Friday, August 2, 2013

புனித குர்ஆனை விமர்சனத்திற்கு உட்படுத்த முடியுமா!

புனித குர்ஆனை விமர்சனத்திற்கு உட்படுத்த முடியுமா!

இன்று உலகளாவிய ரீதியில் மாற்று மத சகோதரர்களாலும், இஸ்லாமிய எதிரிகளாலும்ஏன் முஸ்லிம்கள் சிலராலும் கூட செய்யப்படும் மிக மோசமான விமர்சனங்களுக்கு முழுமையாக முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓரே மார்க்கம் இஸ்லாமும் அதன் வழிகாட்டியான புனித குர்ஆனுமேயாம்.  இதற்கான காரணங்களைக் கூறுமுன், இஸ்லாம் பற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறிச் செல்லலாம் என நினைக்கிறேன்.

இஸ்லாம் இறுதி மார்க்கம். எழுத வாசிக்கத் தெரியாத  இறுதி நபியும், ரசூல் என்ற இறைதூதருமான நபிகள் கோமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலம் அரபிப் பாஷையில் கிபி ஆறாம். நூற்றாண்டின் பிற்பகுதியில் பகுதி பகுதியாக இறைவனால் அவனது வானவர் மூலம் இறக்கப்பட்டுஇ 23 வருடங்களாக நபிகளாரால் நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டது.

இது கோணலற்றது. ஞாபகமூட்டுவது. முன்னைய வேதங்களை மெய்ப் படுத்துவது> அவற்றைப் பாதுகாப்பதுசந்தேகமற்றது. தெளிவானதுதெரிவானது. இலகுவானது. நிர்ப்பந்தமற்றது. நுண்ணறிவு கொண்டது. ஞானம் நிறைந்தது. நோய் தீர்ப்பது. வாய்மை பேணுவது. எதிர்வு கூறுவது. உண்மையானது. மாறாது. விபரிக்கப்பட்டது.  முரண் பாடற்றது. முழுமையானது. நேர்வழி காட்டுவது. வழிகெடுப்பது. பாதுகாக்கப்பட்டது. உலக அழிவு வரை நடைமுறைப்படுத்தக் கூடியதான தீர்வுகளைக் கொண்ட சட்டதிட்டங்களை உள்ளடக்கியது. உய்த்துணர்ந்து நல்லுணர்வு பெறத் தூண்டுவது. சிந்திக்கத் தூண்டுவது. பல தெய்வக் கொள்கையை மறுத்து ஓரே இறைவன் என உறுதிப்படக் கூறுவது. மனித குலத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இறக்கி அருளப் பட்டது. இம்மை வாழ்வை நிறைவு செய்யவும், மறுமைக்கான வழிகளை தேடிக்கொள்ளவுமான  நெறி முறைகளைத் தன்னகத்தே கொண்டது.

முற்பந்தியில் கூறிய விமர்சனங்களுக்கு காரணங்கள் பல உண்டு. அவைகளில் முக்கியமானவை, காழ்ப்புணர்வு, மத விரோத மனப்பான்மை, அறியாமை, அறிய விருப்பமின்மை, குறையறிவு, பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டமை, மொழி பெயர்ப்புக்களில் காணப்படும் குறைபாடுகள், மொழி பெயர்ப்புக்களில் சேர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்பாளரின் சொந்த இடுகைகள், நபி சுன்னத்தாகக் கருதி வெளிப்படுத்தப்பட்டுள்ள ஹதீதுக் கிரந்தங்கள், அவற்றில் காணப்படும் செய்திகள், மேலும் அவற்றிலுள்ள முரண்பாடுகள், அவற்றின் குர்ஆன் சாராத தன்மை, சட்ட வல்லுநர்களான இமாம்களால் வகுக்கப்பட்டிருக்கும் மதுஹபுகள், அவை தம்முள் முரண்படும் தன்மை, ஷரிஆ என்ற மனிதர்களால் ஆக்கப்பட்ட பிக்ஹ் எனப்படும் சட்டம், இச்சட்டத்தை உருவாக்குவதில் கையாளப்பட்ட இஜ்மா, கியாஸ் எனப்படும் உத்திகள், உலமாக்கள் என்ற பெயரில் மத்ரஸாக்களால் கொடுக்கப்படும் பட்டங்களைப் பெற்ற மௌலவிமார்கள், பிழையாகப் புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட முரண்பாடுகளால் பிரிந்து நிற்கும் பல்வேறு இஸ்லாமியப் பிரிவுகள், முஸ்லிம்கள் என ஆடைகளால் தம்மை இனம் காட்டிக்கொள்ள முனையும் மக்கள், இஸ்லாத்தின் ஓரிரு கடமைகளைச் செய்து விட்டால் போதும் என்ற வகையில் அக்கடமைகளையே என்ன வென்று அறியாது குருட்டுத்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள்,

மேலும்> இஸ்லாமிய தஃவாவைப் பிழையாக விளங்கிக்கொண்டு தாம் ஏதோ சாதனை செய்வதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு மதமாற்றம் செய்ய முனையும் பிரகிருதிகள், ஜிஹாத் என்பதை என்னவென்றறியாது வன்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சில இயக்கங்கள், பழி வாங்கும் உரிமையைப் பிழையாகப் பயன்படுத்தும் வழிகேடர்குர்ஆன் தடை செய்தவை பற்றிய சரியான அறிவின்றி எதையெதை எல்லாமோ செய்ய முற்பட்டு சமூக இணக்கப்பாட்டை சீரழிக்கும் ஒரு கூட்டம், ஆகுமான விடயங்களை அறிந்து கொள்ளாமல் சில மரபுகளையும் மனோஇச்சை களையும் பின்பற்றி இஸ்லாத்துக்கு தேவையற்ற விமர்சனங்களை, அபகீர்த்தியை அந்நியர் செய்வதற்கு இடம்பாடளித்துக் கொண்டிருக்கும் அரை வேக்காடுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்

தலையங்கம் எழுப்பியுள்ள கேள்விக்கு விடை 'இல்லை' என்றே கூறலாம். முதன்மைக் காரணம் அது இறையறிவில் வெளியானது. இரண்டாவது காரணம் உலக அழிவு வரை செல்லுபடியாகும் பண்புகளுடன் வெளியாக் கப்பட்டது. மூன்றாவது இது ஞான வெளிப்பாடு. நான்காவது அந்த ஞானம் கூட அல்லாஹ்விடமிருந்து கொடுக்கப்படுவது. அடுத்தது, அதன் பரந்து விரிந்து உலகின் மாற்றங்களுக்கும் ஏற்ப கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய பண்பு  என்பதனால் அவ்வாறான அறிவு பெற்றவர்கள் மட்டுமே இதனை விமர்சிக்கலாம்ஆனால், அவ்வாறான அறிவு பெற்றிடும் நிலையில் அங்கு விமர்சனத்திற்கு இடமிராது. விளக்கங்கள் வெளியாகும். வியப்பு மட்டுமே மேலோங்கி நிற்கும்! உண்மையைக் கொண்டே தவிர இதனை இறக்கி அருளவில்லை என்ற இறைவாக்கு அதன் கேடயமாகும்.

விமர்சகர் ஒருவர் ஒன்றை விமர்சிக்க வேண்டுமாயின், அது பற்றிய முழுமையான அறிவை, ஞானத்தைக் கொண்டிருத்தல் அவசியம். அல்லாத நிலையில் விமர்சனம் சாத்தியப்படாது. இங்கு, அல்லாஹ்விடமிருந்து வந்த வேதத்தை அவனிடமிருந்து ஞானம் பெற்றவர்கள் மட்டுமே விமர்சிக்க முடியும். அதாவது முக்காலம் உணர்ந்தவர்கள். அவர்களது விளக்கங்கள், விமர்சனங்கள் கூட பிற்கால அறிவைக் கொண்டிராதவர்களால் விளங்கிக் கொள்ளும் சாத்தியம் குறைவு என்பதைவிட இல்லையெனவே கூறிடலாம்.

இப்படிக்  கூறுவதனால் யாரும், குர்ஆனை அறியப்பட முடியாத ஒன்றாக நான் கூறுவதாக எண்ணிவிட வேண்டாம்.  அது அவ்வக்காலங்களுக்குத் தேவையான அளவில் தனது கருத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக் கும். எளிய, சிறிய உதாரணத்தில் விளக்குவதாயின், பாடசாலைக் கல்வி யைக் கூறலாம். முன்னிலைப் பாடசாலைகளில் விண்ணின் பின்னணி பற்றிக் கூறிட முடியுமா! முதலாம் வகுப்பில் கற்கும் மாணவனுக்கு பேராசிரியர் தன்னிடமுள்ள அறிவு அனைத்தையும் கொடுத்திட முடியாது. முடிந்தாலும் அம் மாணவனால் அதனை விளங்கிக் கொள்ள முடியாது. அது படிப் படியாக அறிந்து கொள்ள வேண்டியது.

ஆசிரியர் பத்து எண்ணிக்கைக்குள் கணக்கொன்றைச் சொல்லிக் கொடுப் பதைப் பார்த்துவிட்டு, சுருக்கம் அல்லது அதைவிடச் சிறிது கூடத் தெரிந்த ஒருவர், இப்பேராசிரியருக்கு எதுவும் தெரியாது எனக் கூறிட முடியாது. மோட்டார் கார் புழக்கத்தில் இல்லாத போழ்து, அதன் தொழில் நுட்ப அறிவைப் புகட்ட முனைவது முட்டான் தனமாக நோக்கப்படும். அதற்காக மோட்டார் செய்தவனிடம் அவ்வறிவு இருந்திருக்கவில்லை எனக்கூறிட முடியாது. விஞ்ஞானிகள் விளங்கிக் கொள்ள வேண்டியதை தச்சுத் தொழிலாளருக்கு விளக்கிட முனைவது அபத்தம். கிராமத்தவனிடம் செய்மதி பற்றிக் கதைப்பது நேரவிரயம். ஆனால் மோட்டார் கண்டு பிடித்தவனிடம் இருந்த அறிவை நாம் கண்டு கொள்ளும் திறன் நம்மிடம் இருந்திருக்க வில்லை என்பதே யதார்ர்த்தம்.

ஆகவே அவரவர் தகைமைகளுக்கு ஏற்ப குர்ஆன் தனது அறிவை வெளிப்படுத்தும் என்பதனாலேயே, அது எவரினதும் விமர்சனத்திற்கு உட்படாது தானாகவே தலை நிமிர்ந்து நிற்பது எனக் கூறுகிறேன். அப்படியே யாராவது தம்மறிவுக்கு ஏற்ப இப்போது விமர்சனங்களை வெளிப்படுத்தின் அது அவனது முட்டாள் தனத்தை இன்று வெளிப்படுத்தாவிடினும் பின்னொரு காலத்தில் நிச்சயமாக வெளியாக்கவே செய்யும்.  

மாடிரண்டைக் கட்டி உழுபவனிடம் உழவு இயந்திர அறிவைக் காண முடியாது. ஆனால் அவனும் நிலத்தை  உழும் அறிவைக் கொண்டவனே என்பதை நாம் மறந்து விடலாகாது. குதிரை வண்டியில் சென்றவனும் தூரத்தைக் கடந்தான். தூரத்தைக் கல்தொலைவு எனவும் அளந்து கண்டான். இப்படி அறிவு என்பது வெவ்வேறு வடிவில் வெளிப்பட்டுக் கொண்டிருக் கின்றது. அதற்கு ஒரு வரையறையை யாரும் கொடுத்துவிட முடியாது. மனதால் கூட்டிக் கழித்துச் சொல்லும் மனிதனும், அதனையே கணினி மூலம் காண்பவனும் இருக்கின்றான். எதனையும் மனனம் செய்து தேவைக்கேற்ப அவ்வப்போது கூறுபவனின் அதே வேலையை கம்ப்யூட்டர் செய்கிறது. விடயம் ஒன்றே. விடையும் ஒன்றே. முறைகள் தான் வெவ் வேறாகின்றது.  இதனை விமர்சனம் செய்ய முற்படுவது விஷமத்தனம்.

மூஸா அலை அவர்களுக்கு வல்ல நாயன் அல்லாஹ் பலகையில் எழுதிக் கொடுத்ததாகக் கூறுவதை அன்றைய நிலையில் நம்பாதவர்கள், இன்றைய நிலையில், தொலை நகல், SMS  எனப்படும் குறுஞ்செய்திச் சேவைகளைக் கண்ட பின்னர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆக இதற்கு ஏறத்தாழ 5000 வருடங்கள் சென்றுள்ளன

அன்று நாயகம் அவர்களுக்குக் காட்டப்பட்டது என்ற விடயம் அன்றிருந்தவர்களால் நம்ப முடியாதுதான். இன்றோ சிறு குழந்தையும் தொலைக் காட்சியை அழுத்தி  உலகையே வலம் வந்து விடும். இன்னும் இணைய தளத்துள் புகுந்து உலகை விரல் நுனிக்குள் கொணர்ந்துவிடும் என்ற நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இவைகள் எல்லாவற்றுக்கும் முகங் கொடுத்துக் கொண்டிருப்பது குர்ஆன் மட்டுமே

வலுவிருந்தால் வானத்தில் ஏறலாம் என்றது. நாம் விரிவாக்கலுடையோம் எனக் கூறி பிரபஞ்சம் விரிந்து செல்வதைக் கூறுகின்றது. அன்று ஆத்மீக ரீதியில் கண்டறிந்தவை, செய்து கொண்டவை இன்று அற்புதங்களாகப் பார்க்கும் நிலையில்தான், முன்னேறியுள்ளதாகக் கூறிக் கொள்ளும் நாம், விமர்சனம் செய்ய முனையும் நாம் உள்ளோம் என்பதை சற்று சிந்தித்தால் புரியும்.

ஓரே இரவில் தூரத்திலுள்ள பள்ளிவாசலுக்கு நபிகளாரை அழைத்துச் சென்றேன் எனக் கூறுவது, நமது சிற்றறிவில் அற்புதமாகவே கண்டு கொள்ளப்படுகின்றது. சற்று சிந்திக்கக் கூடியவன் அவ்வத்தாட்சிகளை உணர்ந்து விமானத்தைக் கண்டு பிடித்தான். இதற்கும் காரணம், இவ்வறிவுகள் அனைத்தையும் அல்லாஹ் நம்மூளையுள் பதித்தே வைத்துள்ளான் என்பதே! இப்படி என்னால் ஆயிரத்துக்கும் அதிகமான உதாரணங்களை குர்ஆனில் இருந்து காட்டிட முடியும்.

இவையனைத்தையும் அல்லாஹ் குர்ஆனில் உள்ளடக்கியே உள்ளான். மனித மூளையுள் வைத்துப்படைத்வனுக்கு புத்தக ரூபத்தில் தருவது பெரிய வேலையா! அதனால்தான் குன் எனக் கூறி ஆறே கட்டங்களில் வானம் பூமிகளைப் படைத்த தனக்கு இவை எல்லாம் மிக எளிதானதே என்கிறான். நமது அறிவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்துக் கொண்டு நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் அல்குர்ஆன் என்பதே உண்மை என்பதால். முழுமையாக வளர்ச்சியடையாத அறிவைக்கொண்ட நம்மால் முற்றும் அறிந்தவனின், முக்காலமும் அறிந்தவனின், மறைவானதையும் அறிந்தவனின், எங்கும் நிறைந்து ஏகமும் தெரிந்தவனின், ஞானமுடையவனின், நுட்பமறிந்த வனின், நுண்ணறிவு படைத்தவனின் குர்ஆனை விமர்சனம் செய்ய முடியாது என்கின்றேன்.

புதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தற்போது குர்ஆனில் காணப்படும் உண்மைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன விஞ்ஞான ஆய்வுகளின் மூலம். ஆதலால் இன்று நாம் விமர்சிக்க முயலும் சில விடயங்கள் நாளை முட்டாள் தனத்தை வெளிப்படுத்தியதாக அமைந்து விடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இன்ஷா அல்லாஹ் !  குர்ஆனுக்கு எதிரான விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்த விடயங்கள் பின்னொருபோது விரிவாக ஆராயப்படும்.

- நிஹா -

கொழும்பு 03, 2013.08.01.

No comments: