Thursday, March 28, 2013


நீதி மொழிகள் பேணி நடக்க

அபத்தைக் காத்து ஆபத்தைப் போக்கு
விபத்தைத் தடுக்க வேகத்தைக் குறை

சுகத்தையடைய சோகத்தைத் தவிர்
அகத்தைத் திருத்தி இகத்தை வெல்

பாகமாய் சமைக்கும் பக்குவம் அறி
ரோகம் தவிர்க்க போகம் குறை

ராகம்தானே இசையின் உயிர்
தேகம் இன்றேல் யோகம் ஏது?

தூரம் காண நேரம் அறி
சோரம் போனால் வருமே துயரும்

பாரமறிய பலமே தேவை
தாரமிழந்தால் தரமும் குறைவதோ!

ஓரமின்றேல் உருவமும் இல்லை
வீரம் என்பது விவேகம் தானே!

மேளம்தானே தாளம் தருது
கோளம் தானே காலம் காட்டும்

பாலைக் கெடுத்து நெய்யைப் பெறு
சாலை இன்றேல் முடங்கும் வாழ்வு

ஓதி உணர்ந்து உத்தமனாகு
சாதி ஒழித்து பேதமை அகற்று

மீந்ததை ஈந்தால் தர்மம்
ஈந்தது மிகுந்தால் தியாகம்.

கோலங்கள்தானே ஜாலங்கள் காட்டும்
ஓலங்கள்தானே அவலங்கள் காட்டும்

சாதி ஒழியின் சோதி தெரியும்
நீதி அழிந்தால் அழிவே மிஞ்சும்

பாதை நீண்டால் பயணம் தொடரும்
போதை அகன்றால் மேதை ஆகலாம்

வளைவும் நிமிர்வும் அழகைக் கொடுக்கும்
வளைந்தவைதானே நிமிர்ந்திட முடியும்

உழைத்தவன்தானே ஓய்ந்திட முடியும்
அழைத்தவன்தானே அணுகிட முடியும்

ஓய்வும் உறக்கமும் இதயத்துக்கில்லை
வாய்வும் பிடிப்பும் படுத்திடும் தொல்ல

மலர்ந்தவை வாடல் உலர்ந்தவைக்கில்லை
உலர்ந்து பயன் தரேல் அதுவும் தொல்லை

விளைந்தவை சிலவே விதையாய் மாறும்
களை ஒழிந்தால்தானே பயிரும் செழிக்கும்

வேளை  தவறாது வேலையைச் செய்
வேலையை நீயும் விரும்பியே செய்

சாலையைத் திருத்தின் தடங்கல் ஒழியும்
சோலையைத் திருத்தின் தூயமணங் கமழும்

பாலையூட்டி பாலகனை வளர்
பல்லைக் காத்து சொல்லை பேண்

அம்பை எறிய வில்லை வளை
வம்பை ஒழிக்க வார்த்தையைக் குறை

துன்பம் துயரம் அன்பர்க்கில்லை
அன்பும் அறமும் வம்பர்க்கில்லை

என்பும் தோலும் இணைந்ததே உடல்
பண்பும் பயனும் கொண்டதே வாழ்வு

வேதம் ஓதும் சாத்தானாகாதே
பாதம் போற்றி பரமபதம் அடை

சாதம் உண்டு சக்தியை வளர்
மீதம் உண்டேல் மற்றவர்க்கும் கொடு

நாளை என்பது வேளையைக் கடத்தும்
வேளை என்பது வேலையை  முடிக்கும்

தோற்றம் யாவும் மாற்றம் ஆகும்
மாற்றம் என்பது மாறா விதியாம்

படிப்பின் பெருமை பட்டங்களில் இல்லை
படிப்பின் பெருமை படைப்பை அறிதலில்

படைப்பினை அறிந்து படைத்தவனை உணர்
படையினை நகர்த்த வழிமுறை தேவை

இடையின் அளவும் உடல் நலம் காட்டும்
இடையிலா முயற்சியும் ஈடிலா பயன் தரும்

வாடைக் காற்று ஆளை வருத்தும்
சாடை பேசின் சங்கடம் வரும்
சோம்பல் கொண்டோர் தேம்பித் திரிவர்
ஓம்பலில் தானே விருந்தின் பெருமை

மருந்தில் யாரோ விருந்து படைப்பர்?
மருந்தே விருந்தெனின் இருந்தென்ன பயன்!

