Sunday, January 13, 2013

அதி சிரேஷ்ட சங்கைக்குரிய அனைத்து மகாநாயக்க பீட தேரர் அவர்களுக்கும்,


அதி சிரேஷ்ட சங்கைக்குரிய
அனைத்து மகாநாயக்க பீட தேரர் அவர்களுக்கும்,

இலங்கை முஸ்லிம்கள் சார்பாக
 ஓர் பகிரங்க வேண்டுகோள்!

இந்து சமுத்திரத்தின் முத்தாக, இயற்கை வனப்புடன், ஏற்றமிகு தோற்றத்தினைக் கொண்டு தனக்கு நிகர் தானே என்றவாறு இலங்கிக் கொண்டிருக்கும் இவ்வழகு மிகு இலங்கை மணித்திரு நாட்டில் பிறந்தமைக்காக முதலில் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்.

அடுத்து எமது பெருமதிப்பையும், கௌரவத்தையும் சங்கைக்குரிய தேரர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

எமது அரேபிய முன்னோர் இந்த நாட்டின் பெருமையையும்,  இங்கு விளையும் வாசனைத் திரவியங்கள்யு முத்துக்கள், யானைத் தந்தங்கள் போன்றவற்றைப் பெற்றுச் செல்வதற்காக இத்தீவிற்கு பயணம் மேற் கொண்டிருந்தனர். அப்படி வருகை தந்த காலங்களில்,  இங்குள்ள மக்களின் உயர் பண்புகளினால், உபசரனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு இங்கேயே சிலர் வாழத் தொடங்கினர். அவர்கள் அராபிய மொழி பேசுவோராயினும் முஸ்லிம்களாகவே இங்கு கால் பதித்து முஸ்லிம் குடிமக்களாகவே இற்றைவரை வாழ்ந்து வருகின்றனர்.

அராபியருக்குப் பின்னால் போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர் வருகை இலங்கைக்கும் அதன் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள வருக்கும், பௌத்த மதத்துக்கும் சோதனைக் காலமாகவே இருந்து வந்துள்ளதை நாம் கூறி நீங்கள் தெரியத் தேவையில்லை. 

முஸ்லிம்களின் வருகையால் இந்நாடு அமைதியை இழக்கவில்லை. அதன் அந்தஸ்தை ஈடு வைத்திடவில்லை. மாறாக இங்கு பொருளாதாரம் பெருகியது. மேற்குலகில், இந்நாட்டின் மேன்மை விளங்கியது. உலகின் நாகரிகங்கள் அறிமுகமாயின. வந்த அராபியர் தம் அரபி மொழியை இங்கு பரப்பவில்லை. மாறாக இங்கு காணப்பட்ட மொழிகளைப் பயின்றனர். அதற்கு மேலதிகமாக அரபுத் தமிழ் என்ற புதிய மொழியை உருவாக்கி அராபிய நாகரிகங்களை, விஞ்ஞான,  தொழில்நுட்ப, மருத்துவ, வானிலை போன்ற அரிய பல பொக்கிஷங்களை நூல் வடிவில் யாத்து மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவி செய்தனர்.

அவர்கள் இந்த நாட்டை வெகுவாக நேசித்தனர் ஆனால் தமதாக்கிக் கொள்ள வேண்டுமென்று எப்போதும் நினைத்திலர். அது மட்டுமல்ல தமது மதத்தைக்கூட அவர்கள் பரப்பும் முயற்சியில் இறங்கியிருக்க வில்லை.  தற்போதைய முஸ்லிம் களின் சனத்தொகை சாதாரண இயற்கையான வளர்ச்சியே தவிர மதமாற்றங்களால் ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதை எவரும் எளிதில் ஏற்றுக் கொள்வர். இஸ்லாமிய கலாச்சாரத்தைக்கூட சிங்கள மக்களில் புகுத்தவில்லை. மாறாக அவர் களுடன் புரிந்துணர் வோடு அந்நியோண்ய வாழ்க்கையையே மேற் கொண்டனர். இந்நிலை இன்றும் இலங்கையின் மூலை முடுக்குகளில் எல்லாம் முஸ்லிம்கள் சிங்கள பௌத்தருடன் இரண்டறக் கலந்து சிங்களத்தைப் பேசிக் கொண்டு வாழ்வதில் இருந்து புரிந்து கொள்ளக் கூடியது.

அப்படி வந்த முஸ்லிம்கள் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்ட மைக்கான காரணங்கள், சிங்கள மொழியில் தமது இஸ்லாம் மார்க்கத் துக்குரிய நூல்கள் காணப்படாமையும், அயல்நாடான இந்தியாவின் தமிழ் நாட்டில் இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகி இருந்த மையும் ஆகும். அவர்கள் தமது மார்க்க விடயங்களை அறிந்து கொள்ள அயல் நாட்டின் தமிழ் மொழி மூல நூற்களே உதவி செய்தமையால் அவர்கள் தமிழைத் தமது மொழியாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. அத்தோடு தமது மனைவியரையும் அங்கிருந்து பெற்றுக் கொண்டமையும் ஒரு காரணமாகலாம் எனத் தென்படுகிறது. ஆயினும் சிங்களம் பேசுவதில் முஸ்லிம்கள் சிங்கள வருக்கு இளைத்த வர்கள் என்றவாறாக சிங்களத்தையும் பயின்றும், பேசியும் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் பிரதேசங்களில் சிங்கள மொழி மூலப் பாடசாலை கள் காணப்படுவது முஸ்லிம்களின் சிங்களத்தையும் கற்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது.

மேலும் அந்நிய நாட்டினர் இங்கு ஆக்கிரமிபுச் செய்த போதெல்லாம் இங்கிருந்த முஸ்லிம்கள் தமது முழுமையான ஆதரவை உளமாற சிங்கள மன்னர்களுக்கே வழங்கியதுடன், சிங்கள மன்னரோடு தோளோடு தோள் சேர்ந்து அந்நியப் படைகளுடன் போர் புரிந்தும் இருக்கிறார்கள்.  இவை வரலாறு நெடுகிலும் காணப்படுவது. இதனை நன்குணர்ந்ததன் பயனாக சிங்கள அரசர்கள் தமது பாஞ்சாலைகளுக்குப் பக்கத்திலேயே பள்ளி வாசல்களை அமைப்பதற்குக் காணிகளைக் கொடுத்து பள்ளிவாசல்களை யும் அமைத்து தமது நன்றிக் கடனைச் செலுத்திக் கௌரவித்துள்ளனர். தமக்குச் சமத்துவமாக தமது அரச அவைகளிலும் பதவிகளை வழங்கி அவர்களை ஆதரித்து வந்துள்ளனர்.

இது மட்டுமல்ல இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வரும் பல்வேறு சலுகைகள் எந்த நாட்டிலும் காணமுடியாதவை எனலாம். அதற்காக என்றும் முஸ்லிம்கள்  இந்நாட்டுக்கும் மக்களுக்கும் கடமைப்பட்டுள்ள வர்களே. இவை அனைத்தும் பௌத்த சிங்கள மன்னர்களாலும், சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களாலும் பௌத்த பீடங்களின் அனுசரனை யுடன், பெருமனது கொண்டு செய்து கொடுக்கப் பட்டவை என்பதிலிருந்து முஸ்லிம்கள் எந்தளவு சிறப்பான உறவு முறையூடன் சிங்களவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. இந்த சலுகைகள்இ வசதிகள் அனைத்தும் இதயபூர்வ புரிந்துணர்வோடு பெற்றுக் கொள்ளப்பட்டவையே தவிர போராடிப் பெற்றவை அல்ல என்பதை பெருமையோடும் நன்றியோடும் நினைவுகூர வேண்டியுள்ளது. 

இந்த நாட்டில் 1914 இல் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் கலவரம் என வர்ணிக்கப் பட்டதற்கும் இலங்கை முஸ்லிம் களுக்கும்இ இலங்கைச் சிங்களவருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அது முற்று முழுதாக இந்திய முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இலங்கை சிங்கள வியாபாரி களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே என்பதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள்.  

இந்த நாட்டில் நடைபெற்ற புரட்சிகள், சதி நடவடிக்கைகள் அனைத்திலும் எவ்வகையிலும் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பது எமது நாட்டுப் பற்றை, நாட்டின் தலைமைக்குக் கட்டுப்படுதலை, நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து இணங்கி வாழ வேண்டும் என்ற எமது மதத்தின் கொள்கையை வெளிப்படுத்துவனவே.பெரும்பான்மைச் சிங்கள இளைஞர் இந்த நாட்டில் துப்பாக்கி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்து நாட்டையே அல்லோல கல்லோலப்பட வைத்திருக்கின்றனர். தமிழர்கள் இந்த நாட்டில் தமது உரிமைகளுக்காகத் தொடங்கிய போராட்டங்கள் இறுதியில் ஆயுதப்போராட்டமாக மாறி இந்நாட்டு மக்களை வகை தொகையின்றிக் கொன்று இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தமை யாவருமறிந்ததே!

ஆனால்முஸ்லிம்களால் இந்த நாட்டுக்கோ, ஆட்சிக்கோ, பௌத்தத் துக்கோ என்றும் எவ்வித அச்சுறுத்தலும் இருந்திருக்கவில்லை என்பதே வரலாறு கூறும் உண்மை. 

அண்மைக் காலங்களில் ஆங்காங்கே நடைபெற்ற, சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட, சிறுசிறு இனமுறுகல்கள் தனிநபர்களால் அல்லது கட்சி அரசியலால் உருவாக்கப்பட்டவையே. அவைகளை அவ்வக் காலங்களில் ஆட்சி நடத்திய அரசுகள் முளையிலேயே கிள்ளி எறிந்தே இருக்கின்றன.

இந்த நாட்டை உலுப்பிக் கொண்டிருந்த யுத்தத்தின் போதுகூட முஸ்லிம்கள் அந்தப் போராட்டங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம்கள் அப்படி இருந்ததனால்தான் கிழக்கில் காத்தன்குடியிலும், ஏறாவூரிலும் பள்ளிவாசால்களில் தொழுகையில் இருக்கும் போது வகை தொகையின்றிக் குரூரமாக புலிப்பயங்கர வாதிகளால் கொன்றொழிக்கப் பட்டனர். மூதூரில் இருந்து முஸ்லிம்கள் துரத்தி யடிக்கப்பட்டனர். வடக்கில் ஐந்து மாவட்டங்களில்  அமைதி வாழ்வை மேற்கொண்டிருந்த முஸ்லிம்கள் அதே புலிப் பயங்கரத்தால் எதுவித காரணமுமின்றி, ஆனால் அவர்களுடன் சேர்ந்து போராடவில்லை, ஒத்துழைப்புத் தர வில்லை என்ற காரணங்களால் கொலைப் பயமுறுத்தலுடன் உடமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வெற்றுக் கையினராக வெந்த மனத்துடன் ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கப் பட்டனர். 

இந்த இனச் சுத்திகரிப்பால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இற்றைவரை சிங்கள மக்கள் மத்தியில் தெற்கில் அகதி வாழ்வை மேற்கொண்டு வருகின்றனர் என்பது தாங்கள் அறியாததல்ல.

இந்த நிலையில் அண்மைக் காலமாக முஸ்லிமகள் தமது மதக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறான பல சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களைத் தகர்த்தல் என்ற அளவுக்கு, இந்த குழப்ப நிலை வளர்ந்துள்ளது என்பது இந்த நூற்றாண்டில் நடக்கும் பிற்போக்குவாத நிலை. அதுவும் பௌத்த மதத்தின் பெயரால் இவை செய்யப்படுவது, புத்த மதக் கொள்கை யினையே தலைகுனிய வைக்கும் செயலாகவே கருதப்படுகிறது. இது இந்த நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்கள் பரவுவதற்கும், நாட்டுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் காரணமாகின்றன. 

மனித உரிமை மீறல் சம்பந்தமாக இந்த நாடு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வகையான வக்கிர எண்ணங்களும் நடவடிக்கைளும் இலங்கையின் சுயாதிபத்தியத்துக்கே அச்சுறுத்தலை உருவாக்கவல்லது.

இந்த சிறிய நாடு இன்னுமொரு பேரழிவைத் தாங்கிக் கொள்ளாது என்பதை முப்பது வருட வரலாறு நமக்குத் தந்து கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலையில் முஸ்லிம் நாடுகள் மட்டுமே இந்த நாட்டுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வகைச் செயற்பாடுகள் அவர்களது உதவியையும் இல்லாமல் ஆக்கிவிடுவதற்காகத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுவதாகவே நம்ப வேண்டியுள்ளது. 

என்றுமில்லாதவாறு இன்று, அதுவும் ஐநாவில் நீதி விசாரனைக்கு இந்நாடு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடத்தப்படுவதில் வெளியார் தலையீடுகளும் இருக்க வேண்டும் என்றே நம்ப வேண்டியுள்ளது.

ஆதலால், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தக்க தருணத்தில் தக்க அறிவுரைகளைக் கொடுத்து இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருவதற்கான தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, இந்நாட்டையும்,  அதன் பாரம்பரியத் தையும், கலாசாரத்தையும், காருண்யத்தையும் காப்பாற்றி சமாதான சகவாழ்வையும் மேம்படுத்த உதவுமாறு உங்களை இறைவன் பெயரால் கேட்டுக் கொள்கிறோம். 

தங்களுக்கு எல்லாம்வல்ல இறைவனின் ஆசிகள் கிடைக்கப் பிராத்தித்து,

தங்கள் மேலான நடவடிக்கையை எதிர் நோக்கியோராக,

அமைதி வாழ்வை விரும்பும் 

இந்நாட்டை நேசிக்கும் முஸ்லிம்கள்.


COLOMBO 03.
2013.01.14


No comments: