Friday, August 2, 2013

புனித குர்ஆனை விமர்சனத்திற்கு உட்படுத்த முடியுமா!

புனித குர்ஆனை விமர்சனத்திற்கு உட்படுத்த முடியுமா!

இன்று உலகளாவிய ரீதியில் மாற்று மத சகோதரர்களாலும், இஸ்லாமிய எதிரிகளாலும்ஏன் முஸ்லிம்கள் சிலராலும் கூட செய்யப்படும் மிக மோசமான விமர்சனங்களுக்கு முழுமையாக முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓரே மார்க்கம் இஸ்லாமும் அதன் வழிகாட்டியான புனித குர்ஆனுமேயாம்.  இதற்கான காரணங்களைக் கூறுமுன், இஸ்லாம் பற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறிச் செல்லலாம் என நினைக்கிறேன்.

இஸ்லாம் இறுதி மார்க்கம். எழுத வாசிக்கத் தெரியாத  இறுதி நபியும், ரசூல் என்ற இறைதூதருமான நபிகள் கோமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலம் அரபிப் பாஷையில் கிபி ஆறாம். நூற்றாண்டின் பிற்பகுதியில் பகுதி பகுதியாக இறைவனால் அவனது வானவர் மூலம் இறக்கப்பட்டுஇ 23 வருடங்களாக நபிகளாரால் நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டது.

இது கோணலற்றது. ஞாபகமூட்டுவது. முன்னைய வேதங்களை மெய்ப் படுத்துவது> அவற்றைப் பாதுகாப்பதுசந்தேகமற்றது. தெளிவானதுதெரிவானது. இலகுவானது. நிர்ப்பந்தமற்றது. நுண்ணறிவு கொண்டது. ஞானம் நிறைந்தது. நோய் தீர்ப்பது. வாய்மை பேணுவது. எதிர்வு கூறுவது. உண்மையானது. மாறாது. விபரிக்கப்பட்டது.  முரண் பாடற்றது. முழுமையானது. நேர்வழி காட்டுவது. வழிகெடுப்பது. பாதுகாக்கப்பட்டது. உலக அழிவு வரை நடைமுறைப்படுத்தக் கூடியதான தீர்வுகளைக் கொண்ட சட்டதிட்டங்களை உள்ளடக்கியது. உய்த்துணர்ந்து நல்லுணர்வு பெறத் தூண்டுவது. சிந்திக்கத் தூண்டுவது. பல தெய்வக் கொள்கையை மறுத்து ஓரே இறைவன் என உறுதிப்படக் கூறுவது. மனித குலத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இறக்கி அருளப் பட்டது. இம்மை வாழ்வை நிறைவு செய்யவும், மறுமைக்கான வழிகளை தேடிக்கொள்ளவுமான  நெறி முறைகளைத் தன்னகத்தே கொண்டது.

முற்பந்தியில் கூறிய விமர்சனங்களுக்கு காரணங்கள் பல உண்டு. அவைகளில் முக்கியமானவை, காழ்ப்புணர்வு, மத விரோத மனப்பான்மை, அறியாமை, அறிய விருப்பமின்மை, குறையறிவு, பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டமை, மொழி பெயர்ப்புக்களில் காணப்படும் குறைபாடுகள், மொழி பெயர்ப்புக்களில் சேர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்பாளரின் சொந்த இடுகைகள், நபி சுன்னத்தாகக் கருதி வெளிப்படுத்தப்பட்டுள்ள ஹதீதுக் கிரந்தங்கள், அவற்றில் காணப்படும் செய்திகள், மேலும் அவற்றிலுள்ள முரண்பாடுகள், அவற்றின் குர்ஆன் சாராத தன்மை, சட்ட வல்லுநர்களான இமாம்களால் வகுக்கப்பட்டிருக்கும் மதுஹபுகள், அவை தம்முள் முரண்படும் தன்மை, ஷரிஆ என்ற மனிதர்களால் ஆக்கப்பட்ட பிக்ஹ் எனப்படும் சட்டம், இச்சட்டத்தை உருவாக்குவதில் கையாளப்பட்ட இஜ்மா, கியாஸ் எனப்படும் உத்திகள், உலமாக்கள் என்ற பெயரில் மத்ரஸாக்களால் கொடுக்கப்படும் பட்டங்களைப் பெற்ற மௌலவிமார்கள், பிழையாகப் புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட முரண்பாடுகளால் பிரிந்து நிற்கும் பல்வேறு இஸ்லாமியப் பிரிவுகள், முஸ்லிம்கள் என ஆடைகளால் தம்மை இனம் காட்டிக்கொள்ள முனையும் மக்கள், இஸ்லாத்தின் ஓரிரு கடமைகளைச் செய்து விட்டால் போதும் என்ற வகையில் அக்கடமைகளையே என்ன வென்று அறியாது குருட்டுத்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள்,

மேலும்> இஸ்லாமிய தஃவாவைப் பிழையாக விளங்கிக்கொண்டு தாம் ஏதோ சாதனை செய்வதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு மதமாற்றம் செய்ய முனையும் பிரகிருதிகள், ஜிஹாத் என்பதை என்னவென்றறியாது வன்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சில இயக்கங்கள், பழி வாங்கும் உரிமையைப் பிழையாகப் பயன்படுத்தும் வழிகேடர்குர்ஆன் தடை செய்தவை பற்றிய சரியான அறிவின்றி எதையெதை எல்லாமோ செய்ய முற்பட்டு சமூக இணக்கப்பாட்டை சீரழிக்கும் ஒரு கூட்டம், ஆகுமான விடயங்களை அறிந்து கொள்ளாமல் சில மரபுகளையும் மனோஇச்சை களையும் பின்பற்றி இஸ்லாத்துக்கு தேவையற்ற விமர்சனங்களை, அபகீர்த்தியை அந்நியர் செய்வதற்கு இடம்பாடளித்துக் கொண்டிருக்கும் அரை வேக்காடுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்

தலையங்கம் எழுப்பியுள்ள கேள்விக்கு விடை 'இல்லை' என்றே கூறலாம். முதன்மைக் காரணம் அது இறையறிவில் வெளியானது. இரண்டாவது காரணம் உலக அழிவு வரை செல்லுபடியாகும் பண்புகளுடன் வெளியாக் கப்பட்டது. மூன்றாவது இது ஞான வெளிப்பாடு. நான்காவது அந்த ஞானம் கூட அல்லாஹ்விடமிருந்து கொடுக்கப்படுவது. அடுத்தது, அதன் பரந்து விரிந்து உலகின் மாற்றங்களுக்கும் ஏற்ப கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய பண்பு  என்பதனால் அவ்வாறான அறிவு பெற்றவர்கள் மட்டுமே இதனை விமர்சிக்கலாம்ஆனால், அவ்வாறான அறிவு பெற்றிடும் நிலையில் அங்கு விமர்சனத்திற்கு இடமிராது. விளக்கங்கள் வெளியாகும். வியப்பு மட்டுமே மேலோங்கி நிற்கும்! உண்மையைக் கொண்டே தவிர இதனை இறக்கி அருளவில்லை என்ற இறைவாக்கு அதன் கேடயமாகும்.

விமர்சகர் ஒருவர் ஒன்றை விமர்சிக்க வேண்டுமாயின், அது பற்றிய முழுமையான அறிவை, ஞானத்தைக் கொண்டிருத்தல் அவசியம். அல்லாத நிலையில் விமர்சனம் சாத்தியப்படாது. இங்கு, அல்லாஹ்விடமிருந்து வந்த வேதத்தை அவனிடமிருந்து ஞானம் பெற்றவர்கள் மட்டுமே விமர்சிக்க முடியும். அதாவது முக்காலம் உணர்ந்தவர்கள். அவர்களது விளக்கங்கள், விமர்சனங்கள் கூட பிற்கால அறிவைக் கொண்டிராதவர்களால் விளங்கிக் கொள்ளும் சாத்தியம் குறைவு என்பதைவிட இல்லையெனவே கூறிடலாம்.

இப்படிக்  கூறுவதனால் யாரும், குர்ஆனை அறியப்பட முடியாத ஒன்றாக நான் கூறுவதாக எண்ணிவிட வேண்டாம்.  அது அவ்வக்காலங்களுக்குத் தேவையான அளவில் தனது கருத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக் கும். எளிய, சிறிய உதாரணத்தில் விளக்குவதாயின், பாடசாலைக் கல்வி யைக் கூறலாம். முன்னிலைப் பாடசாலைகளில் விண்ணின் பின்னணி பற்றிக் கூறிட முடியுமா! முதலாம் வகுப்பில் கற்கும் மாணவனுக்கு பேராசிரியர் தன்னிடமுள்ள அறிவு அனைத்தையும் கொடுத்திட முடியாது. முடிந்தாலும் அம் மாணவனால் அதனை விளங்கிக் கொள்ள முடியாது. அது படிப் படியாக அறிந்து கொள்ள வேண்டியது.

ஆசிரியர் பத்து எண்ணிக்கைக்குள் கணக்கொன்றைச் சொல்லிக் கொடுப் பதைப் பார்த்துவிட்டு, சுருக்கம் அல்லது அதைவிடச் சிறிது கூடத் தெரிந்த ஒருவர், இப்பேராசிரியருக்கு எதுவும் தெரியாது எனக் கூறிட முடியாது. மோட்டார் கார் புழக்கத்தில் இல்லாத போழ்து, அதன் தொழில் நுட்ப அறிவைப் புகட்ட முனைவது முட்டான் தனமாக நோக்கப்படும். அதற்காக மோட்டார் செய்தவனிடம் அவ்வறிவு இருந்திருக்கவில்லை எனக்கூறிட முடியாது. விஞ்ஞானிகள் விளங்கிக் கொள்ள வேண்டியதை தச்சுத் தொழிலாளருக்கு விளக்கிட முனைவது அபத்தம். கிராமத்தவனிடம் செய்மதி பற்றிக் கதைப்பது நேரவிரயம். ஆனால் மோட்டார் கண்டு பிடித்தவனிடம் இருந்த அறிவை நாம் கண்டு கொள்ளும் திறன் நம்மிடம் இருந்திருக்க வில்லை என்பதே யதார்ர்த்தம்.

ஆகவே அவரவர் தகைமைகளுக்கு ஏற்ப குர்ஆன் தனது அறிவை வெளிப்படுத்தும் என்பதனாலேயே, அது எவரினதும் விமர்சனத்திற்கு உட்படாது தானாகவே தலை நிமிர்ந்து நிற்பது எனக் கூறுகிறேன். அப்படியே யாராவது தம்மறிவுக்கு ஏற்ப இப்போது விமர்சனங்களை வெளிப்படுத்தின் அது அவனது முட்டாள் தனத்தை இன்று வெளிப்படுத்தாவிடினும் பின்னொரு காலத்தில் நிச்சயமாக வெளியாக்கவே செய்யும்.  

மாடிரண்டைக் கட்டி உழுபவனிடம் உழவு இயந்திர அறிவைக் காண முடியாது. ஆனால் அவனும் நிலத்தை  உழும் அறிவைக் கொண்டவனே என்பதை நாம் மறந்து விடலாகாது. குதிரை வண்டியில் சென்றவனும் தூரத்தைக் கடந்தான். தூரத்தைக் கல்தொலைவு எனவும் அளந்து கண்டான். இப்படி அறிவு என்பது வெவ்வேறு வடிவில் வெளிப்பட்டுக் கொண்டிருக் கின்றது. அதற்கு ஒரு வரையறையை யாரும் கொடுத்துவிட முடியாது. மனதால் கூட்டிக் கழித்துச் சொல்லும் மனிதனும், அதனையே கணினி மூலம் காண்பவனும் இருக்கின்றான். எதனையும் மனனம் செய்து தேவைக்கேற்ப அவ்வப்போது கூறுபவனின் அதே வேலையை கம்ப்யூட்டர் செய்கிறது. விடயம் ஒன்றே. விடையும் ஒன்றே. முறைகள் தான் வெவ் வேறாகின்றது.  இதனை விமர்சனம் செய்ய முற்படுவது விஷமத்தனம்.

மூஸா அலை அவர்களுக்கு வல்ல நாயன் அல்லாஹ் பலகையில் எழுதிக் கொடுத்ததாகக் கூறுவதை அன்றைய நிலையில் நம்பாதவர்கள், இன்றைய நிலையில், தொலை நகல், SMS  எனப்படும் குறுஞ்செய்திச் சேவைகளைக் கண்ட பின்னர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆக இதற்கு ஏறத்தாழ 5000 வருடங்கள் சென்றுள்ளன

அன்று நாயகம் அவர்களுக்குக் காட்டப்பட்டது என்ற விடயம் அன்றிருந்தவர்களால் நம்ப முடியாதுதான். இன்றோ சிறு குழந்தையும் தொலைக் காட்சியை அழுத்தி  உலகையே வலம் வந்து விடும். இன்னும் இணைய தளத்துள் புகுந்து உலகை விரல் நுனிக்குள் கொணர்ந்துவிடும் என்ற நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இவைகள் எல்லாவற்றுக்கும் முகங் கொடுத்துக் கொண்டிருப்பது குர்ஆன் மட்டுமே

வலுவிருந்தால் வானத்தில் ஏறலாம் என்றது. நாம் விரிவாக்கலுடையோம் எனக் கூறி பிரபஞ்சம் விரிந்து செல்வதைக் கூறுகின்றது. அன்று ஆத்மீக ரீதியில் கண்டறிந்தவை, செய்து கொண்டவை இன்று அற்புதங்களாகப் பார்க்கும் நிலையில்தான், முன்னேறியுள்ளதாகக் கூறிக் கொள்ளும் நாம், விமர்சனம் செய்ய முனையும் நாம் உள்ளோம் என்பதை சற்று சிந்தித்தால் புரியும்.

ஓரே இரவில் தூரத்திலுள்ள பள்ளிவாசலுக்கு நபிகளாரை அழைத்துச் சென்றேன் எனக் கூறுவது, நமது சிற்றறிவில் அற்புதமாகவே கண்டு கொள்ளப்படுகின்றது. சற்று சிந்திக்கக் கூடியவன் அவ்வத்தாட்சிகளை உணர்ந்து விமானத்தைக் கண்டு பிடித்தான். இதற்கும் காரணம், இவ்வறிவுகள் அனைத்தையும் அல்லாஹ் நம்மூளையுள் பதித்தே வைத்துள்ளான் என்பதே! இப்படி என்னால் ஆயிரத்துக்கும் அதிகமான உதாரணங்களை குர்ஆனில் இருந்து காட்டிட முடியும்.

இவையனைத்தையும் அல்லாஹ் குர்ஆனில் உள்ளடக்கியே உள்ளான். மனித மூளையுள் வைத்துப்படைத்வனுக்கு புத்தக ரூபத்தில் தருவது பெரிய வேலையா! அதனால்தான் குன் எனக் கூறி ஆறே கட்டங்களில் வானம் பூமிகளைப் படைத்த தனக்கு இவை எல்லாம் மிக எளிதானதே என்கிறான். நமது அறிவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்துக் கொண்டு நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் அல்குர்ஆன் என்பதே உண்மை என்பதால். முழுமையாக வளர்ச்சியடையாத அறிவைக்கொண்ட நம்மால் முற்றும் அறிந்தவனின், முக்காலமும் அறிந்தவனின், மறைவானதையும் அறிந்தவனின், எங்கும் நிறைந்து ஏகமும் தெரிந்தவனின், ஞானமுடையவனின், நுட்பமறிந்த வனின், நுண்ணறிவு படைத்தவனின் குர்ஆனை விமர்சனம் செய்ய முடியாது என்கின்றேன்.

புதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தற்போது குர்ஆனில் காணப்படும் உண்மைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன விஞ்ஞான ஆய்வுகளின் மூலம். ஆதலால் இன்று நாம் விமர்சிக்க முயலும் சில விடயங்கள் நாளை முட்டாள் தனத்தை வெளிப்படுத்தியதாக அமைந்து விடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இன்ஷா அல்லாஹ் !  குர்ஆனுக்கு எதிரான விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்த விடயங்கள் பின்னொருபோது விரிவாக ஆராயப்படும்.

- நிஹா -

கொழும்பு 03, 2013.08.01.

Thursday, August 1, 2013

‘வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்’

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/kf28vgc

Lankamuslim.org
One World One Ummah

‘வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்’


வடக்கு முஸ்லிம்கள் ஓர் இக்கட்டான நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். சட்டியில் இருந்து நெருப்பினுள் விழுந்த கதையே தவிர எதுவும் இல்லை. 

அனைவ‌ைராலும் கைவிடப்பட்டு, தேர்தல் காலங்களில் எதைஎதையோ எல்லாம் பேசி, அவர்களை வாக்குகளை சூறையாடித் தம்மை வளர்த்துக் கொண்ட வரலாறு மட்டுமே மிச்சம். நான் சில உண்மைகளை வெளிப்படுத்த முனைந்தால் யாரையும் தாக்குவதாக அமைந்து விடும். 

எப்படியாவது வாக்கு வங்கி‌யைத் தக்க வைத்துக்கொண்டிருந்த தந்திரத்திற்கு மேலாக, தற்போது அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், அவ்வாக்குகளை மீண்டும் உள்வாங்கும் நோக்கில் மட்டுமே மீள் குடியேற்றம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை நடந்து முடிந்தவைகள் மிகவும் துலாம்பரமாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட சிலருக்குக் கொடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள், மக்களுக்குக் கிடைத்தது போன்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது. 

அவர்களது இழப்புகள் பற்றி எவ்வித கணிப்புக்கூட நடைபெறவில்லை என்பதைத் தவிர சொல்வதற்கு குறைந்த அளவில்கூட எதுவும் இல்லை. சில சில்லறைகளையும் உணவுப் பொதிகளையும் வீசி, அவர்களின் வறுமையை விலையாக்கிக்  கொண்டு உள்ளனர் சுயநலமிகள். (அதற்கு வக்காளத்து வாங்கும் மாமாக்களுக்கும் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் செக்கிலும் நக்குவர், சிவலிங்கத்திலும் நக்குவோர்.) அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனரே அன்றி எந்த சீரான வேலைத் திட்டங்களும் அவர்களுடைய இழப்புக்களுக்கான ஏற்புடை முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை என்பதே யதார்த்தம்.  விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்படும்  அளவு நிதிகளாவது அம்முஸ்லிம்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளனவா என்பதை எவராவது நெஞ்சில் கைவைத்துக் கூறுவார்களா? 

23 வருடப் பிரிவின் போது கூட ஏற்பட்டிராத கசப்பான, வெறுப்பான சம்பவங்களே தமிழ் முஸ்லிம் மக்களிடையே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன. இந்நிலைக்கு முஸ்லிம் - தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்புக் கூற வேண்டியோர். மதஉணர்வாளர்களும் பங்குதாரர்களே! 

உண்மையில் வடக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் ‌மிக அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தவர்கள். புலிகளால் விரட்டப்பட்ட பின்னர் கூட அவர்களுக்குள் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டிருக்கவில்லை. தம்மை விரட்டியதற்காகத் தமிழர்களை அவர்கள் ஒருபோதும் குற்றஞ்சாட்டவில்லை எனபதிலிருந்து அவர்களது புரிந்துணர்வை அறிந்து கொள்ள முடியும்.இதை  அனைவரும் ஏற்றுக்‌ கொள்வர்.

முஸ்லிம்களுக்கோ அன்றி கத்தோலிக்கருக்கோ, இந்துக்களுக்கோ கூட அங்கு பிரச்சினை ஏதாவது ஏற்பட்டிருந்தால் அவை எங்கிருந்தோ வந்து அங்கு குடியேறியவர்களால், தமது சுயநலங்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே. பிரித்தாழும் தந்திரம்.  மதங்கள் கூ்ட அனைத்து சாராராலும் மிக கௌரவமாகப் பின்பற்றப்பட்டன. மன்னாரின் உண்மை நிலையை அறிய விரும்பும் ஒருவர் 1990 க்கு முந்திய மன்னாரையும் அங்கு வாழ்தோரின சமூக இணக்கத்தையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும். 

புலிகளின், முஸ்லிம்களை விரட்ட வேண்டும் என்ற சிந்தனை கூட, அங்கு வாழ்ந்த தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறின் அது மிகையாகாது. முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர் மனங்களை வெல்லுவதில் அவர்கள் தோல்வியே கண்டார்கள். அரசுகூட, அந்நேரம் அவ்வின அழிப்பைக் கண்டுங்காணாதிருந்த தற்குக் காரணம், அதனை, முஸ்லிம் - தமிழ் கசப்புணர்வை, கிழக்கில் போல் ஏற்படுத்திட வேண்டுமென்ற இழிசிந்தனையே!

அனைத்துக் கிராமங்களின் பெயர்கள் கூட மதம் சார்ந்தவைகளாக அல்லாது அழகான காரணப் பெயர்களாகவே காணப்பட்டன. இது அங்கு வாழ்ந்தோரின் மனோ நிலையைப் பிரதிபலிக்க வல்லது. அரசு நினைத்திருந்தால், ஒரு சிறிய சுற்றுநிரூபத்தின் மூலம் அவற்றைச் செல்லாதாக்கி விடலாம். ஆனால் அதுவே பிரச்சாரக் கருவிகளாக மாற்றப்படுள்ளது என்பதை அவதானிக்கும் ஒருவர் சீராகச் சிந்திதது உண்மைகளை அறிவார்.

முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களே மக்களை இன்றைய நிலையில் சிந்திக்க வைத்துள்ளன. தமிழ் அரசியல் வாதிகள்கூட துவேஷத்தின் மூலம் வாக்கு வங்கியை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தமையே துர்அதிர்ஷ்டமாகும். முஸ்லிம்கள் அன்று போல் இன்றும் வாழ, இத்தேர்தலை மிகச் சிறந்த சந்தர்ப்பமாகக் கருதி, தமது தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பேரை இனங்கண்டு கொள்ளுங்கள்.