Thursday, January 3, 2013


ஹலால் சான்றிதழும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்.


மேற்கண்ட தலையங்கத்தில் எழுத வைத்தது, இன்று இந்த நாட்டில் முஸ்லிம்களும், முஸ்லிம் வர்த்தகர்களும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்கும் பிரச்சினையே!


இஸ்லாம் தோன்றி 1400 வருடங்களைத் தாண்டியுள்ளது. இலங்கையிலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இஸ்லாம் பின்பற்றப்பட்டு வருகின்றது.   இத்தனை காலமும் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையை ஹறாம், ஹலால் பேணியே நடத்தி வந்துள்ளனர்.  அதில் அவர்கள் எதுவித கஷ்டங்களையும் அனுபவித்ததாகத் தெரியவில்லை. உலக முழுவதும் முஸ்லிம் அல்லாதவர்கள்கூட இஸ்லாமியரின் ஹறாமான உணவுகளை அறிந்தே வைத்திருக்கின்றனர் என்பது அல்லாஹ்வின் சட்டத்தின் ஏற்புடைத் தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரம். மேலும், இது ஒரு சிங்கள பெரும்பான்மை யைக் கொண்ட நாடாக இருந்தாலும், இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். 


முஸ்லிம்கள் இனசௌஜன்யத்தைப் பேணி,  அபிப்பிராய பேதங்களற்ற, அந்நியோன்ய வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்கள். இதனை, குறிப்பாக தென் இலங்கையிலேயே அதிகளவு முஸ்லிம்கள் சிங்கள பெரும்பான்மை சமூகத்தோடு இரண்டறக் கலந்து சிங்களத்தைப் பேசி, தமது மார்க்கத்தைப் பேணி, வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதிலிருந்து அறிந்து கொள்ள லாம். சிறு சிறு  தொந்தரவுகள் என்றாவது சில விஷமிகளால் கொடுக்கப் பட்டாலும், இதுகால வரை, அவர்கள் தமக்குள் எவ்வித பிரச்சினைகளு மின்றியே வாழ்ந்து வருகின்றனர்.  


இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்திய முஸ்லிம் வர்த்தகர் களுக்கும் சிங்கள வர்த்தகர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கே சிங்கள முஸ்லிம் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. இழப்புகளுடன் அது அடக்கப்பட்டது. இதில் பொது மக்களின் ஈடுபாடு பெருமளவு இருக்கவில்லை.  ஆனால், தற்போது பொதுமக்களும் உள்வாங்கப்படும் சாத்தியத்தை ஹலால் சான்றிதழ் வழங்கும் அஇஜஉ வின் நடைமுறை உருவாக்கி உள்ளமையையும் அறியலாம்.


அக்காலங்களில் காலனித்துவவாதிகளின் உதவியுடன், வடக்குத் தமிழர் களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு, முஸ்லிம்கள்  முகம் கொடுத்ததாகத் தெரிகிறது.  ஆய்வுகளின்படி, முஸ்லிம் பள்ளிவாசல்களாக இருந்து அபகரிக் கப்பட்ட இடங்களிலேயே தற்போதைய நல்லூர் கந்தசாமி கோயிலும், அற்புத மாதா கோவிலும் நிலை பெற்றுள்ளதாகத் தெரிகின்றது. கிழக்கிலும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்தே வந்துள்ளன. அது போன்று தெற்கிலும் சிங்களவருக்கும் முஸ்லிம் களுக்கும் அவ்வப்போது சண்டைகள் நடந்தே உள்ளன. தெற்கில், கிழக்கில்  நடந்தவை தனிப்பட்ட சிறு காரணங்களால் ஏற்பட்ட குழு மோதல்கள் என்றே கூற வேண்டும்.


வடக்கில் 1990இல் பயங்கரவாதப் பாசிசப் புலிகளால் வெற்றுக்கையினராகக் கொலைப்  பயமுறுத்தலுடன் வெளியேற்றி  நடத்தி வைக்கப்பட்ட  இனச் சுத்திகரிப்பு, உலக வரலாற்றைக் கறைபடுத்திய அசிங்கம், அராஜகம்.  வரலாற்றில் எங்கும் நடை பெற்றிராதது. நடைபெறக் கூடாதது. நடைபெற அனுமதிக்கப்படவும் கூடாதது.


நிலை இவ்வாறு இருந்திருக்க, தற்போது நாடளாவிய ரீதியில் தெற்கில் முஸ்லிம்களுக்கு  எதிராக நிறுவனப்படுத்தப்பட்ட வகையில்,  பல்வேறு தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். பத்திரிகைகள்,  இலத்திரணியல் ஊடகங்கள் கூட இதற்காகப் பாவிக்கப்படுகின்றன.  பௌத்த பிக்குகளே முன்னின்று பல தகர்ப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளனர். அரசும் பார்த்துக் கொண்டே இருக்கின்றது. சில கிறிஸ்தவ, இந்து ஆலயங் களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கின்றன.  


என்றுமில்லாதவாறு முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட ஓர் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கும் இந்நிலை, மிகப் பயங்கரமான நிலையை முஸ்லிம்களின் இருப்புக்கும், வர்த்தகத்துக்கும், சமய அனுஷ்டானங் களுக்கும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதைக் கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக் கின்றது. இவ்வெதிர்ப்பு அலைகள் அனைத்திலும் ‘ஹலால் சான்றிதழுக்கு’ எதிரான கோஷங்களே முக்கியமான இடத்தை வகிக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே!  முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுவதற்கு எதுவு மில்லாத நிலையில் இருந்த பேரின சமூகத்தைச் சேர்ந்த பிற்போக்கு இனவாதக் கும்பல்களுக்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளதாகவே தெரிகிறது, ‘ஹலால் சான்றிதழ்’   என்ற அஇஜஉ வால் தன்னிச்சையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை.


முஸ்லிம்கள் ஆகிய நாம்,  நடுநிலையான, முன்மாதிரியான சமூகமாகப் படைக்கப்பட்டுள்ளோம். நம்மால் எவருக்கும் பிரச்சினைகள் ஏற்படு மாயின் அது நமது நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறையாக இருக்கலாம். இஸ்லாத்தைப் பின்பற்றுவதால்தான் பிரச்சினைகள் வருகின்றன எனக் கூறுவோமானால் அது நாம் அறியாமல் கூறுவதாகவே இருக்கும். அப்படியான பிரச்சினைகளை உருவாக்கும் ஓர் மார்க்கத்தை நமக்கு அல்லாஹ் தந்திருக்க மாட்டான் என்பது இத்தனை காலமும் நமது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு பிரச்சினைகள் ஏற்படாததில் இருந்து தெரிகின்றது. நம்பிக்கையாளர்களைக் காப்பதைத் தனது கடனாக அல்லாஹ் கொண்டிருக்கையில் நமக்குப் பயம் ஏது?


அப்படியாயின் தற்போது வரும் பிரச்சினைகள் நாமே தேடிக் கொண்டதாக இருக்க வேண்டும் எனவே எண்ண வைக்கின்றதை, அல்லாஹ்வின் வசனமான,  மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின் றார்கள் என்பதால் அறியலாம். நமக்கு ஏன் இவ்வளவு பெரிய வேதனை ஏற்படுகின்றது எனப் பார்ப்போமாயின் அதுகூட நமது நடவடிக்கை காரணமாக அல்லாஹ் வால் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம் எனவே தெரிகின்றது. விளங்காத வர்கள் மீது அல்லாஹ் தண்டனையை  ஏற்படுத்து கின்றான். No soul can believe, except by the Will of Allah. and  He will place abomination on those who will not understand.அல் குர்ஆன் 10:100.  


நாம் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக அல்லது விளங்க, சுய ஆய்வு செய்ய விரும்பாதவர்களாக இருக்கிறோம் என்றே கூற வேண்டியுள்ளது.  சற்று சிந்தித்தால் பிரச்சினைகளை விளங்காத வர்கள் பயங்கரங்களை, தோல்விகளை, துன்பங்களை, இழப்புக்களை,  வேதனை களை, அவமானங்களைச் சந்திக்கவே வேண்டி வரும் என்பதை அறியலாம்.  இச்சந்தர்ப்பம் நம்மை நாமே அலசிப் பார்த்து, ஆக்கபூர்வமான சுய விமர்சனங் களை, ஆய்வை, மதிப்பீட்டைச் செய்து, புடம்போட்டு குர்ஆன் வழியில் இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும் என்ற வாய்ப்பை உருவாக்கித் தந்து உள்ளது.  இவ்வாய்ப்பைப் பயன்படுத்தும் போதுதான் அல்லாஹ்வின், ‘நம்பிக்கையாளரைக் காப்பது நமது கடன்’ என்ற, அவனது வாக்குக்குள் நாம் உள்வாங்கப்படுவோம். அல்லாத வரை இன்னொரு சமூகத்தின் மூலம் அல்லாஹ் நம்மைத் தண்டிப்பதைத் தவிர்க்க  முடியாது.  அத்தோடு விளங்காதவர்கள் எதனை அனுபவிப்பார் களோ அதனை நாம் அனுபவிக்கவே வேண்டி  இருக்கும் என்பதை மறந்து விடலாகாது. காரணம் இவை இறை வாக்குகளே!


நான் கூறிக் கொண்டிருக்கும் இவ்விடயம், அஇஜஉ வுக்கும் விரிவாக தெரிவிக்கப்படுத்தப்பட்டு உள்ளதாலும், இணையதளத்திலும் ஏற்கனவே என்னால் எழுதப்பட்டுள்ளதாலும், எல்லோருக்கும் தற்போது தெரியத் தேவையில்லை என்பதாலும், நான் பிரச்சினையை வெளிப்படையாகக் கூறாது கோடிட்டுக் காட்டியுள்ளேன், இதற்குக் காரணம் அஇஜஉ வுக்கு எதிராக அந்நியர்களுக்கு நான் தடி கொடுத்தவனாக இருக்கக் கூடாது என்பதே! ஆனால் நீதி சொல்வதில், தீர்ப்புக் கொடுப்பதில் நமக்கு வேண்டியவர்கள் என்பது நமது தீர்ப்பை, நீதியை மாற்றிவிடக் கூடாது என்பதும் இறை வாக்கே! அதனால் தான் நாம் காரணமாக இருக்கும் விடயங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்கும்படி வேண்டுகிறேன். 


ஆதலால், தற்போது முஸ்லிம்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை, அஇஜஉ முகம் கொடுக்க வேண்டியதே! தவிர, குற்றம் செய்யாத மக்கள் தண்டனைக்கு உள்ளாக முடியாது. எதிர்ப்பாளர்கள் குற்றம் வரும் இடம், திசை என்பதில் கொண்டுள்ள  தவறான கணிப்பே முஸ்லிம் வர்த்தகர் களும், மக்களும் எதிர்கொள்வது.  ஆதலால் ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் மாற்றுவதாயில்லை என்பதை அறிந்து, உணர்ந்து, மேலும் வரவுள்ள அனர்த்தங்களைத் தடுத்து நிறுத்தும் வழியில் நம்மைத் திருத்தி, பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என அல்லாஹ்வின் பெயரால் சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். 


அல்லாஹ்வுக்கு மாறான எவ்வித நடவடிக்கைகளும், வெற்றி பெறுவது போல் தோற்றம் பெற்றாலும், ஈற்றில் அதள பாதாளத்தில் தள்ளிவிடும். எல்லாவற்றுக்கும் ஒர் காலத்தை அல்லாஹ் நிர்ணயித்திருக்காவிடில் குற்றவாளிகள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டிருப்பர்.ஆதலால், தண்டனை பிந்துவது தண்டனை வராது என்பதன் கருத்தாகிவிடாது என்பதை.  உணர வேண்டும். மேலும் மேலும்  பிழைகளை விட்டுப் பாவத்தைக் கூட்டிக் கொள்ளட்டும் என்பதற்காகவே தண்டனைகள் அல்லாஹ்வால் தாமதப் படுத்தப்படுவதாகத் தெரிகின்றது. 


இன்னொன்றையும் இங்கு சுட்டிக்காட்டி, இந்த வசனத்தால் குறிப்பிடப் படுபவர்களாகிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கின்றேன். குற்றவாளி களை நாம் தலைவர்களாக்கி உள்ளோம் என்ற வசனமே அது. நான்தான் இறைவன் எனக் கூறிக்கொண்டு அக்கிரமம் செய்து கொண்டிருந்த பிர்அவுனின் அழிவு நமக்கு பாடமாக அமைய வேண்டும். இறைவனுடைய அதிகாரத்தை எவரும் கையிலெடுப்பது, அழிவுக்கு வழிகோலுவதே என்பதுவும் மறை விளக்கமே! அல்குர்ஆன் 42:21 இதனை விளங்க வைக்கும். அல் குர்ஆனின் 9:9 ஆம் வசனமும் கவனிக்கப்பட வேண்டியதே! 

அல்லாஹ் என்ன கூறியிருக்கிறானோ, அதில் சந்தேகம் கொண்டு ( ‘இது சந்தேகம் அற்றது’ என்ற குர்ஆன் வசனத்தை நிராகரிப்பது ) இப்படி இருக்க முடியாது, அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வழியில் சிந்தித்து, மனோஇச்சைப்படி கருத்துக்களைக்  கொடுத்து மக்களை வழிகெடுப்பது பாரிய குற்றம். அது ஷிர்க் என இறைவன் குறிப்பிட்டும்  உள்ளான். மனோ இச்சையைத் தெய்வமாகக் கொண்டவனை நீர் பாத்தீரா?.... என நபிகளாரையே எச்சரிப்பது, மனோ இச்சை ஷிர்க் என்ற கருத்தை வெளிப் படுத்துகின்றது. 


தாங்களும் அறியாது, பிறரையும் வழி கெடுக்கின்றார்கள், அவர்களுடைய பாவத்தையும் சேர்த்தே சுமப்பர் என்ற கருத்துள்ள வசனமும் காணப் படுவதைக் அறிவோர், உண்மையில் இவ்வாறான பிழைகளில் இருந்து தம்மைத் தவிர்ந்து கொள்வர்.



ஆதலால், சமாதானங்கள், விளக்கங்கள், அதனால் ஏற்படும் பொருளாதார அபிவிருத்திகள், விரும்பித்தான் எங்களிடம் ஹலால் சான்றிதழைக் கேட்டு வாங்குகின்றார்கள், போன்ற இன்னோரன்னவைகளைக் கூறிக் கொண்டிராது, தாம் செய்வது மார்க்கம் அனுமதித்த ஒன்றா என்பதைக் குர்ஆன் வழியில் அலசி ஆராய்ந்து, தவறை இந்த அளவிலாவது திருத்திக் கொள்வதே அறிவுடமை! அதைவிட்டு சில நாடுகளில் சிறப்பாகச் செய்யப்படுகின்றது எனக் கூறுபவைகள் எல்லாம் மதக் காரியங்களைச் செய்வதற்கான அனுமதியாக,ஆதாரமாக, சாதகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரும் பான்மையினரின் கருத்தையே செவிமடுக்க வேண்டாம் எனக் கூறியுள்ள அல்லாஹ், தான் அனுமதியாததை,  சில நாடுகளில் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக அவற்றை உதாரணமாகக் கொள்ள அனுமதிப்பானா?


எவ்வகையிலும் நாம் நமது மார்க்கத்தை அனுசரிப்பதுகூட அந்நிய மதத்த வர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தக் கூடாது என்ற நிலையில், ஏதோ வகையில் நிர்ப்பந்தம் செய்து, மார்க்கத்தின் பெயரால் நமது கருத்துக்களை அந்நியர் மீது திணிப்பது, அவர்களிடம் பெருந்தொகைப் பணம் அறவிடுவது போன்றவை முழுமையாக நிராகரிப்பே! அடுத்தவரின் உழைப்பை அநியாய மாக, அவர்களது விருப்பமின்றிப் பெற்றுக் கொள்வது சூறையாடுவதை ஒத்த கொடுமையே! பிழையான வழிகளில் அப்பணத்தை உண்பது, நல்ல காரியங் களுக்குச் செலவழிப்பது கூட குற்றமே! பிழையான சம்பாத்தியங்களைத் தர்மம் செய்வதும் கூட குர்ஆனில் தடை செய்யப்பட்ட நடவடிக்கையே ! 


ஹறாம் தவிர்த்தல் என்ற பிரச்சினை குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையே தவிர, அவர்கள் ஹறாமை உண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அஇஜஉ வின் கடமையல்ல, அவர்களுக்கு ஹறாம் பற்றிய அறிவுரையை வழங்குவதைத் தவிர.  


அப்படி இல்லை, தமக்கும் ஹலால் உணவு பெறுவதை உறுதி செய்யும் படியான கடமை உண்டென யாராவது வாதிட விரும்புவாராயின், அவர் களுக்கு நான் சொல்வது, முதலில் முஸ்லிம்களின் உழைப்பு ஹறாமற்ற முறையில் அமைந்துள்ளதா என்பதைக் கண்காணித்து அதனை சீர்படுத்து வதே நன்மை பயப்பது!  ஹறாமான உழைப்பில் பெறப்படும் பணத்தைக் கொண்டு ஹறாமற்றதை வாங்கி உண்பதால் ஒன்றும் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 

2013.01.07                                                       - நிஹா -                                                   

No comments: