பொது பல சேன அமைப்பின் தேரர் அவர்களுக்கு தமது மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கு முழு உரிமையும் உண்டே. ஆனால், தேரர் அவர்கள், தமக்கு பாதிப்பு ஏற்படும் விடயங்களைச் சம்பந்தப்பட்டவர் களுடன் பேசித் தீர்ப்பதை விடுத்து, சிங்கள மக்களைப் போன்று இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து, இந்த நாட்டின் நலத்துக்கு என்றுமே களங்கத்தையோ, அச்சுறுத்தலையோ, குழப்பத்தையோ விளைவிக்காத அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்கள் தம், வணக்க ஸ்தலங்களுக்கும், மதக்கிரியைகளுக்கும் எதிராகப் பேசுவது, அவருக்கும், அவர் பின்பற்றும் மதத்துக்கும் ஆகுமானதல்ல.
இந்த நாட்டின் சுயாதிபத்தியத்துக்கு , அந்நியர்களாலும், தமிழர்களாலும், ஏன் சிங்களவர்களாலும்கூட, ஆபத்து ஏற்பட்டிருந்தது. ஆனால், சிறுபான்மையாக வாழ்ந்தாலும், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும், மற்றைய சமூகங்களுடன் இரண்டறக் கலந்து, அவர்கள் தம் பாஷை களையும் பேசி, அந்நியோன்யமாக, அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், நான் மேலே கூறியபடி அந்நியரால், தமிழரால், சிங்களவரால், இந்நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் கூட, முஸ்லிம்கள் அவர்களுடைய போராட்டத்துக்கு ஒத்துழைப்புக் கொடாமல், நாட்டின் நலன் கருதி அரசுக்கே தமது ஆதரவை நல்கி வந்துள்ளனர் என்பது வரலாறு. இன்றும் அந்நிலையில் எவ்வித மாற்றமுமில்லை.
எமது இயல்பு வாழ்க்கைக்கும், மதக் கிரியைகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தப் பட்டுள்ள இந்நிலையிலும் கூட, நாம், அயல் நாட்டிடமோ சர்வதேசத் திடமோ அன்றி முஸ்லிம் நாடுகளிடமோ எமது பிரச்சினையை முன் வைத்து, உதவி பெற முனையவில்லை. மாறாக, எமது அரசிடமும், இந்நாட்டின் ஜனாதிபதியிடமுமேதான் நிவாரணம் தேட முனைகிறோம் என்பது ஒன்றே நாம் இந்நாட்டில் கொண்டுள்ள பக்தியை, மதிப்பை வெளிப்படுத்தப் போதுமானது. இது நாம் திட்டமிட்டுச் செய்யும் செயலல்ல. இயல்பாகவே நம்மால் செய்யப்படும் செயல். எனது குடும்ப அங்கத்தவர் ஒருவர் எனக்கு தீமை செய்தால், நான் எப்படி அயல் வீட்டாரிடம் உதவி தேடாது, வீட்டின் தலைவரான தகப்பனிடமோ, தாயிடமோ நிவாரணம் பெற முனைவோமோ அதைப் போன்ற செயலே!
முஸ்லிம்கள் மத மாற்றம் செய்கின்றார்கள் என்பது முழுமையான உண்மையல்ல. தாமாக யாரும் விரும்பி இஸ்லாத்தை ஏற்பாராயின் அதற்கு தடை செய்யும் உரிமை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வில்லை. அது போன்றே எவரையும், பலவந்தமாக, அவர்கள் தம் இயலாமையை, ஏழ்மையை, அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை மதமாற்றம் செய்யும் உரிமையும் இஸ்லாத்தில் வழங்கப்படவில்லை.
இஸ்லாமியர் யாருக்கும் உதவி செய்வதாக இருந்தால் கூட, ஏதாவதொன்றை அடையும் நோக்கில், உதவி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும். பெரிதாக எதையோ அடைவதை உள்நோக்காகக் கொண்டு, சிறிய உதவிகளைச் செய்வதைக் கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நாம் முஸ்லிம்கள், அல்லாஹ்வைத் தவிர எவரும் மனிதருக்கு வழிகாட்டிட முடியாது என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதால், எவரையும் நிர்ப்பந்தித்தோ, சூழ்ச்சிகள் தந்திரங்கள் செய்தோ, பொருளாதாரத்தைப் பாவித்தோ மதமாற்றத்துக்கு உட்படுத்த அனுமதியில்லை.
முஸ்லிம்கள் சிங்களவர்களை மதமாற்றம் செய்திருந்தால், இன்று சிங்கள கிறிஸ்தவர்கள் இந்நாட்டில் காணப்படுவது போல் சிங்கள முஸ்லிம்களும் இருந்திருப்பர். நிர்ப்பந்த மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதியாததன் காரணமாகவே, அராபியர் காலத்தில் கூட இங்கு மதமாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. முஸ்லிம்களின் பரம்பல், ஒரு சாதாரண இயற்கையுடன் ஒட்டியதாகவே காணப்படுவதும் இதற்குக் காரணம். இஸ்லாமியர் பரம்பல் கூடியிருந்தால் இரண்டு கோடியை அண்மித்துள்ள சனத்தொகையில் அதிகளவில்லாவிடினும் அதீத அதிகரிப்பு நடந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பதை அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தும்.
உண்மையில் தேரர் அவர்கள் சொல்வது போல் சில அமைப்புக்கள் இஸ்லாம் என்ற பெயரில் வழங்கி வந்தாலும், அவை சில வேளை அரசு சார்பற்ற அமைப்புக்களாக இருக்கலாம். இஸ்லாத்தில் பிரிவுகள் எதுவும் கிடையாது. பிரிவுகளை உண்டாக்கிக் கொள்வதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது. மாறாக, பிரிவுகள் அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட, தடுக்கப் பட்ட ஒரு செயலே. அவர்களை நாமோ, குர்ஆனோ இஸ்லாமியராகப் பார்ப்பதில்லை.
தேரர் அவர்களின் இன்னொரு பெரிய குற்றச்சாட்டு, ஹலால் முத்திரை பொறிப்பது. இதனைச் செய்வதற்கு இஸ்லாத்தில் எவ்வித ஆதாரமும் கிடையாது. எமது நபிகள் காலத்திலோ, அவருக்குப் பின்னுள்ள காலத்திலோ கூட இச்செயற்பாடு இருந்திருக்கவில்லை.
இஸ்லாத்தை அழிப்பதற்கு, புதிய யுக்தியைத் தேடியோரால், கண்டு பிடிக்கப்பட்டதே, இந்த அடுத்துக் கெடுக்கும் யுக்தியான ஹலால் முத்திரை பொறிக்கும் செயற்பாடு. உண்மையில் இம்முத்திரை பொறிக்கும் செயற்பாடு காலப் போக்கில் நிச்சயமாக, ஹறாமான, அதாவது தடுக்கப்பட்ட உணவை தவிர்த்து வாழ வேண்டிய, அல்லாஹ்வின் நடை முறையைப் புறந்தள்ள வைத்து, ஹலால் முத்திரையைப் பார்த்து உணவை உண்ணும் நிலையை ஏற்படுததும். இதனால், தடுக்கப்பட்ட உணவைப் பற்றிய அறிவில்லாமல் செய்யப்பட்ட முஸ்லிம்கள், ஹலால் முத்திரையுடன் காணப்படும் முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள பன்றி இறைச்சியை வாங்கி உண்ணும் நிலையை ஏற்படுத்திவிடும் அவலமும் அபாயமும் உண்டே.
இஸ்லாத்தின எதிரிகள் விரித்த வலையே இந்த ஹலால் சான்றிதல் முத்திரை பொறிக்கும் திட்டம். அதில் இந்த நாட்டின் மதத்தலைவர் களாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் குழுவும் இச்சதி வலையுள் சிக்கி, முஸ்லிம்களுக்கு பல்வேறு வகையான நட்டத்துக்குக் காரணமாகி வருகின்றனர்.
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக, முஸ்லிம்கள் ஹறாம் என்ற தடுக்கப் பட்டதைத் தவிர்த்து வாழ்ந்ததில், எந்த சமூகத்துக்கும் பிரச்சினை ஏற்பட் டிருக்கவில்லை. ஆனால் தற்போது. இந்நிலை ஏற்பட்டமைக்கு, அப்பாவி முஸ்லிம்களோ , இஸ்லாமோ காரணமல்ல என்பதை பொது பல சேனாவோ, உலகோ அறிந்து கொள்ள வேண்டும்.
திட்டமிடப்பட்ட இந்த நாசகாரச் செயற்பாட்டின் மூலம் மிகக் குறுகிய காலத்தில், இஸ்லாத்துக்கு தேவையற்ற அவப் பெயரும். முஸ்லிம் களினதும், முஸ்லிம் வியாபாரிகளினதும் இயல்பு வாழ்வுக்குப் பிரச்சினையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.
