குர்ஆன் வழியில் ...
- நிஹா -
2011 ஜூலை, 14
அல்லாஹ்வால் கேடு என எச்சரிக்கப்பட்டோர்...
குர் ஆனில் சில இடங்களில் சில தடுக்கப்பட்ட விடயங்களைச் செய்வதனாலோ, அன்றி ஏவப்பட்டவற்றை செய்யாமல் விடுவதனாலோ நம்மில் கேடடைவோர் பற்றி வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவ தஆலா கூறியுள்ளான்.அவ்வாறு எச்சரிக்கப்பட்டு,சாபத்துக்கு உள்ளான வர்களாகக் கூறப்பட்டவர்களில் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டும் இறுக்கம் அடைந்தவர்கள் பற்றி ஆய்வதே இப்பக்கத்தின் நோக்கம். அல் குர்ஆன் 39:22 'அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கமானவர்கக்குக் கேடுதான். அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்'. சில விஷமிகள் தங்களுக்கு விளங்காத நிலையில் அறிவதற்கும் மனமின்றி தமது மனோஇச்சைப்படி குர்ஆன் வசனத்துக்கு விளக்கம் கொடுத்துத் தம்மையே ஏமாற்றிக் கொள்கி;றார்கள். குர்ஆனிய வசனங்களின் உண்மைகளை, நன்மைகளை அறிவதற்கு எள்ளளவும் எத்தனங்களை மேற்கொள்வதில்லை. மனோ இச்சை வணங்கப்படும் தெய்வங்களில் மிக மோசமானது என்பது இறைகூற்று. மனோஇச்சை ஷிர்க்கை வருவிப்பது.
இந்தளவுக்கு இறைவனின் சாபத்துக்கு உள்ளாவதற்கு காரணம் என்ன வென்று காண்போமாயின் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். இவ்வுலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும், இறக்கப்பட்ட வேதங்களும், கட்டளைகளும் அல்லாஹ்வை நினைவு கூரும்படியே கூறிக் கொண்டிருக்கின்றன. அப்படி இருந்தும் அதனைச் செய்யாமல் இருப்பது இறைநிராகரிப்பு என்பதும், அவனது கட்டளைகளை சட்டை செய்யாது விடுவதும், மறுமையில் அவனது விசாரனைக்கும், அவனது தண்டனைக்கும் பயப்படாத தன்மையைக் கொண்டனவாகவும் உள்ளதே. அந்த வகையில் அல்லாஹ் கூறியமைக்கொப்ப அவனை நினைவுகூராதோர் மறுமையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு, நரக நெருப்புக்கு இரையாவதைக் கேடு என வலியுறுத்தவே, அவன் எதிர்வுகூறலாகவும், ஞாபகமூட்டலாகவும் எச்சரிக்கையாகவும், கூறியுள்ளான் என்பது இங்கு தெளிவாகிறது.
அல்லாஹ்வை நினைவுகூருங்கள் எனக் கூறிவிட்டு அவன் வாளாவிராது பல் வேறு உத்திகளையும், நினைவூட்டல் களையும் குர்ஆனில் ஆங்காங்கே பதிவாக்கி உள்ளான். அவைகள் நமது கண்ணில் படாததும், கருத்தைக் கவராததும் துர்அதிர்ஸ்டமே. மேலும், அவனை நினைவு கூர்வதற்கு வழிசமைக்கும் வண்ணம் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கி அதில் அவனை நினைவுகூர்வதன் மூலம் தொழுகையை நிலைநிறுத்தும்படி நமக்கு அறிவூட்டுகின்றான். தனது குர்ஆன் 20:14 ஆம் வசனத்தில், மேலும், என்னை நினைவு கூர்ந்திட தொழுகையை நிலைநிறுத்துவீராக' எனக் கூறி யிருப்பதில் தொழுகையின் நோக்கம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் தொழுகையின் நன்மை பற்றிக் கூறிய 29:45 வசனத்தில், ' ... இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நிச்சயமாகத் தொழுகையானது மானக்கேடானவைகளை விட்டும், வெறுக்கப்பட்டதை விட்டும் தடுக்கும். மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது மிகப் பெரியதாகும்' என அவனை நினைவு கூர்வதே மிகப் பெரியது எனவும் கூறியிருப்பது நாம் கவனத்தில் இருத்த வேண்டியது. அவனைத் தொழுகையில் நினைவுகூரவில்லை என்றால், முக்கிய கடமையாக்கப்பட்ட தொழுகைகூட பயனற்றதாகி விடுவதோடு நஷ்டத்தையும் ஏற்படுத்திவிடும். இதனை அல்லாஹ் குர்ஆனில் 'வேறோரிடத்தில் தொழுகையாளிகளுக்குக் கேடுதான்' எனக் கூறியே உள்ளான். இவ்வசனம் தொழுவதில் உரிய பயன்பாடான அல்லாஹ்வை நினைவுகூரல் இடம்பெறாத விடத்து ஏற்படும் தீமையைச் சுட்டிக் காட்டவே அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான்.
இன்னும், நாம் அவனை நினைவுகூர்வதை இலகுபடுத்தும் பொருட்டு, குர்ஆனில் பல இடங்களில் நமக்கும் அவனுக்குமிடையில் நடந்தவைகளை ஞாபகத்துக்குக் கொண்டு வந்துள்ளான். அப்படியான வசனங்களில் 7:172 மிகவும் உன்னிப்பாக அறியப்பட வேண்டியது. 'இன்னும் உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளில் இருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, 'நான் உங்கள் ரப்பு அல்லவா?' . 'ஆம், நாங்கள் சாட்சி கூறுகிறோம்' என்று அவர்கள் கூறியதை நினைவுகூரட்டும். ஏனென்றால், 'நிச்சயமாக, தாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்துவிட்டோம்' என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக'. இந்த வசனம் மறுமையில் அவனை நினைவு கூராததற்கான தண்டனையில் இருந்து மன்னிப்புக் கிடைக்காத சந்தர்ப்பத்தை நன்கு விளக்குகின்றது. அச்சமயத்தில் எந்தச் சாக்குப் போக்குகளுக்கும், சாட்டுகளுக்கும் இடம் தராதவாறு அல்லாஹ் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டுள்ளமை நம் கையறு நிலையைத் தெட்டத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. அதனாலேயே அவன், தன்னை நினைவு கூராதவர்களை இதயம் இறுக்கமடைந்தவர்களாக விமர்சிப்பதோடு அவர்களுக்குக் கேடுதான் எனவும் சபித்துள்ளான். ஆதலின் நாம் அவைகளை உணர்ந்து மறுமைக்கு ஆயத்தமாவோமா?
- நிஹா -
2011 ஜூலை, 14
No comments:
Post a Comment