Sunday, December 23, 2012


பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போகின்றதா?


குர்ஆன் வழியில்…

பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து
குறைந்து கொண்டு போகின்றதா?

பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போவது என்னவோ உண்மைதான். அதனை யாரும் மறுப்பதற்கில்லை. காரணம் பல வருடங்களுக்கு முன்பு கடல் இருந்த இடம் வேறு, அது தற்போது இருக்கும் இடம் வேறு. தூரத்தில் இருந்த கடல் நம்மை நோக்கி மிக அண்மித்து வந்து கொண்டிருக்கின்றது. நிலத்தின் அளவு வரவரக் குறைந்து கொண்டே போவதை சாதாரண கண்களினாலேயே காணக் கூடியதாயுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நிலம் நீரினால் காவு கொள்ளப்பட்டு உள்ளதாக வரலாற்றின் வாயிலாகவும் அறியக்கிடக்கின்றது. குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்க என வரும் புறநானுhற்றாலும் சரித்திர காலம் தொட்டே நிலத்தை நீர் விழுங்கிக் கொண்டு வந்துள்ளதை நாம் அறிந்து கொண்ட உள்ளோம். லெமூரியாக் கண்டம் நீரில் மூழ்கியமை அனைவரும் தெரிந்த ஒன்றே.

இதுவல்லாமல் ஆய்வுகள் மூலமும் நிலங்கள் நீரினுள் மூழ்கியுள்ளமை உறுதி செய்யப்படுகின்றன. மேலும். செயற்கைச் சந்திரனில் இருந்து பிடிக்கப்படும் படங்களை கூகுள் ஏர்த் எனப்படும் இணையதள வசதி கொண்டு பார்க்கக் கூடியதாயுள்ளது. இதன் மூலம் நீரினடியுள் மூழ்கடிக்கப்பட்டுள்ள நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தத்தில் நிலத்தின் அளவு முன்னொரு காலத்தில் இருந்ததைவிட தினமும் பல்வேறு வழிகளால் குறைந்து கொண்டே போவதை நிதர்சனமாக அறிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

இது தவிர ஆறுகள் நிலத்தைக் காவு கொண்டு கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். பெருமழையின் போது பெருக்கெடுத் தோடும் ஆறுகள் நிலத்தை அரித்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்… என்ற செய்யுளில் இருந்து ஆற்றங்கரை மரமோ நிரந்தரமாக நிலைத்துவிடாது அது ஓர் நாள் நீரினால் வீழ்த்தப்படும் எனப் பாடியிருப்பதில் நிலவரிப்பு நடப்பதும் நிலம் குறைந்து கொண்டு போவதும் நீரின் ஆக்கிரமிப்பும் மறைவான செய்தியே.

இன்னும், நீரிலிருந்து நிலத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் அரசுகளினால் எடுக்கப்பட்டு கடற்கரை ஓரங்களில் பாறாங்கற்கள், செயற்கையாகச் செய்யப்பட்ட கொங்கிறீட் பாளங்கள் அடுக்கப்பட்டு வருவதையும் அனைவரும் கண்டு கொண்டே இருக்கின்றோம். இதுவும் நிலம் அழிந்து கொண்டு போவதை அறிவித்துக் கொண்டிருக்கின்றது.

இன்னும் பெருமழை, ஆற்றோட்டம், வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏற்படும் நிலவரிப்பின் போது மணல் அள்ளிச் செல்லப்படுகின்றது. அப்படிச் செல்லும் மணல் கடல்களிலேயே சங்கமாகின்றது. அதனால் கடல் நீர் கொள்ளும் கனவளவு குறைந்து அது வெளிப்பட வேண்டி யுள்ளது. அப்போது கடல்மட்டம் கூடுகின்றது. கடல் மட்டம் கூடின் நீர் வெளியேறிப் பூமி காவு கொள்ளப்பட்டு விடுவது தவிர்க்க முடியாதது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இத்தனை அழிவுகளும் தானாக நடக்கின்றனவா என்றால். இல்லை அது இயற்கை என்போம். இப்படி நாம் கூறுவதன் காரணம் நாம் கண்டவற்றில் இருந்து பெறப்பட்ட அறிவே. அவ்வறிவே நம்மை அப்படிக் கூறிட வைக்கிறது. சற்று சிந்தித்தால் வேறும் பல செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. அதிலிருந்து நாம் கண்டவைதான் உண்மை யென்பதில்லை என்பதுவும் கண்டறியப்படுகின்றது. ஆக உண்மை வேறொன்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் வல்ல நாயன் அல்லாஹ் தன்அருள்மறையில் என்ன கூறியுள்ளான் எனப் பார்ப்போமாகில் அனைத்தும் தன்னால் நிர்வகிக்கப்பட்டுவருவதாகக் கூறியிருப்பது தெரிய வருகிறது. வானத்தை பாதுகாப்பான முகடாகத் தான் உயர்த்தி வைத்துள்ளதாகக் கூறுகிறான். தனக்குத் தெரியாமல் இப்பிரபஞ்சத்தில் எதுவும் நடந்துவிடுவதில்லை. அனைத்தும் தனது திட்டப்படியே நடந்து வருகின்றன. அவை தன்விருப்பத்தோடு எதனையும் செய்வதில்லை என்கிறான். இது போன்று நிறைய விடயங்களைக் கூறினும், நாம் இலகுவாக அறிந்து கொள்ளும் வகையிலும் தன் வல்லாண்மையை வெளிப்படுத்திக் கூறியுள்ளான். அவன் நமக்கு இலகுவை விரும்புபவன் அல்லவா!

இதற்கும் மேலாக பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைத்து வருவது பற்றி ஏதாவது கூறியிருக்கின்றானா என குறிப்பாக நாம் நோட்டமிடும் போது அதுபற்றியும் மிக அழகாகக் கூறியுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. அல்குர்ஆன் 21:44 மிக அருமையான செய்தியை வெளிப்படுத்துகின்றது. ‘நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப் புறங்களில் இருந்து குறைத்துக் கொண்டு வருவதை அவர்கள் காணவில்லையா? எனவே இவர்களா நம்மை மிகைப்பவர்கள்’ என்ற கேள்வியோடு நிற்கின்றது. இது எச்சந்தர்ப்பத்தில் கூறப்படுகின்றது என்றால் இந்த வசனத்திற்கு முந்திய சில வசனங்களும் குறிப்பாக இவ்வசனத்தின் முன்பகுதியான, ‘எனினும் இவர்களையும் இவர்களது மூதாதையர்களையும் இவர்களின் ஆயட்காலம் நீண்டதாக ஆகும் வரை சுகமனுபவிக்கச் செய்தோம்’ என்பதாகவும் இதன் மூலம் உங்களையும் அழித்து விடுவோம். அது எமக்குப் பெரிய வேலையல்ல பூமியையே நாம் குறைத்துக் கொண்டு வருவதில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையில் வெளிப்படுத்தி உள்ளான்.

இன்னும்இ அல்குர்ஆன் 13:41 ஆம் வசனத்தில் மீண்டும் ஒரு தடவை பூமியை அதன் சுற்றுப் புறங்களில் இருந்து தானே குறைத்து வருவதைக் கூறியுள்ளான். ‘நிச்சயமாக, பூமியை அதன் சுற்றுப் புறங்களிலிருந்து நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பைத் தடை செய்பவன் எவனுமில்லை. மேலும் அவன் கணக்குக் கேட்பதில் தீவிரமானவன்.’

மேற்கண்ட வசனமும் தன்னை நம்பாத மக்களுக்காகக் கூறப்பட்டதாகவே தெரிகிறது. தனது மாட்சியை வெளிப்படுத்த மக்கள் தினசரி காணும் காட்சியான பூமி குறைந்து வருவதைக் கூறி, இதனைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியாது என்பதையும் கூறி வைத்துள்ளான். நாம் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும்கூட ஓரலையால் அள்ளிச் செல்லபட்டுவிடும் நிலையே உள்ளது. நமது தடுப்பு நடவடிக்கைகூட கடலினுள் இழுத்துச் செல்லப்படுவதால் கடல் நீர் தங்கியுள்ள இடத்தின் கனவளவு குறைந்து, கடல் நீர் வெளியேறிப் பூமியின் அளவைக் குறைப்பதாகவே இருக்கின்றது. அல்லாஹ்வை இயலாமல் ஆக்குவோர் எவருமுளரா!

ஆக பூமி தன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு வருவது தானாக நடக்கும் ஒரு செயலல்ல. அது வல்ல நாயன் அல்லாஹ்வால் செய்யப்படுவது என அதனை மறுப்புக்கு இடமின்றி முன்னறிவித்தல் செய்துள்ளான். இதில் உரிமை கோருவோர் எவருமுண்டா?

                                                                                                                         - நிஹா -
கொழும்பு 03
13.09.2012

No comments: