Sunday, June 16, 2013

ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருமா!

ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருமா!

ஒரு மனிதன் இஸ்லாமியனாக ஆவதற்குஆறு காரியங்களில்  நம்பிக்கை கொள்ள வேண்டும். அவை அனைவரும் அறிந்தவை. ஆயினும்,  விளக்கத் துக்காக: அல்லாஹ்வை, அவனது வானவர்களை, அவனது வேதங்களை, அவனது திருத்தூதர்களை, இறுதிநாளை, விதியை, தீர்ப்பை நம்பிக்கை கொள்ள வேண்டும்

இவ்வாறான விடயங்கள் உண்டு என்பதை அறிவதற்குள்ள ஓரே ஊடகம், அல்லாஹ் நமக்கருளியுள்ள வேதங்களாகும். வேத வெளிப்பாடுகளின் இறுதிக்கால மக்களாக நாம் இருப்பதால், இஸ்லாத்தையே நமக்குரிய வேதமாக அல்லாஹ் தேர்ந்து விட்டதாகக் கூறுகிறான். அதிலேயே நமக்கு விடிவு இருப்பதாகவும், அதல்லாவற்றால் எவ்வித பலனும் ஏற்படப்போவ தில்லை என்பதையும் தெளிவாகவே தெரிவித்துவிட்டான்.  காரணம் இறுதி வேதமாகவும், சம்பூரணமானதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் குர்ஆன் ஆக்கப்பட்டுள்ளதே!

வரிசைக்கிரமத்தில் ஏதாவது ஒன்று முன்னிடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் அல்லாஹ்வுக்கு வானவர்களுக்கு அடுத்தபடியாகக் கூறப்பட்டிப்பினும், அல்லாஹ் குற்றம் பிடிக்காமல் இருக்க பிரார்த்தித்தவனாக, குர்ஆனே முதலில் அறியப்பட வேண்டியதாக உள்ளது. குர்ஆனை அறியாமல், அவனையோ, அவனது வார்த்தைகளை யோ, கட்டளைகளையோ, அறிவுரைகளையோ, அறிவித்தல்களையோ, உண்மைகளையோ, விளக்கங்களையோ, அவனது  சாட்சியங்களையோ பற்றி அறிந்து கொள்ளும் அதிகாரபூர்வ சாதனம் வேறில்லை என்றே கூறலாம். அதுவே யதார்த்தமும் யதார்த்தமானதுங்கூட.

ஆதலின், அனைத்துக்கும் முன்னதாக வேதங்கள் பற்றிய அறிவு பெறப்படுவதே ஓர் உண்மை முஸ்லிமாக காரியங்களைத் தொடக்க தேவைப்படுவது எனக் கூறின் அது மிகையல்ல.   குருட்டு நம்பிக்கை, அறிவில்லாத வணக்கங்கள்தீர்க்கமான ஞானமற்ற பின்பற்றல்கள் போன்றவற்றை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என்பதும் அவனது கூற்றுக்களே! இவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து, அவனது குர்ஆன் மூலம் பெறப்பட வேண்டியவை. அதில்தான் ஒவ்வொன்றைப் பற்றிய உண்மைகளும், விளக்கங்களும் நிறைந்து கிடக்கின்றன. நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர் என நபிகள் பெருமான் முஹம்மது ஸல் அவர் களையே கூறுவதில் இருந்து, அறிவோ, ஞானமோ அவனிடமிருந்தே வர வேண்டியுள்ளது அறியப்படுகின்றதுஅறியப்பட வேண்டிய இவ்வுண்மை களையே குர்ஆனாக்கி அடைவதில் இலகுத் தன்மையை ஏற்படுத்தி விட்டான் கருணையை நம்மேல் தனது கடமையாக்கிக் கொண்டுள்ள வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாஅல்ஹம்துலில்லாஹ்.

மேற்கண்டவை குர்ஆன் அறியப்படுவதன் முக்கியத்துவத்தையும், அது நாம் எவற்றில்?, எப்படி?  ஈமான்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் விளாவாரியாக நமக்குக் கற்றுத் தருகின்றது. ஆக ஈமான் பூர்த்தி நிலை யை அடைவதற்கான அறிவுரைகளைத் தரும் சாதனமாக குர்ஆனே விளங்குவது, ஈமானின் முக்கியத்துவத்தை விளங்கப் போதுமானது.

ஈமான் கொண்டு இஸ்லாம் ஆகிய ஒருவனுக்கு சில கடமைகள் உண்டு. அவை அலலாஹ்வால் நமக்குப் பரிந்துரைக்கப் பட்டவை. அவற்றைச் செய்வதன் மூலம், இஸ்லாத்தின் நோக்கமான அல்லாஹ்வை அறிந்து, அவனது நெருக்கத்தைப் பெற இலகுவாக வழி சமைத்துள்ளான்.

விடயத்துக்கு வருமுன்னர், தற்போது, ஈமான் என்பது,பரிந்துரைக்கப் பட்டவைகள் உண்டு என அறிதலோடு நின்று விடவில்லை என்பதை தெளிவாக்கியுள்ளது. ஆக,குர்ஆனை அறிவதன் மூலமே அல்லாஹ்வின் ஏவல், விலக்கல் உட்பட அனைத்தையும்  அறிந்து அதன்படி  வாழ்வை அமைத்து வெற்றி பெறலாம் என்பது தெளிவாகின்றமையை உங்களில் யாரும் மறுக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். இதனால் ஈமான் என்ற வெற்றிக்கு, குர்ஆனே முன்னிலையாகி நம்மை வழி நடத்துவால் அதன் இன்றியமையாமை வெளிப்படுகின்றது.

விடயத்துக்கு வந்தால், பெரும்பாலான இஸ்லாமியர் ஈமானைப் பதப் பிரயோகமாகவே அறிந்து வைத்துள்ளனர்தவிர, அதற்கு மேல் எந்தளவு தெரிந்துளளனர் என்பதை எடைபோட, குர்ஆன் அவர்கள் மத்தியில் பிடித்துள்ள இடம்மிக நன்றாகவே போதுமானதாக உள்ளது.

இஸ்லாம் ஐந்து தூண்களைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ளது எனக் கூறிக் கொண்டு, கலிமாவைப் பாடம் பண்ணி வைத்துக் கொண்டு, தமது கடமை முடிந்து விட்டதாக நினைந்து, தொழுகையையும் ஸ்டீரியோ டைப் பாக செய்து கொண்டு, நோன்பை ஏதோ பிடிக்க வேண்டும் என்பதாகப் பிடித்துக் கொண்டு, ஸக்காத் என்ற பெயரில் எதனையோ செய்து கொண்டு, பெருமைக்காகவோ, பொழுது போக்குக்காகவோ, தமது வளத்தை, அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்காகவோ ஹஜ்ஜையும், உம்றா வையும் செய்து கொண்டிருக்கும் நிலையே மிக அதிகமாக காணப் படுகின்றது. அத்தோடு இஸ்லாம் நிறைவேறிவி்ட்டதாகவும், தாமே சொர்க் கத்தின் வாரிசுதாரர்களாகவும் நினைத்துக் கொண்டுள்ளமையே தற்போ தைய நிலை என்பது வெறும் கற்பனையல்ல.

இன்னும் கூறுவதாயின், சிலர், சில ஹதீதுகளின் துணையுடன் ஐவேளை தொழுதுவிட்டால் அனைத்தும் கிடைத்து விட்டது போலவும், வேறெதுவும் அறியவோ, செய்யவோ  தேவையில்லை என்பது போலவும் ஒரு மாயை யில் திளைத்துள்ளனர். அதனை மேலும் வலியுறுத்துவதாக சிலர் இயக் கங்களாக தொழ அழைப்பதையே தொழிலாக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் கலிமா பற்றியோ, ‌தொழுகை என்றால் என்ன என்பது பற்றியோ மற்றுமுண்டானவைகள் பற்றியோ,விஷேடமாக ஈமான் என்பது பற்றியோ எவ்வித முயற்சியுமற்று இருக்கின்றனர்.

நாயகம் ஸல் அவர்களுக்கே முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் எனக் கூறியிருப்பதனை எவராவது  உற்று நோக்குவார்களா யின் தமது நிலையை தாம் அறிந்து கொள்வர்.

ஈமானில் கூறப்பட்டவைகளான அல்லாஹ், வானவர், ரசூல்மார், இறுதி நாள், கலா, கத்ர் என்பவை எல்லாம் கூட, நிறைந்த பிரயாசையின் பேரில் அறிந்து கொள்ள வேண்டியவை, ஆனால், மிகக் குறைந்த பிரயாசையுடன் அறிந்து கொள்ளும் வகையில், இலகுவாக, தெளிவாக, விளக்கமாக, சிறுசிறு உதாரணங்களுடன் நமக்காகவே இறக்கி அருளப்பட்ட அல் குர்ஆன், தற்போது நாமறிந்த பாஷைகளில் கிடைத்திருப்பது நாம் செய்த பாக்கியம் என்றே கூறவேண்டும். அதனையும் அறியாமல் நாம் காலம் கடத்துவோமாயின், நிச்சயமாக நாம் நஷ்டவாளிகளாகவே இருப்போம். காரணம், வெற்றிக்கான வழிகளைக் கூறிக் கொண்டிருப்பது குர்ஆன் ஒன்றே!

நமது கண்மணி நாயகம் ஸல் அவர்களை வழி நடத்தியதும் குர்ஆனே! அவர்களுக்கு முதன்முதல்அறிவூட்டப்பட்டதும் குர்ஆனைக் கொண்டே என்பதை நாமறிதல், நம் முயற்சியை இலகு படுத்திவிடும்.

ஈமான் பூர்த்தியாகாத நிலையில் செய்யப்படும் கடமைகள் எந்தளவு அல்லாஹ்வால் ஏற்கப்படும் என்பதனை நாமே உணர்ந்து கொள்வது, நமது ஆன்ம முன்னேற்றத்துக்கு, இறைநெருக்கத்தைப் பெற்றுக் கொள் ளும் வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என்பதை அறிய வைக்கும். அல்லாஹ் தனது அருள் மறையின் 5:35 இல், இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்கு வதற்குரிய வழியைத் தேடிக்  கொள்ளுங்கள்... எனக் கூறியிருப்பதனை அறியவும் கூட குர்ஆனே நமக்கு உதவுகின்றது. ஆதலால், ஈமானற்ற காரியங்கள் இலக்கின்றிச் செய்யப்படுவதாகவே அமையும்.

குர்ஆன் அறியப்படாதததாலேயே தொழுகை என்றால் என்ன என்பதுகூட அறியப்படாத நிலையில் ஆற்றப்படுகின்றது. அப்படியே அனைத்துக் கடமைகளும் விளக்கமில்லாச் செயல்களாக, யாரோ கூறியதை கர்ண பரம்பரையாகச் செய்து கொண்டு இருப்பதாகவே அமைந்துள்ளது. அது இறை எதிர்பார்ப்பை நிறைவு செய்துள்ளதா என்பதும் கேள்வியே! அதனை, “ தொழுகையாளிகளுக்குக் கேடுதான்என்ற அல்லாஹ்வின் சாபம் நன்கு விளங்க வைக்கும்.

தலையங்கம் கூறியபடி, ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்கவல்லதும், புனித மாமறை குர்ஆனே! குர்ஆனை அல்லாஹ் ஈமான் கொள்ளும்படி கூறியிருப்பதன் கருத்து, குர்ஆன் என்ற ஒன்று உண்டு என்பதாக நம்பிக்கை வைப்பதல்ல. மாறாக அக்குர்ஆனில் உள்ளவைகளை ஐயந்திரிபற அறிந்து நமது வழியைக் கண்டறிவதே!

எப்போது குர்ஆன் அறியப்படாமல். விடப்படுமோ அப்போது நாம் ஈமானை விட்டும் சறுகிய நிலையை அடைகிறோம். அப்போது நமது கடமைகள் கூட ஈமானற்ற நிலையில் செய்தவையாக மாற்றம் பெறுகின்றன. அல்லாஹ்வின் கட்டளையான குர்ஆனை அறியுங்கள் என்பதும் புறக் கணிப்புக்கு உள்ளாகிவிடுவதுடன், அதுவே நிராகரிப்பாகவும் மாறி விடுகின்றது. மேலும், மனோஇச்சை என்ற பண்பை அடைந்து ஷிர்க் ஆகவும் மாறிவிடும் அபாயமுமுள்ளதே!

குர்ஆனிய அறிவு நம்மிடம் இல்லை என்பதன் சுருக்கமான கருத்து, நம்மி டம் ஈமானும் இல்லை என்பதே! அப்படியல்ல உண்டு என யாரும் கூறு வார்களாயின், அது குருட்டு நம்பிக்கையே! இது ஏற்கப்பட்டதல்ல என்பது டன் மலட்டுத் தன்மையுடையதாகவே இருக்கும் என்பதுவுமே  உண்மை!

அல்லாஹ்வின் நாட்டமின்றேல் நமக்கு சரியான வழி கிடைக்கப் போவ தில்லை  என்பதால் அவனிடமே அழுது மன்றாடி அவனருளைப் பெற முயற்சிப்போமாக! அல்லாஹ் நம்மனைவரையும் முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வானாக! நமது ஈமானைப் பலப்படுத்துவானாக! அம் முயற்சியில் நம்மை ஈடுபடும் சிந்தனையை, ஊக்கத்தை, பலத்தைத் தருவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!

- நிஹா -

No comments: