Sunday, December 23, 2012


குர்ஆன் வழியில் …

                                                                                                     
நரகம் செல்லும் மறதியாளர்களின் பண்புகள்   


இந்தத் தலைப்பை நான் தெரிவு செய்தது, நரகவாதிகள் யார் என்பதைக் கூறும் நோக்கல்ல. ஆனால் அவர்கள் ஏன் நரகவாதிகளாக வல்ல நாயன் அல்லாஹ்வால் குறித்துரைக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துவதே! ஆக மறதியாளர்கள் என்பதைக் கண்டு கொள்ளும் ஆற்றல், அறிவு, ஞானம் போன்ற எதுவும் நம்மிடம் இல்லாததால், நரகவாதிகளுக்கு உரிய பண்புகளை அறிந்து கொள்வதன் மூலம் நமது குறைபாடுகளை அறிந்து நம்மை நாமே திருத்திக் கொள்ளும் வகையில் இறையுதவியை நாடலாம் என்பதே! குர்ஆன் இலகுபடுத்தப்பட்டுள்ளது என்ற இறைவாக்கியத்தை நிறைவு செய்வது.

அந்த வகையில் அல் குர்ஆன் 7:179 வசனம் நமக்கு உதவி புரிகின்றது. ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் மிகுதமானவர்களை நரகத்திற் காகவே திட்டமாக நாம் படைத்துள்ளோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. எனினும் அவற்றைக் கொண்டு விளங்கமாட்டார்கள். இன்னும் அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன. எனினும் அவற்றின் மூலம் பார்க்க மாட்டர்கள். இன்னும் அவர்களுக்குச் செவிகள் உண்டு. எனினும் அவற்றின் மூலம் அவர்கள் செவியேற்கமாட்டார்கள். இத்தகையோர் கால்நடைகளைப் போன்றார். அல்ல, இவர்கள் மிக்க கேடுகெட்டவர்களாவர்.

மேற்கூறப்பட்டவை மறதியாளர்களின் பண்புகள் என்பதால், அந்த மறதியாளர்கள் யாரென்பதை அல்லாஹ்விடம்; இருந்தே அறிய வேண்டி யுள்ளது. அந்த வகையில் அல்லாஹ் கூறியதனை வேறெங்கும் தேட முடியாது என்பதால் அவனது கலமான அல் குர்ஆனில் நமது பார்வையைச் செலுத்துவோம். அப்படிப் பார்க்கும் போது நிறையவே வசனங்கள் உள்ளன வாயினும், மிகவும் தெளிவாகவும், தர்க்க ரீதியாகவும், உண்மையைக் கொண்டும் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமே நமக்கு இன்றியாத ஒன்றாக அமைகின்றது. 7:172. இன்னும் உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளில் இருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி வைத்தபோது, ‘நான் உங்கள் ரப்பு அல்லவா?’ “ஆம் நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறியதை நினைவூட்டும். ஏனென்றால், “நிச்சயமாக நாங்கள் இதனை விட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்” என்று மறுமையில் நீங்கள் கூறாதிருப்பதற்காக.

இப்போது யார் மறதியாளர் என்பதை நாமே வெளிப்படுத்தி இருப்பதையும், அல்லாஹ்வைப் பார்த்ததை, அல்லாஹ்வின் சந்திப்பின் போது அவனைத் தவிர வேறு நாயனில்லை என நாம் சாட்சியமளித்ததை மறந்ததையும் இவ்வசனம் தெளிவாக்குகின்றமை தெரிகிறது. ஆக மறதியாளர் யாரெனின் மேற்கண்டவற்றை ஞாபகத்துக்குக் கொண்டுவர முடியாமல் மறதியில் இருப்பவர்களே!

நபிமார் மூலம் வேதங்கள் அருளப்பட்டமைக்கான காரணம்,  மக்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்திருப்பதை ஞாபகப்படுத்து வதற்காகவே! குர்ஆனில் பல இடங்களில் தன்னை நினைவுகூரும்படி அல்லாஹ் கூறியிருக்கின்றான். உங்கள் மூதாதையர்களை நினைவுகூர்வது போன்று அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள் என்றும், தன்னை அதிகம் அதிகமாக நினைவு கூருங்கள் என்றும் கூறியதுடன், தொழுகை மானக்கேடானவைகளில் இருந்தும் வெறுக்கத்தக்கவைகளில் இருந்தும் உங்களைக் காக்கும் என்றும் கூறி,  அதே வசனத்தில்,  அதைவிட மேலானது அல்லாஹ்வை நினைவுகூருவதாகும் என்கின்றான். என்னை நினைவு கூருவதற்காக தொழுகையை நிலைநிறுத்துங்கள் என்கின்றான். என்னை நீங்கள் நினைவு கூர்ந்தால் உங்களை நான் நினைவுகூருவேன் என்கின்றான்.என்னை நினைவுகூர்வதில் இருந்தும் அவர்களுடைய கண்கள் திரைக்குள் இருந்தன என்கின்றான். மறுமையில் நம்முடைய கண்களில் உள்ள திரை விலக்கப்படும் போது… என்கின்றான். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து தமது பாவங்களுக்காக மன்னிப்புத் தேடிக் கொள்வார்கள் என்கின்றான். 39:22 அல்லாஹ்வை நினைவுகூர்வதைவிட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கமடைந்து விட்டவர்களுக்குக் கேடுதான் என்கின்றான். 21:10 இல் திட்டமாக உங்கள் பால் ஒரு வேதத்தை நாம் இறக்கி வைத்தோம். அதில் உங்களுடைய நினைவுகூரல் இருக்கிறது. நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா? என்கிறான். இன்னும் பல்வேறு வசனங்களில் வெவ்வேறு விதமாக அவனை நாம் மறந்திருப்பதையும் நினைவுகூர்தலையும் நினைவுறுத்துகிறான். 2:152,  2:198, 2:200,  2:203,  21:42, 3:41, 3:135, 3:191, 4:114,  7:205,  13:28, 20:14,  20:115, 21:10,  21:42, 33:21, 33:41, 39:22, 50:22, 53:29, 58:19,

அல்லாஹ் தனது அருள்மறையில் மறுமையில் ளிஹார் என்னும் தரிசனத்தைப் பற்றிக் கூறியுள்ளான். அத்தோடு இவ்வுலகத்தில் குருடர்களாக இருப்போர் மறுமையிலும் குருடர்களாக இருப்பர் என்று கூறியிருப்பவை நமது கவனத்தை ஈர்க்கப்படாவிட்டால் நாம் நரகவாதிகள்தான் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். இவ்வேதனையின் உண்மையை அறிந்து கொள்ள இவற்றை விட மேலதிகமான விளக்கங்கள் தேவை இல்லை சாதாரண அறிவைக் கொண்டே நாம் நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

நரகவாதிகள் பற்றி இறைவன் கூறியுள்ள பண்புகள் நம்மிடம் காணப்படுவதை நாமே அறிந்து கொள்ளலாம். நாம் குர்ஆனில் கூறப்பட்டவற்றை விளங்கி அறிந்திருந்தால் அம்முயற்சியில் ஈடுபட்டிருப்போம். அவ்வாறில்லையேல், ‘இதயம் இருக்கும் அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்| என்பதற்கு நாம் உரித்தாளராகிடுவோம்.

நினைவுகூர்தல் என்ற விடயம் பார்த்த ஒன்றை நாம் ஞாபகத்துக்குக் கொண்டுவருவதே! அப்படிக் கொண்டு வரும்போது அவை காட்சிகளாக நமக்குத் தெரிகின்றது. ஆக நாம் பார்த்ததை தற்போது கண்டு கொள்ள முடியவில்லை என்றால், இரண்டாவது பண்பான கண்கள் இருக்கும் பார்த்துக் கொள்ளமாட்டார்கள்| என்ற பண்பு நம்மில் காணப்படுவதை அறியலாம்.

அடுத்து நமக்கு நல்ல விடயங்கள் சொல்லப்பட்டால் அதனைக் கேட்டு அப்படியே அவ்விடத்திலேயே விட்டுச் செல்லும் பண்பே நம்மிடம் நிறைவாக உள்ளது. அல்லது மிக நல்ல கருத்துக்கள் இன்று கூறப்பட்டது என்போம் ஆனால் கூறப்பட்டவை என்ன என்பது தெரியாத நிலையில் இருப்போம். இந்நிலை நரகவாதிகளின் மூன்றாவது பண்பான செவிகள் உண்டு ஆனால் செவியேற்க மாட்டரர்கள்| என்ற நிலையைக் காட்டுகிறது.

இப்போது நமது நிலை பற்றி யாரும் நமக்குக் கூறத் தேவையில்லை என்பது தெளிவு. இக்குர்ஆன் மிகத் தெளிவான விளக்கங்களைக் கொண்டுள்ளது, சந்தேகமற்றது என அல்லாஹ் பல இடங்களில் கூறியிருப்பதன் உண்மையும் நிரூபனமாகின்றது.

இதனை அறிவதன் மூலம் நம்மில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் நாம் முயற்சிக்க வேண்டும். முயற்சியாமல் எதுவும் கிடைத்து விடாது என்பதும், முயற்சி கணக்கில் எடுக்கப்படும் என்பதும், முயற்சியின் அளவுக்கே கொடுக்கப்படும் என்பதுவும் அல்லாஹ்வின் வாக்குறுதிகளே!

5:35 இப்படி அறைகூவல் விடுக்கிறது. இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற் குரிய வழியை தேடிக்கொள்ளுங்கள். மேலும் அவனுடைய பாதையில் போர் செய்யுங்கள் நீங்கள் வெற்றி பெறலாம்.

மேற்கண்ட தலைப்பில் எழுத முனைந்தது, நம்மை நாம் அளவிட்டு அறிந்து கொள்ளும் அல்லாஹ் அருளிய வாய்பாட்டை தெரியப்படுத்துவதன் மூலம் நம் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள நினைவுபடுத்துவதே! மேலும் குர்ஆனிய வசனங்களை மறைப்பதும் கொடுமையே!



கொழும்பு 03
2012.10.24                                                                                       – நிஹா -

No comments: