Sunday, January 13, 2013

நீதி நாதியற்று சேதியாகிவிட்டதா ?




நீதி நாதியற்று சேதியாகிவிட்டதா ? 



இறைவன் இந்த உலகத்தைத் தோற்றுவித்த போதே,  நீதியையும் தோற்றுவித்து விட்டான் எனத் தெரிய வருகிறது. காரணம் அவன் நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத்தவிர யாருமில்லை எனக் கூறி யுள்ளமையே! நீதி என்ற பதம் வெளியான அக்கணமே அநீதி என்ற பதமும் மயாமி இரட்டையர் போன்று ஒட்டிப் பிறந்துள்ளதாக அறிய வருகிறது. அதற்குக் காரணம் அவன் அனைத்தையும் சோடி சோடிகளாகப் படைத்துள்ளேன் எனக் கூறியுள்ள மையே! இவ்வாறு படைக்கப்பட்டதனாலோ என்னவோ அடிக்கடி இவ்வுலகு நீதிக்கும் அநீதிக்கும் இடையே வேற்றுமை காணமுடியாமல் அநீதியையே நீதியாகக் கொண்டு விடுகிறது. அப்படித் தோற்றுவித்ததனால் தான் போலும் தோற்றும் விட்டது நீதி. தற்போது ஆண் பெண்ணுக்குள் வேற்றுமை காண முடியாதவாறு.  

வல்ல இறைவன் நீதி செலுத்தக்கூடியவனாக உள்ள நிலையில் எனக் கூறுவதில் இருந்து, நீதி செலுத்துவதற்கும் ஒரு நிலை தேவைப்படுகின்றது என்பது புலப்படுகின்றது. அந்த நிலை நீதிபதி என்ற பெயரில் பல்வேறு பரிமானங்களைக் கொண்டுள்ளது. உய்த்துணர்பவர் அறிந்து கொள்வர். அதனை நான் விவரிக்கப் புகின் தற்போதைய நீதிபதிகளாகி அத்தொழிலைச் செய்து கொண்டிருப் பவர்களின் தகுதி பற்றி விமர்சனம் செய்யும் ஒன்றாக இக்கட்டுரை மாறிவிடும். ஆதலின் நீதி செலுத்தும் ஒருவர் அநீதி என்ற ஒன்றை ஐயமறத் தெரிந்திருக்க வேண்டியது அத்தியாவசியம் ஆகின்றது. இதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. அன்றேல் நீதிபதியினது தீர்ப்பே அநீதி என்ற வட்டத்துள் சங்கமித்து விடும் அபாயத்தை முதற்கண் அனைவரும் அறிந்திருக்க வேண்டியுள்ளது.

அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதனாலேயே சட்டப்படி எவை குற்றம் என்பதை படித்தறிவது நீதித் துறையுள் நுழையும் தகைமையாக வேண்டப் படுகின்றது. இக்கல்வி மனித சட்டத்தில் குற்றங்கள் எவை என்பதைக் கூறி அவற்றுக்கான தண்டனைகள் பற்றிக் கூறும் கல்வியே! நீதிபதிகளுக்கு ஒரு செயல் எவ்வாறு ஒரு சட்டத்தால் குற்றமாகக் கொள்ள முடிகிறது என்பது பற்றிய பயிற்சி நெறிகள் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. இது பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும் இடமே என்பதை அறிவதும் களைவதும் இன்றியமையாத ஒன்றாகிவிடுகிறது. இதனால் வக்கீல்களின் வாதங்கள் சட்டங்களைத் தமக்கு ஏற்றவாறு திசைதிருப்பி குற்றத்தைக் குற்றமற்றதாகவும் செய்து விடுகின்றன. 

அறிதலின்றிச் செய்யப்படுவனவே அநீதியில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. அநீதிக்கும் நீதிக்குமிடையில் வித்தியாசம் காண்பது மனச்சாட்சியுடன் அணுகப்பட வேண்டும். அந்த மனசாட்சிகூட தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி துஷ்பிரயோகத்துக்கு  இட்டுச் சென்றுவிடக் கூடாது. மனச்சாட்சியுடன் அணுகுதல் என்பது பக்கச் சார்போ, அனுதாபமோ, நல்லது, கெட்டது, உயர்வு? தாழ்வு,  பெரியவர், சிறியவர்,  வேண்டியவர், வேண்டாதோர்,  உள்ளவர்,  இல்லாதவர், எளியவர்,  வல்லவர் எனப் பார்ப்பதோ போன்ற எதுவுமல்ல என்பதால் அவை தீர்மானம் எடுக்கும் போது, தீர்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளாக அமைந்து விடக் கூடாது. 

அந்த அடிப்படையிலேதான் நீதி தேவதையின் கண் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருக்கிறதே தவிர காரணம் வேறில்லை. உண்மைகளை மட்டுமே நீதியின் கண் பார்க்கும், மற்றவைகளைப் பார்த்து விடக் கூடாது என்பதை நீதிபதிகளுக்கு வலியுறுத்திக் காட்டுவதே அதன் முழு நோக்கமும். ஆயினும், அநீதியின் பக்கல் நீதிபதி சாயாவிட்டாலும், அநீயை அறிய வேண்டியே உள்ளது. இல்லையேல் அநீதியும் நீதிக்குள் சங்கமமாகி விடுவதை அறிந்து கொள்ள முடியாது போய்விடும். நீதி தேவiதை கண்ணைக் கட்டிக் கொள்ளட்டும், ஆனால்,  நீதிபதி கண்ணில் எண்ணெய்யை ஊற்றிக் கொண்டு மிகக் கவனமாகத் தொழிற்படல்  வேண்டும்.

மேற்கண்ட உண்மைகள், நீதிபதியாவதற்கு அவர்களிடமுள்ள சட்டப்படிப்புக்கு மேலதிகமாக பல்வேறு பண்புகள் அமைந்திருக்க வேண்டியுள்ளது என்பவற்றைத் தெளிவாக்குகின்றன. ஆனால் சட்டத்துறையுள் நுழைவதற்குக் கபொதப உயர்தர சாதாரண சித்திகளுடன் போட்டிப் பரீட்சை ஒன்றில் சித்தி அடைவது நான்கு வருட சட்டத்தைக் கற்கும் தகுதியைத் தந்து, ஒருவரை தற்போதைய பாஷையில் சட்டத்தரணியாக்கி விடுகிறது. இவர் நொத்தாரிசாகவும், கொமிஷனர் ஒப் ஓத்ஸ் ஆகவும் செயல்படுகிறார். அதற்கு மேல் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரிடம் பயிற்சி பெற்றதாகக் கூறும் ஒரு சான்றிதழ் தேவைப்படுகின்றது.

இன்னோர் வகையில் சர்வகலாசலை ஒன்றில் உள்வாரி மாணவராகவோ வெளிவாரி மாணவராகவோ சட்டப்படிப்பை மேற்கொள்ள முடியும். சட்டப் படிப்பை முடிப்பவர்கள் நீதிமன்றத்தோடு தொடர்பு வைத்திருக்கும் உரிமையைப் பெற தனது இறுதி ஆண்டை, சட்டக் கல்லூரி ஒன்றில் பெற்றுக் கொள்வார். இவர்களில் இருந்தே நீதிபதிகள் தெரிவு நடைபெறு கின்றதாகத் தெரிகிறது. 

நீதிபதியாவதற்கு சட்டப்படிப்புக்கு மேலதிகமாக பல்வேறு பண்புகள் வேண்டி யிருக்கின்றது என முன்னர் கூறிய தகுதிகள் மேற்கண்ட நீதிபதிகளைத் தெரிவு செய்யும் முறையில் காணப்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

அவர்களிடம் நுண்ணறிவு, சமயோசிதம், விரைவாகக் கிரகிக்கும் தன்மை, சிறந்த ஞாபக சக்தி, தனது கருத்தைக் கூறிக்கொள்ள முடியாத ஒருவனிடமிருந்து கூட, அவனிடமுள்ள உண்மைகளை உணர்ந்து வெளிக்கொணரும் திறன், எச்சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாறா, நிலைகலங்கா உறுதி, பக்கச் சார்பின்மை, எதற்கும் அஞ்சாத நெஞ்சம், விலை போகாத் தன்மை, முகபாவங்களில் இருந்து கூட குற்றவாளியை இனம் காணும் மன முதிர்ச்சி, மனோதத்துவம், உளவியல், பொறுமை, சகிப்புத் தன்மை, பொருளாதார நிறைவு, எரிச்சலடையா பண்பு, ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்கா உள்ளம், முகபாவங்களை வெளிப்படுத்தாத் தன்மை, மேலாக தான் இறை தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன் என்ற அச்சத்தோடு கூடிய பொறுப்புணர்வு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சுருங்கக் கூறின் இறைவனிடம் காணப்படும் பண்புகள் அவரிடமும் காணப்பட வேண்டும். இப்படியானோரைத் தெரிவு செய்யக்கூடிய ஆற்றல்மிகு தேர்வாளர்கள் இல்லாமல் இருக்கலாம் என்பதும் உண்மை. ஆக நீதித்துறை சிறப்பாகச் செயற்பட இப்பண்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறியக்கூடிய விதமான வினவல் முறைகள், எழுத்து, வாய்மூலப் பரீட்சைகளாக  அறிமுகப் படுத்தப்படுவது ஓரளவாவது பயன் தரலாம்.

அனைத்தும் அறிந்த இறைவன்கூட, நீதி செலுத்த தராசைப் பாவிப்பதாகக் கூறுகிறான். இது அவனுக்கு தராசு இருந்தால்தான் நீதி செலுத்த முடியுமென்பதற்காகவல்ல. ஆனால் நீதி செலுத்துவது வெளிப்படையாக, அனைவருக்கும் தெரிவதுடன், அனைவராலும் ஏற்கப்பட்டு, அங்கீகாரமும் பெறப்பட வேண்டும் என்பதனாலேயே! தராசின் எந்தப் பக்கம் எடை கூடு கிறதோ அந்தப் பக்கமே தீர்ப்பு வழங்கப்படுகின்றது. நன்மை கனத்தால் நன்மைக்கான தட்டு பதிந்துவிடும். அன்றேல் தீமையின் தட்டு அவ்விடத்தை எடுத்துவிடும். இத்தராசு மூலம் தீர்ப்பு அனைவருக்கும் மிக இலகுவாகக் காட்சிப் படுத்தப்படுகிறது. நீதிபதி தீர்ப்பை எழுத முன்னரே மக்கள் தீர்ப்பை அறிந்து கொள்ள முடியும். அதன் காரணமாகவே கறுப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையின் கையில் தராசு கொடுக்கப்பட்டுள்ளது. ஆக அங்கு மக்களே தீர்ப்பாளர் ஆகிவிடுகின்றனர் என்பது தெளிவாகிறது. அதனால் நீதிபதியின் தீர்ப்பு மக்களின் தார்மீக அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறது. அப்போதுதான் நீதிக்கும் அதனை வழங்கியவருக்கும் கௌரவம், கண்ணியம் கிடைக்கின்றன.

அது தார்மீக ரீதியிலான அங்கீகாரம் மட்டுமே! ஆயினும் மக்கள் அங்கு தீர்ப்புச் சொல்லுவது மில்லை. அப்படிச் சொன்னாலும் அது ஏற்கப்படுவதும் இல்லை. இறைநீதி போன்ற முழுமைத் தன்மையை மனித நீதி கொண்டிருப்ப தில்லை. அதனால், அதனை அறிந்த நீதித் துறை, மேல்மட்ட நீதிமன்றுகளில் இருவர், மூவர் என ஏழு பேர் வரை நீதிபதிகளாக இருந்தும் விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கும் ஏற்பாட்டைச் செய்திருக்கின்றது. இவ்வாறு பெறப்படுவது கூட முழுமையான தீர்ப்பாகி விடுவதில்லை என்பதை, தீர்ப்பின் போது நீதிபதிகளுள் ஏற்படும் முரண்படு பண்பு வெளிப்படுத்துகிறது. இந்நிலை நீதி செலுத்தக் கூடியவனாக உள்ள நிலையில் என இறைவன் கூறியுள்ளமையின் செறிவை வெளியாக்கு கின்றது. தீர்ப்பு உண்மையின் அடிப்படையில் அமையுமாயின் முரண்பாடுகளுக்கு இடமேது!

இந்த நிலையில் சிறு முன்னேற்றகரமான மாற்றம் விரும்பியே ஜுரர்களைக் கொண்ட நீதிமன்றச் செயற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஜுரர்களும் தமக்குள் முரண்பாடு கொண்டவர்களாகவே காணப்படும் சந்தர்ப்பமும் உண்டு. இத்தன்மை, உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப் படாமையினால் ஏற்படுவதாகவே இருக்க வேண்டும் என்பதை, மேலும் வலுப்படுத்துகின்றது. உண்மையின் மூலம் பெறப்படும் தீர்ப்பு ஒன்றே ஏகோபித்த அங்கீகாரம் பெறக் கூடியது.  மேலும், ஜுரர்கள் கூட, அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகார எல்லையுள், தமக்குக் கொடுக்கப்பட்டதில் தங்கள் ஒப்புதலை, அன்றி நிராகரிப்பை வெளிப்படுத்தலாம். இவை உண்மைகள் வெளிப்படாதவரை நீதியான முறையில் தீரப்பைக் கொடுத்து விட முடியாது என்ற பேருண்மையை வலியுறுத்தி நிற்கின்றது. அத்தோடு இந்நிலை, நீதி வழங்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் அணுகு முறையில் உள்ள குறைபாடே தவிர வேறில்லை என்பதையும் அறியத் தருகின்றது. அதாவது நீதி செலுத்தக் கூடியதாக உள்ள 
நிலை தோற்றுவிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இறைவன் தராசை ஓர் கருவியாகப் பாவிப்பதற்கு உதவுவதற்காக இவ்வுலகில் நடந்த உண்மைகள் அனைத்தும் பதியப்பட்ட புத்தகம் ஒன்று அவனிடம் உள்ளது. அதனால் அவனது தீர்ப்புக்கு தேவையான உண்மைத் தகவல்கள் அங்கு ஆதாரமாகிவிடுகின்றன. உலகில் தராசு நிலையில் நீதி கொடுக்கப்பட் டிருந்தாலும் உண்மைகள் நீதி மன்றுக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அதற்குப் பல்வேறு காரணிகள் உள. அதனால் கனக்கும் தட்டை அறிவதில் நீதிபதிக்குச் சிரமமுளது. நீதி என்ற தராசில் உண்மைக்குப் பதிலாக ஏதோ விழுகின்றன. அவற்றை நிராகரிக்கும் பண்பில் குறைபாடுகள் உள. அதனால் இறைவனை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகமான நீதிபதிகளால் கொடுக்கப்படும் தீர்ப்புக்கள் நீதியை வெளிப்படுத்துவனவாக அமைவதில்லை என்பதை யதார்த்தமாகக் காணக் கிடக்கின்றது.

நமது உலக அமைப்பில் உண்மையை வெளிக் கொணரும் சாதனங்களோ, முறைமைகளோ காணப்படவில்லை. அப்படியே இருப்பவை கூட நீதிமன்றில் ஏற்கப்படும் நிலையில் இல்லை என்பது கவலைக்கிடமானதே! உண்மையில் இச்சாதனம் பாவிக்கப்படுமாயின் குற்றவாளிகளை தமது வாயாலேயே எந்த பலவந்தமும் இன்றி நடந்தவற்றைக் கூற வைத்து விடலாம். அதன் மூலம் உண்மையை அறிந்து எளிதாகத் தீர்ப்பு வழங்கிவிடலாம். இது கால, நேர, பொருள், சக்தி விரயம், ஊழல், வீண் விரயம் போன்றவைகட்கு இடமில்லாத நிலையை ஏற்படுத்தி வேலையை இலகுபடுத்தி விடுகிறது. வக்கீல் எனப்படும் சட்டத்தரணி களின் தேவைகூட வேண்டியதில்லை என்றாகின்றது.

மறுமையில் அனைவரும் ஆஜர் செய்யப்பட்டு அவர்கள் வாழ்நாளில் செய்த அனைத்தையும் கண்டறிந்து உண்மைகளின் அடிப்படையில் மிகச் சிறந்த தீர்ப்பை வழங்கிட இறைவன் வகுத்துள்ள முறையும் மேலே நான் கூறிய, சந்தேக நபர்களையே பேச வைப்பதே! ஆம் இறைவன் நீதி விசாரனையின் போது நமது அங்கங்களைப் பேச வைத்து விடுகிறான். அவை தாம் செய்த அனைத்தையும் அப்படியே ஒப்புவித்து விடுகின்றன. வேறு சாட்சிகளோ விவாதங்களோ கூடத் தேவையில்லை. இப்போது குற்றம் வெளிப்படையாகி மக்கள் தாமே தீர்ப்பைக் கூற முற்பட்டுவிடுவர். என்ன குற்றத்துக்கு என்ன தீர்ப்பு என்பதே நீதிபதிக்கு தேவையாகின்றது. மக்களும் பூரண திருப்தியுடன் தீர்ப்பை ஏற்றுக் கொள்வர். இதில் சில சிக்கல்களும் உண்டே! ஆம் அது யாரை விசாரிப்பது என்பதே. இது மேலதிகமான புலனாய்வு மூலம் தீர்க்கப்படலாம். எப்படியோ குற்றமற்றவராவது தண்டிக்கப்பட மாட்டார் என்பதால் குற்றவாளியைத் தேடும் படலம் தொடர வாய்ப்புண்டு.

ஆனால் நம்நாட்டில்  இரண்டு சாராரிடமுள்ள ஆதாரங்கள் (அவை உண்மையற்ற போலியானதாகவும் இருக்கலாம்) சிலவற்றை அடிப்படையாகக் கொண்டே வழக்குகள் நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆக உண்மையின் அடிப்படையில் தீர்ப்புக்கள் வழங்கப்பட வில்லை என்பது மிகத் துலாம்பரமாகத் தெரிகிறது. கிடைக்கப்பட்ட சாட்சிகளையும்,  ஆதாரங் களையும்,  வாதத் திறமைகளையு,ம் வைத்து, நீதிபதியைத் தீர்ப்புக் கூற வைக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. உண்மைகளை வழங்குவதற்குப் பதிலாக, வேறு ஏதோவழியில் நீதிபதிக்கு இடப்படும் விலங்கின் மூலமே தீர்ப்பு பெறப்படுகின்றது. உண்மை கண்டறியப்படாத நிலையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும் போது உண்மையான தீர்ப்பு எங்கிருந்து வரப்போகின்றது. ஆக நீதி செத்துவிடுகிறது. இதனால் நீதிமன்றங்களின் தீர்ப்போடு வெளியே வருபவர்கள் அதிருப்தியுடன் வருவது நாளாந்த நிகழ்வாகி உள்ளது.

இதன் பின்னர் மேன்முறையீட்டு நீதி மன்றம், உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் என்ற நீதிமன்றங்கள் தானும் உண்மையில் அடிப்படையில் நீதி வழங்கவுள்ளனவா என்றால் அவையும் சுற்றிச் சுற்றிச் சுப்பர் கொல்லை என்ற நிலையிலேயே உள்ளன. காரணம் அங்கும் ஏற்கனவே உள்ள நடைமுறையே காணப்படுகின்றது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும் சாட்சிகளும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனவே தவிர வேறில்லை.

இது நீதி மன்றுகளின் பிழையா? அன்றேல் நீதிபதிகளின் தவறா? என்றால் இரண்டுமே இல்லை என்பதுதான் தனித்த பதிலாகும். காரணம் நீதித்துறையில் உண்மை காண விழைவதில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படைப் பிழை. அடிப்படையில் பிழையான ஒன்றில் இருந்து எப்படி நீதி வெளிப்பட முடியும்? அடிப்படையில் மாற்றம் கொண்டு வரப்படல் வேண்டும். உண்மையின் மீது  பெற்ற தீர்ப்பின் மூலம் நீதி வெளிப்பட வேண்டுமே தவிர, எதன் மீதோ பெற்ற  தீர்ப்பால் நீதி நுழைக்கப்பட முடியாது. உண்மைகள் வெளிவரும் போது அசத்தியம் அழியவே வேண்டும். உண்மைகள் வெளிவரும் சாத்தியங்கள் நமது நீதித் துறையில் புகுத்தப்படவில்லை என்பதே அந்தப் பேருண்மையும் பேரநீதியுமாகும். இது உலகில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கி சமூகச் சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பது இங்கு மறைந்துள்ள உண்மை. சத்தியம் வந்து விட்டது அசத்தியம் அழிந்தே தீரும் என்றுதானே அல்லாஹ் கூறியிருக்கின்றான்.

நீதித் துறையில் தீர்ப்பு வழங்குவதில் உள்ள குறைபாட்டை விளக்க எளிய உதாரணங்கள் சிலவற்றைக் கூறுதல் பொருத்தமாக இருக்கும். ஒரு கொலை நடை பெற்றுள்ளது. அதனைப் பலர் கண்கூடாகக் கண்டுள்ளனர். கொலை செய்தவன் வெளியேறிவிடுகிறான். அல்லது கொலைக்கு காரணஸ்தனாக இருந்தவன் மறைந்து விடுகின்றான். போலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். அவ்விடத்தை தடை செய்யப்பட்ட இடமாக்கி ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இத்தடையின் மூலம் கண்ணால் கண்ட சாட்சிகள் வெளியேற்றப்பட்டு விடுகின்றனர். தடயப் பொருள் தேடுகின்றனர். அந்த பொதுமக்கள் உலவும் இடத்தில் யார் யாருடையவோ தடயங்கள் நிறைந் திருக்கும். ஏன் யாரோ  தொலைத்த, அக்கொலை திருடி வைத்திருந்த யாருடைய வோ ஆளடையாள அட்டை  போன்றவை அங்கு கிடந்திருக்கலாம். அவற்றில் சிலவற்றை வைத்து, சிலரைக் சந்தேகத்தில் கைது செய்கின்றனர். 

திட்டமிட்ட கொலைகளில் யாரோ ஒருவன் தானாக வலிந்து பொலிஸில் நிலையத்தில் சரணடையும் சந்தர்ப்பங்களும் உண்டு. வழக்கைத் திசை திருப்பும் முயற்சிகளில் ஒன்று அச்சரணடைவு. அவன் அன்று கொலை நடந்த இடத்தில் நின்றவனும் அல்ல. அவனிடம் இருந்த ஆயுதம்கூட கொலைக்காகப் பாவிக்கப்பட்டதுமன்று. கொலையைக் கண்ணால் கண்ட சாட்சிகள் முன்வரவுமில்லை. பொலிஸார் அப்படியானோரை தேடவுமில்லை. யாரோ சில சாட்சிகள், அல்லது தடயப் பொருட்கள், அல்லது சாட்சிகளும் தடயப் பொருட்களுடன் சந்தேக நபர்களை வைத்து வழக்கு விசாரணை நடைm பெறுகின்றது. இது ஒரு கேலிக் கூத்தாகத் தென்படவில்லையா? இவை போன்றவைதான் இன்றைய நீதி மன்றங்களில் நடைபெறுவன.

உண்மையில் கண்ணால் கண்டவர்கள் தாமாக முன்வந்து சாட்சியம் கூறுவதாயின் பல சிக்கல்களை, ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உயிருக்குக் கூட பயமுறுத்தல் வந்து விடுகின்றது. அவனுக்குப் பாதுகாப்பில்லை என்ற நிலை. அதனால் யாரும் முன்வராது நமக்கேன் என விலகிச் சென்றுவிடுகின்றனர். புலனாய்வுத்துறையும் அதனை அப்படியே விட்டு விடுகின்றது. இதற்கு மேலும் உயிரைப் பணயம் வைத்து ஒருவர் சாட்சியம் கூற வந்தால் ஊக்குவிப்போரோ, உற்சாகம் தருவோரோ கிடையாது. சட்ட வல்லுநர்கள்  மிரட்டல்களான கேள்விகளாலும், வாதத்திறமையினாலும் உண்மையான சாட்சியிடமிருந்து வெளிவரும் உண்மைகளைப் பொய்யாக்கி விடுகின்றனர். அல்லது சந்தேகத்துக்கு உரியதாக ஆக்கி விடுகின்றனர். சந்தேகங்கள் குற்றவாளிக்குச் சாதகமாகும் என்ற நீதியின் பண்பு மிகுதி வேலையைச் செய்து தீர்ப்பை மாற்றி விடுகிறது. இங்கு நீதி மௌனித்து விடுகிறது. அவனது கால, பணவிரயம் பற்றிச் சிந்திப்பார் யாருமில்லை. குற்றச் செயல் அத்தோடு குப்பைக் கூடைக்குள் குற்றுயிராகி பழங்கதையாகி விடுகிறது.

அமைதி வழியில் ஓர் உரிமைப் போராட்டம் நடத்தப்படுகின்றது. அதனைக் குழப்பும் யாரோ விஷமிகள் பொதுச் சொத்து அழிப்பில், வாகனங்களுக்கு தீவைப்பதில், கல்லெறிதலில் ஈடுபடுகிறார்கள். இறுதியில் இவற்றைச் செய்தவர்கள் அப்பாவிகளான, அந்த உரிமைப் போராட்டம் நடத்தியவர்களாகக் குற்றம் சுமத்தப்பட்டு, அவர்கள் தாக்கப்படுகின்றனர். குற்றவாளிகளாக்கப் படுகின்றனர். இங்கு உண்மை என்ன? நீதி செலுத்தப்படுகின்றதா? இதுவே பிற்காலங்களில் வன்செயலுக்கு வித்திடுகின்றன. நாட்டில் குழுக்களால், இனங்களால் செய்யப்பட்ட வன்செயல்களில் அனேகமானவை இப்படியாக உருவாக்கப்பட்டனவே.


உண்மையில் நாட்டில் குற்றவியல் புலனாய்வுத்துறை என்ற ஒன்று உள்ளதே! அத்துறை மெஜிஸ்திரேட் நீதிமன்றங் களுக்கு உண்மைத் தகவல்களை வழங்க வேண்டிய கடப்பாடு உடையன! அதற்காகவே குற்றவியல் சார்ந்த வழக்குகள் போலிஸாரால் பதிவு செய்யப்படுகின்றன. ஆக உண்மையில் குற்றங்கள் போலிஸாரால் உண்மைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்படுமாயின், அப்படியான வழக்குகளில் இலகுவாகத் தீர்ப்புச் செய்யக் கூடிய சாதகத் தன்மைகள் நிறைந்து காணப்படும். ஆனாலும் விசரரணையின் போது வக்கீல்களின் கேள்விகள் மூலம் உண்மைகள் வலுவிழக்கச் செய்யப்படும் சந்தர்ப்பங்களும் இருப்பதனால் தீர்ப்புக்களும் மாற்றங்களைப் பெற்றுக் கொள்கின்றன. இங்கு நான் முன்னர் கூறிய மனிதாபிமானத்தோடு வழக்கு விசாரணை நடைபெறும்போது, எதனுடைய செல்வாக்கும் தீர்ப்பு வழங்கு வதற்குப் பாதகமாக ஆகிவிடக் கூடாது என்ற நியதிக்கு மாறாக, புதிய ஒன்றான வக்கீலின் வாதம் தீர்ப்புக் கூறுபவரின் உரிமையை மழுங்கடித்து விடுகிறது. நீதியின் பாதுகாவலர்கள் தனது கட்சியின் (குற்றவாளியின்) பாதுகாவலராகி நீதியைச் சாகடித்து விடுகின்றனர். நீதியை நிலைநாட்டுபவரை எவரும் சிறந்த வக்கீலாகக் கருதுவதில்லை, மாறாக, எந்த உண்மைகளை,ம் தனது வாதத் திறமையால் வென்று தான் சார்ந்தோரை வெல்ல வைப்பவரே சிறந்த வக்கீல். வக்கீல் தொழிலுக்கு வரும்போது அவர்கள் எடுத்த உறுதிமொழி காற்றில் நாற்றமடித்துக் கொண்டிருக்கின்றது.

வக்கீல் தொழில் உண்மையின் அடிப்படையிலும், நீதியை நிலைநாட்டுவதற் காகவுமே என்ற வகையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அந்த உயர் நோக்கத்தை, அத்தொழில் நிறைவு செய்வதாயில்லை என்பதே கசப்பானாலும் அப்பட்டமான உண்மை. காரணம், வக்கீல் தான்பெற்ற பணத்துக்காக தனது கட்சிக்காரரை வெல்லவைக்கும் மனப் போக்கே, இந்தத் தொழிலில் பிரதான இடத்தை வகிக்கின்றது. அத்தோடு சிறந்த வக்கீல் என்ற பெருமைகூட தனது கட்சிக்காரரை வெல்ல வைப்பதன் மூலம் மட்டுமே கணிக்கப்படுகின்றது. நீதியை நிலை நாட்டுவதற்கென்று சத்தியப் பிரமாணம் எடுத்து வந்த சட்டத்தரணிகள், கட்சிக்காரரைக் காப்பாற்றும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றனர். அப்படி இல்லையேல் சமூகம் அவரை சிறந்த சட்டத்தரணியாக ஏற்பதோ அவரை நாடுவதோ இல்லை. திறமையற்றோர் பட்டியலில் சங்கமாகி அவரது வாழ்வே கேள்விக் கிடமாகிவிடும். இது உண்மையாக நீதியை நிலைநாட்டும் வகையில் வாதிடும் சட்டத்தரணிகளைக் காண நினைப்பது என்பது, எட்டி பழுக்கும் என எதிர்பார்த்த கதையை ஒத்ததே!

குற்றம் செய்தவர்களை எப்படி சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைத்து நீதியைக் குழி தோண்டிப் புதைக்கலாம் என்பதற்காகவே தாம் கற்ற சட்டக் கல்வி பாவிக்கப்படுகின்றது. அத்தோடு சட்டங்களிலுள்ள குறைபாடுகள் (Loop holes )  தேடப்படுகின்றன. எப்படிக் குற்றத்தைச் செய்தால் சட்டத்தின் பிடியில் அகப்படாமல் தமது தரப்பை தப்பிக்க வைக்கலாம் என்பதே இத்தொழிலில் முதன்மையைப் பெறுகின்றது. இதுவே சட்டத்தரணியின் திறனாகவும்  கணிக்கப் படுகின்றது. தாம் செய்யும் நொத்தாரிசுத் தொழிலில் தாமேகூட இந்த குறுக்கு வழிகளைக் கையாண்டு நீதி தேவதையை இரத்தக் கண்ணீர் விட வைக்கின்றனர். (கண்கடடப்பட்டு இருப்பதால் நமக்கு அது தெரிவதில்லை.) இதன் மூலம் மக்கள் நீதித் துறையின் மேல் கொண்டிருந்த நம்பிக்கையைக் குழிதோண்டிப் புதைக்க வைத்து விட்டனர். கோர்ட் எடுத்தவன் ஓடெடுத்தவன் என்ற பழமொழி, வேறும் பல அநியாயங்களையும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. களவு கொடுத்தவன் தனக்கு அநியாயம் நடந்து விட்டது என முறையிடச் சென்றால் கையில் இருப்பதையும் இழக்க வேண்டிய நிலையைத் தான் இன்று நகர பாதுகாவலர்களினாலும் நீதியின் காவலர்களினாலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. 

இலங்கையின் குருநாகல் பகுதியில் மறைந்த டீஐஜீ ஒருவரின் பூதல் வழக்கு ஏறத்தாழ தொண்ணூறு வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது எனது கூற்றை வலுப்படுத்தும். மேலும் நீதிமன்றங்களில் தீர்க்கப்படாது மாமாங்கங்களாக றெக்கோர்ட் ரூமை நிறைத்திருக்கும் கோவைகளும் சாட்சி கூறும். ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட வழக்கு ஒன்று பல நூறு நீதிபதிகளைக் கண்டிருக்கும். அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமோ, ஆற்றலோ இல்லாத நிலையில் வழக்குகள் வாய்தா கொடுக்கப்பட்டு எப்படியோ தப்பினோம் பிழைத்தோம் என்று நீதிபதிகள் மாற்றம் பெற்றுச் சென்று விடுகின்ற பண்பையும் நாட்டு நிலைமைகள் தெரியத் தருகின்றன.

ஆரம்ப நீதிமன்றங்களில் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதைத் தடுப்பதற்காக, நாட்டில் அமைதி நிலவ வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 66ஆவது சட்டச் சரத்து கடைசி இரண்டு மாத ஆட்சி பற்றிக் கூறுகிறது. இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் உண்மையாக ஒரு சொத்தில் பிரச்சினை தொடங்கிய சந்தர்ப்பத்துக்கு முந்திய இரு மாதங்கள் யார் அங்கு ஆட்சியில் இருந்தவரோ அவரை அவரது ஆட்சியைத் தற்காலிகமாக தொடரும் சட்ட அந்தஸ்தை வழங்கி, பிணக்கை மாவட்ட நீதிமன்றிற்கு சென்று உரிமைப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே. தலையாயது அச்சமயத்தில் அமைதியை நிலவ வைப்பது.

ஆனால் நாட்டில் இச்சட்டமே பிழையான வழியில் ஒருவருடைய காணியை அபகரிப்பதற்காக பாவிக்கப்படும் அவல நிலை தோன்றியுள்ளது. உண்மையான காணிச் சொந்தக்காரன் எதுவித ஆதாரங்களும் இல்லாதிருப்பான். திட்டமிட்டுக் காணியை அபகரிக்க நினைப்பவன் தான் அக்காணியில் இருந்தமைக்கான தடயங்களைச் செயற்கையாக உருவாக்கி விடுகிறான். இங்கு புலனாய்வு மேற்கொள்ளப்பட்டால் உண்மை வெளிவரும். ஆனால் புலனாய்வுக்குப் பதிலாக சத்தியக் கடதாசிகளும், சாட்சிகளும்,ஆவணங்களும் காணியின் உடமையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை ஆற்றி, உண்மையைப் புதை குழியில் நிரந்தரமாகத் தூங்கவைத்துப் பெறப்படும் தீர்ப்பின் மூலம் அநீதி போசனமிட்டுப் பாசனம் செய்து வளர்க்கப்படுகின்றது.
   
உண்மையான காணிச் சொந்தக்காரன் அந்தக் காணியை மீளப் பெற மாவட்ட நீதிமன்றை நாட வேண்டும். அதற்குப் பெருந் தொகைப் பணமும், நீண்ட காலமும் தேவைப்படுகின்றன. அதற்கான ஆவணங்கள் பெறுவதில் சிரமம். ஆவணங்கள் இல்லாதிருத்தல். எதிர்க்கட்சிக்காரன் போலிஆவணங்களைச் சட்டபூர்வமாக்கி வைத்துள்ளமை போன்றவை அங்கு அந்த காணியைப் பறிகொடுத்தவனால் உண்மையை நிலை நிறுத்த முடியாது போகின்றது. போலி ஆவணங் களினதும், சாட்சிகளினதும், வாதத்திறமைகளினதும்,  பொருளாதார பலத்தினதும் குறை பாட்டினால் காணிச் சொந்தக்காரன் காணியை இழக்க வேண்டி வருகிறது. உண்மைகள் கண்டறியப்படாமல் தீர்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் அநீதி இழைக்கப்படுகின்றது.

காணி உரிமையைக் காலங்கள் தீர்மானித்தல், குற்றவியலுக்கு எதிராகக் குறிப்பிட்ட காலத்தில் வழக்குகள் பதிவாக வேண்டும் என்ற சட்டங்கள் எல்லாம் அநீதி நடப்பதற்கென்றே உருவாக்கப்பட்டன போல் கையாளப்படுகின்றன. கள்ள உறுதியொன்றை எழுதி, பத்துப் பதினைந்து வருடம் கிடப்பில் போட்டுவி;ட்டு அதற்கு உயிர் கொடுக்கப்படுகின்றது. காணிச் சொந்தக்காரன் வானசாஸ்திரம் பார்ப்பவனாக இருந்தால் மடடுமே இப்படியான களவுகளைக் கண்டுபிடிக் கலாம்.  ஒரு காணி பலரின் கைகளுக்கு மாற்றஞ் செய்யப்படும் வித்தைகளும் நொத்தாரிசுமாரால் செய்யப்படுவனவே! நொத்தாரிசுக்குப் பணம் வந்து சேருகின்றது. காணிக் கொள்ளையருக்குப் பல மில்லியன் பெறுமதியான காணி போய்ச் சேர்ந்து, விற்றுத் தீர்க்கப்படுகின்றது.

அப்படி இல்லாமல் அக்காணிச் சொந்தக்காரனே வெற்றிவாகை சூடிவிட்டாலும், அக்காணியில் நீண்ட கால இடைவெளிக்குள் கைமாற்றங்கள், அபிவிருத்திகள் செய்யபட்டமை காரணமாக அக்காணியை உரியவனுக்கு வழங்குவதில் தடைக் கற்களாகி விடுகி;ன்றன. தற்போது நீதிமன்று உண்மையான காணிக்காரனைக் கண்டறிந் திருந்தும், அங்கு நடைபெற்றிருந்ததாக கூறப்படும் உரிமை மாற்றங்கள், அபிவிருத்திகள் தீர்ப்பில் பாதிப்பை வலிந்து ஏற்படுத்தி விடுகின்றன.  நீதிபதியும் தீர்ப்பில் மாற்றத்தை உட்படுத்துகின்றார். நீதித்துறையில் ஏற்கனவே உள்ள குறைபாடுகள் நீதிபதியை உண்மையின் அடிப்படையில் கண்ட உண்மை யான தீர்ப்பில் இருந்து சரிந்துவிட வைத்து விடுகின்றது. அநீதி, நீதிமன்றால் வழங்கப்பட்ட சட்ட அந்தஸ்துடன், நீதி என்ற பெயரில் வீறு நடை போடுகிறது.

நொத்தாரிசு எதனை அத்தாட்சிப்படுத்தினாலும்,  அதனைப் பதிந்து அதற்கு சட்ட அந்தஸ்துக் கொடுக்கும் நிலையில் மாற்றம் கொண்டு வராதவரை கள்ள உறுதி எழுதிக் காணிகளை அபகரிக்கும் பண்பு உயர்மட்டத்தில் நடந்து கொண்டே இருக்கும். இதனால் குழப்பங்கள், வன்செயல்கள், கொலைகள் போன்ற அமைதி வாழ்வுக்குப் பங்கம் விளக்கும் அனைத்தும் தங்கு தடையின்றித் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட முடியாமல் கிடப்பில் கிடக்கும் அனேக வழக்குகள் காணித் தகராறால் ஏற்பட்டவையே. ஆக ஒரு நொத்தாரிசு செய்யும் அடாவடித்தனத்தால் ஒரு சமூகமே, நாடே கூட சில வேளை பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு வியாபார ஸ்தாபனத் தின் பெயரைப் பதிவு செய்யப்படும் போது எடுக்கப்படும் முன்னெச்சரிக்கைகளின் அளவு கூட காணிகளின் உறுதிகளைப் பதிவு செய்வதில் எடுக்கப்படுவதில்லை என்பதே மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை. இவ்விடயத்தில் அரசு தனது கண்ணைத் திறக்க இதனைவிடச் சிறந்த சந்தரப்பம் இல்லையென்பதே எனது கருத்து.

உண்மைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாத தற்போதைய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் எவ்விதமான குளறுபடிகளுக்கெல்லாம் வித்திட்டு விருட்ச மாக்கப்படுகின்றன என்பதையறிய இன்னோர் வகை வழக்கைக் குறிப்பிடு கிறேன். யாரோ ஒருவருடைய காணி; காலச் சூழ்நிலையால் தேடுவாரற்ற நிலையில் காணப்படுகிறது. காணித் திருடரின் கண்களில் இது பட்டுவிடுகின்றது. சட்டத்தரணியான நொத்தாரிசு ஒருவரின் ஆலோசனையின் பேரில் அவ்விரு வரில் ஒருவர் தற்போது காணியை அபகரித்துள்ளதாகவும் அது தனது காணியென்று கூறும் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் கோர்ட்டில் வழக்குத் தொடரப்படுகிறது. வழக்கு விசாரணையி;ல் தமக்களிக்கப்பட்ட போலி உறுதிகளினதும் வேறு ஆவணங்களினதும் அடிப்படையில் அவ்விரு திருடரில் ஒருவருக்குக் காணி சொந்தமானது எனத் தீர்ப்பு வழங்கப்படுகின்றது நீதிபதி யால். இங்கு உண்மை என்னவென்பது யாருக்கும் தெரிவதில்லை. போலி வழக்காளர்களில் ஒருவர் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறும் அவலம். இதன் பின்னர் உண்மையான காணிச் சொந்தக்காரன் நீதிமன்ற உத்தரவின் மூலம் வேறொரு வருக்கு உரிமையாக்க, உடமையாக்கப்பட்ட காணி ஒன்றுக்கு எதிராக உரிமை கொண்டாடுவது நடைமுறைச் சாத்தியமானதா!

இன்னொரு புதுமை இந்நாட்டில் நடந்து இருக்கின்றது. ஆம் ஒருவர் ஏதோ குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு சம்பந்தமான கோப்பு மன்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விடுகின்றது. அந்த வழக்கு என்றுமே இனிக் கோர்ட்டுக்கு வரப் போவதில்லை. கோப்பின்றி அவரது வழக்குக்கு தேதி நிர்ணயிப்பது யார்? அதனால் அந்த சந்தேக நபருக்கும் விடிவு இல்லை. அதனால் தொடர்ந்து சிறைக் கம்பிகளை எண்ணியே பித்துப் பிடித்தவராகி உள்ளார் என முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரோ தெரியவில்லை. அவர் ஒரு போலிஸ் வாகனச் சாரதி என்றும் கேள்வி. இவை சட்டத்திலா அல்லது நடைமுறைப்படுத்தலிலா உள்ள குறைபாடு? எப்படியோ அநீதி அட்டகாசம் செய்து கொண்டு இருக்கின்றது என்பது என்னவோ உண்மை.


நொத்தாரிசும் சட்டத்தரணியும் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டு அதனால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அப்படியாக பாதிப்புக்காளானோர் சுப்பிரீம் கோர்ட் எனப்படும் உச்ச நீதி மன்றில் முறைப் பாடொன்றைப் பதிவு செய்யலாம். அந்த அடிப்படையில் நானும் நிறைய கள்ள உறுதிகளை எழுதி அநேகமானோரின் உடமைகளை வேறொருவரின் உடமையாக்கிய குற்றவாளிச் சட்டத்தரணிக் கெதிராக ஓர் முறைப்பாட்டை உச்ச நீதிமன்றில் பதிவு  செய்தேன். மூன்று வருடங்களின் பின்னர் எனது வழக்கு விசாரணைக்காக மூவர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. என்னால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியில் உள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்குப் பதிலாக நான் எவ்வகையில் பாதிக்கப்பட்டேன் என்பதை என்னிடம் கேட்கப்பட்ட பின்வரும் கேள்விகள் விளக்கும். ஏன் சட்டத்தரணி ஒருவரின் உதவி பெறப்படவில்லை? சுருக்கமாக நடந்ததைக் கூறும்படி கேட்கப்பட்டேன். இதனை எதிர்பார்த்தே நான் என்னால் தயாரிக்கப்பட்டிருந்த வழக்குக்குப் பின்னணியாக உள்ளவற்றை கொடுத்தேன். அதனை வாங்க மறுத்த குழுத் தலைவர் ஏன் சட்டத்தரணியுடன் வரவில்லை என்று கேட்டதுடன் இனிமேல் சட்டத்தரணியை வைக்கமாட்டீரா? என்றார். தேவை ஏற்பட்டால்  சட்டத்தரணியை நியமிப்பேன் என்றேன். Itemize ஐடமைஸ் பண்ணவில்லை? என்றெல்லாம் கேட்டு எனது நியாயம் எதனையும் கேட்க மறுத்து வாய்தா போட்டார்கள்.

நான் ஓர் சட்டத்தரணி அல்ல. சட்டவல்லுநர் போன்று விடயங்களைச் சமர்ப்பிக்க,  ஒரு சாதாரண குற்றமிழைக்கப் பட்டவனால் முடியுமா? ஆயினும் நான் சமர்ப்பித்திருந்த சத்தியக் கடதாசியையும், ஆவணங்களையும் பார்வையிட்ட பின்னரே பிரதம நீதியரசர் எனது முறைப்பாட்டை விசாரணைக்காக மூவர் கொண்ட குழுவுக்கு அனுப்பினார் என்பதுவே நான் எழுதியிருந்ததை பிரதம நீதியரசர் புரிந்துள்ளார் என்பதை அறியத் தருகிறது. அப்படியிருக்க என்னிட மிருந்த உண்மைகளை, நியாயங்களை, ஆதாரங்களை எனது பேச்சைக் கூட கேட்க மனமற்ற நிலையில் நடந்து, அடுத்த முறை வரும்போது சட்டத்தரணி யுடன் வருமாறு கூறப்பட்டது.

நான் எழுதி இருந்த சத்தியக் கடதாசியில் இருந்த அநீதிகளை, சட்டத்துக்குப் புறம்பானவற்றை, நொத்தாரிசான சட்டத்தரணியின் தில்லுமுல்லுகளை விளங்கியே பிரதம நீதியரசர் எனக்கு அநியாயம் ஒன்று நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளார். அதனை விசாரித்து அறிக்கையிடுமாறு விசாரரணைக் குழுவிற்கு உத்தரவிட்டிருந்தார். அப்படி இருக்க நான் என்ன பிழை விட்டிருக் கிறேன். ஆயினும் நான் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுக்களை தெளிவாக்கக் கூடிய ஆவணங்களையும் இணைத்திருந்தேன். எனது சத்தியக்கடதாசியையும் அதை ருசுப்படுத்தும் காணிப்பதிவாளரிடம் இருந்து பெற்ற ஆவணங்களையும் வைத்தே எனக்குத் தீர்ப்பு வழங்கி இருக்கலாம். எனது கட்சியை வெளிப்படுத்தும் உரிமை தரப்படாமல், அதற்கு மாறாக எனக்கு என்ன நஷ்டம் எனக் கேட்டனர். நான் எனது பங்கையும், எனக்கு அட்டோணி தத்துவம் வழங்கியிருந்த 79 பேரின் பங்குகளையும் அந்த நொத்தாரிசான சட்டத்தரணியின் திட்டமிட்ட மோசடிச் செயலால் முற்றாக இழந்த நிலையில் இந்த கேள்வி என்னை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கேள்விக் குறியாகியது.


மேலும், எனது குற்றச்சாட்டுக்குள்ளான நொத்தாரிசு உறுதிகளில் செய்த மோசடிகளை மிகத்  தெளிவாக விளக்கி இருந்தேன். ஆயினும் தெட்டத்தெளிவாக நான் நிரூபித்திருந்ததை மறுத்து தான் சரியாகவே அனைத்து உறுதிகளையும் எழுதி இருந்ததாகப் பொய் கூறி உச்ச நீதிமன்றை ஏமாற்றியிருந்ததைக் கூட அந்த விசாரணைக்குழு கவனத்தில் எடுக்கவில்லை என்பது அவர்களின் பக்கச்சார்பை தெளிவாக விளக்கி இருக்கின்றது. அதைவிட அந்த நொத்தாரிசு தான் மோசடி செய்த உறுதிகளுடன் எனக்குத் தொடர்பில்லை எனக்கூறி இருந்ததையும் குழு கவனத்தில் எடுக்கவில்லை. எனக்கு அக்காணியில் உரிமை இல்லை என்றதை நிராகரித்து அதனை வெளிப்படுத்த எனக்கு அவகாசம் தரப்படவில்லை. ஆயினும் நான், எனக்குப் பங்குண்டு என்பதை அந்த நொத்தாரிசே ஏற்றிருந்து, அதே வகையில் இன்னொரு காணியில் எனக்குப் பங்குண்டு என அதே நொத்ததாரிசு எழுதியிருந்த உறுதிகளைக் காட்டியும் பார்வையிடுவதைத் தவிர்த்தனர். வேறொரு சத்தியக்கடதாசி எழுதி வருமாறு பணித்தனர். தேவைப்பட்டால் அப்படி ஒன்றை எழுதி வருவேன் எனக் கூறினேன்.

குழுவின் உத்தரவுக்கிணங்க, அடுத்த தவணைக்கு முன்னர் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பேச இன்னோர் சட்டத்தரணியைப் பிடிப்பது அவ்வளவு சுலபமானதல்ல என அறிந்த தனால்தானோ என்னவோ சட்டத்தரணி இன்றியே நமது கட்சியை வெளிப்படுத்தும் உரிமை நல்கப்பட்டிருந்தது. எப்படியோ ஓர் சட்டத்தரணியின் உதவியுடன் அங்கு சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் வந்திருந்த சட்டத்தரணி என்னைக் குறைகூறி, தான் ஆயத்தமாக வரவில்லை எனக் கூறி தவணை ஒன்றைக் கேட்டமையே. அச்சந்தர்ப்பத்தில் நான் ஆயத்தமாக இருப்பதாகக் கூறினேன். விசாரணையைத் தொடர்ந்து நடத்தும்படி வேண்டினேன். எனது வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கின் ஓசையானது. தவணை தரப்பட்டது. மீண்டும் தவணை.

மேலதிக சத்தியக்கடதாசியுடனும் பல் வேறு வகையில் எனது கட்சியை விளக்கக்கூடிய வகையில் என்னால் தயாரிக்கப்பட்ட Charts களையும், இன்னும் பல Survey Plan களுடனும் சென்ற எனக்கு முன்னைவிட பேரதிர்ச்சி காத்திருந்தது. மன்றில் எனது சட்டத்தரணி தான் வழக்கை நடத்துவதற்கான ஆயத்தத்துடன் வரவில்லை எனக் கூறினார். நான் அதனை மறுத்து> சகல ஆயத்தத்துடனும் வந்துள்ளேன் ஆதலால் வழக்கை நடத்துமாறு கூறினேன் ஆனாலும் அவர்கள் எனது பேச்சை சிறிதும் ஏற்காது வழக்கை தள்ளுபடிDismiss செய்து விட்டனர். தாம் செய்வது பிழை என்பதை அவர்கள் நன்கு புரிந்தே வைத்து இருந்ததனால் எனக்கு மீண்டும் வழக்குத் தொடர்வதற்கான உரிமை மறுக்கப்படவில்லை எனக் கூறினர். ஏன் நான் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடரவில்லை எனக் கேட்டனர். உடன் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடராவிடில் இங்கு முறையிட முடியாதா? எனக் கேட்டதும். பேச்சைத் திசைதிருப்பி, என்னை மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடருமாறும் ஆலோசனை வழங்கினர். மாவட்ட நீதிமன்றில்தான் நான் நொத்தாரிசின் குற்றச் செயலுக்கு நீதி பெறும் அனுமதி இல்லாத போது என்னை அங்கு போகும்படி பணிப்பது எவ்வகையில் நியாயமாகும். அத்தோடு உச்ச நீதிமன்றில் இப்படியொரு வசதி செய்யப்பட்டிருக்கும் போது அதனைச் செய்ய விடாது எனக்கு இவ்வாறு ஆலோசனை வழங்குவது உச்சநீதிமன்றச் சட்டத்தையே மதிக்காத செயலாகவே தெரிகிறது.

மேலும், மேற்படி நொத்தாரிசு, ஒருவர் தனக்குச் சொரியலில் சொந்தமான 25மரக்கால் பங்கை விற்கிறார். அதே பங்கை இந்த நொத்தாரிசு மேற்படி 25மரக்கால் பங்கு என்று அத்தாட்சிப்படுத்தி இருந்ததை தன்விருப்பப்படி 50மரக்கால் எனவும் காணியின் பெயரையும் திருத்தி, இரு வேறு காணிகள் போன்று இருவரின் பெயரில் உறுதி மாற்றஞ் செய்து இரண்டு பக்கங்களில் Folios பதிந்து 25க்குப் பதிலாக 75மரக்கால் காணியை அபகரித்ததை நான் வழக்கின் முதல் தவணையில் எடுத்துக் காட்டினேன். அதற்கு அக்குழுவிற்குத் தலைவராகவிருந்தவர் ஏதோ சப்புக்கொட்டியவராக, இந்த மாற்றம் முதலாவது உறுதி அத்ததாட்சிப்படுத்தப்பட்ட திகதியின் பின்னர் செய்யப்பட்டிருந்தால் கூறும்படி கேட்டுவிட்டு, அதனை நான் காட்டி நிரூபிக்க முனைந்ததும், அடுத்த தவணையில் பார்ப்போம் எனக் கூறியதையும் நினைவுபடுத்தி தற்போது அதனையும் காட்டினேன்.

ஆனால் எதனையும் பார்வையிடும் நிலையிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டு இருந்தனரா! என்றே என்னை எண்ண வைத்தது அவர்களது நடவடிக்கை.  ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருந்த ஓர் செய்தியை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது இவர்கள் எனக்குத் தந்த தீர்ப்பு. தற்போது நடைபெற்ற அக்குழுவினது தீர்ப்பு எந்த வகையிலும் உண்மையைக் கண்டறிய நீதியை நிலைநிறுத்த முற்படாமல் இழுத்தடிக்கும் மனப்பான்மையையும் குற்றவாளி யைத் தப்புவிக்க எடுக்கப்பட்ட முனைப்பாகவுமே தெரிகிறது. அதாவது எனது வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பது முன்னரே தெரிந்த சேதியானதால் தானே அன்றைய தீர்ப்பு கல்யாண வீட்டில் பலர் முன்பாக கதைக்கப்பட்ட எதிர்வு கூறலாக மாறி இருந்தது.  

சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த வழக்கில் எனக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டதென்பதை நான் மிகத் தெளிவாக இறுதியாகக் கூறினேன். அவர்கள் விரும்பாத நிலையிலும் சுருக்கமாக நொத்தாரிசு செய்திருந்த மோசடிகளை அட்டவணை மூலம் காட்டினேன். எனக்கு நடந்தது போன்று அநியாயங்கள் வேறு ஒருவனுக்கு நடந்திருந்தால் அவன் கொலைகாரனாக மாறியிருப்பான் என்றும் கூறினேன். அநீதியைத் தெரிந்தே செய்த அந்தக் குழுவுக்கு நான் கூறியது எதுவும் உறைக்க வில்லை. அவர்கள் இப்படியே பழக்கப்பட்டவர்கள் என்பதை முன்னொரு வழக்கிலும் வழக்காளி அவர்கள் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக முகத்திற்கு முன்னால் கூறியதும் அவர்கள் காதில் படாதது போன்று நடந்து கொண்டதில் இருந்து தெளிவாகிறது. இது போன்ற குழுக்கள் நீதித் துறைக்கே அவமானத்தை உண்டு பண்ணுவன.

இந்நாட்டில் யதார்த்தமாக, பக்கச் சார்பற்று, நீதியாக நடந்து கொள்ளும் மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக ஆட்சியாளர், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், கருத்து வெளியிடுவோர் போன்றவர் களிடம் காணப்படுகின்றது. எவரிடம் இவை இருந்தாலும் கூடப் பரவாயில்லை எனலாம். ஆனால் அது நீதித்துறையிலும் இருக்க நேரும் துரதிர்ஸ்டம் பயங்கரமான நிலையை உருவாக்க வல்லது.

குற்றச்சாட்டுக்களை அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி நீதியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் கூட முறை தவறிய வழிகளில் தமது எதிர்ப்பையும், கண்டனத்தையும், ஏன் அதற்கு மேலும் கூட போயிருப்பது கவலை தருவது. இவைகளால் தாம் வகிக்கும் பதவிகளின் தன்மைகளை கௌரவங்களைக் கணக்கில் எடுக்காதோராக மாறிவிட்டனரா என ஐயமுறும் அளவுக்கு நீதித்துறை சார்ந்தோர்கூட போதிய விளக்கமோ, ஆதாரமோ, பொறுப்போ இன்றி, அவசரக் குடுக்கைகளாக காரியமாற்றியிருப்பதன் மூலம் நீதி தேவதைக்கே அவர்கள் சவாலாகியுள்ளமை தெரிகிறது. நான் முன்பந்தியில் கூறிய வழியிலே தாமும் இணைந்துள்ளதாக நிரூபித்துள்ளார்கள்.

சிறந்த நீதிமானாகக் கருதப்பட்ட இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா உமர் கத்தாப் ரலி அவர்கள், தான் யாரைக் கொன்று பழிதீர்க்க வேண்டும் என எண்ணி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரோ, அப்படியான சந்தர்ப்பம் ஒன்று போர் முனையில் அவருக்குக் கிடைத்து அதை நிறைவேற்றாது விட்டுவிட்டார். 

அதற்குக் காரணம் நிலத்தில் மல்லாந்து கிடந்த அந்நபரை உமர் ஈட்டியால் தாக்க முற்பட்ட போது, அந்நபர் உமரின் முகத்தில் காறி உமிழ்;ந்துள்ளார். அதன் பின்னர் அக்கொலை நடந்திருந்தால், உமர் நியாயத்துக்காக அவரைக் கொல்லவில்லை, மாறாகத் தன்மேல் உமிழ்ந்ததற்காக கொன்று விட்டார் என்ற பழியைச் சுமப்பதுடன், அப்படிச் செய்வது சரி என அங்கீகாரம் கொடுக்கப்பட்டு,  முஸ்லிம்கள் அதனைப் பின்பற்றும் இழிநிலை கொண்ட சம்பிரதாயம் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாதே என்பதுதான்,  அவரது வேணவாவாக இருந்துள்ளது. உலகில் இதுவரை தோன்றிய சிறந்த நூறு பேர் என்ற மைக்கல் ஹார்ட் என்பரின் பட்டியலில், ஐம்பத்தோராவது இடத்தைப் பிடித்தார் என்பதற்கு இதுவம் கூட காரணமாக இருக்கலாம். இதனோடு நமது மதத் தலைவர்களின், நீதிபதிகளின் நிலையை ஒப்பிட்டு ஆராய்வது, இனிமேலாவது நீதி தேவதை இரத்தம் சிந்தாதிருக்க வழி செய்யும்.

முடிவாக,  நீதித்துறை, மக்களுக்கு நீதியைச் சரியான வகையில் செலுத்த வேண்டும் என எண்ணுமாயின், தற்போது கைக்கொள்ளப்படும் முறைக்கு மாறாக, உண்மையைக் கண்டறிந்து தீர்ப்பு வழங்கக் கூடியதான வகையில் வசதிகளைச் செய்து அதற்கேற்ப நீதியை நிலைநாட்ட, மக்கள் நிம்மதியாக வாழ வழி வகுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.  

                                                                                                    _ நிஹா -                    
Colombo 03 

September 1st, 2012