நாட்களில் அல்லாஹ்வை நீங்கள் நினைவு
கூர்ந்திடுங்கள்.
4:105 அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நிச்சயமாக நாம் இறக்கியுள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர்.
உலக அழிவுவரை தீர்வு தரத்தக்க வகையில் யாக்கப்பட்ட குர்ஆனிய வசனக் கருத்துக்கள் மனிதர்களால் எந்த அறிவுகளை, சாதனங்களை வழிமுறைகளைக் கொண்டும் வரம்புகட்ட முடியாதவை. அதன் பரந்து, விரிந்து எக்காலத்திலும், எதனையும் உள்வாங்கும் தன்மை மனித அறிவாலோ, வேறு எதனாலோ வரம்பு கட்டலுக்கு இடந்தராது. குர்ஆனுக்கு விளக்கம், குர்ஆனிலேயேதான் காண வேண்டும். தவிர வேறு சாதனங்களில் தேட முற்படுவது, சிலர் பைபிளை நிரூபிக்க, விளக்கம் தேட வேறு புத்தகங்களின் உதவியைத் தேடும் பண்பை ஒத்ததாகவே அமையும்.
கொழும்பு - நிஹா -
2012.10.20.
No comments:
Post a Comment