// இதற்காகவே 2013ஆண்டை ஹலாலை ஒழிக்கும் ஆண்டாகப் பிரகடணப்படுத்தியுள்ளோம். //
உண்மையில் உங்கள் கருத்தை வெளிப்படுத்தியதன் தவறே ஹலாலை ஒழிக்க வேண்டுமென்பது. ஹலால் என்பது உண்ணத் தகுந்தது். அதனை ஒழிக்க எடுக்கும் முயற்சி என்பது, மனித வர்க்கத்துக்கே செய்யப்படும் அநியாயம். அக்கிரமம்.ஆனால், ஹலால் முத்திரையை ஒழிப்போம் எனக் கூறுவதில் அனைவருக்கும் நன்மை உண்டே.
முஸ்லிம்கள் எப்போது தமது மார்க்கத்துக்கு மாறாக நடப்பார்களோ அப்போது இன்னொரு சமூகத்தைக் கொண்டே அல்லாஹ் தனக்கு வேண்டியதை நடைமுறைப்படுத்தி விடுவான்.
அந்த வகையில், ஹலால் முத்திரை இஸ்லாத்தை அழிக்க முனைந்த ஒரு செயற்பாடே, அதனை உங்களைப் போன்ற ஒருவர் மூலம், இல்லா தொழிக்கச் செய்வது அல்லாஹ்வின் திட்டமே. ஆதலால், ஹலால் முத்திரையை நீங்கள் அழிக்கும் போது, இஸ்லாத்துக்கே மறைமுகமாக, நீண்ட காலப் போக்கில் உதவிகளைச் செய்கிறீர்கள் என்பதே உண்மை.
காரணம் இந்த ஹலால் முத்திரை ஒழிப்பு விடயத்தை ஒரு முஸ்லிம் கூறுவதே, பயங்கரமான எதிர்ப்பை, அவப் பெயரை, அவதூறை, பழிப்பை, ஏளனத்தை உருவாக்குகின்றது. ஆதலால், இந்தக் கைங்கரியத்தை எல்லாம் வல்ல இறைவன் தங்கள் மூலமாகவே நிறைவேற்றச் சித்தம் கொண்டுள்ளான் எனபதே எனது எண்ணம். இது, இரும்பால் வரவுள்ள ஆபத்தை, இரும்புக் கவசத்தை அணிந்து தடுத்துக் கொள்ளும் உபாயமே! உலகின் சில பாகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஹலால் முத்திரை பொறிக்கும் பிழையான நடைமுறையையும் ஒழிக்க நடவடிக்கை எடுப்பீர்களாயின், உங்களுக்கு இறையுதவியும் கிடைக்கும்
// இவர்கள் வேண்டுமென்றால் சுப்பர் மார்க்கட்டில் ஹலால் உணவுகள் என வகைப்படுத்தி வைக்கட்டும் அதனை முஸ்லிம்கள் வாங்குவார்கள். // உண்மையில் இம்முறை முஸ்லிம்களுக்குத் தேவையானதல்ல. காரணம், அல்லாஹ் முஸ்லிமகள், மிக இலகுவாக தமக்குத் தடுக்கப்பட்ட, தானாகச் செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி போன்றவற்றை அறிந்து கொள்ளும் நிலையை உருவாக்கித் தந்துள்ளான். மேலும், அல்லாஹ் அல்லாத வற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையில் சந்தேகம் இருப்பின் தடுத்துக் கொள்வர்.
// இலங்கை பௌத்த நாடு சகல தேசிய நிகழ்விலும் பௌத்த மத நிகழ்வு மட்டுமே இடம் பெறவேண்டும். //
உண்மையில் தேசியத்தைப் பேண வேண்டும் என நினைக்கும் எந்த நாடும். மத அனுஷ்டானங்களை தேசிய நிகழ்வுகளில் கொண்டிருக்கத் தேவை இல்லலை. உண்மையில், மதத்தை மதிக்கும் எவரும் வேடிக்கை, கேளிக்கை, ஆரவாரம், விநோதங்களுடன் நடக்கும் தேசிய நிகழ்வு களுடன் , தமது மத அணுஷ்டானங்களை கலக்க விடக் கூடாது. அதனால், மதத்திற்கு இருக்க வேண்டி புனிதத் தன்மை கெட்டுவிடும்.
ஒன்றைத் தேரர் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் சாந்தி சமாதானத்தை அடிநாதமாக் கொண்டு, உலக மக்களுக்காக இறைவனால் இறக்கி அருளப்பட்டது. இஸ்லாமல்லாதோரின் தெய்வங்களைக்கூட பரிகசிக்கவோ, எதிராகப் பேசவோ குர்ஆன் அனுமதி தரவில்லை. மாறாகத் தடை செய்துள்ளது.
மேலும், எவருக்கும் ஸலாம் என்ற சாந்தி சமாதானம் உங்கள் மீது நிலவட்டும் என்பதையே கூறப் பணித்துள்ளது. இது பயங்கரவாதத்தை, அமைதியின்மையை ஏற்படுத்தும் ஏற்பாடா?
ஆனால், ஆங்கிலத்தில் good morning என்பதையும், God என்பதையும் ஏற்கும் மனித சுபாவம், ஸலாம் என்பதையும், அல்லாஹ் என்பதையும் அவை அரபுச் சொற்கள் என்பதாகப் பார்க்க மறுக்கின்றது. இது துர்அதிர்ஷ்டமான நிலையே.
மேலும், இஸ்லாமிய கடமைகளில் மூன்றாவதான ஸக்காத் என்ற தர்மம் சார்ந்த கடமை, யார் யாருக்கு முஸ்லிம்கள் தமது சொத்தின் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றது. அந்த எட்டு வகையான பிரிவினருள் ஏழைகள், வழிப் போக்கர்கள், கடனாளிகள், இறைவழியில் இருப்போர், விடுபடவேண்டியவர்கள் ( இதில் அடிமைகள், ஒப்பந்தங்களால் கட்டுப்பட்டுள்ளோர், வியாதியில் இருந்து விடுபட வேண்டியோர் போன்றோரும் அடங்குவர்.)
மேலும், இன்னும் சில இடங்களில், முஸ்லிம்களின் சொத்தில், யாசிப் பவருக்கும், யாசிக்காதோருக்கும் பங்கு உண்டு எனக் கூறி, தனது தாரளத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த வசனங்கள் எவற்றிலும், முஸ்லிம் என்ற பதம் பிரயோகிக்ப்பட வில்லை என்பதே இஸ்லாம் அகில உலகுக்கும் அருட் கொடையாகவே இறக்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கிக் கொண்டிருக்கின்றது.
இன்னும், அனாதைகளின் சொத்தை அநியாயமாக விழுங்கி விடாதீர்கள் என்கின்றது. இன்னொருவருடைய சொத்தை அபகரிக்கும் நோக்கில் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்காதீர்கள் என்கின்றது. தக்க காரணமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்வது. முழு மனித சமுதாயத்தையும் கொல்வதற்குச் சமமானது என்கின்றது. குழப்பம் விளைவிக்க வேண்டாமென்கின்றது. சபையில் விலகி இட ம் கொடுக்கும் படி கூறுகின்றது. பிறரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் என்கின்றது, துருவி துருவி ஆராய வேண்டாம் என்கின்றது. அநியாயம் செய்ய வேண்டாம் என்கின்றது. இப்படி அடுக்கிக் கொண்டே போகின்றது.
15:3 - அவர்களை நீர் விட்டுவிடுவீராக! அவர்கள் உண்ணட்டும், சுகம் அனுபவிக்கட்டும், இன்னும் அவர்களை வீணான எண்ணம் பராக்காக்கி விட்டது. விரைவில் அவர்கள் அறிந்து கொள்வார்கள். இப்படிக் கூறும் ஓர் மார்க்கம், யாரையும் பலவந்தமாக எதையாவது செய்ய வற்புறுத்துமா?
தவறுகள் ஏதாவது நடந்திருக்குமென்று நீங்கள் குற்றஞ்சாட்டுவதாக இருந்தால், அது யாரோ சிலர் அறியாமையாலோ, அல்லது வேறு காரணத்தினாலோ செய்தவைகளாக இருக்கலாம். அப்படிச் செய்தவர்கள் முஸ்லிம் என்ற பெயருடன் இருப்பதன் காரணமாக, அவை இஸ்லாமிய கருத்துக்களாகக் கூறப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இஸ்லாம் உலக மாந்தரின் ஈருல உய்வுக்காக, அருளாக இறக்கி அருளப்பட்டுள்ளது.
இதில் உலக அமைதியும், சாந்தி, சமாதானமும் நிறைந்திருக்கும். பெரும்பாலானவர்கள் இந்த குர்ஆனை ஏற்க மாட்டார்கள் என்பதும், குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ்வால் கூறப்பட்ட வசனம் என்பதாலும், தேரர் இந்நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை, மதமாற்றத்தின மூலம் அதிகரித்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை.
No comments:
Post a Comment