முஸ்லிம் மாதரின் முகத்திரைகள் - குர்ஆன் கூறுவதென்ன?
முஸ்லிம் மாதரின் முகத்திரைகள் - குர்ஆன் கூறுவதென்ன?
அண்மைக் காலமாக முஸ்லிம் மாதர் சிலர் முகத்திரை அணியத் தொடங்கியுள்ளார்கள். இது அனுமதிக்கப்பட்ட அல்லது குர்ஆன் குறித்துரைத்த ஆடை முறையா என்பதை ஆராயும் முன் உலக வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு ஏற்புடையது என்பதும், நடைமுறைச் சாத்தியமானது என்பதும், இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள், வழிகேடுகள், பிரச்சினைகள் போன்ற இன்னோரன்னவற்றையும் ஆராய்வது, ஆடை பற்றிய குர்ஆனியக் கருதுகோளைச் சரியாகப் புரிந்து கொள்வதிலும், இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாம் பற்றிக் கொண்டுள்ள தப்பான அபிப்பிராயங்களையும், மேலாக, இத்திரைகளை அணிவோர் அல்லது அப்படி அணிய வேண்டும் என்ற கருத்துக் கொண்டோரும், தமது பெண்களை அணியுமாறு வற்புறுத்துவோரும் அறிந்து கொள்ளவும், குர்ஆனிய வாழ்க்கையை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்பது என் வலுவான அபிப்பிராயம்.
மேலும், பிழையான பல்வேறு நடத்தைகளை மேற் கொள்வோரும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் இவ்வுடைகளுக்குள் மறைந்து அதன் மூலம் திட்டமிட்டே இஸ்லாத்துக்கு அபகீர்த்தியை உண்டாக்குவதைத் தடுக்கவும் உதவும். இஸ்லாம், சமூக இணக்கத்துக்கு மாற்றமான மார்க்கம் என்ற கருத்தையும் தடுக்கும். அத்தோடு இஸ்லாமிய தூதுச் செய்தியை எத்தி வைப்பதாகவும் அமையும். 33:39 -“அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வின் தூதுச்செய்தியை எடுத்துரைப்பார்கள். மேலும், அவனையே அஞ்சுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த ஒருவருக்கும் அஞ்ச மாட்டார்கள். கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.”
அரேபியர் அணியும் ஆடையைப் போன்றதே நாமணியும் நீண்ட அங்கியும், முகத்திரை, தலைப்பாகையும் என்ற கருத்தை வெளியிடுவோரும் உள்ளனர். அரேபியர்களின் உடை இஸ்லாமிய ஆடை அல்ல என்பதையும், அவர்கள் அரேபியாவில் அடிக்கடி வீசும் மண் புயலில் இருந்து தம்மைக் காக்க, முகத்தை மறைக்கக்கூடிய வகையில் ஆண்கள் தலைப்பாகையையும், பெண்கள் முகத்திரையையும் அணிந்து வந்தனர். அதே அரேபியர்தான் அறியாமையில் மூழ்கி கஃபாவில் 364 விக்கிரகங்களை அமைத்து அவற்றுக்கு முன்னர் முழு நிர்வாணமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்பதையும் மறந்துவிடலாகாது. அராபியரின் மேற்கண்ட உடை நடைமுறையில் இருந்த போதே அல்குர்ஆன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடை பற்றிய அறிவுறுத்தலைத் தருகின்றது. அராபியரின் மரபு ரீதியான உடையை குர்ஆன் அங்கீகரிக்கவில்லை என்பதை இது காட்டுகின்றது.
அரபியில் குர்ஆன் அருளப்பட்டது என்பதையும், நபிகள் கோமான் அங்கு அவதரித்தார்கள் என்பதையும், கஃபா அங்கு அமைந்துள்ளது என்பதையும் தவிர அவர்களிடம் அரேபியர் என்ற வகையில் வேறு தொடர்பு இல்லை. அவர்கள் இஸ்லாமியராயிருந்து, அவர்களிடம் குர்ஆனிய வாழ்க்கை இருந்தால் பின் தொடரலாமே தவிர அல்ல. நமக்கும், அவர்களுக்கும்தான் குர்ஆன் கீழ்கூறிய உடையை குர்ஆன் அறிவித்துள்ளது. அவர்கள் அணிந்திருந்த ஆடை சரியாக இருந்தால் புதிய ஆடை முறையை குர்ஆன் கூறியிருக்க அவசியம் இல்லை. மேலும், அந்நாட்டின் தேவையை ஒட்டி அவர்கள் இஸ்லாமிய ஆடைக்கு மேலதிகமாக, தேவைப்படும் காலங்களில், அதாவது மண்புயல் அல்லது வேறு நிர்ப்பந்தங்கள் ஏற்படுமிடத்து அணிவது பிழையல்ல. ஆனால் அது முஸ்லிம்களின் ஆடை என்றோ, குர்ஆன் பரிந்துரைத்த ஆடை என்றோ கூறவோ, பின்பற்றவோ முடியாது.
குர்ஆன் விதந்துரைத்த ஆடை முழு உலகுக்கும், அனைத்து சுவாத்தியங் களிலும் அணியக்கூடிய, சிக்கனமான, இலகுவான, அழகான, மானத்தை மறைப்பதான, விரசத்தை, பயத்தை ஏற்படுத்தாத, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற, ஆளை அடையாளம் காண்பதற்கு ஏதுவான ஆடை.
இன்று உலகில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்களும், அபிவிருத்தி களும், வசதிகளும், வாய்ப்புக்களும் போன்றவைகளில் குறுக்கு வழிகளைக் கையாண்டு, காரியங்களை ஆற்றுவோரில் இருந்து, வளங் களையும், நலன்களையும் காத்துக்கொள்ள ஆளடையாளம் பெரிதும் அத்தியாவசியமும், அவசரமும், கட்டாயமும் ஆகியுள்ளமை தவிர்க்கப்பட முடியாததே. மனிதரைத் தனித்தனியே வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்காக, இனங்காட்டுவதற்காக இறைவன் அளித்த ஓரே இலகு வழியே முகம் என்ற அடையாளம். ஒருவர் முகம் போல் இன்னொருவரது முகம் அமைவதில்லை. ஒருசில இரட்டையரிலும், மிக அருமையாக ஒருவர் இருவரிலும் தவிர. மற்றைய படைப்புக்களில் மனிதர்கள் அறிந்து கொள்வதற்கு அமைவாக வேறு விதமான அடையாளங்களைத் தேவைக் கேற்ப அவற்றில் அமைத்துள்ளான். இது மனித நடைமுறையை இலகு படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டதே. இதனைத் தன் அருள் மறையிலும் அழகாக எடுத்தியம்பி உள்ளான். அந்த வகையில் தற்போது, ஆளடை யாளத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், தேவைகளிலும், நமது நன்மை கருதியும், பொது நன்மை கருதியும், குற்றங்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்காது உதவும் வகையிலும் நமது அடையாளத்தை வெளிப்படுத்த
வேண்டியே உள்ளது. இதற்காகவே அருளப்பட்ட முகம் அக்கைங் கரியத்தைச் சிறப்பாகச் செய்ய வல்லது.
ஏதோ வழியில் தற்போதைய முகத்திரை இதற்குக் குந்தகம் விளைவிக்கக் காரணமாகின்றது என்பதை நாம் மறுக்கமுடியாது. முக அடையாளத்தை எவ்வழியிலாவது மறைத்தல் குற்றவியலுக்கு உட்பட்டதே. முகத்தை மறைப்பதைத் தடைசெய்யும் சட்டங்கள் முஸ்லிம் மாதரின் முகத்திரைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானஎன்ற கோஷம், மலிவான வழியில் புகழ், இலாபம் தேடுவோரின் குறுக்கு வழிகளாகும்.
அடுத்து ஒழுக்கம் கெடுவதற்கும் இத்திரை பெரிதும் சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றது. தனது கணவரின் கண் முன்பாகவே, எவ்வித அச்சமு மின்றிக் கள்ளக் காதலனுடன் கைகோர்த்துச் செல்லும் அவல நிலைக்குக் கால்கோளாகி உள்ளது, இம்முகத்திரை. சந்தர்ப்பவசத்தால் தெருவில் இறந்து கிடந்தாலோ அல்லது வேறு ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்தாலோ நமது சொந்த மனைவியை, சகோதரியை, தாயை, சேயை, நண்பரை அடையாளம் காண முடியாதென்பதால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். நமது கண் முன்னே யாரும் கண்டு கொள்ளாதவாறு, வாயைக் கட்டி, கொலை அச்சுறுத் தலோடு கடத்திச் செல்லும் சந்தர்ப்பங்கள்கூட ஏற்படலாம். பர்தா உடையுடன் கூடிய முகத்திரை அதற்கான சூழலை இலகுவாக்கி விடுகின்றது. கணவனைக்கூட மனைவி முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லும் வாய்ப்பு. மற்றும், கள்ளத் தொழில், குற்றச்செயல், ஆள்மாறாட்டம், விபச்சாரம் போன்ற இன்னோரன்ன வற்றையும் செய்ய விழையும் ஆண்களும் பெண்களும் தற்போதைய முகத்திரையை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
முஸ்லிம் மாதரின் ஆடை என்பது மற்றவர்களால் சந்தேகிக்கப்படுவது இல்லை என்பது மேற்கண்ட குற்றச் செயல்களுக்கு ப்ளஸ் பொயின்ட் ஆகிவிடுகிறது. ஆக, இம்முகத்திரை குற்றச் செயலில் ஈடுபடுவோருக்குப் பாதுகாப்பான இலகு கேடயமாகி உள்ளது. முகத் திரையைத் தம் இழி செயலுக்காகப் பாவிப்போர் அகப்படும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. காரணம், அனைத்து முகத்திரை அணிவோரையும் பரிசீலிப்பது, சிரம சாத்தியமானதும், நடைமுறைக்கு ஒவ்வாததும், எதிர்ப்புக்களை, காலவிரயத்தை, அசௌகரியங்களை ஏற்டுத்துவதுமேயாகும். முகத்திரைகளுள் மறைந்து கொண்டு நடத்தப்படும் அக்கிரமங்களை அம்பலமாக்கி அநேக திரைப் படங்கள் வெளியாகியும் உள்ளன. அதுவும் முஸ்லிம்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போன்றவாறே அமைந்துள்ளமை வருத்தந் தருவதே. அவை கண்டிக்கப்பட வேண்டியவை.
முஸ்லிம்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டுவது ஏற்புடைத்தாயினும், பிறருக்குத் தேவையற்ற அசௌகரியங்களை யும், பிரச்சினைகளையும், தொல்லைகளையும் உண்டு பண்ணி முஸ்லிம்களில் குரோத மனப்பான்மை ஏற்படுத்து வதற்கு வித்திடலாகாது. இன்னும் நமது செயற்பாடுகள் சமூகத்தில் முரண்பாடுகளையும், சச்சரவுகளையும், சட்டத் துக்குக் கட்டுப்படாதவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் போன்றவற்றையும் ஏற்படுத்தாது பார்ப்பதும் நமது கடன். எல்லா வற்றிலும் நடுத்தரத்தையே இறைவன் சிலாகித்துக் கூறியுள்ளான். நடப்பது, பேசுவது, குர்ஆன் ஓதுவது, தொழுகையில் ஓதுவது போன்ற இன்னோரன்ன அனைத்திலும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறான்.
அந்நிய மதத்தவரது தெய்வங்களைக் கூட பேசவேண்டாம் எனவும் (6:108), அப்படிப் பேசுவதால் அவர்கள் அல்லாஹ் வை வரம்புமீறிப் பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியிருப்ப திலிருந்து, இஸ்லாத்தைத் தேவையற்ற விதத்தில் பிறர் விமர்சிக்கும் சந்தர்ப்பங்களை நாம் நமது நடத்தைகளால் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்பதற்காகப் போலும். அப்படியான சந்தர்ப்பங்களைப் பிறருக்குக் கொடுப்பது இஸ்லாத்துக்கே விரோதமானதாகும் என்பதுடன், நமக்கு நாமே விளைக்கும் அநியாயமுமாகும் என்பதும் தெளிவு. குர்ஆன் கூறாதவற்றை அல்லாஹ் கூறியிருப்பது போன்ற உளப்பாங்கை பிறர் மத்தியில் ஏற்படுத்துவதும், அல்லாஹ் மேல் பொய் சொல்லிய குற்றத்தைப் போன்று, மன்னிப்பற்ற, மனோஇச்சையைத் தெய்வமாக்கிய குற்றத்துக்குள் செலுத்திவிடும்.
முகத்திரைகளை அணிவோர் மிகச் சிலர், நிர்ப்பந்தத்தாலும், சிலர், சமூகத்தில் தமது மாறுபட்ட தன்மையைக் காட்டு வதற்காகவும், இன்னும் சிலர், எல்லோரும் செய்கிறார்களே என்பதற்காகவும், வேறும் சிலர் அதுதான் இஸ்லாம் என்ற தப்பபிப்பிராயம் ஊட்டப்பட்டு அல்லது தாமே அப்படியான எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டதனாலும், மேலும் சிலர், ஏதேதோ காரணங்களாலும், ஒருவித மாயையினாலும் அணிந்து கொண்டிருக்கின்றனர் என்பதே யதார்த்தம்.
இஸ்லாம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடாத்தி தீர்வுகளைக் காணும் மார்க்கமல்ல. அது அனைத்துக்கும் தெளிவான தீர்வுகளைக் கொண்டுள்ள, வல்ல அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கி அருளப்பட்ட புனித மாமறையான அல் குர்ஆனைத் தன் வழிகாட்டியாகக் கொண்டுள்ள வேதம். இஸ்லாத்தில் அதாவது அல்குர்ஆனில் அந்த முகத்திரை அணிய வேண்டுமென்று கூறப்பட்டிருந்தால், எவ்விதத் தயக்கமோ, பயமோ, அல்லது விருப்பு, வெறுப்புக்களோ, எதிர்புக்களோ தோன்றினாலும் அணியவே வேண்டும். எந்த அடக்கு முறைக்கும் அடிபணிய வேண்டிய தில்லை. இவ்விடயத்தில் எவரது சட்டத்திற்கும் கட்டுப்பட வேண்டிய தில்லை. அதற்காகப் போரிட்டு நம் மதக் கடமையைச் செய்ய வேண்டிய உரிமையை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு அல்லாஹ்வின் உதவியும் கிட்டும்.
இந்த முகத்திரையை அணிபவர்களும், பர்தா என்ற முகத்தை மறைக்காத இஸ்லாமிய ஆடையை அணிபவர்களும் பெரும்பாலாகக் கருப்பு நிறத்தைத் தமது தெரிவாகக் கொண்டுள்ளனர். இது இலகுவாக அழுக்கை வெளிக்காட்டாது என்ற காரணத்துக்காக அல்லது அணிபவர்களில் உயர்வு, தாழ்வைக் காட்டாது இருப்பதற்காக என்ற எண்ணத்தை அடிப்படையில் கொண்டதாக இருக்கலாம். அப்படியாயின் அது ஓரளவு வரவேற்கத் தக்கதே. ஆனால் உண்மை அப்படியல்ல. ஆயினும் இதுவும் ஓர்வித மாயையை, மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கருப்பு நிறம் உலக வழக்கில், அபசகுணமாக, பயங்கரத்துக்குரியதாக, மந்திரம், மாயைகளுடன் ஒட்டியதாக, பிழையானவற்றை விளக்குவதற்காக (கறுப்புப் பணம், கரிய பக்கம், கரும்பூனை, கரும்புலிகள் ) பாவிக்கப்படுவது நாமறிந்த ஒன்றே. இஸ்லாம் வர்ணங்களுக்கு முன்னுரிமை கொடுக்கா விடினும், அது அழகை, தூய்மையை, அளவான அலங்காரத்தை வற்புறுத்தவே செய்கிறது. இவ்விடயம் முகத்திரைக்குச் சம்பந்தமில்லாத தாயினும் நன்மை கருதி இடம் பெறுகின்றது. ஆதலால் ஆடம்பர உடைகளையும், அதிக கவர்ச்சியான நிறங்கள் தவிர்ந்த கருமையான பல நிறங்களையும் அணிவதால் ஏற்றத்தாழ்வு, அதி சீக்கிரமாக அழுக்கடை யாமை போன்றவற்றைப் பேணிக் கொள்ளலாம்.
எந்தக் காரியத்திலும், நல்ல, கெட்ட வழிகள் மூலம் கவர்ச்சியை அல்லது கவனத்தை ஈர்த்து புகழ் சேர்க்கலாம், அல்லது அணி சேர்க்கலாம், நன்மைகளையும், பலன்களையும் சேர்க்கலாம். இதில் இரண்டாம் வகை ‘கெட்ட வழி’ எவரது அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்வதில்லை. ஆனால் பழிச் சொற்களையும், பெருத்த அவமானங்களையும், அசௌ கரியங்களையும், விமர்சனங்களையும், தேவையற்ற தரமற்ற வாதப் பிரதிவாதங்களையும் மட்டுமே சம்பாதித்துக் கொள்கிறது. அத்தோடு மதிப்பையும், மரியாதையையும் இழந்தும் விடுகிறது. இதனால்தான், சிறந்ததைத் தேடும்படியும், சிறந்தவற்றைக் கூறுமாறும், நல்வழியில் நடக்குமாறும், மிக அழகானதைக் கொண்டு அழைக்குமாறும் குர்ஆன் வற்புறுத்திக் கொண்டு இருக்கின்றது. ஆயினும். அல்லாஹ் நாடாதவரை நல்லுபதேசங்கள் பயனளிப்ப தில்லை.
உண்மையில் குர்ஆனின் அடிப்படையிலான சரியான நகர்வுகள், அப்படியான இழிநிலைகட்கு நம்மை ஆளாக்குவ தில்லை. காரணம் அது அனைவருக்கும் பொருந்த, ஏற்கக்கூடிய நடைமுறைச் சாத்தியங்களை மட்டுமே கூறும். மனிதனுக்குச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு ஆதாரமானதாகி சீர்படவும் வைக்கும். அது கூறும் ஒவ்வொரு நடவடிக்கையும் சாந்தியையும், சமாதானத்தையும் உண்டுபண்ணி அமைதியான சகவாழ்வுக்கு வழிகோலுவதாகவும் மட்டுமே இருக்கும். குர்ஆனியக் கருத்தை பின்பற்றாதவர்கள் கூட அதனது கருத்தை மறுத்துப் பிழை காணும் நிலை இருக்காது. பாராட்டிச் செல்வோராகவே இருப்பர். காரணம், நிறை ஞானம் கொண்ட இறையருளின் வெளிப்பாடு குர்ஆன். இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டி, மனித குலத்தை மேம்படுத்த இறக்கி அருளப்பட்ட அருள் மறை என்பதே. 11:34 – “நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்ய நாடினாலும், அல்லாஹ் உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்குப் பயன் தராது”.
ஆடைகள் பற்றிக் குர்ஆன் கூறுவதைப் பார்க்குமுன், முன்னோர்கள் கைக் கொண்டவையாகக் கருதப்பட்டு வழிவழி யாக நடைமுறைப்படுத்திவந்த அனாச்சாரங்கள், மாச்சாரியங்கள், மூடநம்பிக்கைள், வழிகேடுகள், ஒழுக்கக் கேடுகள், கொலைகள், கொள்ளைகள், பிறரைப் புண்படுத்தல், பெருமை பேசல், களவு, விபச்சாரம், மது, சூது, பிழையான உணவு முறை, அபகரிப்பு, அநீதி போன்ற வழி முறைகளை இஸ்லாம் கண்டித்துத் தடைசெய்து, மாற்று வழிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவே, குர்ஆனியச் சட்டங்கள். அது ஒன்றே உலக மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுகு முறை. ஆடையிலும், அக்குர்ஆன் அனைவரும் அணியக்கூடிய விதமாகச் சட்டம் இயற்றி இருக்கவே வேண்டும். அச்சட்டம், எக்காலமும், எந்தச் சூழ்நிலையிலும், எந்த சுவாத்தியத்திலும், எவ்வகையான மனிதராலும், எல்லா நிலையிலும் பின்பற்றக் கூடியதாகவே இருக்க வேண்டும். அது எவருக்கும், எத்தகு அசௌகரியங்களையும், முரண்பாடு களையும், துயரங்களையும், தொல்லைகளையும் தராததாகவே இருக்கும். நடைமுறைப்படுத்த முடியாதென்ற நிலையையும் எற்படுத்தாத தன்மை கொண்டதாகவே இருக்கும். இவைகளை முதற்கண் நாம் மனத்தில் இருத்திக் கொள்வோம். இறைவன் மக்களுக்குச் சிரமத்தை விரும்ப வில்லை என்பதும் இலகுவையே விரும்புகின்றான் என்பதையும், மேலும் மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பதையும், தவிர்க்க முடியாத சந்தர்ப்ப, சூழ்நிலைகளில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விதிவிலக்கு அளித்துள்ளான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆடைகள் பற்றி அல் குர்ஆன் 7:26 கூறுவதைப் பார்ப்போம். இது தற்போது பின்பற்றப்படும் முகத்திரை போடலுக்கான அங்கீகாரத்தை அல்லது ஏதாவது சைக்கினைகளைத் தந்துள்ளதா? என்பதைக் கவனியுங்கள். “ஆதமுடைய மக்களே! உங்களது வெட்கத் தலங்களை மறைக்கும்படியான ஆடையையும், அலங்காரத்தையும், திட்டமாக உங்களுக்கு நாம் இறக்கி வைத்திருக்கிறோம். ஆயினும் இறை அச்சம் என்னும் ஆடை, அதுவே மிகச் சிறந்தது. இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். மேலும், மானத்தை மறைப்பதற்காகவும், அழகலங்காரமாகவும் ஆடையை உங்களுக்கு அருளியுள்ளோம் எனக் கூறியுள்ளான். குர்ஆன் கூறியுள்ள வெட்கத் தலங்களை மறைப்பது பற்றி நான் விளக்க வேண்டிய அவசிய மில்லை. ஆனால் அடுத்து அது அலங்காரமாக இருப்பதை அல்லாஹ் விரும்புகின்றான் என்பது நாம் கவனத்திற் கொள்ள வேண்டியது. கவர்ச்சி யைக் காட்டக் கூடாதே தவிர அழகாகவோ, அலங்காரமாகவோ இருப்பதை அல்லாஹ் தடுக்கவில்லை. நளினமாகப் பேசுவது கூட ஆண்களின் மனத்தில் தேவையற்ற ஆசைகளை விதைத்து விடும் எனக்கூறித் தடை செய்துள்ளான். அச்சந்தர்ப்பத்தில் முகத்திரை போடுமாறு பணித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்பது அவனது தூரதிருஷ்டியைக் காட்டுவது. நடைமுறைச் சாத்தியத்தை உணர்த்துவது. தொழுகைகளின் போதுகூட நம்மை அலங்கரித்துக் கொள்ளும்படியே பணித்துள்ளான்.
அடுத்த வசனத்திலும் அழகையும், அலங்காரத்தையும் வலியுறுத்தி யுள்ளான். முகத்திரை போடுவதால் அழகு கெடுமே தவிர அழகாகவோ அலங்காரமாகவோ இராது. நாம் நம்மைக் காக்கும் பொருட்டு நம் நடத்தையில் கவனத்தைச் செலுத்துவதற்காகப் ‘பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளமை அறிதற்கும், உணர்தற்கும் உரியது. பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படியே கூறியுள்ளான் என்பது குறித்துணரக் கூடியது. முகத்தை மூடுவதாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளச் சொல்ல வேண்டியதே இல்லை அல்லவா! முகம் என்பது ஒருவரை அடையாளப் படுத்துவது. மேலும் இனங்காட்டுவது. அடையாளங்களை மறைப்பது அறிவியலுக்குட்பட்டதா? இஸ்லாம் அறிவியலுக்கு எதிராக எதனையாவது சட்டமாக்கியுள்ளதா?
அல் குர்ஆன் 24: 31 கூறுவது, கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முதன்மையான வசனமாகும். “இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும். இன்னும் தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து வெளியில் தெரிவதைத் தவிர அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முன்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டுக் கொள்ளவேண்டும். ……”
பார்வைகளே பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன என்பதனால் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படி வல்ல நாயன் இவ்வசனத்திலும் கூறியுள்ளமை, முகத்தை மறைப்பதைவிட மேன்மையானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முகத்திரையைப் போடுபவர்கள் தாம் யாரையும் பார்த்து இரசிப்பதற்கு மிக அதிகமான சந்தர்ப் பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். யாரும் பெண்களின் முகத்தைப் பார்ப்பதால் எதுவும் அபத்தம் நிகழ்ந்து விடப் போவதில்லை. மாறாக எந்தப் பெண்ணும் முகத்திரைக்குள்ளாக அந்நிய ஆண்களைப் பார்த்து இரசிக்கும் சந்தர்ப்பம் முகத்திரையின் போது ஏற்படுவதால் அப்பெண் தன்னை இழந்து விடுகிறாள். இதனை மறைவானவற்றையும் அறியும் அல்லாஹ் நன்கு அறிந்து விடுகின்றான். அதனால் முகத்திரை நன்மை செய்வதைவிட தீமைக்கே உடந்தையாக இருக்கிறது. பெண்கள், யாரும் அறியாது, தமக்குத் தாமே துன்பத்தைத் தருவிக்கும் சந்தர்ப்பம் இம்முகத்திரையால் உருவாவதே.
அவ்வசனத்தில் அடுத்து பெண்களுக்குக் காக்க வேண்டிய பகுதி மறை விடங்கள் என்பதை மிக நாசூக்காக, தெளிவாக கூறி நிற்கின்றது. அலங்காரம் அவசியம்தான் என்பதை ஏற்பதுடன் அது எப்படி அமைய வேண்டும் என்பதையும் வகைப்படுத்தி உள்ளான். உடல் உறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி உள்ளான். அதற்கும் மேல், தம் மேல்சட்டைகளின் மீது முன்தானைகளைப் போட்டு அவைகளை மறைத்துக் கொள்ளுமாறு ஏவுகின்றான். மேல் சட்டைகள் அணியும் பகுதி மார்பு என்பது தெரிந்ததே. முகத்தை மறைப்பதை எங்கும் காணவில்லை. அதனைத் தொடர்ந்த வசனங்கள் இன்னுமுளவாயினும் அவசியம் கருதி இவற்றை மட்டும் எழுதியுள்ளேன்.
33:33 வசனம் நமது கவனத்தை ஈர்க்கப்பட வேண்டியதே. “நீங்கள் உங்களுடைய வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்திய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தியது போன்று, வெளிப்படுத்திக் கொண்டு வெளியில் திரியாதீர்கள்.……”. அன்று மாதர் தம் மார்பகங்களை வெளியில் தெரியக் கூடியதாகக் காட்டிக்கொண்டு திரிந்துள்ளனர் என்பது மேற்கண்ட வசனத்தில் தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்காலத்தில் கூட பெண்கள் மார்பகங்களை மூடாத நிலை, ஆசியா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் நாகரிகமற்ற பகுதிகள் சிலவற்றில் காணக்கூடியதாக உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர் நம்நாட்டிலும் இந்நிலை இருந்துள்ளது. தற்போதுகூட இந்தியாவில் சில பகுதிகளில் உடலின் மேல் பகுதியை மறைக்காதவர்கள் வாழ்கின்றனர் என்பது புதிதல்ல. இது நாகரிகம் என்ற பெயரில் மார்பை வெளிக்காட்டிக் கொண்டு திரியும் பெண்களைக் குறிப்பிடுவதல்ல. பெண்கள் ஆடையின்றி நடமாடும் அளவிற்கு கீழிறங்கியுள்ளது நவயுக நாகரிக மாதர் நிலை. உலகம் கற்காலத்தை நோக்கி துரிதமாகப் பயணித்துக் கொண்டி ருக்கிறதா! அழிவு நெருங்கிவிட்டதா!! அதன் அடையாளங்கள் தானா தற்போதைய இயற்கை அழிவுகள்!!!
33:59 “நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமின்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு நீர் கூறுவீராக! அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக்க நெருக்கமாயிருக்கும். அப்பொழுது அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள். …” மேற்கண்ட வசனங்கள், பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதையும், தொங்கவிடுவதனால் அங்கங்கள் வெளிப்படாததையும் மறைமுகமாகக் கூறியுள்ளன. அதற்கான முக்கிய காரணங்களாக, அவர்கள் அறியப்படுவது, பிறரால் துன்புறுத்தப்பட மாட்டார்கள் எனக் கூறுகின்றது. அறியப்படுவது என்பதன் மூலம் முதற்கண் அவள் பெண், அப்பெண் யார்? அவளது பண்பு, அவள் பிழையற்ற தன்மை, பிறரைக் கவர முயற்சியாத குணம் போன்றவை வெளியாகின்றது. ஒரே பார்வையில் அவளை அறிந்து கொள்ள முடியும் என்பதால் அவள் சிரமத்துக்கு உள்ளாவதில்லை. மேலும், வக்கிர மனம் கொண்டவர்களால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கட்கு ஆளாவதையும் தடை செய்கிறது. எப்போது கவர்ச்சி வெளிப்பட வில்லையோ அப்போது பாலியல் தொல்லைகளும் மறைந்து விடுகின்றன. அதனாலேயே தொங்கவிடும் ஆடைகளைக் குர்ஆன் கடமையாக்கியுள்ளது.
ஆடை அணிய வேண்டும் என்பதைக் கட்டாய சட்டமாக்கியுள்ள ஓரே சமயம் இஸ்லாம் மட்டுமே. மட்டுமல்ல எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. எந்த நாடுகளும்கூட ஆடை அணிவதைக் கட்டாய சட்டமாக்கியுள்ளதாகத் தெரியவில்லை. உலகில் ஏற்படும் அதிகமான சமூகப் பிரச்சினைகட்கு பெண்களின் ஆடைகளே காரணமாக அமைந்துள்ளன என்பது ஆதாரபூர்வமாக அறியப்பட்டுள்ளது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது குர்ஆன் கூறும் தொங்கவிடும் ஆடை முறை.
ஆக முகத்தை முகத்திரை கொண்டு மூடியிருந்தால் குர்ஆன் கூறியுள்ளவாறு அவர்கள் அறியப்படுவது எவ்வாறு? இதிலிருந்து முகத்திரை இஸ்லாம் கூறாத ஒன்று. குர்ஆன் கூறாத ஒன்றைப் பின்பற்றுவது இறை நிராகரிப்புக்கு வழிகோலுவதாகவே அமையும். தேவை கருதி சூழல் மாசடையும் சந்தர்ப்பங்களில் அனைவருமே மூக்கை மறைத்து அணியலாம். இஸ்லாத்தில் நிர்ப்பந்தமில்லை.
‘அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக்க நெருக்கமாயிருக்கும்’ என்பதில் அறியப்படுவது என்பதே மிகமுக்கியமாக இக்கால கட்டத்தில் அவசியமாக வேண்டப்படுவது. பாதையில் நடப்பதற்கு, வாகனத்தில் போவதற்கு, வெளிநாடு செல்வதற்கு, வங்கியில் பணம் பெறுவதற்கு, எந்தக் கட்டிடத் துக்குள்ளும் நுழைவதற்கு போன்ற இன்னோரன்ன அனைத்துக்கும் ஆளடையாளம் என்ற முகம் காட்டும் நிலை உள்ளது. ஏன் வீட்டில் தங்கி இருப்பதற்குக்கூட நம்மை அறியவைக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது முகத்தை மறைக்காது வைத்திருத் தல் ஒன்றே. நாம் முகத்தை மறைத்துக் கொண்டு இருப்போமானால், நம்மை யாரும் அறிய முடியாது என்பது மட்டு மல்ல, நமது முகத்திரையை விலக்கிக் காட்டவேண்டிய பரிதாப நிலைக்கும் தள்ளப்படுவோம். இது மேடையில் ஆடையைக் களைவதை ஒத்ததே. அது அவமானத்தை ஏற்படுத்தி அவசியமற்ற அறிவுறுத்தல்கட்கும் அசௌகரியங் கட்கும் ஆளாகும் நிலை. ஆக அம்முகத்திரை துன்புறுத்தலையே மொத்தமாகக் கொள்முதல் செய்கின்றது.
அல்லாஹ் கூறியவாறு ஆடை அணிந்தால் இந்த துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வந்திராதே. அல்லாஹ் எவ்வளவு தூரதிருஷ்டியுடன் நுணுக்க மாகச் சட்டங்களை யாத்து எமக்குப் பாதுகாப்பு அளித்துள்ளான் என்பதை நினைக்கும் போது நாம் இஸ்லாமியராகப் பிறப்பதற்கு உதவிய அக் கருணையாளனான அல்லாஹ்வுக்கு என்றும் நாம் நன்றி உடையவர் களாக, அமைந்து நடப்பவர்களாக, உண்மை முஸ்லிம்களாக, பயபக்தி யாளராக இருக்க முயற்சிக்க வேண்டும். அதுவே நாம் அவனுக்குச் செய்யும் கைமாறு நன்றி. அதே சமயம் நமக்கே நன்மை பயப்பது. 5:48-“ மேலும், உமக்கு வந்துள்ள உண்மையை விட்டும் அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்.” அல்லாஹ் நம்மனைவரையும் வழி நடத்துவானாக.
- நிஹா -