Friday, January 25, 2013


நபிகளாரின் ஜனன தினத்தை ஒட்டிப் பிரசுரிக்கப்படுகின்றது.

உலகை உய்விக்க அல்லாஹ்வின் அருட்கொடையாக
அவனியில் உதித்த உத்தமர் பற்றிய அவதூறுகளும்
அனைத்துலக முஸ்லிம்களின் கொந்தளிப்பும்


அண்மைக் காலமாக மேற்கத்தைய நாடுகளில் உள்ள இழிபிறப்புக்கள் அருள்மறை தந்த திருத்தூதரும்இ இறுதி நபியுமான இறைதூதர் நபிகள் கோமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைத் தூஷிக்கும் முயற்சியாக நூற்கள் வெளியிடுதல், கேலிச் சித்திரங்கள் வரைதல், குறுந் திரைப்படங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு கீழ்த்தர, மனித வர்க்கத்துக்கே அவமானத்தை, அபகீர்த்தியை விளைவிக்கும் கேடுகெட்ட கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றின் பின்னணி குறித்து பெருமளவு சந்தேகங்களும், யூகங்களும், குற்றச் சாட்டுக்களும் நிலவு கின்றன. எதனைக் குறித்து உமக்குத் தீர்க்கமான ஞானமில் லையோ அதனை நீர் பின்பற்றாதீர் என்ற 17:36 இறையாணைக்கேற்ப அறிந்தவற்றோடு நின்று கொள்வதே அறிவுடமை. அன்றேல் தேவையற்ற பகைகளை நமக்கு நாமே வளர்த்துக் கொள்வோம்.  

எது எப்படியாயினும் யாரோ தறிகெட்ட நெறிபிறழ்ந்த சில கட்டாக்காலிகள் இது போன்ற நாசகாரத் தூஷனைச் செயல்களில் ஈடுபட்டு வருவது மட்டும் உண்மை. அந்த வரிசையில் சில மேற்கத்தைய நாடுகளுடன் ஸல்மான் ருஷ்;டி, தஸ்லிமா நஸ்ரின் போன்ற இஸ்லாமியப் பெயர் கொண்ட நிராகரிப்பாளர்களான இழி பிறப்புக்களும் இணைந்து உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளும் செயற்பட்டு உள்ளமையும் வரலாற்றில் பதிவாகி உள்ள உண்மை. அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இஸ்லாமிய அலைகள் எதையும் சாதித்து விடவில்லை என்பது அதைவிட பெரிய வரலாற்று உண்மை. கண்டனங்களும்இ தண்டனைகளும்இ பயமுறுத்தல் களும் அறிவிக்கப்பட்டனவே தவிர நடைமுறையில் எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்பதும், குற்றவாளிகளது கருத்துக்களும், அவர்களும் அப்படியே இற்றைவரை உள்ளன, உள்ளனர் என்பதும் கசப்பான ஆனால் மறுக்க முடியா அருவருப்பான செய்தி. இவற்றிலிருந்து நிறைய விடயங்களை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளன. ஒன்று, அவதூறுகள் சம்பந்தமாக எடுத்த முடிவுகள், தீர்ப்புக்கள், தீர்மானங்களில் பிழை அன்றேல், நமது கையாலாகாத்தனம். இன்னும், நாம் தண்டிக்கும் சக்தியற்றிருப்பதையும் வெளிப்படுத்துகின்றது. மேலும் கையாள்கையில் உள்ள குறைபாடு. அவை எவையாகிலும் பரிசீலனைக்கு உரியனவே. அனைத்துக்கும் மேலாக இறைநியதி. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தின்மேல் கொண்ட பற்றுதலால் வீறுகொண்டெழும் முஸ்லிம்களை அவ்வப்போது அரசியல்வாதிகளும், மதப் பெரியார்கள் எனத் தம்மைக் கூறிக் கொள்வோரும்,  தலைமைத் துவத்தைப் பெற்றுக்கொள்ளத் துடியாய்த் துடிப்பவர்களும் மதத்தின் பெயரால் தோற்றமாகியுள்ள சில காளான் குழுக்களும் பயன்படுத்தி, ஊடகங்களில் நிகழ்வுகளை, விளம்பரங்களாக்கிக் கொள்கின்றனர். அதற்கு அவ்வப்போது பலியாகும் அப்பாவி முஸ்லிம்களும், முஸ்லி மல்லாதோரும் கூட உண்டே! ஆனாலும்கூட மேற்கண்ட அவதூறுகளை அகற்றுவதற்காகவோ, அவ்வாறான மலிவான அவதூறுகளைப் பரப்பு வோருக்கு எதிராகவோ உருப்படியான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்பதே யதார்த்தம். ஆர்ப்பாட்டம், கண்டனங்கள், அறிவிப்புக்கள் என்பவற்றோடு முடங்கி சோடா போத்தலில் கேஸ் வெளியேறியது போன்றாகி விடுகின்றன அனைத்து ஆவேஷ அறிக்கைகளும், கண்டனங்களும், ஆர்ப்பாட்டங் களும். அதன் பின்னர் அவ்விடயம் தேடுவாரற்று அநாதையாக்கப்பட்டு விடுகிறதுஇ 1990 இல் இலங்கையின் வட புலத்தில் புலிகளால் இனச் சுத்திகரிப்புக்காளான முஸ்லிம்கள் போல்.

மேற்சொன்ன இஸ்லாத்துக்கு எதிரான கீழ்த்தர நடவடிக்கைகளை தடுப்பதற்காக திட்டமிட்ட நடவடிக்கைகள் எதுவும் எந்த நாடுகளாலோ, சமய ஸ்தாபனங்களாலோ, தனிப்பட்ட பணம் படைத்தோராலோ மேற்கொள்ளப் படாமையினால் அவை சில இனவாதக் கும்பல்களால் காலத்துக்கு காலம் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இன்னும் நூற்றுக் கணக்கான இணையத்தளங்கள் இதனையே தம் முழுநேரத் தொழிலாகவே செய்து கொண்டு வருகின்றன. இவை எல்லோர் கண்ணிலும் படுவதில்லை என்பதே உண்மை. அப்படி இல்லையென்றால், எதிர்ப்புக்களால் பயனில்லை என்ற நிலையாக இருக்கலாம்!  

இதுவொரு புறமிருக்க, இப்படியான இழிசெயல்களால் இஸ்லாத்துக்கோ அதன் தூதர் கண்மணி நாயகம் முஹம்மது ஸல் அவர்களுக்கோ எவ்விதக் குறைகளும் இதுவரை நேரவில்லை. இனியும் நேரப் போவதுமில்லை. மாறாக இஸ்லாத்தினதும், அதன் தூதரினதும் புகழ் நாளுக்குநாள் அறிஞர்கள் மத்தியில் கூடிக்கொண்டே போகின்றது என்பது நிதர்சனமாகி உள்ளது.அல்குர்ஆன் 3:18 இந்நிலையை வெகு அழகாக விபரிப்பதை பார்ப்போம். “ ‘நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத்தவிர யாரும் இல்லை’ என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சான்று பகர்கின்றனர்.அவனைத் தவிர வேறு யாருமில்லை. மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவூம் இருக்கிறான்”. இதிலிருந்து இஸ்லாத்தின் தற்போதைய உண்மை நிலையை உறுதிபட நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பான்மையானவர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என இறைவன் பல்வேறு இடங்களில் கூறியிருப்பதால், The Fast Growing Religion என்பது எந்தளவு பொருந்துமோ! ஆனால் அதிகளவு அறிஞரால் அறியப்பட்டு மனதார ஏற்றுக் கொள்ளப்படும் பெருமைக்குரிய மார்க்கம் எனக் கூறின் அது மிகையல்ல.  இன்னும் அதில் முன்னறிவிப்பு செய்யப்பட்டவைகள், விஞ்ஞான உண்மைகள், பௌதிக மாற்றங்கள் போன்றவை ஆதாரபூர்வமாகக் கண்டு பிடிக்கப்படுவதில் இருந்து இஸ்லாம் அல்லாஹ்வால் அருளப்பட்டது தான் என்பதும் அறிஞர் பெருமக்களால் ஏற்கப்படுகின்றது.

அண்மைக் காலமாக, அறிஞர்கள், கல்விமான்கள், ஆய்வாளர்கள்,  ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், சமூகவியலாளர், சமூக ஆர்வலர்கள் என்ற உயர் அந்தஸ்தில் உள்ளோர் இஸ்லாத்தின் உண்மைகளைக் கண்டறிந்து,  அதனை உண்மையென ஏற்று,  இஸ்லாத்துக்குத் திரும்பி யுள்ளனர். இஸ்லாத்தின் எதிரிகளாகவே அனைவராலும் கருதப்படும் யூதர்களில் அதுவும் அவர்களின் “ரப்பி“ எனக் கூறப்படும் மதத்தலை வர்களில் இருந்து கூட , இஸ்லாம்தான் உண்மை மார்க்கம், அதன் தூதர்தான் உலகை உய்விக்க வந்தவர், அவர் கொணர்ந்த வேதமே இறுதியானதும், அல்லாஹ் வால் இறக்கப்பட்டு அதே நிலையில் எந்த மாற்றமும் இன்றி இற்றைவரை உள்ளது என்பதும், அல்லாஹ் ஒருவனே, அவனைத் தவிர வேறு நாயனில்லை என்பவற்றுக்கும் ஆதாரங்களோடு சாட்சி கூறுவோர் பகிரங்கமாக வெளி வருகின்றனர். இதனை யூ டியூப் பிலேயே கண்டுகொள்ள முடியூம். முஹம்மது என்ற பெயர் பைபிளில் சங்கீதம் 5:16 வசனத்தில் கூடக் காணப்படுவதாக ஆதாரபூர்வமாக நிறுவி உள்ளார்கள்.

இதுபோன்றுஇ இந்து சமயப் பெரியார் ஒருவர் தனது நீண்ட கால ஆராய்ச்சி ஒன்றின் மூலம் முஹம்மது நபி அவர்கள்தான் கலியுகத்தில் பிறந்த கல்கி என்பவர்,  கலியுகம்தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது, அது பற்றிய முன்னறிவித்தல் வியாச முனிவரின் பவிஷ்ய புராணத்தில் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளதாக ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளார். (கல்கி 2:4,5,7,11,15 பகவத்கீதை 1:3:25) அது போன்று நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வன வேதத்திலும் அல்லாஹ்வுக்குத் துவக்கம் இல்லையென்றும் அவன் சம்பூரணமானவன்,முழுப் பிரமானத்துடைய இரட்சகன், சிவனுடைய பதவியில் இருக்கும் ‘மஹாமத்’ அல்லாஹ்வுடைய  ரசூல்……அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு எவருமில்லை. எனக் கூறியிருப்பதும் அறியப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி சிவனும் மனிதனே என்பதும், அவர் இறைதூதராக இருந்துள்ளமையும் கண்டறியப் பட்டுள்ளன. இவையும் அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வங்களில்லை என்பதை நிரூபிப்பவையே. அல்லாஹ் கூறியபடி சத்தியம் வந்துவிட்டது அசத்தியம் அழிந்தே தீரும் என்பது நிரூபனமாகி உள்ளது.  

அல்லாஹ் இந்த வேதத்தை அறிஞர்களுக்காகவே தந்துள்ளதாக கூறியிருக்கும் அதே வேளை, அறிவீனர்களைப் புறக்கணித்து விடுமாறும், அவர்களுடன் அவனது தூதருக்கே கூட எவ்வித சம்பந்தமுமில்லை எனவும் கூறியிருப்பதும், அறிஞர்களுக்கும், செவிமடுப்போருக்கும், ஏற்பவருக்குமே இந்த உபதேசம் என்றெல்லாம் கூறியிருப்பதும் நமது கவனத்தை ஈர்க்க வேண்டும். அத்தோடு உலகில் பெரும்பாலோர் இதனை ஏற்கமாட்டார்கள் என்று கூறி இருப்பதில் இருந்து எந்தளவுக்கு அல்லாஹ் சிறுகூட்டத்தவரான அறிவுக்கும், அறிஞர்களுக்கும் மதிப்பளித்துள்ளான் என்பதும் தெரிய வருகிறது. ஆக மேற்கூறியது போன்ற மதவிரோதக் கழிசடைகள் பற்றி முஸ்லிம்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அசிங்கத்தைக் காணும் ஒருவன் தனது மூக்கைப் பொத்தி அந்த நாற்றத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வது போல், இப்படியான இழிபிறப்புக்களை,அவர்களது ஈனச் செயல்களைக் காணும்போது புறக்கணித்து விடுவதே அவர்களுக்கான சரியான தண்டனை. அதுவே இறைவழி.

குர்ஆன் இதற்கு மேலும் ஒருபடி சென்று நிராகரிப்பாளர்களுடன் தர்கிக்க நேர்ந்தால் மிக அழகானதைக் கொண்டு தர்க்கம் செய்யவும்,  ஏற்காத சந்தர்ப்பத்தில் “ஸலாம்“ கூறி ஒதுங்கிக் கொள்ளவும் எனவும் கூறியிருப்பதும், தான் வழிகாட்டாதவர்களுக்கு உலகில் வேறெவராலும் வழிகாட்டிட முடியாது எனவும், தூதுச் செய்தியை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறு எதுவும் நபிகளார் மீது கடமை இல்லை எனவும் கூறியிருப்பதும் நாம் கவனிக்க வேண்டியனவே.

இதற்கு மேலும், 6:108இல் அல்லாஹ்வையன்றி அவர்கள் இணை வைத்துக் கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள், அப்பொழுது அவர்களும் அறிவின்றி வரம்புமீறி  அல்லாஹ்வைத் திட்டுவார்கள்,  எனக் கூறியிருப்பதில் இருந்தும் அநாவசியான சர்ச்சைகளில் இருந்து நம்மை ஒதுக்கிக் கொள்வதை இறைவன் விரும்பி இருப்பதும் புரிகிறது. ஓர் கை தட்டினால் சத்தம் வருவதில்லை எப்போது நாம் கவலைப்படுகிறோம், வருத்தப்படுகிறோம் என்பதை நாம் எதிர்ப்புத் தெரிவிக்கும் போதே எதிரிகள் அறிந்து கொள்கிறார்கள். அதனால் அவர்தம் ஆர்வம் கூடுகிறது. நாம் கண்டுகொள்ளாது விட்டுவிட்டால் அப்படியே புஷ்வானமாகிவிடும். நாம் பொறுமையாக அல்லாஹ்வை நமது காரியங்களுக்குப் பொறுப்பாளி யாக்கிவிட்டு அமைதியாக இருப்போமானால் இழிசெயல்களில் ஈடுபடு வோர் அதனைத்  தொடர்ந்து செய்வதை நிறுத்திக் கொள்வர். தீர்வும் சிறப்பாகக் கிடைக்கும்.

15:9 இல் நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்,  நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம் என அவன் கூறியிருப்பதில் இருந்து இந்த மார்க்கத்துக்கு எவ்விதக் குறைவையும் யாராலும் ஏற்படுத்திவிட முடியாது என்பதால், நாம் அது பற்றி பெரிதாகக் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவனது பாதுகாப்பில் உள்ளதை எதுவும் அணுகிட முடியாது. களங்கத்தையூம் ஏற்படுத்திட முடியாது என்பதை அல்லாஹ்வை நம்பும் நாம் ஏற்கவே வேண்டும். நம்பிக்கை யாளரைப் பாதுகாப்பது நமது கடன் என்றும் அல்லாஹ் குர்ஆனில் 10:103,  30:47 வசனங்களில் கூறி இருப்பதில் இருந்து அவன் தனது தூதருக்கு எவ்வித குறைவும் வராது பார்த்து கொள்ளுவான். 94:4இல் உமது பிரஸ்தாபத்தை நாம் உமக்கு உயர்த்தியுள்ளோம் என நபிகளார் ஸல் அவர்களுக்கு அவன் கூறியிருக்க அவர்களுக்கு எவ்வித களங்கமும் எவராலும் ஏற்படுத்திட முடியாது என்பதையும் நாமறிதல் வேண்டும். மேலும் 33:56இல் நிச்சயமாக  அல்லாஹ்வும் அவனது வானவர்களும் நபிகளார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து எனும் புகழ்மொழி கூறுகிறார்கள்;. முஸ்லிம்களும் அல்லாஹ்வின் ஆணைப்படி நபிகள் மேல் ஸலவாத்து என்ற புகழுரையும் ஸலாமும் கூறிய வண்ணமே உள்ளனர். உலகில் இந்தப் பெருமைக்குரிய ஓரே நபர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே!

மேலும், உலகில் எந்த மனிதருக்கும் கிடைத்திடாத உயர் கௌரவங்கள் உலகின் அதியுயர் நிலையில் வைத்து எண்ணப்படும் பெருந்தகைகளால் கொடுக்கப்பட்டு உள்ளமை, நாயகத்தின் பிரஸ்தாபம் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டு உள்ளதை நிரூபிக்கின்றது. இன்னும்,   சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கத்தோலிக்கரான வரலாற்று ஆய்வாளரும், சமூகவியல் பட்டதாரியும்,  அறிஞருமான அமெரிக்கரான மைக்கல் ஹார்ட் என்பவர், உலகில் இந்நாள் வரை தோன்றியுள்ள மனிதர்கள் அனைவரையூம் ஆய்ந்து, அவற்றில் முதல் நிலையில் இருப்பவர் நமது நாயகம் முஹம்மது ஸல் அவர்களே என ஆதாரபூர்வமாகக் கூறியிருப்பதும், அல்லாஹ்வின் வாக்கான,உமது பிரஸ்தாபத்தை நாம் உமக்கு உயர்த்தி உள்ளோம் என்பது, உலகில் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளதை நமக்குப் புரிய வைக்கிறது.

நாயகம் ஸல்  உயிரோடு வாழ்ந்த காலத்திலும் அவர்களுக்கு அவதூறுகள் கூறப்பட்டே வந்துள்ளன. அவர்களது மனைவியருக்குக் கூட அவதூறு கற்பித்த சந்தர்ப்பங்களும் உண்டு. அவை எல்லாம் செல்லாக் காசாகியதும் அறிந்ததே. அவை அனைத்தும், நபிகளாருக்கு நன்மையையே பயத்துள்ளன என்பதை 24:11 தெளிவாகக் கூறுகிறது. நாயகமவர்களை அவரகளது இரத்த உறவினர்கள் கூட எதிர்த்திருக்கின்றார்கள். அவர்களை நபி என ஏற்காது விட்டுள்ளனர். ஹுதைபியா உடன்படிக்கை எழுதப்பட்டபோது அவரை, இறைதூதர் முஹம்மது அல்லாஹ்வின் ரசூல் என எழுதியிருந்ததைக்கூட, ஏற்காது அவ்வாசகத்தை நீக்கும்படி கூறியதும், அதனை நபியவர்கள் மறுக்காது நீக்கியதும் வரலாற்று உண்மையே! இதிலிருந்து மார்க்கத்தை, உண்மையை ஏற்காதோர் உலக அழிவு வரை இருந்து கொண்டே இருப்பர் என்பதும், அவர்கள் இதுபோன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பர் என்பதும் தெளிவு. நபிமார்கள் அனைவரும் பரிகாசம் பண்ணப்பட்டவர்களே என இறைவனே கூறியுள்ளமை இது பற்றி தெளிவு கொண்டு பொறுமையடைய உதவும். 

நாம், நபிகளார் அவர்களை இறையாணைப்படி நமது உயிரினும் மேலாக மதிப்பதாயிருந்தால்,அவர்கள் கற்றுத்தந்த மறைவழியான இறைவழியில் நடப்பதே மேல். அதுவே நாம் அவர்களுக்குக் கொடுக்கும் கண்ணியம். இறைவன்கூட நபிகளாருக்கு உரிய கூலி என்பது, அவர்கள் கற்றுத் தந்ததை செயற்படுத்துவோரை வைத்து கணிக்கப்படுவது போன்று கூறியிருப்பது, நமது கருத்தை ஈர்க்கவல்லது. 25:57 இதன்மீது உங்களிடம் எத்தகைய கூலியையும் நான் கேட்கவில்லை. தனது ரப்பின்பால் ஏதேனும் ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்ள நாடுகிறவனைத் தவிர என்று நீர் கூறுவீராக!  அப்படியாயின் நாம் எந்தளவு அவர்கள் காட்டித் தந்த வழியில் நடக்கிறோமோ, அந்தளவு அவருக்கு உதவி செய்கிறோம் என்றே பொருள். உயிரினும் மேலாக மதிப்பது என்பதும் பொருள் பொதிந்ததாகிவிடும். நாயக வாழ்வில் தம்மை நையப்புடைத்தோரைக்கூட அவர்கள் பழிவாங்கியதில்லை என்பதும் அவர்கள் வழியே. இறைவன் மன்னிப்பை மேற்கொள்வீராக எனக் கூறியிருந்த அதே வழி.

மக்காவைக் கைப்பற்றியோது தன்னைக் கொல்ல முனைந்தவர்களைக்கூட ஒரு வார்த்தையால் கூட தண்டிக்க முயலவில்லை என்பதும் முன்மாதிரியாக் கொள்ளப்பட வேண்டியதே! இரத்தம் சிந்தாமல் தன்னை வெளியேற்றிய நாட்டை, யாரையும் வெளியேற்றாது, கைப்பற்றிய சரித்திரத்தைக் கொண்ட நபிகளாரின் உம்மத்துக்கள் நாம் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும். அதுவே அந்த ஈனர்களுக்கு இவ்வுலகில் பெரும் தண்டனையாக இருக்கும்.  

அல்லாஹ் எடுத்ததற்கெல்லாம் அழிப்பு வேலைகளைச் செய்வதாயிருந்தால் உலகில் எந்த உயிரினமும் இன்று உயிருடன் இருக்க முடியாது, என்பதை அவனே குர்ஆனில் ஓரிடத்தில் கூறியுமுள்ளான்.  எல்லாவற்றுக்கும் ஒரு கால வரையறையை நிர்ணயித்துள்ளான் அதுவரை அவர்கள் எதனையும் செய்து கொள்ளலாம். அத்தோடு,  குற்றவாளிகளை மேலும் மேலும் குற்றம் செய்து தமது பாவத்தைக் கூட்டிக் கொள்வதற்காகவே அழிக்காது விட்டு வைத்திருப்பதாகக் கூறியிருப்பதும் அறிதற்குரியதே. அவனை எவரும் உலகில் இயலாமல் ஆக்கிவிட முடியாது. அவன் மிகைத்தவன். ஆக இவை எல்லாம் நமக்குப் படிப்பினையே தவிர இல்லை. ஆதலால் 2:143இன்படி நடுநிலையான சமுதாயமாக படைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களாகிய நாம் எந்த விடயத்திலும் மிகவும் சாவதானமாகவும், புத்தியாகவும், எந்தக் காரியத்தையும் அவன் வழியில் அணுக வேண்டும். அது குழப்பமற்ற வழி.   
  
அல்குர்ஆன் 41:34 இப்படிக் கூறுகிறது. ‘நன்மையும் தீமையும் சமமாகாது. எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அப்போது எவருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர், உமது உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்.’ இன்னும் 23:96 மிக அழகானதைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக என்று கூறியிருப்பது மிக ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ளமையை உய்த்துணர்வோர் அறிந்து கொள்வர். 

நாம் செய்யும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குளிக்கப் போய் சேறு பூசியதாக இருக்கவோ, யானை தன்தலையில் மண்ணை வாரிப் போடுவது போலவோ இருக்கக் கூடாது. நாம், உலகிற்கு முன்மாதிரியாக வந்த நபிகள் கோமான் முஹம்மது ஸல் அவர்களைப் பின்பற்றுவோர் என்பதால், நாமும் மனிதருக்கு முன்மாதிரியாகவே ஒவ்வொரு செயல்களிலும் முத்திரை பதிக்க வேண்டும். நடுநிலையான சமுதாயமாகப் படைக்கப்பட்டுள்ள நாம் இந்த விடயத்தில் காட்டும் எதிர்ப்பு உலகினால் மெச்சப்படுவதோடு அது அவர்களால் பின்பற்றப்பட வேண்டிய படிப்பினையாகவும் அமையும். அதற்கு வேண்டிய விதமாக வியூகங்கள் அமைத்து, நாம் நமது எதிர்ப்பைக் காத்திரமாக வெளிப்படுத்த வேண்டும். நமது எதிர்ப்பு விடிவைத் தருவதாக அமைதல் வேண்டும். 

அதனை விட்டு, எந்தக் காரணமும் ஆதாரமுமின்றி அமெரிக்காவை,ம் மேற்குலகை,ம் குற்றம் சாட்டுவதும் அவர்களுக்கு எதிராக இயங்குவதும், அவர்களைக் கேவலப்படுத்தும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுபடுவதும் நியாயமற்றதும் இறைவனால் ஏற்கப்பட மாட்டாததும். அதனால் நியாயமான நமது போராட்டம் கூட நலிவடைந்து விடும். அத்தோடு மறைமுகமாக எதிராகச் செயற்பட்டோர்கூட வெளிப்படையான எதிரிகளாகிவிடுவர். நாயகம் அவர்கள் உயிருடனிருந்திருந்தால் நடந்து முடிந்த போராட்டங்களில் நிச்சயமாக தனது வெறுப்பைக் காட்டி இருப்பார்கள்.

லிபியாவில் எதிர்ப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலியான அமெரிக்க இராஜதந்திரிகள் என்ன குற்றம் செய்தார்கள்? தக்க காரணமின்றி ஒருவனை கொலைசெய்வது மனித சமுதாயத்தையே கொல்வதற்கு சமமானது என்ற கருத்தைக் கொண்ட குர்ஆனைப் பின்பற்று வோரால் இப்பாவச் செயல் செய்யப்பட்டது என்பதை நினைக்கும் போது நாமனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

மேலும், அமெரிக்க தனது நாட்டில் கொடுத்துள்ள கருத்துக் கூறும் சுதந்திரம் என்பது இப்போது நாமும் அனுபவித்து வருவதே. அந்த கருத்துச் சுதந்திரத்தை அங்குள்ள கேடு கெட்டவர்கள் பிழையாகப் பாவித்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துகின்றார்கள் என்பது நமது குற்றச்சாட்டாயின், நாம் நமக்குரிய சுதந்திரத்தைப் பாவிக்கும் போது குற்றமற்றவர்களது மனம் நோகாதவாறு அல்லவா செயற்பட வேண்டும். இன்னும் அந்த நாட்டில் அப்படியொரு சட்டம் இருப்பதைக் குறைகூற நமக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆனால் நாம் அவர்கள் நாட்டில் உள்ள சட்டத்தை இழிபிறவிகள் பயன்படுத்தி உலக முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துகின்றார்கள் என்பதையும் அதனால் அமெரிக்கா வுக்கும் கேவலத்தை உண்டு பண்ணுகின்றார்கள், குழப்பத்தைத் தூண்டு கின்றார்கள், அமைதியின்மையைப் பயங்கரவாதம் உருவாகும் நிலையை திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகின்றார்கள் என்பதைப் பவ்வியமாக எடுத்துச் சொல்லி, அதனை தீர்க்கும் வழி வகையினை திறந்து விடலாம்.

அமெரிக்காவில் உள்ள சமூக இணையத்தளமான யூ டியூப் பில் உலகளாவிய ரீதியில் யாரும் எதனையும் வீடியோவாக தரவேற்றம் செய்யவோ, தரவிறக்கம் செய்யவோ அனுமதிக்கின்றது. அதனைப் பாவிப்போர் குற்றச் செயல்களில் ஈடுபடின் அதனை அவர்களுக்கு, அவர்களின் விதிமுறைகளைக் கருத்து வெளியீட்டாளர் எவ்விதம் மீறியிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டி அதனைத் தடை செய்யக் கோரலாம். அல்லது அக்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் அந்த வீடியோவை இணையத் தளத்திலிருந்து நீக்கவும்  செய்யலாம். மேலும், ,நாமும் ஓர் இணையதளத்தை, புளக்கை திறந்து, நமது எதிர்ப்பை உலகுக்கு வெளிப்படுத்தலாம். அதில் உலகிலுள்ள முஸ்லிம்கள் தமது மன வேதனையை, உள்ளக் குமுறலை, கண்டனத்தை, எதிர்ப்பை அழகான முறையில் வெளிப்படுத்தலாம். இதன் மூலம் அந்தக் குற்றவாளியின் செயலை தடை செய்யுமாறு கோரிக்கை விடலாம்.     

அதனை விடுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்வது, அத்துமீறுவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பிறர் மனதைப் புண்படுத்தும் பதாகைகளை உயர்த்துவது, கோஷங்களை எழுப்புவது போன்றவை பிரச்சினைகளைக் கூட்டுமே யல்லாது, பரிகாரமாக அமையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இன்னும் அதற்கு மேலாகவும் ஒரு படிசென்று யூடியூப் பைத் தடைசெய்யூம்படி இலங்கை அரசை வேண்டுவது எல்லாம் எந்த வகையில் சாத்தியமானது, நியாயமானது என்பதை உணர வேண்டும். கருத்துச் சுதந்திரம் மீறப்படுகின்றது எனக் கூறிப் போராட்டம் செய்வோரே, கருத்துச்சுதந்திரத்தை, சட்டத்தை, ஒழுங்கை மீறும் பண்பே அனைத்து எதிர்ப்பலைகளிலும் பொதுவாகக் காணக் கூடியதாக இருக்கின்றன. நமது உரிமைகளுக்காக கொடுக்கப்படும் குரல் அடுத்தவரின் உரிமைகளைப் பறிக்கு மாயின்,  நமக்குள்ள உரிமையை நாமே அழிப்பது போன்றாகி, முன்னனையதைவிட மோசமான இழப்பை ஏற்படுத்தி விடுகிறது. 

கொழும்பு 03,
2012.09.23                                                                                                  - நிஸாம் ஹா.மு. -                                            
 


No comments: