Friday, April 12, 2013

ஹலால் சான்றிதழ் இழுபறி நிலையை நீக்க முன்னணி பௌத்த தேரர்கள் முயறசி


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

ஹலால் சான்றிதழ் இழுபறி நிலையை நீக்க                  முன்னணி பௌத்த தேரர்கள் முயறசி


// ஜம்மியத்துல் உலமா நாட்டுக்காக இந்தப் பணியைச் செய்தது. அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதனை முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்க முடியாதென தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர் //

சட்ட ரீதியாக மட்டுமல்ல சமய ரீதியாகவும் அனுமதி இல்லை என்பதை மேற்கண்ட வாசகம் உறுதிப்படுத்துகிறது. அதாவது, அனுமதிக்கப்படாததான ஒரு செயலைச் செய்வது நாட்டினது சட்டத்துக்கும், மார்க்கத்தினது சட்டத்துக்கும் முரணானதே! 

யாருடையவோ இலாபங்களுக்காகவும், தேவைகளுக்காகவும் விடுக்கப்படும் வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்காக குர்ஆன் அனுமதியாததைச் செய்ய முடியாது. இது இறைதண்டனையாகவும் இருக்கலாம்.

42:21 - “ மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதி அளிக்கவில்லையோ, அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா? தீர்ப்பு பற்றிய வாக்கு இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.“

2:168 மூலம் அனைத்தையும் உண்பதற்கு ஆகுமாக்கி, 2:172, 173, 5:3, 5:87, 5:88,6:119, 6:145,6:146,148, 16:114,115,116, ஆகியவற்றின் மிகவும் விரிவாக தடை செய்யப்பட்டவைகளைக் கூறி, அவற்றுக்குக்கூட விதிவிலக்குகளையும் முன் வைத்து தனது கருணையை மனிதர் மீது முழுமையாக்கி வைத்துள்ளான். விதி விலக்கு கூட அவனது கருணையின் பாற்பட்டது என்பதால், அவனது விதி விலக்கை மக்கள் அனுபவிக்க எவரும், எதுவும் தடையாயிருப்பதும் ஓர் வரம்பு மீறலே,அவனது கருணை மனிதரைச் சென்றடைய தடையாயிருப்பதே,  நிராகரிப்பே!

அல்லாஹ்வின் வசனங்களை எத்திவைத்தல் மட்டுமே அனைவரினதும் கடமை, முஸ்லிம்களின் பாதுகாவலனும், நேர்வழி காட்டுபவனும் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதால், அவனுடைய கடமையுள் நாம் மூக்கை நுழையாது, அனுமதித்ததை மட்டுமே செய்வோம்.

ஹறாம் என்றால் எவை என்ற அறிவை மட்டும் மக்களுக்கு அறிவித்து விடுவது என்ற நமது கடமையை நாம் செய்வதே அல்லாஹ் நமக்கு அனுமதித்தது. இதற்கு மேல் செய்ய முற்படின் அது 42:21இல் கூறியதை நிராகரிப்பதாகும்.   ஏவலை ஏற்பதும். அதனை விடுவதும் தனி நபரைச் சார்ந்ததே, வேறு யாரும் அவர்களுக்குப் பொறுப்பாளர் இல்லை. மறுமையில் பதில் கூற வேண்டியோர் குற்றத்தைச் செய்தவர்களே தவிர அல்ல !

அச்சமூட்டி எச்சரிக்கை விடுப்பதைத் தவிர பொறுப்பெடுக்கும் வேலை நமக்கு அனுமதிக் கப்படவில்லை, ஏன் நபிகளாருக்கே அவ்வனுமதி கொடுக்கப்பட வில்லை என்பதால், அவ்வேலையைச் செய்ய முற்படுவது அனுமதியாததை செய்த குற்றத்தை, அல்லாஹ்வின் கூற்றில், “ஷிர்க்“ கை வருவிப்பதே!

Thursday, April 11, 2013

இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி


Commented by nizamhm1933 on

Lankamuslim.org
One World One Ummah

இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி


இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படும் சிந்தனையில் மாற்றம் தேவை.  நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே! நமக்கும், இந்நாட்டின் பெரும்பான்மையினருக்குள்ள அதேயளவு உரிமைகள்  உண்டு. இன்னும் சொல்லப் போனால், மற்றைய இனங்களை விட நாம் இந்நாட்டுக்கு விஸ்வாசமாக நடந்துள்ளோம். சிங்களவரும், தமிழரும் கூட இந்நாட்டில் புரட்சி, உரிமை என்ற பெயர்களில் இரத்த ஆறை ஓட வி்ட்டுள்ளனர். ஆனால் நாம் என்றும் இந்நாட்டின் அரசியல் யாப்புக்கெதிராக கிளர்ந் தெழுந்ததில்லை. நமக்குப் பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் பேச்சு வார்த்தை மூலமும், நீதிமன்றின் மூலமும் அவற்றைத் தீர்த்துக் கொண்டு சிங்கள, தமிழ் மக்களோடு சகஜீவன வாழ்வை மேற் கொண்டு வந்துள் ளோம். நமக்குப் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட போதெல்லாம் நாம் மற்றைய இனங்களைக் குற்றம் கூறவோ, திட்டித் தீர்க்கவோ இல்லை.  மாறாக அதில் ஈடுபட்டவர்களை மட்டும் நியாயமான முறையில் கண்டித் துள்ளோம். அவர்களுடன் அதற்காக என்றும் பகைமை பாராட்டிய தில்லை.  இது இந்நாட்டு முஸ்லிம்களின் பாரம்பரியம்.

ஆனால் அண்மையில் நமக்கும், நமது வழிபாட்டு நிலையங்களுக்கும், சில மத அனுஷ்டானங்களுக்கும் சில மதவிரோத சக்திகளால் பல் வகையில் பிரச்சினைகள் உருவாக்கப்பட்ட போது, சிறந்த முறையில் அதனை அணுகவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.  அல்லது அணுகும் சந்தர்ப்பங்கள் அற்றுப் போயிருந்ததாகவே நினைக்க வேண்டியுள்ளது.

1. பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம் என்ற பொறிமுறையைக் கையாள நம்மிடம் சரியான தலைமைத்துவம் இருக்கவில்லை.
2. பேசக்கூடிய நிலையில் ஸ்தாபன ரீதியாக இயங்கிக் கொண்டிருந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் முத்திரை என்ற பொறியில் தள்ளப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருந்தது. அதனால், அச்சபைக்கு முஸ்லிம்களின் பிரச்சினையில் தலையிடுவதற்கு மேலாக, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பாரிய பொறுப்பை நிறைவு செய்யும் வழிவகைகளில் நியாயங்களைத் தேட வேண்டிய நிலையில் இருந்தது. அத்துடன்  அது பேச்சுவார்த்தை நடத்தும் சக்தியை இழந்திருந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எப்படி ஒரு இனத்துக்காகப் பேச முடியும்? அதனால்,  இறுதியில் யாருடைய வேண்டுகோளுக்காகவோ ஆரம்பிக்கப் பட்டது என்ற உண்மையை மொட்டையாகப் போட்டுடைத்து, மிகுதியை நம்மீது பாரத்தைப் போட்டு, நமக்கு சில ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் தன்னைக் காத்துக் கொண்டது.
3.  அடுத்து, மேற்கண்ட அஇஜஉ வுக்கெதிரான குற்றச்சாட்டு, இஸ்லாத்துக் கெதிரான, முஸ்லிம்களுக் கெதிரான குற்றச்சாட்டாக திரிபுபடுத்தப்பட்டு விட்டதால், முஸ்லிம்கள் கூட பேசும் சக்தியை இழந்து, தம்மை இந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழியில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
4. அடுத்து முஸ்லிம்கள், தமது முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்பினர். அவர்கள் பாவம், அவர்களால் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வேலைகளைச் செய்ய வேண்டிய நிலையில் இரண்டாவது இடத் தையே முஸ்லிம்களின் பிரச்சினைக்கு வழங்கினர். அல்லது தமது பதவி களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நம்மைப் பலிக்கடாவாக்கினர். சிலர் நடைபெற்ற அக்கிரமங்களை மறைத்தும் வேறு வகைகளிலும் வெளிப்படையாகவே வக்காலத்து வாங்கி நியாயப்படுத்த முனைந்தனர். சிலர் தடிக்கும் நோகாமல் பாம்பும் சாகாமல் தமது சாணக்கியத்தை வெளிப்படுத்தினர்.
5.  இறுதியாக கட்சி பேதமின்றி  மேதகு ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், இனிமேல் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் நடைபெறுமானால், அது சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும் என்ற உறுதி மொழியைப் பெற்றனர். இதன் மூலம் நடந்தவைகள் அனைத்தும் தண்டனைகளில் இருந்து விலக்கப்பட்டன. நடந்தவைகட்கு  சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம் தலைவர்கள் வாளாவிருந்ததை மிக நுட்பமாக ஜனாதிபதி வெளிப்படுத்தினாரா?
6. எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ்லிம்களும், அஇஜஉவும், அரசியல் வாதிகளும், ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக சில முஸ்லிம் நாடுகள் வாக்களித்ததையும், தாம் இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகளையும் கூறி, எம்மைக் காப்பாற்றிக் கொள் ளும் முயற்சியில் ஈடுபட்ட னர்.  இதுதான் புரியாத புதிர்.  இந்நாட்டுக்கு ஜெனிவா பிரச்சினை ஏற்படா திருந்தால் என்ன காரணத்தைக் கூறி இருப்பர்.  நமக்கிழைக்கப்பட்ட அநியா யத்தை வெளிப்படுத்த, நீதி கேட்க,முஸ்லிம் நாடுகள் இந்நாட்டை ஆதரித்திருக்க வேண்டுமா? அடுத்து, ஜெனிவாவில் அரபு நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித் திருந்தால் என்ன செய்திருப்பர்?
7. மேற்கண்ட நடவடிக்கை  மூலம், முஸ்லிம்களின் பிறப்புரிமை கேள்விக் கிடமாக்கப் பட்டு,  உரிமைகளைக் கைநழுவவிட்டு,  பிச்சைக்காக ஏங்கும் நிலையை ஏற்படுத்திய புதிய பாரம் பரியம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.  இன்னும், நாளை அரபு நாடு இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுமாயின், அவர்களை நாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை, இந்நாட்டு அரசின் மூலமாகவே நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடலாகாது. இது களநிலவரம்.

நாம், நமக்கும், நமது மார்க்கத்துக்கும் பிரச்சினை வரும்போது,   முதலில் நம்மை, நமது செயற்பாடுகளை  நிதர்சனமாக அணுகி, ஆக்கபூர்வ விமர்சனத்தைச் செய்து, உண்மை நிலையைக் கண்டறிந்து, நம்மிடமுள்ள குறைகளை அகற்ற முனைய வேண்டும். இதில் வெட்கப்படவோ, இழிவாக நினைக்கவோ, தோல்வியாக எண்ணவோ இடமில்லை. இது நமது நிலையை அந்நியர் மத்தியில் உயர்த்தவே செய்யும். இதுவே பெரிய எத்திவைத்த லாகும். வீரம் என்பதே விவேகம்தான்.

நமது பக்கத்தில் குறைகள் இல்லாத போது, நமக்கேற்பட்ட பிரச்சினைகள் ஏன் தற்போது  ஏற்பட்டுள்ளன என்பதை குர்ஆனிய அடிப்படையில் அணுகி அறிய வேண்டும். நாம் குர்ஆனின் அடிப்படையில வாழாத போது அல்லாஹ்வின் சோதனை இவ்வாறெல்லாம் வர இடமுண்டு.

நம்மீது அந்நியருக்கு ஏதாவது காரணங்களால் அச்சமோ, அசௌகரியமோ, பாதிப்புக் களோ ஏற்பட்டிருந்தால் அவைகளைக் களையும் வழிவகையில் செயற்பட வேண்டும்.

புத்திஜீவிகள் கூடி, பிரச்சினைகளை எப்படி தடுக்கலாம் என்ற வழிவகைகளைக் கண்டறிந்து. நீதியின் மூலமாகவோ, அன்றி பேச்சுவார்த்தையின் மூலமாகவோ தீர்ப்பதற்கான பொறிமுறைகளைப் பாவித்து, பிரச்சினையை ஒழிக்க வேண்டும்.

நாம், நமது பிறப்புரிமைகளையும், நமக்கு ,நம் முன்னோர்கள் பெற்றுத் தந்த உரிமைகளையும், விட்டுச் சென்ற  நிலவுரிமையையும்,  நற்பெயரையும், கௌரவத்தையும் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும்.

 நாம் சரியான வழியில், நின்று கொண்டு. அல்லாஹ்விடம்  பிரார்த்திக்க வேண்டும்.

Wednesday, April 10, 2013

‘இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது’ - தம்மானந்த தேரர்



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

‘இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது’   

- தம்மானந்த தேரர்


மதம் பின்பற்றப்படுவதற்காக, அமைதி வாழ்வை, ஆத்ம மேம்பாட்டை அடிநாதமாகக் கொண்டு, அனைவருடனும் சகஜீவன் வாழ்வை மேற்கொண்டு, இறைதிருப்தியைப் பெற்று, இம்மை, மறுமை இரண்‌டிலும் வெற்றி காண்ப‌தற்காகவே இறைவனால் அருளப்பட்டது.

அரசியல் யாப்பும் அனைவராலும், மதித்துக் காப்பாற்றப்படுவதன் மூலம் நல்லாட்சி செய்யப்பட்டு உலகை உய்விக்க வேண்டும். அதற்காகவே ஒவ்வொரு நாட்டிலும் யாப்பு யாக்கப்படுகின்றது.  நாட்டை ஆள முன்வந்துள்ள எத்தனை பேர் யாப்பில் என்னென்ன உண்டு என்பதை அறிந்து வைத்துள்ளனர்? யாப்பை அறிந்திருக்க வேண்டும் என்பதையாவது அறிந்தோர் எத்தனை பேர்? யாபபில் ஒர் பரீட்சை நடத்தினால்  உண்மை வெளி வரும்!

மதத்தைப் பின்பற்றுவோரால் உலகில் பிரச்சினைகள் உருவாகியதாக வரலாறு கிடையாது. பின்பற்ற வேண்டிய மதத்தைக் காப்பாற்றுவதற்காக உருவாகியவர்களாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் உலகில் நடந்தேறியுள்ளன.  மதம் பின்பற்றப்பட வேண்டியதே தவிர காப்பாற்றப்பட வேண்டியதல்ல. பின்பற்றுவதால் காப்பாற்றப்படுவது. பின்பற்றப்படாத மதம் தானாக அழிந்துவிடும். மதம் தனியாள் நலம் காண்பது.

மதம் பின்பற்றப்படுமானால் உலகில் சாந்தி, சமாதானம் மட்டுமே நிலவும்.  ஆதலால், மதபோதகர்களாக தம்மை வரித்துக் கொள்வோர், முதலில் தமது மதத்தைப் பின்பற்றுங்கள். மதத்தைக் காப்பாற்றமுனைந்தால் அது அழிவிற்கே வழிவகுக்கும். அதனால் பின்பற்றுங்கள் மதம் பாதுகாக்கப்படும். அத்தோடு உடலகின் அரைவாசிப் பிரச்சினைகள் தாமாக மறைந்துவிடும்.
யாப்பு மக்கள் நலம் சார்ந்தது.

மிகுதி ஆள்வதற்காகக் கச்சைகட்டிக் கொண்டு வெளிப்படுபவர்களால் தோற்றுவிக்கப்படுவது. அதனைத் தீர்க்க அவர்கள் தாம் ஆளப்பட வேண்டிய அரசியல் யாப்பை மதித்து, அதனைக் காப்பாற்ற முயற்சிப்பதில்லை. அதனை எப்படிப் பாவித்து தம் இலக்கை அடையலாம் என்ற வகையில் பின்பற்றப்படுகின்றன. காப்பாற்றும் வேலை நடந்திருந்தால் உலகு அமைதிப் பூங்காவாக மாறியிருக்கும். உலகின் மிகுதிப் பிரச்சினையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். அதனால் யாப்பைக் காப்பாற்றுங்கள், சரியான பின்பற்றல் நடைபெறும்.  நாடும் மக்களும் நன்மை அடைவர். அது தோல்வி காணுமாயின் யாப்பில் பிழையுள்ளது. திருத்த முனையுங்கள். சரியான முறையில் பின்பற்றியும் நல்லது நடபதில்லை என அறிந்தால், வேறு மதங்களைப் பரீட்சியுங்கள். வழி கிடைக்கலாம். அல்லது வழி காட்டப்பலாம்.

மதம் பின் பற்றப்பட வேண்டியது. ஆனால் பின்பற்றப்படுவதில்லை. அரசியல் யாப்பு காப்பாற்றப்பட வேண்டியது, அது காப்பாற்றப்படுவதில்லை. முன்னையது பிழையான வழியில் காப்பாற்றும் வேலையைச் செய்ய முற்பட்டு குழப்பத்தை விளைக்கின்றது. பின்னையது, பிழையான வழியில் பின்பற்றப்பற்றப்பட்டு குழப்பத்தை விளைவிக்கின்றது.  இரண்டிலும் அழிவுதான் மிஞ்சுகிறது. எதிரும் புதிருமான இரு துறைகள் அழிவு என்ற வகையில் ஒற்றுமை காண்கின்றன.


செல்வம் அடைக்கலநாதன்,சபை தலைவரின் அலுவலக அறைக்குல்: எமக்கு பெரும் சந்தேகம்: சரூக்


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah

செல்வம் அடைக்கலநாதன்,சபை தலைவரின் அலுவலக அறைக்குல்: எமக்கு பெரும் சந்தேகம்: சரூக்

http://lankamuslim.org/2013/04/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/#comment-9080

போராட்டம் என்ற பெயரில் அவர்கள் செய்த மாறாட்டங்கள் என்ன அவ்வளவு இலகுவாக அவர்களைவிட்டுப் போய்விடுமா என்ன? முன்னர் ஆயுதம் தாங்கி நடந்த அடாவடித்தனங்கள், தற்போது அரசியல் அதிகாரம் என்ற போர்வையில் அரங்கேறுகிற‌தோ?  அவர்கள் வழி தனிவழி !

Monday, April 8, 2013

இஸ்லாத்துக்கு எதிரான செயல்பாடா ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி உறுதி மொழி


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

இஸ்லாத்துக்கு எதிரான செயல்பாடா ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி உறுதி மொழி


மலையைக் கல்லி எலியைப் பிடிப்பது என்றொரு பழமொழி நம்மத்தியில் உள்ளது.  அதுதான் தற்போது நடை பெற்றுள்ளது.  

இந்நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்ற அனைத்து அடாவடித்தனங்கள் சம்பந்தமாக முஸ்லிம் அரசியல் தலைமை களுக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்ததையில் இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது, அதாவது இனி முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறவுள்ள அடாவடித்தனங்கள்  சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனபதே! 

உண்மையில் அச்சத்தில், சந்தேகத்தில், விரக்தியில் மூழ்கியிருந்த முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி அவர்களின் உத்தரவாதம் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 

இதிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம், சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டில், அந்நாட்டின் தலைவர் கூட சட்டத்தின் மூலமே தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே! ஜனாதிபதியிடம் முறையிட்டாலும், அவரும் இறுதியாக சட்டத்தையே நாட வேண்டும்.

முஸ்லிம்கள் தவறிய விடயமான நடந்தவைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை, தற்போதைய பேச்சு வார்த்தையிலும் தவறவே விடப் பட்டுள்ளது. அதாவது இதுவரை நடைபெற்ற முஸ்லிம்களுக்கெதிரான குற்றச் செயல்கள் பற்றிய எதுவும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை போன்றே இச்செய்தியில் இருந்து தெரியவருகிறது.

இது உய்த்துணரப்பட வேண்டிய விடயம்.  இதனை, 'நடைபெற்றவைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை' என்ற அங்கீகாரமாக  நினைக்க வேண்டியிருப்பதில் தவறா எனவே வினவ வேண்டியுள்ளது.

Sunday, April 7, 2013

எனக்கு ஒரு சந்தேகம் !!


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

எனக்கு ஒரு சந்தேகம் !!

வரலாற்று உண்மைகள் பற்றிக் கூறுமிடத்தில், யூகங்களோடு ஒட்டிய கருத்துக்கள் அல்ல முக்கியமானது. ஆய்வுகளே வேண்டற்பாலது.

சிதறிக் கிடக்கும் சில அரிய உண்மைகளான நாற்பது முழ நீளமுடைய இஸ்லாமிய இறைநேசர்களின் (அவ்லியா) கப்றுகள் எனப்படும் அடக்கஸ்தலங்கள் கடற்கரைப் பிரதேசங்களான மன்னராரின் தலைமன்னார், கீரி போன்ற கிராமங்களிலும், கிழக்கில் வெந்நீரூற்றுக்களின் அருகாமையில் அமைந்துள்ள மலைக்குன்று ஒன்றிலும், வடமேற்கில் அம்பகந்த கடற்கரையிலும், இன்னும் பல இடங்களிலும் காணப்படுவது, இலங்கை முஸ்லிம்களின் முன்னோர்கள், மனிதர் அறுபது அடி உயரமாக இருந்த காலங்களிலேயே இலங்கையில் வசித்திருக்கிறார்கள் என்பதற்கான மிகச் சிறந்த ஆதாரம்.

மேலும், குர்ஆன் கூறும் முதல் மனிதனான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவனத்தில் இருந்து இறங்கிய இடம் இலங்கையின் அதியுயர்ந்த மலையான Adamspeak எனவும் தமிழரால் சிவ‌னொளிபாத மலை எனவும் சிங்களத்தில் ஸ்ரீபாத எனவும் மலையுச்சியில் காணப்படும் காலடிகள் ஏகதெய்வ வணக்கவாளரான ஆதம் காலத்தில் இருந்தே இந்நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைப் பறைசாற்றுகின்றது. அவர்களின் வழிவந்தவர்களே தற்போதைய முஸ்லிம்கள். அந்த வகையில் பார்க்கும் போது, இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு மனித தோற்றம் ஏற்பட்ட காலந்தொட்டே நடைபெற்றிருக்கின்றது என்பது மறுக்கவோ மறைக்கவோ, மறக்கவோ முடியா உண்மை.

இந்த உண்மைகளை அறிந்த முஸ்லிம்களான அராபியர் இலங்கைக்குப் பின்னர் வந்திருக்கின்றார்கள். அவர்களது வருகை கிபி 673இல் தொடங்கியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டே.  மன்னார் மற்றும் இடங்களில் காணப்படும் மினரட் எனவும் மினாரா எனவும் அழைக்கப்படும் வெளிச்ச வீடுகளாகப் பாவிக்கப்படும் அழகிய நெடிய மாடங்கள் அவர்களாலேயே அமைக்கப்பட்டன என கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்கள் தமது “இஸ்லாமிய கலையும் பண்பும்“ என்ற கட்டுரையில் கூறியுள்ளார். அத்தோடு இஸ்லாமியரின் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கும், மேற்கிந்திய துறைமுகங்களுக்கும் அடிக்கடி வந்து போயிருக்கின்றன எனக் கூறியுள்ளார். இந்நிலை கிபி ஒன்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நிலவியதாகக் கூறுகிறார்.

மேலும், இலங்கைக்கு வந்த அராபியர் இங்கு வாழ்ந்த ஏக தெய்வக் கோட்பாட்டைப் பின்பற்றி வாழ்ந்த தமிழ்  பேசும் பெண்களை முடித்திருந்தமையால்தான் அவர்கள் தமிழைப் பேச வேண்டிய கட்டாய நிலையில், தம்மனைவியருக்கு அரபை கற்பித்துள்ளனர். குர்ஆனை அரபியில் ஓதி வந்த முஸ்லிம்களுக்கு அது இலகுவாக இருந்திருக்கும்.

அதனால் தொடர்பாடலுக்கான அவசியம் ஏற்பட்ட போது, அவர்கள் ஓர் புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர். அது தமிழை அரபியில் எழுதும். முறை. அதனை ஆங்கிலத்தில் நாம் Transliteration என்போம். அப்படி எழுதப்பட்ட பாஷையே இன்றும் நம் மத்தியில் காணப்படும் “அரபுத் தமிழ் “ என்ற மொழி.  ஆக இலங்கை முஸ்லிம்கள் வந்தேறு குடிகளல்லர் அவர்களது தோற்றம் மனித உற்பத்தியின் வரலாறோடு பின்னிப் பிணைந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதரலிங்கத்தின் அறிக்கை முற்றிலும் பொய்யானது


Commented by nizamhm1944 on

Lankamuslim.org
One World One Ummah

http://lankamuslim.org/2013/04/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/

பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதரலிங்கத்தின் அறிக்கை முற்றிலும் பொய்யானது

1990 இல் நிராயுதபாணிகளான வடக்கு முஸ்லிம்கள் பாஸிசப் புலிகளால் அவர்தம் பிற்நத மண்ணைவிட்டு வெறுங்கையுடன் விரட்டப்பட்ட போது அவர்கள் வாழ்ந்த காணிகள், கிராமங்கள், பட்டினங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன.

அக்காணிகளுக்கு உரிமையாளர் முஸ்லிம்களே.  அக்காணிகள், களவாடப்பட்டோ, கபளீகரம் செய்யப்பட்டோ இருக்கலாம் அல்லது அவை விற்பனையாகிக் கூட இருக்கலாம்.  அக்காணிகளில் 1990 இல் யார் சொந்தக்காரர்களாக இருந்தார்களோ, அல்லது குடியிருந்தார்களோ, அவர்களுக்கு அவைகளை மீளவும் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட வேண்டும்.

தேவை ஏற்படின் அதற்காக விஷேட சட்டம் யாக்கப்பட்டு, அக்காணிகள் உரியவர்கள் கைக்குச் சென்றடைய வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அதுபோன்றே, அவர்கள் வாழ்ந்த ஊர்கள் பெயர் மாற்றமின்றி, பழைய பெயர்களுடனே அந்த முஸ்லிம்களிடமே கையளிக்கப்பட வேண்டும்.

இதற்கு மேல், அவர்களுக்கு காணிகள் தேவை என்றால், அவற்றை அரசிடமிருந்து சட்டபூர்வமாகப் பெற்றுக் கொடுத்து அவர்களது இழப்பீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்கள் பழைய நிலைக்குத் திரும்பும் முறையில் உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாழ்வாதாரங்கள் சீர்‌செய்யப்பட்டு, எவரிலும் தங்கி வாழாது சுதந்திரமாக வாழ வழி செய்யப்படல் வேண்டும்.

அவ்வாறில்லாமல் குடியேற்றங்கள் நடைபெறுவது, அம்மக்களை மீண்டும் சட்டியிலிருந்து அடுப்பில் தள்ளிவிட்ட நிலையையே ஏற்படுத்தும்.