Friday, June 27, 2014

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதிபத்தியம்.... ஒரு பார்வை!

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதிபத்தியம்.... ஒரு பார்வை!


நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் எனப் பயபக்தியோடு சத்தியஞ் செய்து பாராளுமன்ற அங்கத்தவர்களாகப் பதவி வகிப்போர் அவர்கள் சத்தியம் செய்து எடுத்த உறுதிமொழியைப் பாதுகாக்கத் தவறியுள்ளதன் மூலம், பாராளுமன்றின் சிறப்புரிமைகளை மீறியுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றி மக்கள் அவர்களிடம் அளித்திருந்த நம்பிக்கைப் பொறுப்பை மீறியுள்ளனரா! அல்லது இரண்டுமா!
யாப்பின் Xஆவது உறுப்புரையின் 63ஆவது பந்தியில் கூறப்பட்ட சத்தியத்தைச் செய்து அதனைச் செயற்படுத்தத் தவறியமை, பாராளுமன்ற அங்கத்தவரது தலையாய கடமையைச் செய்யாமல் புறக்கணித்ததாக அமையுமானால், அந்த அங்கத்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? அவர்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்தமையாகக் கொள்ள முடியுமா? என்பதும் ஓர் முக்கிய விடயமாகக் கருதப்பட வேண்டியதே!
சத்தியம் செய்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்தாதவர்கள் பற்றிய நடைமுறைச் சட்டமென்ன?
தற்போதைய நாட்டு நடைமுறைகள் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் எங்கு சென்று கொண்டிருக்கின்றோம்! சிவில் நிர்வாகம் நடைபெறும் நாட்டில், மக்களுக்கு அறிவுறுத்தல்கள் எங்கிருந்து வரலாம்! யுத்தம் நடைபெற்று முடிந்ததோடு நாட்டு நிர்வாக முறை மாற்றம் பெற்றுள்ளதா என்று சிந்திக்கும் நிலைக்கு நாட்டுப் பற்றாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
சிவில் நிர்வாக நடவடிக்கைகள் யுத்த காலத்தில் தவிர்க்க முடியாத நிலையில் இராணுவத்தின் கைக்குப் போயிருந்தது. 2009இல் யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் அதே நிலை தொடருவதாக தெரிகின்றது.
எதற்கெடுத்தாலும் இராணுவக் கெடுபிடிகளும், இராணுவத் தலையீடுகளும், இராணுவ அறிவுறுத்தல்களும் என நீண்டு கொண்டே போகின்றது. இது சிவில் நிர்வாகம் இராணுவத்தின் கைக்கு மாறிக் கொண்டிருக்கின்றதா? பழுத்த வாழைப் பழத்தில் நுட்பமாக ஊசியை நுழைப்பது போன்று சிவில் சேவைகள் இராணுவ நிர்வாகமயப்படுத்தப் படுகின்றதா? இம்முன்னோடி நடவடிக்கைகளே, நடைபெறப் போகின்ற இராணுவ ஆட்சியின் ஒத்திகையா என்றெல்லாம் சமூக ஆர்வலர்களைச் சிந்திக்க வைத்துள்ளமையைத் தவறாகக் கருதிவிட முடியாது.
இந்நிலை மிகவும் அபாயகரமானது. ஜனநாயகம் தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெயரளவில் நடைபெறும் தேர்தல்களும், மாகாண சபைகளும், பாராளுமன்றமும், அமைச்சரவையும் கூட யார் யாரினதோ மறைமுகக் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவே தெரிகின்றது.
அதிகார பலம் இரண்டு மூன்று நபர்களின் தனியுடமையாகி, அனைத்து மக்களினதும் பிரதிநிதிகளும், அவர்களின் கைப்பொம்மைகளாக மாறியுள்ளதாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் காரியங்கள் அபாய அறிவிப்பைச் செய்து கொண்டிருக்கின்றன.
உதாரணமாக, மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்களால் தேர்தல் ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய அரசியல் யாப்பு கூட, மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்றப் பிரதிநிதிகளை விலைக்கோ, அன்றி அமைச்சர் பதவி என்ற இலஞ்சம் கொடுத்தோ வாங்கி நிறைவேற்றப்பட்டுள்ளமை, மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகி உள்ளமையை, அவர்களின் கையறு நிலைமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இது ஒரு பிழையான முன்னுதாரணமாக இருந்தும், உச்ச நீதி மன்றம் இதில் கவலை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.
நாளை இந்த அரசாங்கம், தான், அங்கத்தவர்களைப் பயமுறுத்தியோ, இலஞ்சம் கொடுத்தோ வாங்கிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பாவித்து புதிய ஒரு யாப்பினை உருவாக்கி பாராளுமன்றின் ஆயுட்காலத்தைக்கூட இன்னும் இருபது வருடங்கள் நடைமுறைப்படுத்தக் கூடியதாக ஆக்கிக் கொள்ளலாம்.
தாங்கள் விரும்பிய இனங்களினது வாக்குரிமைகளைக்கூட யாப்பின் மூலம் இல்லாமல் செய்து விடலாம் என்ற அபாய நிலையும் உள்ளது. அல்லது;
தனியாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை உருவாக்கியது போன்று, மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்ற மாற்றியவாறு, ஆயுட்கால நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை உருவாக்கிக் கொள்ளலாம்.
மக்கள் பிரதிநிதிகள் தானே யாப்பை மாற்றி அமைத்தனர் சிலர் என வாதிடலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்போர், மக்கள் ஆணை பெறப்பட்டு, உருவாக்கப்பட்ட யாப்பினை செயற்படுத்துபவர்களே தவிர, அவர்கள் தமது விருப்பப்படி காரியமாற்றும் உரிமை பெற்றவர்கள் அல்லர்.
அவர்கள் புதிதாக எதையாவது செய்ய வேண்டுமாயின் மக்கள் ஆணை பெறப்பட வேண்டும் என்பதையே யாப்பு கூறி நிற்கின்றது. அதற்காகவே சுநகசயனெரஅ சர்வசன வாக்கெடுப்பு எடுக்கும் முறை யாப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது ஒரு தடவை நடைமுறைப்படுத்தப்பட்டு பாராளுமன்றின் ஆயுள் மேலும் ஒரு தடவைக்கு நீடிக்கப்பட்டும் உள்ளது.


No comments: