Monday, August 5, 2013

குர்ஆன் வழியில் ...

குர்ஆன் வழியில் ...

அல்லாஹ் அனுமதியாததை எவரும் அனுமதிக்கலாமா? 


அல்லாஹ் அனுமதியாதது அது நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்க லாம். நமக்கு நன்மை போல் தெரிவதில் தீமைகள் காணப்படுவதும், தீமை போல் தெரிவதில் நன்மைகள் காணப்படுவதும் நமக்குப் புலப்படுவதில்லை. தெரிய வரும் காலங்களில் விடயங்கள் நடந்தேறி விடுகின்றன. இங்கு நாம் ஆராயவிருப்பது நாம் அறியாமற் செய்பவை அல்ல. அறிந்து கொண்டே, அதாவது அல்லாஹ் கூறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டே ஒன்றைப் பின்பற்றுவது. இச்செய்கை மிகப் பாரதூரமானதும், அச்செயலைத் தானாகச் செய்பவர் அல்லாஹ்வைப் போன்று காரியமாற்றுவதாக இருப்பின், அல்லது தனது மனோ இச்சைப்படி நடப்பவராக இருந்தால் அது ஷிர்க்கை வருவிக்கும் பயங்கரத்தை உண்டாக்கி விடும். இதனை அல்லாஹ் கண்டித்துள்ளான். திரு மறை 42:21 கூறுவதைப் பாருங்கள். 'மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதி அளிக்கவில்லையோ, அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா?...' இவ்வசனத்தின்படி அல்லாஹ் அனுமதி தராத விடயங்களைச் செயற் படுத்துவதற்கோ, அல்லது அது பற்றிச் சாதகமான  கருத்துத் தெரிவிக்கவோ கூட யாருக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை என்பதை நன்கு விளங்கிக் கொள்ளுதல் நம்மை ஷிர்க்கில் அதாவது இணை வைத்தலில் இருந்து காப்பாற்றும். அதை மார்க்கமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் இணையாளர்கள் எனக் குறிப்பிடுகிறான்.


இன்றைய நிலையில் அதிகமான முஸ்லிம்கள் தம் விருப்பத்துக்கு ஏற்ப எதனை எல்லாமோ  செய்து கொண்டு அவற்றை இஸ்லாம் எனவும், அல்லாஹ் கூறியிருக்கிறான் எனவும் அல்லது அவற்றுக்கு ஆதாரமான ஹதீஸ்கள் உண்டு எனவும் கூறிச் சப்பை கொட்டிக் கொள்கின்றார்கள். இப்படியானோர் தாமறியாமலேயே இறைவனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவோரோகவே உள்ளனர். அல்லாஹ் அனுமதியாததை அவன் கூறியிருப்பதாகக் கூறுவது குற்றம். அடுத்து, ஆதாரமான ஹதீஸ்கள் உண்டு என அல்லாஹ் கூறாதவற்றுக்கு சாட்சியங்கள் தேடுவதோ, நிரூபிக்க முயல்வதோ பாரிய குற்றமான  ஷிர்க் ஆகிவிடுகிறது. நிச்சயமாக நாயகத் திருமேனி அல்லாஹ் கூறியவற்றுக்கு மேல் அணுவளவு கூட மாற்றமாகச் செய்திருக்க மாட்டார்கள். அப்படிச் செய்ய முற்பட்டால், அச்சந்தர்ப்பத் திலேயே அவர்களின் வலது கரத்தைப் பிடித்து நிறுத்துவதோடு, அவர்களின் உயிர் நரம்பையும் அறுத்து விடுவதாக அல்லாஹ் தன் அருள்மறையில் பகன்றுள்ளான். ஆகவே, அப்படியான  சிந்தனையில் இருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக.  அல்லாஹ் அனுமதி அளிக்காதவற்றை அனுமதிக்குமாறு கூறும் ஹதீஸ்கள் எங்காவது காணப்பட்டால் அது நிச்சயமாக நபியவர்களால் கூறப்பட்டதாக இருக்க முடியாது. காரணம், அதற்கு அல்லாஹ்வே தனது திருமறையில், அவர் தானாகப் பேசுவதில்லை எனவும், வஹீ மூலமாக அவருக்கு அறிவிக்கப்படுபவற்றையே பேசுகிறார், பின்பற்றுகிறார் எனவும் கூறியிருப்பதே. அல் குர்ஆன் 53:2,3,4-உங்களின் தோழர் தவறி விடவுமில்லை. தவறான கொள்கையில் சென்று விடவுமில்லை.அவர் மனோஇச்சையின்படி பேசுவதுமில்லை. அது அறிவிக்கப்படும் அறிவிப்பே தவிர இல்லை. நமது மத்தியில் ஆடைகளில், உணவுகளில், திருமண பந்தங்களில், உறவு முறைகளில், தத்து எடுத்தலில், தர்மம் செய்வதில், ஸக்காத் கொடுப்பதில், கடன் கொடுப்பதில்-எடுப்பதில், றிபா வைப் பேணுதலில், ஏன் தொழுகையில் கூட அல்லாஹ் கூறியிராத, அல்லது அனுமதியாத எவ்வளவோ நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது வருத்தத்தோடு பதிவிடப்பட வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, தற்போது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள, முஸ்லிம் மாதரின் முகத்திரை இவ்வாறான அல்லாஹ் வின் அனுமதிக்கு உட்பட்ட தல்ல என்பதைக் கூறலாம். அதற்கு ஆதாரமான ஒரு சமிக்ஞை கூட குர்ஆனில் அல்லாஹ்வால் கூறப்பட வில்லை. அப்படி இருக்க முஸ்லிம் இயக்கங்களிற் சிலவும், மாதரும், முகத்திரை குர்ஆனில் கூறப்பட்ட ஒன்று போல நினைந்து அதற்கு முன்னுரிமை கொடுப்பதோடு, அதனை அணிவதற்கு ஏற்படும் இடைஞ்சல்களை, தடைகளை இஸ்லாத்துக்கு எதிராகச் செய்யப்படும் அநீதிகளாகச் சித்தரிக்க முற்படுகின்றனர். எல்லா விடயங்களிலும் தமது மனோ இச்சையே பின்பற்றப்படுகின்றது. மனோ இச்சையே வணங்கப்படும் தெய்வங்களில் எல்லாம் மிக மோசமானதாக அல்லாஹ் வர்ணித்துள்ளான். குர்ஆனுக்கு மொழி பெயர்ப்புத் தருவோர் கூடத் தமது மன இச்சைக்குத் தகுந்தவாறு, அல்லது தமது அறிவுக்கு எட்டியவாறு, அல்லது நடை முறையில் உள்ளவற்றில் மாற்றமோ முரணோ ஏற்பட்டு விடாதவாறு மொழி பெயர்ப்புச் செய்வதில் அக்கறை கொண்டு, அதற்காக அடைப்புக் குறிகளைப் புகுத்தி, அல்லாஹ் கூற முற்பட்டதையே திசைதிருப்பி விடுகின்ற மோசமான நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. குர்ஆனை அல்லாஹ் தான் மிகத் தெளிவாக விளக்கியுள்ளதாகப் பல்வேறு வசனங்களில் கூறியிருந்தும், மேலும், குர்ஆனைப் பூரணப்படுத்தி உள்ளதாக அறிவித்திருந்தும், அல்லாஹ் ஏதோ கூறுவதற்கு தவறிவிட்டது போலவும், அல்லது விளக்கியது போதாது என்பது போலவும் கருதி இடைச் செருகல்களை  அடைப்புக் குறிகள் மூலம் செய்துள்ளமை கூட ஓர் வகையில் அல்லாஹ் அனுமதியாததை அனுமதிக்கும் குற்றத்துள் புகுத்தி ஷிர்க்கிற்கு தள்ளிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. மன்னிப்பு ஹறாமாக்கப்பட்ட அத்தகு ஷிர்க் என்ற  பயங்கரத்தில் இருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக. அல்ஹம்துலில்லாஹ்.- நிஹா –


No comments: