Friday, March 27, 2015

சூனியத்தை பொய் என்று மறுத்த இமாம்கள் முஹ்தசிலாக்களா ?





குர்ஆனுக்கு  விளக்கம் குர்ஆனிலிருந்தே கொடுக்கப்படல் வேண்டுமே தவிர, மற்றைய மதத்தவர்கள் போன்று எங்கிருந்தாவது, யாருடையவாவது கருத்துக்களையும் விளக்கங்களையும் கொடுத்து குர்ஆனின் கருத்து இதுதான் அல்லது இதுவாகத்தான் இருக்கும் என்று கூறும் உரிமை யாருக்கும் இல்லை!  இது குர்ஆனின் கண்ணியத்தைக் குறைப்பதாகும்.  எவ்வித விளக்கமும் லா இலாஹ இல்லல்லாஹு என்ற கலிமாவுக்கு முரணாகவும் அமைய முடியாது.  காரணம், நபிமார்களும், வேதங்களும் கலிமாவை விளக்க வந்தவைகளும், வந்தவர்களே!



குர்ஆனில் இருப்பவை அனைத்தும் உண்மையைக் கொண்டே கூறப்பட்டது. ஆதலால், அதில் பொய் உள்ளதாகக் கூறுவது அல்லாஹ் மேல் பொய் கூறுவதே!



அல்லாஹ், மிகத் தெளிவாக, தனது குர்ஆனில் ஷைத்தான்கள் ஓதி வந்ததைப் பின்பற்றி வந்ததாகவும், அது இடர் விளைக்கக் கூடியது என்றும், அது மறுமையின் பலனை இல்லாதாக்கிவிடும், அதனை  வாங்கியோர் தமது ஆன்மாவை விலையாக்கிக் கொண்டனர், அது நிராகரிப்பு என்று கூறியுள்ளதைவிட விளக்கமே தேவை இல்லை.  அதனால், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு காட்டுவது உண்மையுடன் பொய்யைக் கலக்கும், இறைவன் மேல் பொய் கூறி, அல்லாஹ்வை மறுக்கும் செயலுமாகும்.



 மேலும், அல்லாஹ் நாடினாலன்றி சூனியத்தால் இடர் விளைவிக்க முடியாது என்று கூறியிருப்பதில் இருந்து சூனியம் என்பது இடர் விளைவிக்கக் கூடியது என்பதும் புலனாகின்றது. ஆனால், இறைநாட்டம் இருக்க வேண்டும் என்பதே! அல்லாஹ்வின் நாட்டம் கிடைக்காமல் போகலாம் என்பதால், அவர்கள் வெற்றியடையமாட்டார்கள் என்பது, சூனியம் இல்லை, அதனால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவதல்ல.



ஆதலால், நபிமாருடைய அற்புதங்களை சூனியத்துடன் இணைத்துப் பார்த்து சூனியத்திற்கு எதிரான கருத்தை உருவாக்க முயல்வது பொருத்தமற்றது.



வேண்டுமாயின் சூனியம் என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்டுகின்றார்கள் என்று கூற முடியுமே தவிர, அல்லாஹ் குர்ஆனில் சூனியம் பற்றிக் கூறியிருப்பதையே மறுப்பதும், அதனால் எவ்வித தீமையையும் செய்துவிட முடியாது என்று கூறுவதையும், அப்படி மறுத்துக் கூறியவர்களை ஆதாரமாகக் கொண்டு குர்ஆனைப் பிழையாக்கிவிட முயல்வதும் பயங்கரமான குற்றமாகும்.