இருந்தால் கொல்வது இயற்கை உபாதை
இழந்தால் வருவது எய்ட்ஸ் எனும் உபாதை

உய்யும் வழியை மெய்யினில் தேடு
பொய்யும் புரட்டும் மெய்யாய் கேடே

வையம் வாழும் வழியினை தேடு
வையமும் வாழ்த்தும் வருமே வீடும்

வாயைப் போறறி நோயைத் தவிர்
தாயைப் பேணும் பண்பினை வளர்

ஊரையும் பேரையும் ஒருக்காலும் மறவேல்
வேரை அறுத்து வியாதியை ஒழி

வாரை இழந்தால்செருப்பும் இழியும்
வேரை இழந்தால் ஆரையும் அழியும்

பாரை தகர்த்திடும் வேர்
போரைத் தடுத்திடும் போர்

போனால் வராது மானம்
போ(f)னாலும் வருமே இணையம்

பேனா தருவது இன்பம்
பேனால் வருவது துன்பம்

தானாய் விரிந்தால் மலர்
வீணாய்ப் போமே விரித்தால்

வெட்டத் தலைக்கும் சேட்டமாய் மரமும்
விட்டால் திட்டமாய் தொலையும் பட்டமும்

பானை வனைந்திட மண் தேவை
வீணை வடித்திட மரம்தேவை

கல்லில் உருக்கலுண்டு உருகலுமுண்டு
சொல்லில் உருக்கமும் உண்டு உறுத்தலுமுண்டு

பல்லிலும் வேருண்டு பாலிலும் நீருண்டு
வில்லிலும் நேருண்டு வேலிலும் வளைவுண்டு

வேணவா வளர்த்து வீணில் அலையாதே
வானிலை பார்த்து வயலினை வளர்

தேவை பார்த்து சேவை செய்
நோவை அறிந்து நாவை அடக்கு

வானுள் நுழைந்தால் வையம் தெரியும்
வானுள் வலம்வர வசதியும் வேண்டும்

சண்டியர் வாழ்வு மண்டையில் முடியும்
சண்டாளர் வாழ்வு திண்டாடி முடியும்

தன்னை வருத்தும் தவமே சிறக்கும்
தன்னை வளர்க்கும் தனமே சிறுக்கும்

பறப்பதைவிட்டு ருப்பதைப் பிடி
கறப்பதை விடுத்து கறதைக் கார்

வரைவிலா வாழ்வு விரைவிலே அழியும்
கரைகாணா இன்பம் பிறர்காண வருத்தும்

நிறையுணவு தருமே நேர்த்தியான வாழ்வு
நிறையுயர்வு காட்டும் நேரவுள்ள தாழ்வு

அரைத்திடாதுண்ணின் நரைத்திடாச் சாவு
கரைந்திடாது சேர்ந்தால் கல்லாய் மாறும்

வேதாந்தம் பேசி வீணில் கழியாதே
வேதம் அனந்தம் பேதமை அழி

நீதமாய் நடந்து நாதனையடை
பேதங்கள் வளர்க்கும் வாதங்கள் தவிர்

பொறுமை காக்க அறிவும் வேண்டும்
மறுமை காக்க நினைவும் வேண்டும்

நீச்சல் கற்க நீரினுள் இறங்கு
பேச்சில் வெல்ல மேய்ச்சலில் இறங்கு

மூச்சுள்ள போதே ஓச்சி உயர்
மூச்சை இழந்தால் காட்சியுமில்லை

தாகம் என்பது தேகத்தின் தேவை
பாகம் என்பது உணவிலும் தேவை

நட்பும் ஓர் வகை நடிப்பே
கற்பும் ஓர் வகை புரட்டே

பேரும் புகழும் நாறும் ஒரு நாள்
ஊரும் உறவும் ஒதுக்(ங்)கும் ஓர்நாள்

வெற்றியும் தோல்வியும் இரட்டைக் குழந்தைகள்
ஒற்றுமை இன்றிப் பிர்ந்தே நிற்கும்

சாம்பலில் காண்போம் தீயின் சமத்துவம்
சோம்பலில் காணோம் பிறப்பின் மகத்துவம்

இரக்கம்வர மன இறக்கம் தேவை
இறுக்கம் அகல இறையச்சம் தேவை

தேவை அகன்றால் பாவங்கள் ஒழியும்
கோர்வை செய்தால் தேவையில் உதவும்

கோர்த்தால் மாலை சேர்த்தால் செண்டு
வார்த்தால் இரும்பும் வானில் பறக்கும்

நீர்த்தால் சிப்பி சுண்ணம்
நீறு பூத்தால் நெருப்பே திண்ணம்

மாறுபட்டு நீயும் கூறு போடாதே மார்ககம்
சேறுபட்டால் கழுவி தூய்மை பேண வேண்டும்

நூல் நூற்று ஆடை பெறு
நூல்  கற்று அறிவு வளர்

சாலையில் படுப்பர் யாரோ
பாலையில் விதைப்பர் யாரோ

காலை  எழுந்திடில் ஊக்கம்
காலை இழந்திடில் கலக்கம்

நாய் வாலை ஆட்டின் நன்றி
நோய் ஆளை வாட்டின் குன்றும்

காய்ச்சினும் பால் வெள்ளை
வாய்த்திடேல் பெண்டும் தொலலை

கனத்தால் பாரமறி  கணித்துப் பெறுமதியறி
சினத்தை வீசி எறி  இனத்தை அழிக்கும் வெறி

இனிப்பதெல்லாம் தேனுமல்ல
இளிப்பதெல்லாம் சிரிப்புமல்ல

கூடினில் காற்றம் தொல்ல
குறைந்திடில் உயிரே இல்லை

குணம் கொண்டால் அழகு
குணம் காண ஒழுகு

ஆக்கியோன் : நிஹா

No comments: