Monday, June 10, 2013

உபகாரத்திற்குப் பிரதியுபகாரமா? கூடவே கூடாது!

குர்ஆனின் பார்வையில் ... 

உபகாரத்திற்குப் பிரதியுபகாரமா? கூடவே கூடாது!


இன்று உலகளாவிய ரீதியில், மக்கள் மத்தியில் நன்றி செலுத்தல், நன்றி மறத்தல், நன்றி கொல்லல் போன்ற பல சொற் பிரயோகங்கள் சர்வசாதா ரணமாக உதவிகளோடு, அன்பளிப்புகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டுப் பேசப்படுவதை அனைவரும் அறிவோம்.

சிறு உதவியைச்  செய்தவர் தான் செய்த உதவியை, சம்பந்தப்பட்டவர் நினைவில் வைத்திருக்க வேண்டும், அதற்காக அவர் என்றும் கடமைப் பட்டவராக இருக்க வேண்டும், சந்தர்ப்பம் ஏற்படும் போது அவர் தனக்கு உதவுபவராகவோ, அன்றி தனக்கு ஒத்தாசை வழங்குபவராகவோ, இக்கட்டான நிலைகளில் தனக்காகப் பேசுபவராகவோ இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்.

உலகமும் அதுவே சரியென்ற விதமாகப் பார்க்கின்றது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் சொல்லுந்தரமன்று. இந்நிலை எது வரை போயிருக்கிற தென்றால், தானாக முன்வந்து நமது பிரச்சினைகளில் உதவி செய்ததில், விஷேட  வைபவங்களில் பரிசுகள் போன்று அன்பளிப்புச் செய்ததில் கூட அவை பின்னர் தமக்கு திருப்பித்தரப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கப் படும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றது.

அத்தோடு அப்படியான உதவியை, அன்பளிப்பைப் பெற்றவர்கள் கூட, சந்தர்ப்பம் வரும் போது தாம் அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், அதற்கான கைமாறு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். அப்படிக் கொடுக்காது விடுவது மட்டரகமான செயல், அல்லது நன்றி மறத்தல் என்றவாறெல்லாம் எண்ணப்பட்டுக் கொண்டுள்ளது. அதற்காதாரமாக, “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவத்தைப் பயன்படுத்துகின்றனர்.

முஸ்லிம்கள் குர்ஆனின் அடிப்படையில் வாழ்வதற்கான உண்மை நிலையை உணர வைக்குமாயின் அது அனைத்துச் சேவைகளிலும் உயர்வானதாகவும்> மனிதன் தான் பிறந்த நோக்கை நிறைவு செய்வ தாகவும்> இறை கடாட்சத்தையும்> இறை திருப்தியையும் பெற்றுக் கொள்ள உதவுதாகவும் இருக்கும்

நீங்கள் தனித்தோ> இருவரிருவராகவே எழுந்து நின்று சூரா செய்யுங் கள் என்ற இறை விருப்பத்தை நிறைவு செய்வதுடன்> ஆன்ம முன்னேற் றத்தையும் வழங்கும்.

உதாரணமாக, தனது திருமணத்தின் போது, தனக்களிக்கப்பட்ட வெகு மதிகளுக்குக் கைமாறாக அதேயளவு, அல்லது ஆகக்குறைந்தது அவர் கள் தந்த அளவிலாது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படும் வேதனை, நரக வேதனையை அனுபவிப்பது போல் எண்ணப்படுகின்றது. அப்படிக் கொடுக்க முடியாதவர்கள் சமூகத்தில் தரக்குறைவானவர்களாக, நன்றி கெட்டவர்களாகக் கூட மற்றோரால் நினைக்கப்படுகின்றனர். இந்நிலை பாரதூரமான தீமைகளுக்குக் கூட வித்திட்டு விடுகின்றது. இதனை முற்றுமறிந்த அல்லாஹ், உபகாரத் துக்குக் கூட பிரதி உபகாரம் செய்யத் தேவையில்லை என்ற சட்டத் தின் மூலம் அதனைத் தடை செய்ததுடன், அவற்றுக்கான பலனைக் கொடுப்பதை தனது கடனாக ஆக்கிக் கொண்டுள்ளமை கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. அல்குர்ஆன் 92:19 ‘எவருக்கும் உபகாரத்திற் காக, தம் புறத்திலிருந்து பிரதி உபகாரம் செய்ய வேண்டியதில்லை.

இவ்வாறான நிலையை ஏற்படுத்தியமைக்கான காரணம் அறிய முற்படும் போது, ஒன்று மக்கள் குர்ஆனை அறிந்திருக்கவில்லை என்பதும், அடுத்து நன்றி பற்றிப் பிழையான விளக்கங்களைக் கொண்டிருத்தலுமாகும் என்றே தெரிகின்றது.

முதற் காரணம், விளக்கம் தேவையற்றது. குர்ஆனிய கட்டளை மிகத் தெளிவானது.  இரண்டாவது நன்றி என்றால் என்னவென்றறியாது இருப்பது. இதனை விளக்கவும் செய்யலாம் ஆயினும், இதுவும், குர்ஆனிய அறிவு கிடைக்காமையினால் ஏற்பட்டதாகவும் கொள்ள முடியும். அதற்கான வசனம் பின்வருமாறு கூறுகின்றது. 34:13 “…நன்றி செலுத்துவதற்காகச் செயல்களைச் செய்து வாருங்கள். என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துவோர் குறைவானவர்களே! இவ்வசனம் மிகத் தெளிவாக நன்றி என்பது செயற்பாடு என்பதை வலியுறுத்து கிறது. அது திருப்பிக் கொடுக்கும் செயற்பாடல்ல, நமக்குத் தரப் பட்டதை அதனால் பெறப்படவுள்ள பயனை அனுபவிப்பது. அல்லது அதனைச் சரியாகப் பயன்படுத்துவது. உதாரணமாக, நமக்குக் கொடுக் கப்பட்டது தேநீராயின், அதனைச் சுவைத்து அருந்துவது. அன்றி அது ஒரு ஷேர்ட் ஆயின் அதனை உரிய முறையில் அணிந்து, அது தரப் பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவான் வேண்டி, அதன் உச்ச பயன் பாட்டைப் பெறுவது. அல்லது நமது உடலாயின் அதனால் பெறப்பட வேண்டிய அத்தனை நன்மைகளையும் அவ்வவற்றுக்குரிய செயற் பாட்டின் மூலம் அடைந்து கொள்வது. இப்போது நாம் நன்றி செலுத்துகிறோமா என்பதை அளவிட்டுக் கொள்ளலாம் அல்லவா!

விடயத்திற்குத் திரும்புவோமாயின், ஒருவர் நமக்குச் செய்த உபகாரத் துக்கு பிரதி உபகாரம் என ஒன்று செலுத்தப்பட வேண்டிய தில்லை. அது இறைவனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. நமது பங்கு என்பது நமக்கு அளிக்கப்பட்ட உபகாரத்தை அது என்ன நோக்கிற்காகச் செய்யப்பட்டு இருந்ததோ அந்த சீரிய நோக்கை நிறைவு படுத்துவதாகவே இருக்க வேண்டும்.ஆக இங்கு நன்றி என்பது, நமக்கு உபகாரம் செய்த மனிதனின் மனதை நமது செயற்பாடுகளின் மூலம் நிறைவு செய்வது. தந்ததைத் திருப்பிக்கொடுப்பதற்கல்ல என்பதே! மேலும்> உபகாரம் செய்தவர் அல்லாஹ்வின் திருப்பொருத் தத்தை நாடிச் செய்வதால்> அவர் உபகாரம்செய்தவரிடம் இருந்து எவ்வகையான பிரதி பலனையும் எதிர்பார்க்க மாட்டார். எதிர்பார்க்க வும் கூடாது. அப்படி எதிர்பார்ப்பது>  92:20 இல் கூறிய> மிக்க மேலான தம்முடைய ரப்பின் திருப்பொருத்தத்தைத் தேடியே அன்றி. என்ற அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து அவர் செய்த உபகாரத்தின் பலனை இல்லா தொழித்து விடும்.

இந்த வரிசையில் வருவதே இன்னொரு வசனம். அது  74:6 அதிகமான நன்மைகளை எதிர்பார்த்து உபகாரம் செய்யாதீர். இந்த வசனம் உதவி செய்யப்பட்டவரின் கடமைக்கு குறிப்பிட்ட வரையறையைக் கொடுக் கின்றது. ஆக உதவி செய்பவருக்கு உரிய நன்மை அவர் செய்த உதவி யின் அளவைக் கொண்டு இறைவனால் தீர்மானிக்கப்படுதலால், அவர் மேலதிகமான நன்மைகளை உதவி செய்யப்பட்டவரிடம் இருந்து எதிர் பார்க்கக் கூடாது என்பதனை வெளிப்படுத்துகின்றது. இன்னொரு மறை முகக் காரணம், அங்கு செய்யப்பட்ட உதவி, கொடுக்கல் வாங்கல் என் பதற்கு மேலாக, பேராசை,அபகரிப்பு போன்றவைகளை உள்ளரங்கமா கக் கொண்டு விடுவதால், அது இறைவனிடமிருந்து கிடைக்க வேண் டிய பிரதியுபகாரத்தை இல்லாமற் செய்து விடுகின்றது என்பது காரண மாகலாம். இன்னும் கூறின், அதிகமான நன்மைகளை எதிர் பார்த்துச் செய்யப்படும் உதவிகளே பிரச்சினைகளுக்குத் தூபமிடுகின்றன. அத் தோடு உதவி என்ற சிறப்பு ஏற்பாட்டைக் கொச்சைப்படுத்துகின்றது.

76:2 நிச்சயமாக  நாம் அவனுக்கு வழியை விளக்கினோம். ஆகவே, நன்றி செலுத்துபவன் ஆகவும் இருக்கலாம்.அல்லது நன்றி கெட்ட வனாகவும் இருக்கலாம். இந்த வசனமும் நன்றி பற்றிய விளக்கத் தைத் தருவது. வழியை ஒருவருக்கு விளக்குவதன் நோக்கம், விளக் கப்பட்ட வழியில், விளக்கம் பெறுபவர் செல்வதே தவிர, அதற்கு நன்றியாக எதனையும் செய்வதோ, அன்றி நன்றி கூறுவதோ, கைமாறு செய்வதோ இல்லை என்பதை சிறு குழந்தைகூட நன்கு விளங்கிக் கொள்ளும். இதுவும், உபகாரத்துக்குப் பிரதி உபகாரம் செய்யப்பட வேண்டியதில்லை. அவ்வாறு செய்யப்படவும் முடியாது என்பதை தெரியத் தருகிறது.

உதவி என்பது கொடுக்கல் வாங்கல் அல்ல. மாறாக, ஒருவரது தேவையில், அல்லது வேலையில் போன்ற எதிலாவது நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்து அவரது காரியத்தை இலகுபடுத்துவது. இதுவே அல்லாஹ்வின் பண்பான இலகுவானதில் எளிமையாக்குதல் என்ற உதவி

இன்னும் 76:8,9 ஆகிய வசனங்கள், உதவிக்கு பிரதியுபகாரம் எதிர்பார்க் கப்பட முடியாது என்பதை விளக்கும். 8.இன்னும் அவனின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அநாதைக்கும், சிறைப்பட்டோருக் கும் உணவளிப்பார்கள். 9.உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல் லாம் அல்லாஹ்வின் திருமுகத்திற்காகத்தான். உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றி செலுத்துதலையும் நாங்கள் நாட வில்லை.

ஏழைக்கும்,அநாதைக்கும்,சிறைப்பட்டோருக்கும் உணவளிக்கும் ஒருவர் அவர்களிடம் இருந்து எதைத்தான் எதிர்பார்க்க முடியும். உணவளித்த இந்த உபகாரம், அல்லாஹ்வுக்காகச் செய்யப்படுவது என்பதை விளக்கு கின்றது. இது நமது முன்னைய பிரதியுபகாரம் செய்யப்பட வேண்டியதி ல்லை என்ற கருத்துக்கு வலு சேர்ப்பது.

உபகாரத்திற்கு பிரதி உபகாரம் எதிர்பார்க்காத பண்பு மக்களில் மேலோங்குமாயின் மிகச் சிறந்த புரிந்துணர்வு> சகவாழ்வு> பொறாமை யற்ற தன்மை> இரக்க சுபாவம்> இல்லாமை> இயலாமை இல்லாம லாகும் நிலை> மதிப்பு> மரியாதை, அன்பு, அரவணைப்பு  போன்ற இன்னோரன்னவை தானாகவே மிளிரும். ஒரு உயர் பண்புள்ள சமுதாய அமைப்பு தோன்றும். மேற்கண்டவை அதனால் ஏற்படும் நன்மைகளிற் சில.
                                      

                                             - நிஹா -
No comments: