Sunday, December 23, 2012


ஒருவர் நரகவாதியா? சொர்க்கவாதியா? 
என்ற ஆய்வு
ஈமானுக்கு விரோதமானது!


அண்மையில், ”அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் நரகவாதி களா?” என்ற தலைப்பில், அவர்கள் நரகவாதிகள் என்று யாரோ கூறியதற்கெதிராக, அவர்களைச் சொர்க்கவாதிகள் என்று நிரூபிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நூலொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நூலில், தனது கட்சியை சார்பாகப் பல்வேறு உத்திகள், உதாரணங்கள், குர்ஆன் வசனங்கள் தம் விருப்புக்கேற்றவாறு கையாளப்பட்டிருந்தன. அவை பற்றி நான் இங்கு எழுதி, உங்கள் நேரத்தையும், எனது நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. 

ஆனால் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் சில விடயங்களைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க முடியாது என்ற நிலையில், உண்மையில் அது பற்றிய கொள்கை நமக்கு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எழுதுவதே எனது நோக்கமும், இறைவன் அனுமதித்ததுமாகும் என்ற வகையில் சில கருத்துக்களை குர்ஆனுக்கு மாற்றமின்றி முன்வைக் கலாம் என நினைக்கிறேன். இக்கருத்தில் உடன்பாடில்லாதவர்கள் இதிலிருந்து விலகிக் கொள்வது அனைவருக்கும் நன்று.

அருமை நபிகள் கோமான் அவர்களின் பெற்றோர் எப்படியானோர் என்பது பற்றி நமக்குப் போதிய அறிவில்லையாயினும்,  நபிகளாரைப் பெற்றெடுத் தோர் சமான்யர்களாக இருக்க முடியாது என்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் இப்படி “ஓரளவு  ஏற்றுக் கொள்ள வேண்டும்“ என்று மட்டுப் படுத்திக் கூறுவதற்கான காரணம், நாயகத் திருமேனி முஹம்மது ஸல் அவர்களின் தந்தையரின் சொந்த சகோதரரான அபுஹிக்கம் என்ற பெயருள்ள, அபுஜஹீல் என அழைக் கப்பட்ட, இறைநிராகரிப்பில் முன்னிலை வகுத்தவரும், நாயகத்தை முழுமையாக எதிர்த்தவரும் அதே சந்ததியில் உருவாகி இருப்பதே! 

ஆக, சந்ததி, முன்னோர், பெற்றோர் போன்றவை ஒருவரின் ஈமானையோ, அந்தஸ்தையோ, நிலவரத்தையோ ஆராயப் போதுமான தாகவில்லை என்பதே! அதுபோன்றே> ஓர் உயர் நிலை அடைந்த உத்தமரான மகனை வைத்து, அவரின் பெற்றோரை உயர்ந்தவர்களாக எடைபோட முடியாது. (இப்படிச்சொல்வது உலக நடைமுறையே தவிர, நான் நபிகளாரின் பெற்றோரைக் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிட வேண்டாம்). இதனை, இறைவனின், உங்கள் முன்னோர் பிழையான வழியைப் பின்பற்றினாலுமா நீங்கள் அவர்களைப் பின் தொடர்வீர்கள் என்ற எச்சரிக்கையுடனான அறைகூவல், நன்கு நிரூபிப்பதுடன் உணர்த்தவும் செய்யும். 

உண்மையில், யாராவது நாயகமவர்களின் அருமைப் பெற்றோரை நரகவாதி என்று மட்டுமல்ல, சிறிது தரக்குறைவாகப் பேசினாலும், அதனை எந்த முஸ்லிமும் சகித்துக் கொள்ளவே மாட்டான். அது தனக்கு அவமானத்தை, இழுக்கை, நோவை ஏற்படுத்திய ஒன்றாகவே உணர்வான். அதனால், ஆத்திரமடையவும், வேறு நடவடிக்கைகளில் இறங்கவும் செய்வான். இங்கு ஆசிரியர் புத்தகம் ஒன்றை எழுதி இருந்தவரை ஓரளவு மன அமைதி பெறுகின்றது. 

ஆயினும், நாம், முஸ்லிம்கள் எதனைச் செய்தாலும்,அது யாருக்காக வேண்டி இருந்தாலும் குர்ஆனிலிருந்து சற்றும் விலகிவிடாத தன்மையைப் பேண வேண்டும். உங்கள் உறவினராக இருந்தாலும் நீதி செய்வதில் உங்களைப் பிறழ விடவேண்டாம் என்று கூறும் இறைவசனம் நினைவிற் கொள்ளப்பட வேண்டியதே!

அப்படியாயின், இது போன்ற கருத்துக்கள் வெளியாகும் போது நமது எதிர் நடவடிக்கைகள், நமது ஈமானையும், குர்ஆனையும் மீறிவிடாது கவனித்துக் கொள்ள வேண்டும். அவையே நமது அத்திபாரம். அதிலிருந்து ஏற்படும் எவ்வித சறுக்கலும் நம்மையே அழித்துவிடும். ஆக, இந்த விடயத்தில் நாம் நமது கருத்தைக் கூறுவதற்கு முன்னர், ஈமானை, நாம் கூறப் போகும் கருத்து, எவ்வகையிலாவது மீறி விடுகிறதா என மிக அவதானமாக உற்று நோக்கிய பின்பே தொடர வேண்டும். அடுத்து, நாம் பேசும் அனைத்தும் குர்ஆன் வழியில் ஏற்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவை உறுதி செய்யப்பட்ட பின்னரே நமது நடவடிக்கைகள்  தொடரப்படலாம்.

அந்த வகையில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமைப் பெற்றோர் நரகவாதிகள் என்றோ, சொர்க்க வாதிகள் என்றோ எண்ண முயன்றோர்,  ஈமானில் தாம் கொண்டுள்ள இறை மகத்துவத்தை மீறுபவர்களாகவே உள்ளதைக் காண முடியும்.  நாம் நல்லதாக நினைப்பவை தீமையாகவும், தீமையாக நினைப்பவை நன்மையாகவும் இருக்கும் என்பதை மூஸா அலை அவர்களின் கற்றறிந்த நபர் ஒருவரின் சந்திப்பின் போது நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்தும். ஆக, இறைவனே மறைவான வற்றையும் அறிந்தவன். யாவுமறிந்தவன்.  நுண்ணறிவாளன். 

அப்படியானால், நாம் இந்த விடயத்தில் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே! ஆம், அப்படியான கேள்விகளின் போது, தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனிலிருந்தே கொடுக்கப்பட வேண்டும் என 4:105 கூறுவதற்கொப்ப, நாம் குர்ஆனிலேயே தீர்வு காண முற்பட வேண்டும். அப்போது இறைவன் நமக்குச் சரியான பாதையைக் காட்டுவான். 

சரி நாம் குர்ஆனில் இது பற்றி ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா என்பதைப் பார்க்கு முன்னர், கேள்வியைப் புரிந்து கொள்ள வேண்டும். நாயகமவர்களின் பெற்றோர் நரகவாதிகளா? சொர்க்கவாதிகளா?  நரகவாதிகள் என்போர் பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறியிருப் பினும், குறிப்பாகச் சொல்லப்பட் டிருப்பது, ஒரு சமூகத்துக்கு தனது தூதரை அனுப்பி அவர்களுக்கு நினைவூட்டாத வரை அச்சமூகத்தினரைத் தான் குற்றம் பிடிக்கமாட்டான் என்ற அவனது கூற்றே!

அந்த வகையில், அரேபியர் மத்தியில், முதன் முதலாக அனுப்பப்பட்ட இறை தூதர் நமது கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல் அவர்களே! அதனால், இஸ்லாம் என்றால் என்ன என்று அவர்களது பெற்றோர் அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், நாயகமவர்களின் ஆறு வயதிற்கு முன்னரே அவ்விருவரும் வபாத்தாகிவிட்டார்கள். நாயகம் கூட தனது 40ஆவது வயதில் குர்ஆனிய வசனங்கள், தனக்கு வஹீயாக  அனுப்பப்பபடும் வரை இஸ்லாத்தை அறிந்திருக்காத போது. அவர்களின் தந்தை, தாய் எப்படி இஸ்லாத்தை அறிந்திருக்க முடியும். அல்லாஹ்வே, நாயகம் முன்பு எதனையும் அறியாதவராக இருந்தார் என்பதைத் தனது திருமறையில் கூறிக் கொண்டிருக்கின்றான். 

அந்த அடிப்படையில், அல்லாஹ் தான் தனது தூதரை அனுப்பி அவர்களுக்கு வழிகாட்டாத நிலையில் இருந்த, இஸ்லாத்தை அல்லாஹ் நபிகளாருக்கு அருளுவதற்கு முன்னர் இறையடி சேர்ந்த, அரேபிய சமூகத்தினரான நபிகளாரின் பெற்றோரைக் குற்றம் பிடிக்கமாட்டான். அதனால், குற்றம் பிடிக்கப்படாதவர்களை நரகத்துக்கு அனுப்புவது என்பது அவனுடைய நடைமுறையல்ல. இந்த அடிப்படை யில் நபிகளாரின் அருமைப் பெற்றோர் நிச்சயம் நரகவாதிகளல்லர் என்பது நிரூபணமாகின்றது.அப்படியாயின் முடிவை நீங்களே தற்போது அறிந்து கொள்ளலாம். அவர்கள் செய்த நன்மை, தீமைகளின் கனத்துக் கேற்ப அவர்களுக்கு வெகுமதியோ, தண்டனையோ வழங்கப்படலாம்!  

நாயகத்தின் பெற்றோர் என்பதனால், தனது நீதியில் அணுவளவு தளர்வையும் அல்லாஹ் ஏற்படுத்திக் கொள்ள மாட்டான்.

கொழும்பு 03
2012.12.23                                                                                         - நிஹா -

No comments: