Wednesday, June 19, 2013

நாயகத்தின் தியாகம் வையகத்தில் இஸ்லாம்

நாயகத்தின் தியாகம் வையகத்தில் இஸ்லாம்வையகம் தழைக்க உலக மையத்திலே உதித்த உத்தமர் நாயகத்திருமேனி நபிகள் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முன்னர்  வல்ல நாயன் 124,000 நபிமார்களையும், தூதர்களை யும் அவர்கள் மூலம் புனித மார்க்கங்களையும் அனுப்பி அறியாமையென்ற இருளில் மூழ்கி தம்மனோ இச்சைகளைத் தெய்வமாக்கி அனாச்சாரங்களை, மாச்சாரியங்களை வாழ்க்கையாகக் கொண்டிருந்த மக்களை நல்வழிப்படுத்து மாறு அவ்வப்போது அவர்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தான். 

ஆதம் (அலை) அவர்கள் முதல் ஈஸா (அலை) அவர்கள் வரை மார்க்கங் களைக் கொடுத்தபோது, அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு முன் வந்த வேத வசனங்களை மெய்ப்படுத்தியே வந்துள்ளதாக அவ்வவ் வேதங்களிலும் தன் இறுதி மாமறையின் பலஇடங்களிலும் கூறியிருப்பது குறித்துணர வேண்டியதே. அந்த அடிப்படையில் வந்த அனைத்துத் தூதர்களும் இறைவன் தமக்குத் தந்த மார்க்கச் சட்டங்களை வெளிப்படுத்தினர். அதனால் அவர்கள் பலத்த எதிர்ப்புக்கு முகம் கொடுத்திருந்தனர். தூஷிக்கப்பட்டிருந் தனர், துன்புறுத்தப்பட்டிருந்தனர், நிராகரிக்கப்பட்டிருந்தனர். சிலர் கொல்லப் பட்டிருந்தனர்.  தூதர்கள் அனைவரதும் மார்க்க போதனைகளின் அடிநாதமாக ஓரே இறைக் கொள்கையே இருந்து வந்துள்ளமையை உற்று நோக்கும் யாரும் சற்றும் ஐயமின்றி அறிந்து கொள்ளலாம். கல்லை, மண்ணை, நெருப்பைக்கூட அவர்கள் தமது தெய்வமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதைக் கூறாமலே யாரும் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் அன்றைய போதனைகள் யாவும் அனைத்து தூதர்களாலும் சித்தாந்த ரீதியாகவே வெளிப்படுத்தப்பட்டன. மேலும் அந்தத் தூதர்கள் தமது போதனையின் போது  மக்களைக் கவரும் உத்திகளாக, தாம்  இறை வேதத்தைப் பரப்ப இறைவனால்  அனுப்பப்பட்டவர்களே என்பதை வெளிப்படுத்துவான் வேண்டியும், அதன் மூலம்  தமது போதனைகளின் மேன்மையை அறிய வைத்து அம்மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சியாக வும் பல்வேறு அற்புதங்களை இறையருளால்  நடத்தியுள்ளனர். அப்படியான பல சம்பவங்கள்  குர்ஆனில் பல இடங்களில் பதிவாகியுள்ளன. 

இந்த வழியில் அந்தகார அரேபியாவில் வந்துதித்த சிந்தனைச் சிற்பியான இறுதித் தூதர் எந்த அற்புதங்களையும் செய்து காட்டி மக்களை நல்வழிப் படுத்த முயலவில்லை. மாறாக புதிய ஓர் யுக்தியாக, போதனையைச் சாதனப்படுத்தும் சிறப்பு முறை அவர்களுக்கு இறைவனால் அறிமுகப்படுத் தப்பட்டது. அதனாலேயே அண்ணாரை இறைவனே தன் மாமறையின் பல இடங்களில் அழகிய முன்மாதிரியெனக் குறிப்பிடுகிறான். அன்று மக்கா நிர்வாகத்தை நடத்தும் பெருமைமிக்க உயர் கோத்திரமான ஹாஷிம் குடும் பத்தைச் சேர்ந்தவராயிருந்தார் முஹம்மது அவர்கள்.  

ஆக முன்மாதிரிகள் பற்றிய மதிப்பீட்டின் போது ஒருவர் எப்போதும் ஓர் விடயத்தை எப்படியெல்லாம் கையாளலாம் என்பதை விளக்கும் தோரணை யில் செயற்படுபவராக இருப்பார் என்பது கவனத்துக்கு எடுக்கப்படுவதோடு அதுவே மிகவும் முன்னுரிமை பெறும்   பண்பைக் காப்பது அவசியம். அச்சந் தர்ப்பத்தில் அம்முன்மாதிரியாகத் திகழ்பவர் தனது தனியாள் ஆளுமை யிலிருந்து வேறொரு பாத்திரத்தை ஏற்கிறார் என்பது உணரப்படாத வரை மதிப்பீடுகள் எதிர்மாறான தன்மையைக் கொண்டதாகக் காணப்படும். உண்மைகள் வெளிப்படா. அது அப்பாத்திரத்தின் கண்ணியத்துக்குக் களங்கம் கற்பிக்காததை மட்டுமல்ல அப்பாத்திரத்தை ஏற்றவரின் நடத்தையின் மகத்துவத்தை, சீர்மையை, உயர்பண்பை, தியாகத்தை உணர உதவும். 

இதன்படி, அனைத்துத் தூதர்களாலும் சித்தாந்த ரீதியில் வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறைகள் யாவையும் தாமும் வெறுமனே மெய்ப்படுத்திப் போதித்துவிட்டுச் செல்லாது தம்வாழ்வின் இறுதிக் காலக் கட்டங்களிலும் கூட அப்போதனைகளைத் தாமே நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டார். அப்புனித மார்க்கம் அரசன் முதல் ஆண்டிவரை, சிறுவர் முதல் பெரியோர் வரை, ஆண்- பெண், உயர்வு- தாழ்வு, பெரியோர்- சிறியோர்,மேலோர்- கீழோர், படித்தோர் - பாமரர் என்ற எந்த பேதமுமின்றி எவரும் நடைமுறைப்படுத்தி வாழ்க்கையைச் சீராக்கி இம்மையிலும் மறுமையிலும் வெற்றிகாண, இறை நெருக்கத்தைப்பெற வழிவகுக்கும் வற்றாத கருவூலமே என்பதை நிரூபித்துச் சென்றுள்ளார்கள். அதற்காக அம்மாமனிதர் தம்வாழ்க்கையையே முற்றுமுழுதாக அர்ப்பணித்துள்ளனர் என்பதை அறியும்போது நெஞ்சு நெகிழ்கின்றது. 

உலக மக்கள் உய்யப் பல்வேறு காலங்களில் பெருந்தகைகள் தோன்றிச் சீரிய பல தத்துவங்களை, வாழ்க்கை நெறிகளை அள்ளிவீசிச் சென்றுள்ளனர் என்றாலும், அவர்கள் எவரும் தாம் சொல்லிய  அனைத்தையும் தம்வாழ் நாளிலேயே நடைமுறைப்படுத்திச் செல்லும் நடைமுறை அன்றிருக்க வில்லை. முதல் மனிதர்ஆதம் (அலை) அவர்களால் ஓரே இறைவனைத் தொழுவதற்காகக் கட்டப்பட்டு, நூஹ் நபி (அலை) அவர்கள் கால ஜலப்பிரள யத்தால் அள்ளுண்டு போய், இபுறாஹிம் (அலை) அவர்களாலும் அவர் மகனாராலும்  மீண்டும் புனரமைக்கப்பட்டதே ஹறம்ஷரீப்.  இப்புனித ஹறம் ஷரீபாகிய கஹ்பாவில், தினமொரு தெய்வத்தை, ஆண்களும் பெண்களும் அம்மணமாக வலம் வந்து தம்பக்தியைக் காட்டிக்கொண்டிருந்த வேளையே நம்தூதர் நபிகள் நாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தோற்றம் பெற்றனர். 

பிறக்கும் போதே தந்தையை இழந்து, பிறந்து ஆறே வருடங்களில் தாயையு மிழந்து, அனாதையாகி, பாட்டனாரினாலும் பெரிய தந்தையாரினாலும் வளர்க்கப்பட்டாலும்கூட சிறந்த பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன் றவை இயற்கையாகவே அமைந்தவராகக் காணப்பட்டார். அவர்தம் உயர் குணமே அவருக்கு 'அல்-அமீன்' நம்பிக்கைக்குரியவர் என்ற உயர் அஸ்தஸ் தை அந்த அராபியர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.புனித மாமறையில் இறைவனே நீர் உயர் குணத்தின் உன்னத நிலையிருக்கிறீர் என்று கூறுவதி லிருந்து அன்னாரின் உயர் குணம் உறுதிப்படுத்தப்படுகின்றது. 

அவர் முஹம்மது என்ற தனித்தகைமை கொண்ட மிக்காராயினும், மக்கா நகரைத் துறக்க வைத்தது, அவர் இறைவெளிப்பாட்டை வெளிப்படுத்தியது மட்டுமல்ல அதனையே நடைமுறைப்படுத்த முயன்றதே. அவர் போதித் ததைச் சாதிக்க முயன்றமையினால், அவரது போதனைகளைக் கேட்டோர் தாமும் அவ்வாறே தம் நடத்தையை மாற்றிக்கொண்டனர் என்ற விடயமே அக்கால அரேபியருக்கு தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவமானது. 

நாயகத்தைக் கொல்வதற்காக வாளேந்திப் புறப்பட்ட உமர் ஹத்தாப் அவர்கள் தன்னையே மாற்றிக் கொண்டது மட்டுமன்றி தம் வாழ்வை இஸ்லாத்துக் காகவே அர்ப்பணித்துக் கொண்டார் என்றால் நாயகத்தின் போதனை களினதும், சாதனைகளினதும் தாக்கம் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கும். 

நீதிக்கு உதாரணமாகவும், நேர்மையின் சிகரமாகவும், சிறந்த அறிஞராகவும், துணிந்த வீரராகவுமிருந்த உமர் நாயகத்தின் ஆணையை அரங்கேற்றும் அற்புத மனிதராக மாறி விட்டார். அதற்கு மேல் தூதருக்குப் பின் முதல் கலீபாவான அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மறைவுக்குப்பின் அவ்விரு வரது இடத்தையும் இரண்டாம் கலீபாவாகப் பதவியேற்றதன் மூலம் நிரவினார் என்றால் நாயக வாழ்வின் சாயலை அவரிலே அறிய முடிகிறது. 

இம்மாற்றங்களாலேயே, போற்றிப் புகழ்ந்த அந்த சீராளர் முஹம்மதை, அதே அராபியர் தூற்றித் துன்புறுத்தினர், பழித்து இகழ்ந்தனர், வன்செயலைக் கட்ட விழ்த்து விட்டனர். அண்ணலார் மட்டும் தம் போக்கில் சிறு தளர்வையாவது செய்ய ஒத்துக் கொண்டிருந்தால் மக்காவுக்கே அண்ணலாரை மன்னராக்கி இருப்பார்கள். தம் செல்வத்தை அவர்தாம் காலடியில் கொட்டிக் குவித்திருப் பார்கள். உயர்குடியில் பிறந்த அனைத்து அழகுச் சிலைகளையும் அன்னா ருக்கு அர்ப்பணம் செய்திருப்பார்கள். 

அன்னார் சில சமயம் முஹம்மதாகவே தம்வாழ்வைக் கடத்தியிருந்தால் அவ்வாழ்வை ஏற்றிருப்பார்களா என்பதை யாமறியோம். இதனை இறைவன் தன்திருமறையில,; நான் உம்மனதைத் திடப்படுத்தி இராவிட்டால் நீர் நிராகரிப்பாளர்களின் வலையில் வீழ்ந்திருப்பீர்கள் என்றவாறு கூறியுள்ளான். ஆனால் அவர்கள் இறைதூதராக, இறை செய்தியை ஏற்று அதை அப்படியே நடைமுறைப்படுத்தும் செயல்வீரராக, அல்லாஹ்வே சிலாகித்த அழகிய முன் மாதிரியாகவே வாழ்ந்தார்கள். அதனாலேயே ஓர்போழ்து அன்னாரின் இளம் மனைவியான மாதரசி ஆயிஷா நாயகி அவர்களிடம் அவர்தம் கணவர் பற்றி வினவியபோது அவர்கள் கூறிய பதில் நமது கட்டுரையின் தலைப்புக்கு அணிசேர்க்கிறது. அண்ணலார் வாழ்வு அவர்கள் போதித்த புனித குர்ஆனா கவே  இருந்தது என்பதே அந்த பதில். 

ஆம் அன்னார் தாம் ஏற்ற இறை தூதர் என்ற பாத்திரமாகவே மாறியிருந் தார்கள். அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வோ, எண்ணமோ, ஆசைகளோ, விருப்பங்களோ இருக்கவில்லை. குர் ஆன் கூறிய அனைத்துக் குணாதிசயங் களையும் உள்ளடக்கிய ஓர் தனியாள் -ஓரங்க நாடகம் போன்று- நடத்தை யாகவே இருந்தது. ஓர் தனியாள் 23 வருடங்களாகப் பல்வேறு பாத்திரங் களைத் தம் உண்மை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திறமையோர் புறமிருக்க அதற்காக அவர்கள் செய்த தியாகத்தை நினைக்கும் போது அதை வடிக்க வார்த்தைகள் உண்மையாகவே எனக்குக் கிடைக்க வில்லை என்பதுவே நிதர்சனம்.

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என இறைவனே தன் திருமறையில் கூறியுள்ளபடியும், இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து வேதங்களையும் மெய்ப்படுத்த வேண்டியிருந்ததாலும், தான் செய்யும் ஆகக் குறைந்த ஓர் செயல்கூட ஓர் முன்னுதாரணமாக உலகோர் மத்தியில் திகழ்ந்துவிடும் என்பதனால் அனைத்து நடவடிக்கைகளையும், தமதோ அன்றிப் பிறரதோ விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற் சென்றே உள்ளதை உள்ளபடி, உண்மையை உண்மையாக, அது எந்தளவு தன்னில் தனது முஹம்மது என்ற குணாதிசயத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்பன வற்றை எல்லாம் சற்றும் நினையாது அப்படியே வெளிப்படுத்திச் செய்து காட்டியிருந்தார் என்றால் அப்பெருந்தகை மனித இனத்தை உய்விப்பதற் காகச் செய்த மகத்தான தியாகம் மணம்  வீசுகிறது. அதனால் இன்று வையகம் சிறக்க வந்த இஸ்லாம் மெய்யறிவைத் தருகிறது. அதனால் நம் நெஞ்சு நெகிழ்கின்றது. விளக்கத்துக்காகச் சில. 

நாயகத்தின் மணவாழ்க்கை பற்றி அறியாதோர் யாருமிரார். அரேபியாவின் அனைத்துப் பெண்டிராலும் அன்று விரும்பப்பட்ட உத்தமரும், உயர் குடும்பத் தவரும், அழகருமான முஹம்மதை மணமுடிக்கப் பெண்கள் பலர் தவங் கிடந்தும், அந்த பெருந்தகையும் இளவலுமான அவர் இரண்டு தடவை மண முடித்துக் கணவனை  இழந்த நாற்பது வயதைத் தாண்டிய விதவையைத் தான், அகவை இருபத்தைந்தைத் தாண்டாத நிலையில் மணமுடித்திருந்தார் என்பது யாரும் நினைத்துப் பார்க்கவும் முடியாத விடயம். அது மட்டுமல்ல அதே விதவை மனைவியுடன் அம்மனைவி மரணிக்கும் வரை அதாவது தமது ஐம்பது வயது வரை வேறு திருமணம் முடிக்காமல் சீராக வாழ்ந்துள் ளார் என்றால் அவர் முஹம்மது என்ற சாதாரண மனிதனாகச் சிறப்பாக வாழ்ந்த சிறப்பு வெளிப்படுகின்றது. 

அன்னார் அதன் பின்னர் மணமுடித்த அனைவரும் விதவைகளாகவோ, நிராகரிப்புக் காரணமாக மணபந்தம் முறிந்தவர்களாகவோ, போர்க் கைதிகளா கவோதான் இருந்துள்ளனர். இவர்களுக்குத் தகுந்த பாதுகாப்போ அன்றி அந்தஸ்தோ கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்று நபிகளாருக்கு இருந்தது. தமது போனையின் போது இன்னொருவரை  இஸ்லாத்தை ஏற்பதாலோ, விதவையானதாலோ, மணபந்தம் முறிந்ததனாலோ, கைதியாக்கப்பட்ட தனாலோ அவர்கள் அநீதிக்கு ஆளாகவோ, நிந்தனைக்காளாகவோ, இழி நிலைக்குத் தள்ளப்படவோ, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவராகவோ இருக்கக் கூடாதென்ற ஓரே நோக்கிலும், அப்படியான பெண்கள் நபிகளாராலேயே மணமுடிக்கப்படுதல் அவ்வபலைகளுக்கு உயர் கௌரவத்தைத் தந்து மார்க்கத்தைத் தழுவும் மனநிலையை உண்டாக்கும் என்பதாலும் அவர்கள் அந்த திருமணங்களைச் செய்தனர். 

அடுத்ததாக ஒன்பதே வயது நிரம்பிய ஓர் சிறுமியை – ஆயிஷா நாயகி- மணமுடித்தார்கள். இச்செயல் பல நிராகரிப்பாளர்களுக்கு வாய்க்கு அவலாக மாறியிருப்பது அவர்களது குறுகிய நோக்கையும், அறியாமையையும், அவதூறு கூறும் அற்ப குணத்தையும் காட்டுகிறது. நான் ஏலவே கூறியதுபோல இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்பதால், இயற்கையில் ஓர் ஆணோ பெண்ணோ தமது ஒன்பது தொடக்கம் பதினான்கு வயதுகளில் பால்ய பருவத்தை அடைந்து சிருஷ்டிப்பிற்கு ஆயத்தமாகி விடுகின்றனர் என்பதை முற்றுமணர்ந்த, காருண்யவானான இறைவன் அறிந்தே அப்படியான ஓர் திருணமணங்கூடச் செய்து கொள்ளலாம் என்பதை உலகோருக்கு உணர்த்த,கங்கணம் கட்டியே தம்தூதர் மூலம் அவ்வுண்மையை நடைமுறைப்படுத்திக் காட்டினான். 

இவை அனைத்தும் நபிகளாரின் நபித்துவப்பணி தொடங்கிய இறுதிப் பதின் மூன்று வருடத்துள் நடந்தேறியவை. இம்மனைவிமார்கள் யாருக்குமே குழந்தைகள் இருக்கவில்லை என்பது உணரப்பட வேண்டியது. முதல் மனைவிக்குக் கிடைத்த ஆண் மகவும்கூட மரணத்தைத் தழுவிக் கொண்டது. இச்செய்திகளுள் மிக ஆழமான உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன.  இவை களை இன்ஷா அல்லாஹ் இன்னோர் சந்தர்ப்பத்தில் காண்போம். 

ஆக இறைவனின் நன்னோக்கு திருமண பந்தத்துக்கான காலம் பால்ய வயதான ஏறத்தாழ ஒன்பதிலேயே தொடங்கி விடுகிறது என்ற பேருண்மை யை வெளிப்படுத்துவதே தவிர வேறு காரணங்கள் இருக்கவில்லை என்பதை உணராதோர் அறிவற்றோராகவே இருக்க முடியும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை  என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் பல போர்முனைகளை நேர்முகமாகவே சந்தித்திருந்ததும், பலவற்றை நடத்த படையனுப்பிய நிலையிலும் அதே உண்மைகளே காணப்படுகின்றன. பாதிக்கப்படுபவர் போரிடுவது, தற்காப்புக் காகப் போரிடுவது, நியாயத்தை நிலைநிறுத்தப் போரிடுவது, மக்கள் நன்மை கருதி உண்மைகளை வெளிப்படுத்த போரிடுவது போன்றவையே அன்னாரது நேர்முக, மறைமுகப் போருக்கான காரணிகளாகும். தவிர நாடு பிடிப்பதோ, கொள்ளையடிப்பதோ, நாசவேலைகளில் ஈடுபடுவதோ, போருக்கான காரணங்களாக இருக்கவில்லை. 

நாட்டைவிட்டு ஓடி மதினாமா நகரில் தஞ்சமாகிப் பலவருடங்கள் பல் வேறு போர்களைச் சந்தித்து வென்று, தோற்று இஸ்லாம் உலகளாவிய மார்க்க மான பின்னர், மிகப் பலம் பொருந்திய சக்தியாக மாறிய பின்னர் தமது தாய்நாடான, புனித கஃபா அமைந்திருந்த அப்புண்ணிய பூமியான மக்கமா நகருக்குள் நுழையும்போது ஒரு துளிக் குருதியைத்தானும் சிந்தாதே அதனைக் கைப்பற்றினர் என்றால் அது உலக அதிசயமாகக் கருதப்பட வேண்டியது மட்டுமல்ல நபிகள் நாதரின் மனப்பக்குவத்தை மனிதத் தன்மையையும், முன்மாதிரியையும் அங்கு காணமுடிகிறது. அவர்கள் அன்று நினைத்திருந்தால் தம்பகையாளிகளை, நிராகரிப்பாளர்களைத் துவம்சம் செய்திருக்க முடியும். ஆனால் அனைவரையும் அனைத்தார்கள், மார்க்கத்தில் பவந்தமில்லை எனப் பகன்றார்கள். இவையெல்லாம் உலகமாந்தருக்கு முன்னுதாரணமாகக் காட்டப்பட்டதே. 

அவர்களது அனைத்துச் செயல்களும் உலகோருக்கு முன்மாதிரியே அன்றி வேறில்லை. வாழ்ந்து காட்டி மற்றையோரை வாழும்படி வலியுறுத்திய வள்ளலே நாயகத் திருமேனி அப்துல்லா இப்னு முகம்மது. பேச்சு வேறு செயல் வேறு என்ற தத்துவத்தை தகர்த்த நபிகளார் பேசியதையே செய்தார்கள் செய்வதையே பேசினார்கள். இதில் அவர்களது சுயவிருப்பு சிறிதும் இடம்பெறவில்லை. 

எதையெல்லாம் இறைவன் மக்களுக்குப் போதிக்கும்படி கூறினானோ அவற்றையெல்லாம் நபிகளார் முழுமையாக ஏற்று, தாம் ஏற்ற பாத்திரத்தை நாயகம் (ஸல்) எந்த சலனமுமின்றி செய்துகாட்டினார்கள். இவ்வகையில் இறை ஆணைப்படி உலகமாந்தருக்காக வாழ்ந்து காட்டிய குர்ஆன் வாழ்க்கையில் அன்னாரது சீரிய தியாகத்தையே காண முடிகிறது. அவர்தம் வாழ்வின் சிறப்புக்கான பெருமை இறைவனின் அருள் மறையைச் சாரும். இன்று நாம் காணும் தீனுல் இஸ்லாம் அன்று நாயகம் (ஸல்) அவர்களது தியாக வாழ்வே.

- நிஹா -

No comments: